காலணி!… ( சிறுகதை ) …. கார்த்திக் கிருபாகரன்.

காலை ஆறு மணிக்கே சட்டென்று தூக்கத்திலிருந்து விழித்த பீட்டருக்கு தான் கண்ட கனவை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.”வழக்கமா பேய் கனவு தானே வரும்.இப்ப நம்ம கனவுல சாமியெல்லாம் வருது”என்று நினைத்து எழுந்து அடுப்பங்கரை பக்கமும்,குடிசை துவாரம் வழியே கொட்டகை பக்கமும் அம்மா மேரியை தேடி பார்த்தான்.கையில் குவளையில் தண்ணீரை வைத்து வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பியவாறு டீக்கடையிலிருந்து நடந்து வந்தாள்.டீக்கடை சுற்றி ஆண்கள்,பெண்கள் கூட்டமாக நின்றனர்.பல் துலக்கியவாறே டீக்கடை ரேடியோ செய்தி கேட்க போயிருந்தாள்.குடிசைக்குள்ளே வந்தவளிடம்,”என்னம்மா கூட்டம்” என்று தலையை செறிந்தவாரே கேட்டான். உள்ளே வந்தவள்,தனது சேலை முந்தானையில் முகத்தை துடைத்தவாறு,”வாத்தியாருக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரியல இருக்காருல்ல.இப்ப எப்புடி இருக்கு ?, நல்லா இருக்காரான்னு? செய்தி
ரேடியோவுல ஓடுச்சு.அதான் கேட்டு வந்தேன்” என்று அம்மா சொல்ல, ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற பாடல்,மூனிஸ் மைக் செட் கடை ஒலிபெருக்கி மூலம் பாட ஆரம்பித்தது.
ஊர் முழுக்க அந்த பாடல் சத்தம் கேட்டது. பாடலை கேட்டு கண் கலங்கியவாறு,”சங்கிலி கருப்பா! வாத்தியார காப்பாத்து சாமி” என்று கீத்தில் மாட்டியிருந்த இயேசு சாமி படத்தை மேரி தொட்டு வணங்கினாள். இந்த செய்கையை கவனித்த பீட்டர்,”இயேசுவுக்கு,கருப்பனுக்கும் வித்தியாசம் தெரியலையா”என்றபடி, “நான் இன்னக்கி பள்ளி கூடம் போகல” என்றான். “இந்தா! பள்ளி கொடம் போகாம,குடிசையில உட்காந்து என்ன பண்ண போற” என்றாள். “‘தினம் வாத்தியார் செத்து போயிட்டாருன்னு’ சொல்லியே இரண்டு இல்ல மூனு மணிக்கு பள்ளி கூடத்த விட்டற்றாங்க.சாய்ங்காலம் காலணி வழியா வரப்ப,வெயில்ல வெறுங்கால்ல நடக்கவே முடியல.இங்க பாரு வெயில்ல கால் பாதமே கொப்புளுச்சு போகுது” என்று சொல்லியபடி காலை நீட்டி அம்மாவிடம் காட்டினான். பீட்டர் பாதங்களை தொட்டு பார்த்து,”வாத்தியார் ஆஸ்பத்திரியில நல்லா தானே இருக்காரு.அப்பறம் ஏன் சீக்கரமே விடுறாங்க” என்றாள். “உசிரு இப்பவோ,அப்பவோன்னு இழுத்துகிட்டு அலையுது.வாத்தியாருக்கு எதாவது ஆச்சுன்னா! கலவரம் வரும்.அதுக்காக முன்கூட்டியே பள்ளி கூடத்த விட்டு அனுப்பிடுறாங்க” என்றான். “சரி…சரி…பள்ளி கூடம் விட்டா,காட்டு பாதை வழியா வா” என்றபடி எழுந்தாள்.அவள் சொன்னதற்கு “காட்டு பாதை….” என வாயை திறந்த பீட்டரை நிறுத்தி,”காட்டு பாதை சுத்துதான்.இருந்தாலும் நீ அது வழியாவே வா” என்றாள். “காட்டு வழியா வந்தா ரொம்ப தூரம்.அதுக்கு செருப்பு போட்டுட்டு போன்னு சொல்ல மாட்டீற” என்று கோபித்து கொண்டான். “செருப்பு வாங்கி குடுத்தப்பவே,என்ன சொல்லி வாங்கி குடுத்தேன்.நம்ம தெருக்குள்ள,காட்டுக்குள்ள போடு.வெளிய போட்டுகிட்டு சுத்த கூடாது.அதுவும் காலணி பக்கம் போவே கூடாதுன்னு சொன்னேன்ல” என்று கத்தினாள்.
“ஏன்,காலணி பக்கம் போட்டு போக கூடாதுன்னு சொல்லுற” என்றான். “பத்து வயசு பய மாதிரிய இருக்க ?, பக்கத்து குடிசை பூன கண்ணு சாமுவேல் தான் இருக்கான்.அவன் அவங்க வீட்டுல பெத்தவங்க சொன்னா கேட்டுகிறான்.நீ மட்டும் ஏன் ?, பஞ்சு மில்லு வேலக்கி போய் உனக்காக அதிக நேரம் வேல பாத்து எட்டணா சம்பாதிக்கவே ரெண்டு நாள் ஆச்சு.அத மிச்சம் பண்ணி ரப்பர் செருப்பு வாங்கி குடுத்தா.என் பேச்சை கேட்குறீயா ?” என்று கத்தினாள்.. அவ்வளவு பேசியும் கோபித்தவாறு,”ஏன்னு சொல்லுங்க ?” என்றான். “அவங்க நம்மள விட உசந்தவுங்க.அவுங்க முன்னாடி நாம தோள்ல துண்டு போட கூடாது.செருப்பு போட்டு அவங்க முன்னாடி மரியாத இல்லாம நடக்க கூடாது.ஏன்னா! அவங்க கிட்ட தானே வேல பாக்குறோம்.கூலி தராங்க.அதான் புரியுதா ?” என்றபடி பீட்டரின் முகதாடையை செல்லமாக தடவி கொடுத்தபடி சொன்னாள். “சரிம்மா” என்றபடி எழுந்து “நீ காத்தால வேலக்கி போனா,சாயங்காலம் தான் வர.நான் செருப்பு போட்டு போனா,உனக்கு தெரியவா போது” என்று நினைத்து கொண்டே பள்ளிகூடம் கிளம்ப தயரானான். கூழை குடித்துவிட்டு, பீட்டருக்கு அலுமினிய கின்னத்தில் ஊற்றி வைத்துவிட்டு,”நான் மில்லுக்கு கிளம்புறேன்.கூழ குடிச்சிட்டு போ” என்று சொல்லிவிட்டு புறப்பட போனாள்.முகம் கழுவி விட்டு,சட்டை மாற்றியபடி,”சரிம்மா” என்றான். குடிசைக்கு வெளியே பரமேஸ்வரி வந்து நின்று,” மேரி….மேரி” என்றாள். பரமேஸ்வரியை பார்த்தவுடனே,”அய்யோ இவளா” என்று சலித்தவாறு, வெளியே வந்து “வாங்க” என்றாள். “வரவேற்பு இருக்கட்டும்.ஏன் நாட்டாமை சூசை வயலுக்கு வேலைக்கி வரதில்ல ?” என்றாள். “அக்கா, கூலி கட்டுபுடியாகல.அதான் தெரு ஜனம் யாரும் வய வேலக்கி போக வேணாம்னு முடிவு சொன்னாங்க” என்றாள். “மத்தவங்க முடிவு பண்ணினா உனக்கென்னா ?” என்று பரமேஸ்வரி கத்தினாள்.
