நடுகைக்காரி!…. 49 …. ஏலையா க.முருகதாசன்.

மகாஜனாவின் கிழக்கு எல்லையோடிருந்த தண்ணீர் குடிக்கும் பைப்படியை நோக்கி ஞானமும் புஸ்பகலாவும் போய்க் கொண்டிருந்தனர்.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்ற மனநிலையில்தான் ஞானமும் புஸ்பகலாவும் இருந்தனர்.
கிட்டத்தட்ட அவர்களிருவரின் காதல் விவகாரம் எல்லாருக்கும் தெரிந்த விடயமாகிவிட்டது.அவர்களின் வகுப்பாசிரியர் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவியை காதலிச்சார்களானால் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகிவிடுவார்கள்.சாதாரணதரப் பரீட்சையிலும்,உயர்தர வகுப்புப் பரீட்சையிலும் மகாஜனாவை முந்த எந்தக் கல்லூரியாலுமே முடியாது என்று விளையாட்டாகவும் உண்மையாகவும் சொல்லிவிட்டார்.
ஞானமும் புஸ்பகலாவும் படிப்பில் கெட்டிக்காரர்கள்.எங்கேயாவது பிழை கண்டுபிடிச்ச காதலுக்காக அவர்களைத் தண்டிக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை.
ஞானத்துக்கும் புஸ்பகலாவுக்கும் பின்னால் போய்க் கொண்டிருந்தனர் அருந்ததியும் நீலலோஜினியும்.
தானும் ஒருத்தரைக் காதலிச்சன் என்று நீலலோஜினி சொன்னதும் திகைப்புடன் ஆரது என்று கேட்ட அருந்ததிக்கு நீலலோஜினி சொன்ன பதில் இன்னும் திகைப்பை ஏற்படுத்தியது.
„உனது தலையில் ரோஜாப்பூவைச் செருகின போது ,ஆரேனும் அதைக் காணவில்லையா, வகுப்பிலை வைச்சா செருகினான் ஆரவன் „ என்று கேட்ட அருந்ததிக்கு நீலலோஜினி விபரித்த விதம் அவளுக்கு அதிர்ச்சிக்க மேல் அதிர்ச்சியாக இருந்தது.
„புஸ்பாவுடன் கதைச்சுக் கொண்டு போறாரே அவர்தான் எனது தலையில் ரோஜாவைச் செருகியவர் „ என்று சொன்னதும் அருந்ததி அப்படியே நின்றுவிட்டாள்.![]()
„உண்மையாகவா’என அருந்ததி கேட்க,’நான் ஏன் பொய் சொல்கிறன்,எட்டாம் வகுப்பில் இது நடந்தது’ என்கிறாள் நீலலோஜினி.
„இப்ப ஞானம் புஸ்பாவைக் காதலிக்கிறானே, அவன் அப்ப உன்னைக் காதலிக்கவில்லையா „என்று அருந்ததி கேட்க’ அதைக் காதலென்று சொல்ல முடியாது,ஆனால் நாங்கள் இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்க்காமல் இருக்க மாட்டம்,இன்னொன்று ஞானத்தின் குடும்பத் தோட்டம் எங்களுடைய வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது.
பின்னேரங்களில் அவர் தோட்டத்தில் வேலை செய்யும் போது அடிக்கடி அவரைப் பார்ப்பன்.அவருடைய தோட்டத் துலாவிலிருந்து பார்த்தால் எங்களுடைய வீடும் முற்றமும் முழுமையாகத் தெரியும்.அவர் துலா மிதிக்கும் போது நான் முற்றத்தில் ஏதோ வேலை இருப்பதாகப் பாசாங்கு காட்டி அவனுக்குக் கைகாட்டுவேன்.
ஞானம் துலா மிதிக்கிறார் என்று கண்டால் தடி விளக்குமாற்றை எடுத்து முற்றம் கூட்டுவன்.அம்மா கேட்பா „ ஏன்ரி பின்னேரத்தில் முற்றத்தைக் கூட்டுகிறாய் „ என்று, கஞ்சல் குப்பையாகக் கிடக்குதம்மா என்று சாட்டுச் சொல்லி முற்றத்தைக் கூட்டுவன் „ என்று நீலலோஜினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே „அது சரி ஞானம் வீட்டிலையிருந்தா ரோஜாப் பூக்களைக் கொண்டு வருகிறவன் என்று அருந்ததி கேட்க,’ இல்லையில்லை எங்கடை வகுப்பிலை மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலின் ஐயாவின் இரண்டு மகன்கள் படித்தவர்கள்,ஒருவரின் பெயர் பாலசுப்பிரமணியம்,மற்றவர் பெயர் குமாரசுவாமி.பாலசுப்பிரமணியம் முசுப்பாத்திக்காரன்.
