கதைகள்

நடுகைக்காரி!…. 50 ….. ஏலையா க.முருகதாசன்.

விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய நகைச்சுவையைக்கூட தான் சொல்வது நகைச்சுவைதான் என்றாலும் எந்தவிதமான நகைச்சுவை உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சொல்வதில் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் பாண்டித்தியம் பெற்றவர்.

அவர் தனது அனுபவங்களைச் சொல்லும் விதமே அலாதியானது.அவரால் மகாஜனாவில் மேடையேற்றப்பட்ட வெற்றி நாடகங்கள் பல.

அவர் ஒரு சிறந்த நாடக இயக்குனர், அவர் எழுதும் நாடக வசனங்கள் ஒவ்வொன்றும் காலங் கடந்தாலும் நினைவில் நிற்பவை.

மத்தியானச் சாப்பாட்டு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கும் முதல் வகுப்பு இது.கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் வகுப்பாசிரியர் மட்டுமல்ல,எண் கணித பாடத்திற்கும்,ஆங்கில பாடத்திற்கும் அவர்தான் ஆசிரியர்.

அவரிடம் பாக்கு வெற்றிலை போடும் பழக்கமும் இருந்தது.ஸ்ராப் றூமிலிருக்கும் போது மட்டும் வெற்றிலை பாக்குப் போடும் அவர் வகுப்புக்குள் வரும் போது அதைச் சப்பி முடிக்கும் நிலையில்தான் வருவார்.சில நாட்களில் வகுப்புக்குள் நுழைந்து கொண்டே சப்பி முடிக்கின்ற வாயசைவு தெரியும்.

பாக்கு வெற்றிலையை சப்பி முடித்த அவர் ஒரு செருமல் செருமிவிட்டு கூசாவிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடிப்பார்.

பெரும்பாலும் எல்லா வகுப்பிலும் மண் கூசாவில்தான் தண்ணீர் இருக்கும்.ஞானத்தின் வகுப்பிலும் மண் கூசா இருந்தது.வகுப்பறை மொனிட்டர் அதில் தண்ணீர் எடுத்து வைசு;சுவிடுவார்.

கறுவல் செல்லத்துரை தான் கொண்டு வந்த செய்தியைச் சொல்வதற்கான முதல் ஏற்பாடாக அதற்குத் தக்கதாக தனது முகபாவனையைக் கொண்டு வருவதற்காக வகுப்பறையின் மேற்குப்புற யன்னலுக்கூடாக ஒழுங்கைக்கு அந்தப் பக்கத்திலிருக்கும் பாக்கியம்மா ரீச்சரின் வளவில் நிற்கும் பனைமரங்களைப் பார்த்தவர் „ நல்ல பிடிப்பான நொங்குகள் தொங்குது’ என்றவர் தொங்குது என்பதை அழுத்திச் சொன்னார்.

மாணவ,மாணவிகள் விபரமில்லாதவர்களா,ஆளையாள் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுத்து மாஸ்ரர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அருந்ததி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீலலோஜினி சொன்ன கதையான,ஞானம் எட்டாம் வகுப்பில் நீலயோஜினியின் தலையில் ரோஜாப்பூவைச் செருகி விட்ட சம்பவத்திலிருந்து மீள முடியாமல் இருந்தாள்.’ஏன் நீலு இப்ப நீ அவனை விரும்புகிறியா’ என்று கேட்க „தெரியேலை’என்கிறாள் நீலலோஜினி.

நீலலோஜினி அடிக்கடி ஞானத்தைப் பார்ப்பதை அருந்ததி கவனிச்சாலும் அதை அவள் பொருட்படுத்தவில்லை.

ஆம்பிளைப் பிள்ளையளும் பொம்பிளைப் பிள்ளையளும் ஒன்றாகப் படிக்கிற வகுப்பில் அடிக்கடி ஒருவரை ஒருவர் யதார்த்தமாகப் பார்ப்பது இயல்புதானே என்பதால் ஞானத்தை நீலலோஜினி அடிக்கடி பார்ப்பதை அருந்ததி பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் எட்டாம் வகுப்பில் ஞானம் தனது தலையில் ரோஜாப்பூவைச் செருகிவிட்ட கதையைச் சொன்னதால் நீலலோஜினிக்கு ஞானத்தின்: மீது எதோ ஈர்ப்பு இருப்பதாக நம்பினாள்.