கத்தியதை கேட்டு பொறுமையாக,” நாள் முழுக்க வேலைய வாங்கி,கம்மியா சம்பளம் குடுத்தா! எப்படி ஒத்து வரும்” என்றாள் மேரி. “ஓ…அப்படி ஆகிருச்சா! நாளக்கே வேல இல்லன்னு மில்லுகாரன் தூரத்தி விட்டா,வயக்காட்டு பக்கம் தானே வரனும்.அப்ப பார்த்துக்குறேன்” என்றபடி பக்கத்து வீட்டு பெண்களை பரமேஸ்வரி விசாரிக்க சென்றாள். அவள் போனவுடன் உள்ளே வந்தவள் பீட்டர் குளிக்காமல் கிளம்பியதை பார்த்து, “டேய், கிணத்தடியில தண்ணி புடிச்சு வச்சுருக்கேன்ல குளிடா” என்று சொல்லியபடி கிளம்பினாள். “ஹீம்…” என்று சலிப்புடன் போனான். துண்டை கட்டியபடி கிணத்தடிக்கு வந்த பீட்டர் தண்ணீரை இறைத்து குளித்து கொண்டிருந்தான்.ஒலிபெருக்கியில், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற பாடல் மறு ஒலிபரப்பாக மீண்டும் மீண்டும் பாடியது.சட்டென்று மைக் செட் இடத்திற்கு வந்த காலணி குடியிருப்பில் இருந்த நாட்டாமை சூசைலிங்கம்,”டேய் பாட்ட நிப்பாட்டுடா! என சத்தம் போட்டார்.அவரை பார்த்தவுடனே,தோள் துண்டை எடுத்து,கக்கத்தில் வைத்து,வேகமாக பாட்டை நிறுத்தி,”வாத்தியாருக்கு உடம்பு முடியல…வருத்தமா இருக்கு” என்றான் முனி. “நாயே! அதுக்குன்னு பாட்ட போட்டு அலற விடுவியா ?” என்று கடுப்பில் திட்டி தீர்த்தார். “என்ன பாட்டு சத்தம் கேட்கலைன்னு” கிணத்தடியில இருந்து மைக் செட் கடையை பார்த்தான் பீட்டர்.அங்கு கக்கத்தில் துண்டை வைத்தபடி கூனி குறுகியபடி முனி, நாட்டாமையிடம் பேசி கொண்டிருப்பதை வழக்கமாக கடந்து போகாமல் கூர்ந்து கவனித்தான்.”ஏதோ பிரச்சனை போலன்னு” நினைத்தபடி இருந்தான். அங்கு வந்த காலனியை சேர்ந்த அய்யாதுரை,”யோவ்,எங்க கட்சி தலைவர் ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடுறாரு.அவருக்காக பிராத்தனை பண்ணி பாட்டு போடுறாங்க.நீ எதிர் கட்சிகாரன் இங்க வந்து தகராறு பண்ணுற” என்று சூசைலிங்கத்திடம் வாக்குவாதம் செய்தார். “யோவ்,பாட்டு போட்டு அலற விடுறான்.காலணி கடைசி வரைக்கும் சத்தம் கேட்குது.பாட்டு போட்டா,உன் வாத்தியார் எழுந்து உட்காந்திருவாரா ?.என்னதான் உங்க அறிவோ!” என்றார் சூசைலிங்கம்.
“அடேங்கப்பா! உங்க கட்சி முன்னாள் தலைவரு செத்தப்ப,மெரினாவுல இருக்குற அவர் சமாதியில பேப்பரை வச்சு,’காலையில தலைவர் பேப்பர் படிப்பாரு.வெத்தல பாக்கு போடுவாருன்னு’ எல்லாத்தையும் வச்சு கும்புட்ட உங்க அறிவ விடவா ?” என்று அய்யாதுரை பதில் பேச,வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிய,கை ஓங்கிய சூசைலிங்கத்தை தடுத்து,அவரின் கை பிடித்து பின் இழுத்தான் முனி.சட்டென்று,”சீ…..நாயே கை எடு” என்று முனியை தள்ளிவிட்டு,”என்னை தொடுற அளவுக்கு வந்துட்டீயா!” என்று கோபத்தில் கத்தினார் சூசை. “எல்லாம் உன்னால,உன்ன கவனுச்சுகிறேன்” என்று அய்யாதுரையை திட்டிவிட்டு முனியையும்,சுற்றி நின்ற ஜனத்தையும் முறைத்தபடி அங்கிருந்து சென்றார் சூசை. “பொய்யா பேசுவானுங்க,ஆனா உண்மைய பேசுனா! இவனுக்கு மட்டுமில்ல.இவன் கட்சிகாரங்களுக்கும் பொறுக்காது. அது பாட்டு போட்ட கோபம் இல்ல.அவர் வயலுக்கு நீங்க யாரும் வேலைக்கு போகலேல்ல! அதான் நாட்டாமைக்கு கோபம்” என்றபடி அய்யாதுரை சிரிக்க.உடன் இருந்தவர்களும் சிரிக்க.காதில் விழுந்தும், திரும்பி பார்க்காமல் கோபத்தில், “பிச்சகார பயலுக கூட இவனும் சேர்ந்துகிட்டு என்னையவே நக்கல் பண்ணி சிரிக்கிறான்” என்று கோபத்தில் நினைத்தபடியே நடந்தார் சூசை. சண்டை வேடிக்கை பார்த்தபடி,நேரம் போனதே தெரியாமல் நின்ற பீட்டர் வேகமாக வீட்டுக்கு ஓடி கிளம்பி,பள்ளி கூடத்தை நோக்கி ஓடினான். பள்ளி தொடங்கியது. மதிய நேரத்தில் உணவுவேளை முடிந்து சிறது நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு செல்ல அறிவிப்பு வந்தது.பள்ளி மாணவர்கள் திறந்து விட்ட குதிரைகள் மாறி,எல்லாரும் வேகமாக வீட்டிற்கு ஓடினார்கள். வீட்டிற்கு செல்லும் போது சந்தோஷத்தில், “இப்படியே தினம் தினம் வாத்தியாருக்கு பிரச்சினை வந்து நமக்கு பள்ளி கூடம் லீவா விடனும்” என்று சக மாணவர்களோடு பேசியபடி சந்தோஷமாக பீட்டர் காலணி வழி செல்ல, ஆலமரத்தடியில் நின்ற நாட்டாமை சூசை கும்பளாக சென்ற மாணவர் கூட்டத்தை உற்று கவனித்து, கோபமாகி அழைத்தார். அவர்களும் சூசை பக்கத்தில் வந்தார்கள்.மாணவர் கூட்டத்தில் அதுவும் பீட்டரை பார்த்து முறைத்தபடி நின்றார். சூசை முறைத்து பார்த்த போது பீட்டருக்கு அடி வயிற்றை கலக்கி,கால் நடுங்க.”டேய்,செருப்ப கழட்டுடா” என்று அருகில் நின்ற அழகு,பீட்டரிடம் கூசு….கூசுவென்று சொல்ல,படக்கென்று கழற்றினான்