அவர்தான் ஞானத்திற்கு ரோஜாப்பூக்கள் கொண்டு வந்து கொடுக்கிறவர்.ஞானத்திற்கு ரோஜாப்பூவென்றால் நல்ல விருப்பம் போல ….நீலலோஜினி சொல்லச் சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருவரும் பைப்படிக்கு வந்துவிட்டனர்.
மிகுதிக் கதையையும் கேட்க வேண்டும் என்ற ஆவலில் „நீலு முழுக்கதையையும் சொன்னதற்குப் பிறகு,தண்ணி குடிப்பம்’ என்று அருந்ததி சொல்ல,தண்ணிப் பைப்படிக்கு அங்காலை கொஞ்சம் தள்ளி நின்று நீலலோஜினி மிச்சக் கதையையும் சொல்லத் தொடங்கினாள்.
பாலசுப்பிரமணியத்திடம் வாங்கும் ரோஜாப்பூக்களை தனது நண்பர்களுக்கு குடுப்பதுடன் பக்கத்து வகுப்பு பொடியங்களில் இரண்டொருவருக்கும் குடுப்பார்.
ஒரு நாள் திடீரென்று எனக்கு முன்னால் மேசையில் ஒரு அகலமான றோஸ் கலர் ரோஜாப்பூவை வைத்தார்.நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்:தேன்.அப்பொழுது வகுப்பில் நானும் அவரும் மட்டுமே இருந்தம்.நான் நேரத்தோடு வகுப்புக்கு வந்திடுவன், இதைக் கவனித்து வைத்தோ என்னவோ தெரியாது ஞானமும் நேரத்தோடு வகுப்புக்கு வரத் தொடங்கினார்.அவர் நேரத்தோடு வந்தாலும் பாடப் புத்தகங்களை வாசிக்க மாட்டார்.
ஓளித்துக் கொண்டு வரும் கதைப் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார்.நான் என்பாட்டில் கரும்பலகையைப் பார்த்துக் கொணடிருப்பன்.திடீரென்று அவர் „ உங்கடை வீட்டிலை பின்னேரத்திலும் கூட்டுவியளோ’ என்று கேட்க,அவரைப் பார்ப்பதற்காக முற்றம் கூட்டியதை அவரும் கண்டிட்டார் என்றதை அறிஞ்சு நான்’ எப்படி உங்களுக்குத் தெரியும் „ என்று கேட்க,நேற்றுத் துலா மிதிக்கும் போது கண்டனான்’ என்றார்.’ என்ன புத்தகம் வாசிக்கிறியள் என்று கேட்க’ இது திமுக
அறிஞர் அண்ணாவின் புத்தகம், மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் உள்ள புத்தகம் „என்றார்.
„ எனக்கு எதுவுமே புரியவில்லை,இப்படி நாங்கள் சாதுவாகக் கதைக்கத் தொடங்கிய இரண்டு மூன்று நாட்களின் பின்தான் ரோஜாப்பூவைக் கொண்டு வைக்க நான் அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு அவரைத் திரும்பிப் பார்க்க’ உங்கடை கலரும் ரோஜாப்பூவின் கலரும் ஒரே மாதிரி இருக்குது அழகான பெண்ணுக்கு ரோஜா இன்னும் அழகாக இருக்கும் „ என்றார்.
எனது றோஸ் கலர் நிறத்தினை சக மாணவிகள் ஒரு போதுமே பாராட்டியதில்லை.பொறமைதான் கொண்டார்கள்.ஆனால் ஞானம் எனது அழகை இரசித்துச் சொன்னது எனக்குச் சந்தோசமாகவிருந்தது.
„பூவை எடுத்து கொம்பாஸ் பெட்டிக்குள் வைச்சு மூடினன்,அடுத்த நாள் நான் எதிர்பார்க்காதது நடந்தது.அதுவும் முக்கால்வாசி வகுப்பு நிறைந்திருந்த நிலையில் அந்தச் சம்பவம் நடந்தது.
„திடீரென்று எனது தலையில் பூவொன்று செருகப்படுவதை உணர்ந்த நான் பயத்தடன் திரும்பிப் பார்த்தன்.ஞானம் எனது தலையில் ரோஜாப்பூவைச் செருகிவிட்டு அமைதியாக நடந்து சென்று தனது இடத்தில் உட்காருவதைக் கண்டன்.
„டேய் என்னடா செய்தனி’ என்று அவனுக்குப் பக்கத்திலிருக்கும் சிவநேசன் கேட்பதும் கேட்டது’
„ எனது தலையில் வைத்த பூவை எடுத்துப் பார்த்தன் அது சிவப்பு நிற ரோஜாப்பூ,ஞானத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அந்தப் பூவை மீண்டும் தலையில் செருகிவிட்டன்.ஆனால் மாஸ்ரேஸ் ரீச்சேர்ஸ் என்ன சொல்வோர்களோ என்று பயந்து கொண்டிருந்தன்’.