அருந்தியின் தகப்பனார் கொழும்பில் நீண்ட காலம் வேலை செய்துவிட்டு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு மாற்றலாகி வந்திருந்தார்.அருந்ததியின் பெற்றோருக்கு கொல்லங்கலட்டியில் சொந்த வீடு இருந்தது.

அந்த வீட்டில் அருந்ததியின் தகப்பனின் தாயும் தகப்பனும் இருந்து வீட்டைப் பராமரித்துக் கொண்டிருந்தனர்.

அருந்ததியின் பெற்றோர் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகிவர கொழும்பில் எஸ்.எஸ்.சி படிச்சுக் கொண்டிருந்த அருந்ததியை மகாஜனாவிலும் எஸ்.எஸ்.சியில் சேர்த்துவிட்டனர்.அதனால் எட்டாம் வகுப்பில் நடந்த ரோஜாப்பு செருகல் சங்கதி அருந்ததிக்கு முன்னரே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.

கறுவல் செல்லத்துரை மாஸ்ரரின் முகத்தை அருந்ததி பார்த்துக் கொண்டிருந்தாலும் ஞானம் எப்படிப்பட்டவன் என்பதை ஆராய்வதில் அவள் தனது மனசைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு செருமல் செருமிவிட்டு’ஆரார் கீரிமலைக் கடலில,; கேணியில் குளிக்கிறவை „ என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கேட்க,ஞானமும் தனபாலசிங்கமும் கையைத் தூக்கினார்கள்.

„ஓ நீங்கள் இரண்டு பேரும் குளிக்கிறது மட்டுந்தானோ இல்லாட்டில் அங்காலை இஞ்சாலை போறதில்லையோ „ என்று கேட்க,அவர் பொடி வைச்சுப் பேசுவது கூவில் கள்ளைத்தான் என ஆம்பிளைப் பிள்ளையள் புரிஞ்சு கொண்டாலும்,அவர்கள் மௌனமாக இருக்க „அங்காலை இஞ்சாலை’ என்று எதைச் சொல்கிறார் என மாணவிகள் புரியாதிருந்தனர்.

„பொம்பிளைப் பிள்ளையள் ஆரும் போய் குளிக்கேலையோ „ எனக் கேட்க புஸ்பகலாவும்,நீலலோஜினியும் மெல்ல கையை உயர்த்தினர்.புஸ்பகலா கீரிமலைக் கேணியில் குளிப்பதை அவள் கையை உயர்த்தியதன் மூலம் அறிந்து கொண்ட ஞானம்’உண்மையா „என்பது போல கண்களால் கேட்க, கொஞ்சம் வெட்கப்பட்டபடியே „ம்’ என்பது போல மெதுவாக தலையாட்டுகிறாள்.

அவர்கள் இருவரும் கண்களால் பேசியதை யாருமே கண்டுபிடிக்க மாட்டார்கள்.நீலலோஜினி கீரிமலைக் கேணியில் குளித்தது ஞானத்திற்குத்

தெரியும்,அன்றைய நாளை நினைச்சுக் கொண்ட நீலலோஜினி கீழ்க் கண்ணால் ஞானத்தைப் பார்க்கறாள்.

மீண்டுமொருமுறை மன்னிப்புக் கேட்பது போல அவளைப் பார்க்கிறான் ஞானம்..அன்று நடந்த சம்பவம் பற்றி அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்.

கீரிமலையில் ஆண்கள் குளிக்கும் கேணியும் பெண்கள் குளிக்கும் கேணியும் அருகருகா இருந்த போதும் அவை மேற்குப்புறச் சுவரால் பிரிக்கப்பட்டும்,வடக்குப் பக்கமும் மேற்குப் பக்கமும் கேணியைச் சுற்றி சுவர் கட்டப்பட்டிருக்கின்றது.

கேணியின் ஊற்றுத் தண்ணீர் ஆண்கள் குளிக்கும் கேணியிலிருந்தே பெண்கள் குளிக்கும் கேணிக்கு செல்கின்றது.

தண்ணீர் போவதற்காக மேற்குப்புறச் சுவரில் ஒரு ஒரு சாதாரண உடல் கொண்ட ஒருவர் நீந்திக் கொண்டே போகக்கூடிய துவாரம் இருக்கின்றது.