![]()
பீட்டர். “அய்யா, தெரியாம போட்டு வந்துட்டேன்” என்று மெதுவாக பீட்டர் சொல்ல,”மத்தவன் எல்லாம் கிளம்பு” என்று கண்கள் சிவக்க,கீழிருந்த மரக்குச்சியை கையில் எடுதார் சூசை. பயத்தில் மற்ற மாணவர்கள் ஓட,பீட்டர் பயத்தில் நின்றபடி டவுசரிலே சிறுநீர் கழிந்தான். “என்ன தைரியம் உனக்கு.வேலக்கி வாடின்னா,உன் ஆத்தா சிறுக்கி காசு ஜாஸ்தி கேட்குறா. காலையில பாட்டு போட்டு உன் ஊரான் அலற விடுறான்.கேட்டதுக்கு என் சாதிகாரன விட்டே சண்டை பிடிக்க வக்கிறது.நீ எங்க காலணி பக்கமே செருப்பு போட்டு வர. கொஞ்சம் இடம் விட்ட,தலை மேல ஏறுவீகலோ!” என்றபடி குச்சியால் ஓங்கி சூசை அடிக்க, தொப்பென்று கீழே விழுந்து புரண்டான்.”இங்க வாடா…..வாடா” என்றபடி குச்சியால் அடிக்க.அருகில் தார் சாலையில் கானல்நீர் தெரிய, கூடான சாலையில் பீட்டரை அடித்து உருள செய்தார். தார் சாலை சூட்டில் பீட்டர் கத்தி கதற.அந்த காலணி ஜனமே கூடியது. “நாலு போடு போடு….தலைவரே” என்று கூட்டத்திலிருந்தவர் சொல்ல. “டேய்,சட்ட துணி,டவுசர கலட்டி அம்மணமா நில்லு” என்று சூசை உத்தரவு போட்டார். பயத்தில் கதறியபடியே,மேல் சட்டையை கலட்டியபடி நின்றான் பீட்டர். அவனோடு படிக்கும் காலணி வாழ் மாணவர்களும் இதை கவனித்தபடியே நின்றார்கள். அப்போது அங்கு வந்த அய்யாதுரையை கவனித்து,வேகமாக அவரிடம் ஓடி “அய்யா….நீங்களே ஞாயத்த சொல்லுங்க” என்றபடி அவரின் காலை பிடிக்க போனான் பீட்டர். “டேய், தொடாதடா…நில்லுடா…” என்று அவனை தொட விடாதவாறு தடுத்தார்.”என்னப்பா கூட்டம் போட்டுகிட்டு அடபோங்கப்பா…” என்றவாறு கூட்டத்தை கலைத்தார். “போடா….இனி செருப்பு போட்டாத போ” என்றவாறு அவனையும் விரட்டினார் அய்யாதுரை. செருப்பை கூட எடுக்காமல் ஓடிய பீட்டரை பார்த்த,சூசைக்கு கோபம் பொங்கியது. “யோவ் லூசா நீ….அவனை விரட்டி விடுற” என்று அய்யாதுரையை திட்டினார். கூட்டமெல்லாம் கலைந்து இருவரும் தனியாக வந்தார்கள்.”யோவ்,இப்ப எதுக்கு அந்த பயல விரட்டி விட்ட?” என்றார் சூசை. “நீ அவன அடிச்சு என்ன ஆகா போது.அப்பறம் நீ தேர்தல் நேரத்துல அந்த ஜனத்த தேடி தான் ஓடனும்.உன் கட்சிக்கு மூலதனமே அந்த
கூட்டத்தோட ஓட்டுதான்.சுத்த விவரம் புரியாத ஆளா இருக்கியே.உன் இடத்துல வச்சு,அவங்கள கோபம் போற வர அடிச்சுவிடு” என்று சொல்லியபடி அய்யாதுரை கிளம்பினார். மீசையை முறுக்கி கோபத்தில் பீட்டரையும்,மேரியையும் தோட்டத்து வீட்டுக்கு இழுத்து வர செய்தார் சூசை. தோட்டத்து வீட்டுக்கு இழுத்து வந்த பயத்தில் அழுது கொண்டிருந்த பீட்டரை மேரி சமாதானபடுத்தி கொண்டிருந்தாள். உள்ளே வந்து பீட்டரை பார்த்து,”அங்க தப்பிச்சுட்ட,இங்க உன்ன சும்மா விடமாட்டேன்டா” என்றவாறு கையிலிருந்த கட்டையால் அடிக்க ஓங்க,”சாமி என் புள்ளய விட்டுங்க” என்று சூசை கால் பிடித்து அழுதாள் மேரி. “சீ…..விடுடீ தே*****” என்று கெட்ட வார்த்தையில் திட்டியவாறு கட்டையால் ஓங்கி தலையில் அடித்தார்.மட்டை பிளந்து ரத்தம் வடிய,கீழே விழுந்து இறந்தாள். “அம்மா….மா” என்றவாறு கத்தி கதறினான் பீட்டர். மேரி இறந்ததை பார்த்து அதிர்ச்சயில் கட்டையை கீழே போட்டபடி சூசை நின்றார்.பீட்டரின் கதறல் வெளியே தோட்டம் முழுவதும் கேட்டது.ஜன நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறுவயதில் தந்தை இழப்பு.இப்போது தாயின் இழப்பு என்ன செய்ய,எதிரே இருந்த சூசை மீது கோபம். “என்னடா….” என்றபடி மனதுக்குள் கொலை செய்த பயத்திலும்,முகத்தில் விறைப்பாகவும் பீட்டரை பார்த்தார் சூசை. “டேய்,இவனையும் கொன்னு தோட்டத்துக்குள்ளயே ரெண்டு பேரையும் பொதச்சிடு” என்று அடியாளிடம் சூசை சொல்லி கொண்டிருக்க.மூலையில் கிடந்த கதிர் அறுக்கும் சிறிய அருவாளை எடுத்து, சட்டென்று எதிர்பார்க்காத நேரத்தில் சூசை வயிற்றில் குத்தி சாய்த்தான் பீட்டர். குத்துபட்ட நிலையில் துடிக்க துடிக்க செத்து விழுந்தார் சூசை. இரத்த கரை படிந்த அருவாளை கையிலே பிடித்தபடி,இறந்து கிடந்த அம்மாவை பார்த்தபடி கதறி அழுது கொண்டிருந்தான் பீட்டர். “டேய்…..ஏய்….வாங்கடா” என்று கத்தி மேலும் சில ஆட்களை அடியாள் அழைக்க.சற்று யோசிக்காமல் அவனின் கையை அருவாளில் கீழித்து