„எங்களுடைய வகுப்பாசிரியர் பொன்னையா மாஸ்ரர்,அவர்தான் தமிழும் படிப்பிக்கிறவர்.
முதல் பாடம் தமிழ்.மணி அடிச்சு ஒரு நிமிடத்துக்குள் அவர் வகுப்புக்குள் வந்துவிட்டார்.எல்லாரும் எழும்பி காலை வணக்கம் சேர் என்றோம்.
தனது தமிழ் வகுப்பின் போது „தமிழில் வணக்கம் „ சொல்ல வேண்டும் என்று பொன்னையா மாஸ்ரர் சொல்லியிருந்தார்.அவரின தமிழ் வகுப்பில் மட்டும் „வணக்கம் „ சொல்லுவோம்.
„வணக்கம் சொல்லிவிட்டு உட்கார்ந்ததும்,எனது தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவைக் கண்ட பொன்னையா மாஸ்ரர் „என்ன நீலலோஜினி பூவெல்லாம் வைச்சுக் கொண்டு வந்திருக்கிறாய் ;’என்று கேட்க „அம்மா வைச்சுவிட்டவா
சேர்,எடுக்கவா என்று நான் கேட்க „இல்லையில்லை தலையிலேயே இருக்கட்டும் ,அதுவும் நல்லாய்த்தானிருக்குது என்றவர் பாடம் நடத்தத் தொடங்கினார்’
„ஞானம் ரோஜாப்பூவைத் தலையில் செருகிவிட ஏன் அம்மாதான் வைச்சுவிட்டவா என்று பொய் சொன்னி’ என்று அருந்ததி கேட்க,’ அது அப்படித்தான் அந்தப் பதில் தானாக என் வாயிலிருந்து வந்தது „ என்று பதில் சொல்கிறாள் நீலலோஜினி
தாமதித்து நின்ற நீலலோஜினியும் அருந்ததியும்,பைப்படிக்குப் போக பைப்படியிலிருந்து ஞானமும் புஸ்பகலாவும் அவர்களைக் கடந்து வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களின் முன்னே நடந்து வந்து கொண்டிருந்த உயர்தர வகப்பு மாணவிகள்,ஒருவரையொருவர் இடித்துத் தள்ளி,ஒரு மாணவியின் கையிலிருந்தை பாரத்துப் பலமாகச் சிரித்துக் கொண்டே , ஞானத்தையும் புஸ்பலாவையும் கடக்கையில்’புஸ்பா இங்கே பார் என்று சொல்லி கைக்குள் இருந்த இரம்புட்டான் பழத்தின் அரைவாசித் தோலை நீக்கி வெள்ளைச் சுளை தெரியத்தக்கதா உள்ள பழத்தைக் காட்ட,புஸ்பகலா அதன் அர்த்தம் புரிந்து அடக்க முடியாத சிரிப்பை அடக்கியபடி ஞானத்தின தோளில் சாய,’அதைக் கவனித்துக் கொண்டே போன இரம்புட்டான் மாணவி „ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம்’என்று சொல்லிச் சிரிப்பது ஞானத்தின் காதிலும் புஸ்பகலாவின் காதிலும் விழுகின்றது.
„ என்னத்தைப் பார்த்து என்னைத் தள்ளச் சிரிச்சனீங்கள் „ என்று ஞானம் கேட்க,ஞானத்தின் காதில் தான் பார்த்ததைச் சொல்கிறாள் புஸ்பகலா.
ஞானம் அவள் சொன்னதைக் கேட்டு எந்த சலனமும் அடையாமலிருப்பதைக் கண்ட புஸ்பகலா’ அமசடக்கான ஆள் நீங்கள்,அதன் அர்த்தம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்காதையுங்கோ ,நீங்கள் யார் என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றவள்,அதைப் பற்றிப் புத்தகம் எழுதச் சொன்னால் விலாவாரியாக எழுதக்கூடியவர்.மற்றவையிட்டை வேணுமென்றால் உங்கடை நடிப்புச் செல்லும் ஆனால் இந்தத் தண்ணியில உங்கடை பருப்பு வேகாது „ என்று சொல்கிறாள் புஸ்பகலா.
வகுப்படிக்கு வந்ததும் ஞானமும் புஸ்பகலாவும் கதைப்பதை நிற்பாட்டிப் போட்டு வகுப்புக்குள் நுழைகின்றனர்.
அவர்களுக்குப் பின்னால் நீலலோஜினியும் அருந்ததியும் வகுப்புக்குள் நுழைகின்றனர்.
(தொடரும்)
![]()