பெண்கள் ஆராவாரித்துக் குளிக்கும் சத்தம் ஆண்களின் கேணிக்குள் குளிக்கும் ஆண்களுக்கும்,ஆண்கள் ஆராவாரித்துக் குளிக்கும் சத்தம் பெண்களின் கேணியில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் கேட்கும்.

எவருமே அந்த பெரிய துவாரத்திற்கூடாக பெண்களின் கேணியை நோட்டம் விட முயற்சிப்பதில்லை.ஞானமும் அவனுடைய நண்பர்களும் கீரிமiலைக் கேணியில் குளித்துக் கொண்டிருக்கும் போது சில போட்டிகள் நடைபெறும்.

கேணிக்குள் குதித்து,குதித்த வேகத்தில் வாயால் கேணியின் அடியிலிருக்கும் மணலை எடுப்பது, கனநேரம் மூச்சுப் பிடிச்சுக் கொண்டு தண்ணீருக்குள் இருப்பது, தண்ணீருக்குள் நீச்சலடிப்பது என போட்டிகள் நடக்கும்.

ஒரு நாள் ஞானம் தனியாகவே கீரிமலைக் கேணியில் குளித்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது பெண்களின் கேணிப் பகுதியிலிருந்து,பெண்கள் குளிப்பதற்கான ஆரவாரம்; எதுவுமே வரவில்லை.

யாருமே அங்கிருக்க மாட்டார்கள் என நினைச்சுக் கொண்டு துவாரத்தினூடாக பெண்கள் கேணியை எட்டிப் பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சியாகவிருந்தது.அங்கே மூன்று பெண்கள் முழு உடையுடன் குளித்துக் கொண்டிருப்பதும்,இருவர் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டும்,ஒருத்தி அவன் பக்கமாக திரும்பி நின்று குளித்துக் கொண்டுமிருந்தனர்.

தன்னைப் பார்த்தபடி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த ஞானத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.அது நீலலோஜினி, ஞானத்தைக் கண்ட நீலலோஜினி பயந்து கத்தவில்லை.வேகமாகத் திரும்பி தன்னோடு குளித்துக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தாள்.அவர்கள் இரண்டு பேரும் திரும்பாமலே குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஞானம் பக்கம் திரும்பியவள் வேகமாக „போ’ என்பது போல கையை அசைத்தாள்.

அதற்கு மேல் கேணியில் உல்லாசமாக ஞானத்தால் குளிக்க முடியவில்லை.ஒரு நிமிடத்துக்குள்தான் இது நடந்தாலும் ஞானம் தான் பெருந் தவறுவிட்டதாக பதைபதைத்தான்.கேணியில் குளிக்கவென்று வந்த உற்சாகம் முற்று முழுதாகப் போய்விட்டது.

கேணியை விட்டு வெளியே வந்த ஞானம் ஈரத்தைத் துடைத்து உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு சைக்கிளை எடுத்து போவதற்கு ஆயத்தமாக’ என்ன ஞானம் வந்து அரை மணித்தியாலம் ஆகேலை,அதற்குள்ளை குளிச்சிட்டியோ,என்ன உன்னோடை வாற மற்ற ஆட்களைக் காணேலை „ என்று வாச்சர் சின்னத்துரை கேட்க’இன்றைக்கு இது போதும் அண்ணை’என்று சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லிக் கொண்டே,றோட்டை நோக்கி சைக்கிளை மணலில் உருட்டிக் கொண்டு போனவனின் கண்களில் பெண்களின் கேணிப் பக்கமிருந்து மூன்று பெண்கள் அரைத்தாவணி உடையில் வருவதை அவனுடைய கடைக் கண்கள் பார்த்துவிட அதில் மூன்றாவதாக நீலலோஜினி நடந்து வருவதைக் காண்கிறான்.

சைக்கிளை உருட்டுவதை நிற்பாட்டி தாமதித்து நின்று கொண்டே அந்த மூவரையும் பார்க்கிறான்.நீலலோஜினிக்கு முன்னால் நடந்து வந்து கொண்டிருந்த இருவரும் நீலலோஜினியின் தமக்கைமார் என்பது அவனுக்குத் தெரிந்துவிடுகிறது.