தள்ளி,வெளியே வந்து தோட்டத்திற்குள் புகுந்து ஓடி தப்பினான் பீட்டர். ‘முப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு கல்பாறை புனித லூர்து அன்னை தேவாலயத்தில் அருட்தந்தை மரிய ஆல்பர்டை இப்படி ஒரு கோலத்தில் சந்திப்பேன்’ என்று பீட்டரும் எதிர்பார்க்கவில்லை. இவனை யாரென்று தெரியாத அருட்தந்தை,”சொல்லுப்பா” என்று கேட்க. அவன் கண்களில் கண்ணீரானது பெருக்கி வழிய அதனை துடைத்தவாறு, படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கையை விட்டு,அருட்தந்தை கைகளை இறுக பற்றியபடி,”நான் ஒரு பாவி.கர்த்தர் என்னை மன்னிக்கவே மாட்டார்” என்றபடி மீண்டும் அழுதான். கூண்டின் சிறு சிறு துவாரங்களின் வழியாக அவனை கவனித்த அருட்தந்தை.’அவனின் நிலை மோசமானதாக இருக்கும்’ என்று நினைத்தபடியே,தன் கைகளில் பற்றியிருந்த பீட்டரின் கையை விலக்கி கொள்ள முடிகிறதா! என்று முயன்று பார்த்தார்.முடியாமல் போகவே தானும் இறுக பற்றியபடி இருந்தார். “நான் பாவி.குற்றம் செய்தவன்.நான் செய்த குற்றங்கள் எல்லாம் என்னை தூரத்தி கொண்டு வருகிறது.என்னை கர்த்தர் மன்னிக்க மாட்டார்” என்று கண்ணீர் விட்டபடி சொல்லிவிட்டு,அருட்தந்தை கைகளை விடுத்து,தன் கண்களை துடைத்து கொண்டு மேலும் சொன்னான். “நிறைய கொலைகள் செய்து தண்டனை அனுபவித்துள்ளேன்.ஆனால் இதுவரை யாருக்கும் நான் பயந்து ஓடி ஒளிந்தது இல்லை.இப்போது நான் செய்த குற்றத்திலிருந்து தப்பி விட்டேன். குற்றவுணர்விலிருந்து என்னால் தப்ப முடியவில்லை” என்று அழுது,கணகள் சிவந்த பீட்டரின் முகத்தை பார்த்த அருட்தந்தைக்கு அவன் யாரென்று புரிந்தது. குப்பென்று வியர்த்து,தன் கைகுட்டையை எடுத்து தன் நெற்றி,வழுக்கையில் வடிந்த வியர்வையை துடைத்து கொண்டார். தொலைக்காட்சி, செய்தி தாள்,சமூக வலைதளங்கள் என எல்லா ஊடகங்களிலும் முக்கிய செய்தி பீட்டர் தான். ‘முக்கிய தொழிலதிபர் காசிம் மீரானை அரசியல் நோக்கத்திற்காக ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் கொலை செய்தான்’ என்பது
உண்மை.ஆனால் ‘தொழில் போட்டியால் முக்கிய பிரமுகர், பீட்டரை வைத்து கொலை செய்தார்’ என்பது ஊடக வழி செய்தி.ஆக மொத்தம் மாநிலத்தில் பரபரப்பாக தேடப்படும் குற்றவாளி பீட்டர்.தலைமறைவாக இருக்க தனது முன்னாள் கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளான்.இவனை பிடிக்க போலீஸார் வலை வீசி தேடினாலும்,இவன் பிடிபட்டால் ‘தன் அரசியலுக்கு ஆபத்து’ என்று அமைச்சர் செல்வம், பீட்டரை கொலை செய்ய வேறு கும்பல் மூலம் தேடுதல் வேட்டையில் உள்ளார்கள். அருட்தந்தை சற்று யோசித்து,”கர்த்தர் உன்னை மன்னித்து காத்தருள்வார்” என்றார். கண்களை துடைத்து,தடித்த குரலில்,”பாதர் நான் சர்ச்சில் தங்கலாமா” என்றான் பீட்டர். என்ன சொல்வது என நடுக்கதோடு அருட்தந்தை அமைதி காத்தார். “தன்னை பற்றிய செய்தி அறந்திருப்பார்” என்று அவரின் மனநிலையை புரிந்து கொண்ட பீட்டர் அங்கிருந்து வேறு பக்கம் செல்ல முடிவெடுத்தான்.கடைசியாக, “அருட்தந்தையே, இத்தனை நாளா நான் செய்த கொலைக்கு காரணம் இந்த சமுதாயம் தான்” என்றான். பீட்டரிடம் பேச தயக்கபட்ட அருட்தந்தை,பேசாமல் அமைதியாய் இருந்தார். அவரின் மௌனம் பீட்டருக்கு கோபத்தை உண்டாக்கியது.அதுசரி,”நீங்களே,கூட்டத்துல கடவுளுக்கு முன் எல்லோரும் சமம்ன்னு சொல்லி மதம் மாற வச்சீங்க.ஆனா மதம் மட்டும் தான் மாறுனோம்.சாதி அப்படியே தான் இருந்தது.சர்ச்சிலயே சாதி பாக்குறீங்க.உங்க கிட்ட என் நிலைய சொல்றதுல அர்த்தமே இல்ல” என்றபடி எழுந்து வெளியில் நடந்தான்.அவனை கவனித்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த அருட்தந்தை. பீட்டர் சர்சை விட்டு வெளியில் சென்றவுடனே,தனது செல்போன் மூலம் போலீஸ்க்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். வெளியே வந்த பீட்டர். கிராமத்தின் ஒத்தையடி பாதை வழியாக நடக்க தொடங்கினான்.நள்ளிரவு நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது.காலணியை நெருங்கி,அந்த தெரு சாலையின் முகப்பில் நின்று சாலையை வெறிக்க பார்த்து நின்று கொண்டிருந்தான்.
சாலையில் ஒவ்வொரு அடியாக கால் வைத்து நடக்க,அவனின் பழைய நினைவுகள் வந்து வந்து போனது.படுத்துகிடந்த தெரு நாயகள் ‘லொள் லொள்’ என்று குரைத்தபடி இவனை நெருங்கின.உடனே சாலையோரம் இருந்த கற்களை பொறுக்கி,நாய்கள் மீது விட்டெறிய குரைத்தவாரே தூர ஓடியது. காலணிக்கு நடுவில் இருந்த பேருந்து நிழற்குடையில் வந்து அமர்ந்தான். பிளாஸ்டிக் மேற்கூரை போடபட்டு,அமரும் இருக்கை இரண்டு இருந்தது. “குறைந்த பட்ஜெட்டில் போடபட்ட நிழற்குடை போல, ஒரு புயல் காத்துக்கூட தாங்காது” என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடியே இருக்கையில் அமர்ந்தான். 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் பெரிய ஆலமரம் இருந்ததும்,அருகில் சற்று தூரத்தில் இருந்த தன்னுடைய தெரு,தான் இருந்த குடிசை இல்லாமல் வேறு சில வீடுகள் இருப்பதை கவனித்தான்.இந்த இடத்தில் நடந்த கோர சம்பவங்களும் அவன் மனதை ஆட்டி படைத்த வண்ணம் இருக்க,இடது பக்கமாக எழுந்து திரும்பி அய்யாதுரை வீட்டை தேடினான்.அப்போது இருந்த வீடுகள்,காலணி அமைப்பு எல்லாம் மாறியிருப்பதை உணர்ந்தபடியே,இருக்கையில் அமர்ந்தான்.கடும் பசி அடிவயிற்றை பிடித்தெடுத்தது.இடது பக்கம் மூன்று வீடு தள்ளி இருந்த மாங்காய் மரத்தை பார்த்தான்.அது சூசைலிங்கத்தின் வீடு.அடி மனதின் அழியாத கோர சுவடு ஆரம்பித்த அந்த வீட்டை பார்த்து வெறிக்க பார்த்தபடியே நின்றான். 1985 காலகட்டத்தில் கல்பாறை பஞ்சாயத்து என்றாலே எல்லோரின் நினைவுக்கு வருவது ‘மதம் மாறிய ஊர்’ என்று.அப்போது சாதி தீண்டாமை கொடுமை.கடும் பஞ்சம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கிய நிலை யும்.”மதம் மாறினால் குழந்தைகளுக்கு ரொட்டி,பால் தருகிறோம்.அதுமட்டுமின்றி கிறிஸதுவத்தில் சாதி கொடுமை இல்லை” என்ற மிஷினரிகள் சொல்ல, எந்த யோசனையும் இல்லாம உணவுகாகவும்,சாதி கொடுமையிலிருந்து தப்பிக்க என தெரு ஜனம் எல்லாரும் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள். ஊரே ஒரு நாளில் ஞானஸ்தானம் வாங்கி மதம் மாறியது தான் அப்போதைய முக்கிய செய்தி. ஊரில் பள்ளிகூடம் வர, ஊரின் நிலை மெல்ல புத்துயிர் பெற ஆரம்பித்தது. புனித லூர்து அன்னை தேவாலயம் ‘யாருக்கு
சொந்தம்’ என்ற சாதி பிரச்சினை உருவாகி, ஆனால் ஜெப வழிபாட்டு கூட்டங்களில் சண்டை சச்சரவு பூதகரமாக வெடிக்க,ஒரு வழியாக தேவாலயத்தில் உள்ளே மேல் வகுப்பு,கீழ் வகுப்பினர் வழிபாடு செய்ய தடுப்புசுவர் கட்டபட்டு வழிபாடு தொடங்கபட்டது. பின் ‘வயல் வேலையில் குறைந்த கூலி கொடுத்தது.செருப்பு போட்டதற்காக தன்னை அடித்து,அம்மாவை கொன்றது.சூசையை கொன்று தோட்டத்தை விட்டு ஓடிய பீட்டர் போலீஸிடம் மாட்டி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஐந்து வருட தண்டனையை அனுபவித்து,சிறைவாசத்திற்கு பின் மாநகரில் பிரபல ரவுடியாக உருவானது’ என காலணி ஆட்கள் அடக்குமுறையையும்,தன் வாழ்க்கையை நினைத்தபடி பீட்டர் நின்றான். அவன் தோள்பட்டையை மெல்ல கை வைத்து தடவியவாறு “தம்பி” என்ற குரல் வந்தது.சட்டென்று திடுக்கிட்டு வலதுபுறம் பார்த்தான்.80 வயதுக்கு மேலான பெரியவர்.கந்தலான உடை,சுருங்கிய முகம் வெள்ளை தாடி,கை சற்று நடுக்கியபடியே இருக்க,”நல்லாருக்கியா” என்று பீட்டரிடம் விசாரித்தார். “இவர் எப்போது இங்கு வந்தார்.எங்கயோ பார்த்த முகமாவே இருக்கிறதே!” என்ற பதட்டம் கலந்த சந்தேகத்தோடு ஏறெடுத்து பார்த்தான். “அய்யா யார் நீங்க” என்றான். “கடவுள்” என்றபடி,தன் தாடியை தேய்த்தபடி சிரித்தார். கோபத்தில் ஏறெடுத்து பார்த்து,”லூசு பய போல” என்று நினைத்து “போயா….” என்று பெரியவரை விரட்டினான். “தம்பி, நான் கடவுள் தான்” என்றார் பெரியவர். “சரி, இப்ப என்னத்துக்கு வந்திருக்க?” என்றான். “உனக்கு என்ன வேனும்னு கேளு” என்று பெரியவர் சொல்ல,”ஆமா….கேட்டவுடனே குடுத்திட்டு தான் மறு வேல பாக்க போற” என்று திட்டியபடி எழுந்து கிளம்ப போனான் பீட்டர். “கேளு கண்டிப்பா செய்யுறேன்” என்று சிரித்தபடி சொன்னார். தேவாலாயத்திற்கு வந்த போலீஸ்காரர்கள் பீட்டரை கைது செய்ய தேடியபடி அங்கிருந்து காலணி நோக்கி வந்தார்கள்.
