ஜூனியர் பெண்கள் உலக கோப்பை – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணி!

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.

பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய இளம் படை அறிமுக உலக கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், உலக கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார். ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வெற்றியைக் கொண்டாடும் வகையில் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button