ஞானம் சைக்கிளோடு நிற்பதைக் கண்ட நீலலோஜினி தமக்கைமார் இருவருக்கும் இடையில் கொஞ்சத் தூரம் வைச்சு நடந்து அவனருகில் வந்தவள்,தலையைச் சரித்து குறும்பாக பார்க்கிறாள்.அவளின் சொண்டுகள் இயல்பாகவே றோஸ் நிறம், குளித்துவிட்டு வந்ததனால் அது சிவப்பாகியிருந்தது.

தான் பெருந் தவறு விட்டதாக மனம் குறுகுறுத்த ஞானம்,அவளுக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக „வெரி..வெரி சொறி „ என்கிறான்.’பரவாயில்லை’ என்று மெதுவாகச் சொல்லி பற்கள் மெல்லத் தெரிய சிரித்துக் கொண்டு போய் விடுகிறாள்.

இது நடந்த போது,ஞானமும் நீலலோஜினியம் அப்பர் பிறப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஞானம் திங்கட்கிழமை வகுப்புக்கு வந்ததும் முதல் வேலையாக „ நீலலோஜினியிடம் போய் „வெரி..சொறி’ என்றவனுக்கு,’எத்தனை தரம் சொறி கேட்கப் போறியள் பேசாமலிருங்கள்,என்ரை தலையிலை றோஜாப்பூ செருகியதைவிட இது ஒன்றம் பெரிய விசயமல்ல’ எனச் சிரிக்கிறாள்.கேணிச் சம்பவத்தை அருந்ததிக்கு நீலலோஜினி சொல்லவில்லை.சொன்னால் அருந்ததி ஞானத்தை ஜெமினி கணேசனின் இடத்தில் வைச்சுப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

கறுவல் செல்லத்துரை மாஸ்ரரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி’இரண்டு கேணிக்கும் இடையில் ஒரு ஓட்டை இருக்குது,ஆரேனும் அதற்குள்ளாலை எட்டிப் பார்த்தனிங்களோ’ என்று கேட்க,’இல்லை சேர்’ என்று ஒரே குரலில் பதில் வர, ஞானம்பதில் ; சொல்லாமலிருப்பதைக் கண்ட மாஸ்ரர் „என்ன ஞானம் நீ போயிருக்கிறாய் போல….’ ஏன்று முடிக்கமுந்தி,தான் செய்த

குட்டு வெளிப்பட்டுவிட்டதோ என்ற பதட்டத்தில்’ இல்லை சேர் நான் அப்படியெல்லாம் போகிறவனில்லை சேர் „ என்று கடைக்கண்ணால் நீலலோஜினியைப் பார்த்துக் கொண்டே சொல்ல,அவளும் வாயைப் பொத்திக் கொண்டு தரையப் பார்த்துச் சிரிக்க’அதுக்கு நீ ஏன் சிரிக்கிறாய் „ என்று அருந்ததி கேட்க,’பிறகு சொல்கிறன்’ என்கிறாள் நீலலோஜினி.

கீரிமலைக் கேணிக் கதையில் ஐஞ்சாறு நிமிசங்கள் போய்விடுகிறது.’சரி சேக்ஸ்பியரின் போயம் ஒன்றைப் படிப்பம் என்றவர்’மை மிஸ்றஸ் ஐஸ் ஆர் நதிங் லைக் த சன்’ அதாவது எனது எஜமானியின் கண்கள் சூரியனைப் போன்றதல்ல என்று தமிழில் மொழி பெயர்த்தவர்,புத்தகத்தை மேசையில் கவிழ்த்து வைச்சுவிட்டு,’ ஏன் நான் கீரிமலைக் கேணிக் கதையை எடுத்தனான் என்றால், நான் முந்தநாள் சனிக்கிழமை மோட்டச் சைக்கிளிலை கீரிமலைக் கேணிக்கு குளிக்கப் போய் அங்கை ஒரு மனிசிக்கும் எனக்கும் பிரச்சினையாய்ப் போயிட்டுது’ என்று ஆரம்பிக்க, மாஸ்ரர் ஏதோ நல்ல கதை சொல்லப் போறார் என்ற ஆவலில் அவரின் முகத்தையே பார்த்தபடி நிசப்தமாகின்றனர் மாணவர்கள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *