‘நேர்மறை எண்ணங்களை பரப்புங்கள்!’
”நம் வாழ்க்கையில் நல்லது கெட்டது, எது நடந்தாலும் கவலைப்படாமல், முன்னேறிச் செல்லுங்கள். பழைய விஷயங்களை புறந்தள்ளுங்கள்; நேர்மறை எண்ணங்களை அதிகம் பரப்புங்கள்,” என, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் பேசினார்.
ஸ்ரீ ரவிசங்கரால், 1981ல் ‘வாழும் கலை’ அமைப்பு நிறுவப்பட்டது. இது, கல்வி மற்றும் மனிதநேய மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, 152 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கரின், ‘ஆனந்த அனுபவம்’ நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது; இன்று வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
நேற்று நடந்த நிகழ்வில், சுதர்சன கிரியா, யோகா, பிரணாயாமம், தியானம், அறிவுத் திறன் மேம்பாடு ஆகியவை கற்பிக்கப்பட்டன.
மேலும், ஸ்ரீ ரவிசங்கரின் மகா சத்சங் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது; 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ‘வாழும் கலை’ அமைப்பைச் சேர்ந்த பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, ஸ்ரீ ரவிசங்கர் பதிலளித்து பேசியதாவது:
உறவினர்கள், நண்பர்கள் ஏமாற்றினால், நாம் அவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நம் மனதை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எது நடந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளி, முன்னேறிச் செல்லுங்கள். காவிரியில் பூ, மரம் என, எல்லாம் அடித்துக் கொண்டு செல்லும். நம் வாழ்க்கையும் அந்த ஆறு மாதிரி எல்லாவற்றையும் சுமந்து ஓடும்.
எதையும் தேர்ந்தெடுத்து செய்ய முடியாது; அப்படி செய்தால் நம் நேரம் வீணாகும். வாழ்க்கையில் முன்னேற நினைத்தால், எதுவும் வேண்டாம் என இருங்கள்; அனைத்தும் கடந்து போகும்.
பணக்காரனாக நீங்கள் பார்ப்பவரிலும் ஏழை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை உண்டு.
எல்லாம் கிடைக்கப் பெற்றவர் யாரும் இல்லை. கடவுள் உங்களுக்கு கொடுத்த திறமை உங்களுக்கானது அல்ல. குரல் இனிமை, கலை போன்றவற்றை, நீங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது. அதை மற்றவர்களுக்கு தரத் தானே செய்கிறீர்கள். மற்றவர் கேட்கத் தானே அந்த குரல் வளம்.
நம் வாழ்க்கையில், அரசியல் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும் பயப்பட வேண்டாம்; முன்னேறிச் செல்லுங்கள். உலகில் எல்லாருக்கும் நேர்மறை எண்ணங்கள் இருக்காது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டோரும் உள்ளனர்; பயப்படாமல், நீங்கள் நேர்மறை எண்ணங்களை பரப்புங்கள்.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சில விஷயங்களில் உங்களை ஏற்க மறுத்தால், அதைப் பற்றி கவலைப்படாமல் புறம் தள்ளுங்கள். உங்களை மட்டுமே நீங்கள் நம்புங்கள். சிறு வயதில் சைக்கிள் ஓட்ட கற்ற நாம் அதை எப்போதும் மறப்பதில்லை. அதுபோல்தான் ஞானமும். அனைத்தும் தன்னால் வரும். பரந்த மனப்பான்மை வேண்டும்.
தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி விட்டதற்கு தீர்வு கேட்டால், கிரியை, யோகா, தியானம் செய்தால் போதும்.
இவ்வாறு ஸ்ரீ ரவிசங்கர் பேசினார்.
![]()