“ஓ…..அப்புடியா” என்று சில நொடி யோசித்தான்.”கடவுள்ன்னு பொய் சொல்லுறான் போல,எது சொன்னாலும் நடக்காது” என்று தனக்குள் சிரித்தபடி,”நான் கலெக்டர் ஆகனும்” என்று பெரியவரிடம் சொல்லி சிரித்தான்.இவனை பார்த்த பெரியவர்.தாடியை தேய்த்தபடி சிரித்து,”உனக்கு கிடைக்க போற வாய்ப்பை பயன்படுத்தி,நீ நெனச்சபடி வாழ்க்கைய மாத்திக்கோ! எல்லாருக்கும் நல்லது பண்ணு” என்றபடி பீட்டர் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார். “யோவ், பெருசு நல்ல படம் காட்டுறயா” என்று பீட்டர் சிரித்தான். “உனகான ஒருநாள்.அந்த நாள் நீ கடந்து போயிட்டா! நீ நெனச்ச வாழ்க்கை தானா மாறும்” என்று அந்த பெரியவர் சொல்லி கொண்டிருக்க,காலணிக்குள் வந்த போலீஸ்காரர்கள் பேருந்து நிழற்குடை பக்கம் நின்ற பீட்டரை கவனித்து,”சார் அங்க இருக்கான்” என்று சொல்லியபடி பீட்டரை பிடிக்க ஓடி வந்தார்கள்.அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த பீட்டருக்கு “எப்படியாவது தப்பிக்கனும்” என்று பெரியவர் பக்கம் திரும்பி பார்த்தான்.ஆனால் எதிரில் அவர் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியாக இருக்க.இடதுபுறமாக திரும்பி பார்த்து ஓட போகும் போது வேகமாக வந்த போலீஸ் ஒருவர் லத்தியால் பீட்டர் முகத்தில் குத்த,கையால் முகத்தை பிடித்தவாறு கலங்கினான். பின் வந்த போலீசார் லத்தியால் சரமாரியாக தாக்க.பொத்தென்று கீழே விழுந்தான். “அம்மா…..” என்று அலறியபடி எழுந்தான். கண்ணில் நீர் வழிய கலங்கியபடி சுற்றி முற்றி பார்த்தான்.கலங்கிய கண்களால் மங்கலாக தெரிந்தது. கண்களை கசக்கியபடி பார்த்த அவனுக்கு வியப்பாக இருந்தது. சுற்றி குடிசை வீட்டுக்குள் இருப்பது தெரிந்தது.கீழே குனிந்து பார்த்த போது,டவுசர் அணிந்திருப்பதும்,பாயில் படுத்துகிடந்த்தையும் உணர்ந்தான்.”ஒருவேளை அந்த பெரியவர் மந்திரம் போட்டு நம்மள மறைய வச்சு.வேற பக்கம் விட்டாரோ ?” என்று நினைத்தபடியே எழுந்து அடுப்பங்கரை பக்கமும்,குடிசை துவாரம் வழியே கொட்டகை பக்கமும் பார்த்தான்.கையில் குவளையில் தண்ணீரை வைத்து வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பியவாறு டீக்கடையிலிருந்து அம்மா நடந்து வந்தாள்.அம்மாவை பார்த்த
சந்தோஷத்தில் வெளியே ஓடி சென்று அம்மாவை கட்டி பிடித்து அழுதான். கட்டி பிடித்த வேகத்தில் அம்மா கையிலிருந்த தண்ணீர் குவளை கீழே விழுந்தது. “டேய்,ஏன்டா….என்னாச்சு” என்றபடி பீட்டரின் முகத்தை தூக்கி பார்த்தாள்.அவன் வாத்தியார் உடல் நிலை மோசமாக இருப்பதை நினைத்து அழுவதாக மேரிக்கு புரிந்தது. உடனே,”அழுகாத தங்கம் ஒன்னும் ஆகல.நல்லா இருக்குன்னு ரேடியோவுல சொன்னாங்க” என்றாள். பிடியை விடுத்து தள்ளி,”நான் உன்ன கேட்டேன்” என்று கண்ணீரை துடைத்தபடி கேட்டான். “எனக்கென்னா” என்றாள். “உன்ன கொன்னுடாங்க.நான் சூசைய குத்திட்டேன்” என்று சொல்லும் போது,பீட்டரின் வாயை பொத்தி, “என்ன கனவு கண்டியா?,போ….எதாவது பேசாம பள்ளி கூடம் கிளம்பு” என்றபடி கிணத்தடி பக்கம் போனாள். சட்டென்று குழப்பத்தில் சுற்றி இருக்கும் தெருவையும், குடிசை வீடுகளையும் கவனித்தான்.தன்னையும் தொட்டு பார்த்துக் கொண்டான்.‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற பாடல்,மூனிஸ் மைக் செட் கடை ஒலிபெருக்கி மூலம் பாட ஆரம்பித்தது. அப்போதுதான் கடந்த காலத்திற்கு வந்தது அவனுக்கு புரிந்தது. “அந்த பெரியவர் நிஜமாவே கடவுளா ?,கடவுள் வந்து என்கிட்ட பேசிட்டு போய்ருக்காரா!” என்று பீட்டர் சந்தோஷபட்டு கொண்டிருக்க,”ஆமா நான் கலெக்டர் ஆகனும்னு தானே கேட்டேன்.அப்பறம் ஏன் என்னைய கடந்த காலத்தில் விட்டுட்டு போயிருக்காரு” என்று குழம்பினான். “டேய், கிணத்தடியில தண்ணி புடிச்சு வச்சிருக்கேன் போய் குளி” என்று மேரி குரல் கொடுக்க,ஏதோ பழைய வாழ்க்கை, அம்மா எல்லாம் திரும்ப கிடைத்த சந்தோஷத்தில்,” சரிமா….” என்று உற்சாகமாக சொன்னான்.அப்போது குடிசைக்கு வெளியே பரமேஸ்வரி வந்து நின்று,” மேரி….மேரி” என்றாள். பரமேஸ்வரியை பார்த்தவுடனே பீட்டருக்கு சற்று பயம்
வந்தது.வெறிக்க பார்த்தபடி நின்றான். “அய்யோ இவளா” என்று சலித்தவாறு, வெளியே வந்து “வாங்க” என்றாள் மேரி. “வரவேற்பு இருக்கட்டும்.ஏன் நாட்டாமை சூசை வயலுக்கு வேலைக்கி வரதில்ல ?” என்றாள். “அக்கா, கூலி கட்டுபுடியாகல.அதான் தெரு ஜனம் யாரும் வய வேலக்கி போக வேணாம்னு முடிவு சொன்னாங்க” என்றாள். “மத்தவங்க முடிவு பண்ணினா உனக்கென்னா ?” என்று பரமேஸ்வரி கத்தினாள். கத்தியதை கேட்டு பொறுமையாக,” நாள் முழுக்க வேலைய வாங்கி,கம்மியா சம்பளம் குடுத்தா! எப்படி ஒத்து வரும்” என்றாள் மேரி. “ஓ…அப்படி ஆகிருச்சா! நாளக்கே வேல இல்லன்னு மில்லுகாரன் தூரத்தி விட்டா,வயக்காட்டு பக்கம் தானே வரனும்.அப்ப பார்த்துக்குறேன்” என்றபடி பரமேஸ்வரி செல்ல, பீட்டருக்கு பழையபடி ‘அம்மாவுக்கு ஆபத்து வருமோ!’ என பயந்து,”அம்மா,ஏன் நாட்டாமைய பகைச்சுகிற.அங்கயே வேலைக்கு போ” என்றான். பீட்டர் குளிக்காமல் நிற்பதை பார்த்து, “இது எங்க பிரச்சினை. நாங்க பார்த்துகுறோம்.டேய், கிணத்தடியில தண்ணி புடிச்சு வச்சுருக்கேன்ல குளிடா போ” என்று சொல்லியபடி மேரி கிளம்பினாள். அம்மாவின் தைரியம் பீட்டருக்கு சற்று பயத்தை தந்தது. கிணத்தடிக்கு போய் தண்ணீர் எடுத்து குளிக்க தொடங்கினான். சற்று யோசித்து, “இப்ப பாட்டு மறுபடியும் ஓடுமே.அப்பறம் நிக்கனுமே,நாட்டாமை கத்தனுமே” என்று நினைத்தபடி முனிஸ் மைக் செட் கடையை பார்த்தான். சரியாக ஒலிபெருக்கியில்,
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற பாடல் மறு ஒலிபரப்பாக மீண்டும் மீண்டும் பாடியது.சட்டென்று மைக் செட் இடத்திற்கு வந்த நாட்டாமை சூசைலிங்கம்,”டேய் பாட்ட நிப்பாட்டுடா! என சத்தம் போட்டார். கிணத்தடியில் இருந்த பீட்டர் காதில் விழ, “சண்டைக்கு வந்துட்டாரு.இப்ப சமாதன புறா அய்யாதுரை வரனுமே” என்றபடி கவனித்தான். அதே போல அங்கு வந்த அய்யாதுரை,”யோவ்,எங்க கட்சி தலைவர் ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடுறாரு.அவருக்காக பிராத்தனை பண்ணி பாட்டு போடுறாங்க.நீ எதிர் கட்சிகாரன் இங்க வந்து தகராறு பண்ணுற” என்று சூசைலிங்கத்திடம் வாக்குவாதம் செய்தார். கிணத்தடியில் இவர்களின் வாக்குவாத்த்தை கவனித்த பீட்டர்.”எங்க சனத்துக்கு ஆதரவா பேசுற மாதிரியே நடிக்கிற ஆள் அய்யாதுரை தான்” என்று நக்கலாக நினைத்தபடி நின்றான். அவர்களின் வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிய,கை ஓங்கிய சூசைலிங்கத்தை தடுத்து,அவரின் கை பிடித்து பின் இழுத்தான் முனி.சட்டென்று,”சீ…..நாயே கை எடு” என்று முனியை தள்ளிவிட்டு,”என்னை தொடுற அளவுக்கு வந்துட்டீயா!” என்று கோபத்தில் கத்தினார் சூசை. “எல்லாம் உன்னால,உன்ன கவனுச்சுகிறேன்” என்று அய்யாதுரையை திட்டிவிட்டு முனியையும்,சுற்றி நின்ற ஜனத்தையும் முறைத்தபடி அங்கிருந்து சென்றார் சூசை. சூசை செல்வதை முறைத்து பார்த்தபடி,”சாதி வெறி பிடிச்ச நாயே!” என மனதுக்குள் திட்டியபடி பீட்டர் நின்றான். சற்று நேரத்தில் கூட்டம் கலைய,”அய்யயோ….நான் இப்ப பழைய வாழ்க்கைக்கு வந்துட்டேன்.சின்ன பையன் பள்ளி கூடம் வேற போகனும்” என்று வேகமாக வீட்டுக்கு வந்து பள்ளிகூடம் கிளம்பி போனான். பள்ளிகூடத்திலும் சக நண்பர்களிடம் தனக்கு நடந்ததை “சொல்லாமா ?, வேண்டாமா ?” என்ற குழப்பத்தில் பீட்டர்
இருந்தான். பள்ளி தொடங்கிய மதிய நேரத்தில் உணவுவேளை முடிந்து சிறது நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு செல்ல அறிவிப்பு வந்தது. பள்ளி மாணவர்கள் எல்லாரும் வேகமாக வீட்டிற்கு ஓடினார்கள். பீட்டர் வீட்டிற்கு காலணி வழி செல்லும் போது, “ஒரு நாள் கடந்தால்,நான் நெனச்ச வாழ்க்கை மாறும்னு பெரியவர் சொன்னது இந்த நாளோ?” என்று நினைத்தபடி, “அய்யோ,காலில் செருப்பு போட்டு வந்துட்டனே” என்று தலையில் அடித்து கொண்டான்.பீட்டரின் செய்கையை கவனித்த சக நண்பர்களுக்கு புதிதாக இருந்தது. ஆலமரத்தடியில் நின்ற நாட்டாமை சூசை. கும்பளாக சென்ற மாணவர் கூட்டத்தை உற்று கவனித்து, கோபமாகி அழைத்தார். அவரை அழைத்ததை கவனித்த பீட்டர்.”இந்த பிரச்சினையில தப்பிக்கனும்” என்று நினைத்தபடி கால் செருப்பை கலட்டி கையில் பிடித்தவாறு சூசை பக்கத்தில் சக மாணவர்களோடு வந்து நின்றான். மாணவர் கூட்டத்தில் அதுவும் பீட்டரின் செய்கையை பார்த்த சூசை சற்று முறைத்தபடி பார்த்த போது, பீட்டருக்கு அடி வயிற்றை கலக்கி,கால் நடுங்கியது. எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான். பீட்டரை பார்த்து,”அந்த பயம் இருக்கனும். இனி காலணிகார ஆளுங்கள பார்த்தாலே! தெருகார பயலுக எல்லாம் செருப்ப தலையில வச்சுகிடனும்.சரியா ?” என்று சூசை அதட்ட,”சரிங்க” என்று தலையசைத்தபடி அங்கிருந்து வந்தான். “நல்ல வேள நாட்டாமை கோப படல.இனி செருப்பு போடாத” என்று பீட்டருக்கு அழகு அறிவுரை சொன்னான். தன் குடிசை வரையே செருப்பை கையில் பிடித்தபடி வந்து வீட்டின் முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீசியபடி உள்ளே போனான். “ச்…ச…. அந்த பெரியவர்கிட்ட ‘சாதி பாகுபாட்டை ஓழின்னு’ வரம் கேட்டுருக்கனும்.நான் விளையாட்டா ‘கலெக்டர் ஆகனும்னு’ கேட்டு தப்பு பண்ணிட்டேன்” என்று புலம்பியபடி பீட்டர் இருந்தான்.
வழக்கமாக மாலை ஆறு மணிக்கு வரும் அம்மா.இரவு வெகு நேரமாகி வராமல் இருக்க,பீட்டருக்கு கலங்கியது. “ஒருவேளை சூசை ஆட்கள் அம்மாவை தூக்கிட்டு போய் சித்ரவதை செய்திருப்பாங்கலோ?” என்ற பயமும் இருக்க.அம்மாவை தேடி வெளியே வர அம்மாவும் அழுதபடியே வந்து நின்றாள். “அம்மா அழுகுது.எதாவது ஆபத்தோ!, சூசை ஆட்கள் வந்திருக்காங்களோ ?” என்றபடி சுத்திமுத்தி பார்த்து,”என்னாச்சுமா” என்று அம்மாவிடம் கேட்டான் பீட்டர். அவள் அழுதபடியே,”எல்லாம் முடிய போகுது” என்றாள். அவன் நினைத்த மாதிரி “சூசை ஆட்கள் வந்து தோட்டத்திற்கு இழுத்து செல்ல போராங்க” என்று அம்மாவின் கையை பிடித்தபடி கதிகலங்கி நின்றான். “வாத்தியாருக்கு உடம்பு மோசாமாகிடுச்சுன்னு ரேடியோவுல சொன்னாங்கடா” என்று பீட்டரிடம் சொல்லி அம்மா கதறி அழுதாள். அம்மாவை பார்த்து,”அப்பாடா” என்று கண்களை மூடி நிம்மதி பெரு மூச்சு வாங்கி கண்களை திறந்தான் பீட்டர். திடீரென எல்லாம் மாறி இருந்தது. ஏசி அறை.நாற்காலியில் அமர்ந்தபடி பீட்டர் இருக்க.அவன் முன் மேஜை.அதில் பல கோப்புகள் எல்லாம் இருந்தது.மேஜை பக்கவாட்டில் இருந்த சிறு கண்ணாடி வடிவிலான அலங்கார பொருளில் அவனின் முகத்தை பார்த்தான். படிந்து வாரிய தலைமுடி.பளபளவென முகம்.கோட் சூட் என ஆளே மாறிய நிலையில்,மேஜை வலது பக்கத்தில் “திரு.பீட்டர் கருப்பையா ஐஏஎஸ்” என்ற அறிவிப்பு பலகையை பார்த்து ஆச்சரியபட்டான். அப்போது கதவை தட்டி உள்ளே வந்த அலுவலக ஊழியன்,”சார் உங்கள பார்க்க கல்பாறை முன்னாள் எம்எல்ஏ அய்யாதுரையும்,ஊர் நாட்டாமை சூசைலிங்கமும்
வந்திருக்காங்க” என்றான். சற்று யோசித்து,” என்ன விஷயமா ” என்றான் பீட்டர். “சாதி சங்க பேரணி நடத்த நீங்க அனுமதி தர விஷயமா பேசனும்னு சொன்னாங்க” என்றான். கோபம் வந்து பல்லை கடித்தபடி, “சரி வர சொல்லு…” என்று சொல்லி அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருக்க,”சார் வரலாமா ?” என்று கதவை திறந்து வாசலில் சூசைலிங்கமும்,அய்யாதுரையும் கேட்டார்கள். அவர்களை பார்த்த போது பீட்டருக்கு பல நினைவுகள் ஓடியது. “உனக்கு கிடைக்க போற வாய்ப்பை பயன்படுத்தி,நீ நெனச்சபடி வாழ்க்கைய மாத்திக்கோ! எல்லாருக்கும் நல்லது பண்ணு” என்று பெரியவர் சொன்னதை நினைத்து பார்த்து அமைதியானான். அவர்களை ஒரு நொடி ஏற இறங்க பீட்டர் பார்த்தான். உடனே தனது காலணிகளை அறை வெளியே கலட்டி விட்டு நின்றார்கள். அவர்கள் செருப்புகளை கலட்டியதை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தபடி,”வாங்க” என்றான் பீட்டர். அவர்கள் இருவரும் கும்புடு போட்டபடி உள்ளே வந்தார்கள்.
கார்த்திக் கிருபாகரன்
மணப்பாறை,
திருச்சி -dt
![]()