துப்புத்துலக்க முடியாத கொலைகள்… தடயங்கள் கிடைக்காமல் தடுமாறும் போலீசார்
திருப்பூர் மற்றும் காங்கயத்தில் நடந்த, நான்கு கொலைகள் தொடர்பாக, குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
திருப்பூரை அடுத்த காங்கயம், ரங்கம்பாளையம், வண்ணாம்பாறை காட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 72. இவரது மனைவி வள்ளியம்மாள், 68. தம்பதியருக்கு, மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து கொண்டு வயதான தம்பதியர் வசித்து வந்தனர்.கடந்த 2021 டிச., 15ம் தேதி பழனிசாமி மற்றும் வள்ளியம்மாள் ரத்த காயங்களுடன் கிடந்தனர். தலையில் தாக்கியும், கழுத்தை நெரித்து கொலை செய்து, 7.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
மூதாட்டி கொலை
காங்கயம், மருதுறை, பாரதிபுரத்தில் வள்ளியம்மாள், 74 என்பவர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 2020 நவ., மாதத்தில் கட்டையால் அடித்து கொலை செய்து, 11 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றனர்.இவ்விரு வழக்கில் தொடர்புடையை நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கொலைக்கு முந்தைய நாள் மற்றும் அதிகாலை அவ்வழியாக கடந்து சென்ற சந்தேகத்துக்குரிய வாகனங்கள் குறித்து விசாரித்தனர்.
சில கி.மீ., துாரத்தில் தங்கி பல்வேறு வேலைகளுக்கு சென்று வடமாநிலத்தினர் விவரங்கள் கைப்பற்றி விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடந்தது. ஆனால், சரியான தடயம் கிடைக்காத காரணத்தால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. இதனால், வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
3 ஆண்டாக இழுபறி
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், தெற்கு போலீஸ் ஸ்டேஷன் என, மூன்று பகுதியில் நடந்த கொலை வழக்கில் எவ்வித முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு நவ., மாதத்தில், திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் சுப்ரமணி, 50 என்பவரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கடந்த, மூன்று ஆண்டுகளாக இதில், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. நிலம் விற்பனையில் பிரச்னையா, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.
கொலையானவர் யார்?
திருப்பூர், 15 வேலம்பாளையம், சோளிபாளையம் காட்டு பகுதியில் கடந்த 2021 நவ., 9ம் தேதி ஆண் சடலம் கிடந்தது. வேலம்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். 40 முதல், 45 வயது மதிக்கதக்க, அந்நபரின் உடலில், எட்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது.
முகம் யாரென்று என்று அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அறிந்த பின்னரே கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்பதால், போலீசார் விசாரித்தனர். கொலையான நபரை கண்டறிய போலீசார், சடலத்தை போட்டோவாக அச்சிட்டு, மாநகர பகுதியில் ஒட்டியும், ஆட்டோ மூலமாக பிரசாரம் செய்தனர்.
ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.சமீபத்தில் மீண்டும் இவ்வழக்கு விசாரணை துவங்கியது. மாநிலம் முழுவதும் மாயமானவர்கள் விபரங்களை பெற்றும், உடற்கூறு ஆய்வு மூலம் மற்றும் சடலம் கிடந்த அந்த நாளில் பதிவான மொபைல் எண்கள் உள்ளிட்ட விபரங்களை போலீசார் சேகரித்து விசாரித்தனர். ஆனாலும், முன்னேற்றம் ஏற்படவில்லை.
போலீசாருக்கு ‘டிமிக்கி’
திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அருகே ரோட்டோரம் சாக்கடை கால்வாய்க்குள் கடந்த பிப்., 7 ம் தேதி சூட்கேஸ் கிடந்தது. அதில், 24 வயது பெண்ணின் சடலம் இருந்தது. ‘சிசிடிவி’ பதிவில், டூவீலரில் வந்த, இருவர் ‘சூட்கேஸ்’ பெட்டியை போட்டு சென்றது தெரிந்தது.கொல்லப்பட்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த, நேஹா, 24 என்பது தெரிந்தது. கொலை தொடர்பாக, கணவர் அபிஜித், நண்பர் ஜெயலால் சவுராவை தேடினர். ஒசூரில் ஜெயலால் சவுராவை, 27 போலீசார் கைது செய்தனர்.
இச்சூழலில், தலைமறைவாக உள்ள அப்பெண்ணின் கணவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். கடந்த மார்ச்சில், அசாம் மாநிலத்துக்கு ஒரு வாரம் சென்று அபிஜித்தை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் இருக்கும் இடம் சரியாக தெரியாமல், ஏமாற்றத்துடன் தனிப்படை திரும்பினர்.
இந்த நான்கு கொலையில், மற்றும் புறநகர போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி தனிப்படைகளை அமைத்து, அவர்களுக்கு வேறு எந்த பணியும் ஒதுக்கப்படாமல், முழுமையாக ஈடுபடுத்தினால், வழக்கு விசாரணை தொய்வின்றி நடக்க வாய்ப்புள்ளது.நான்கு கொலையில், மாநகர மற்றும் புறநகர போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி தனிப்படைகளை அமைத்து, முழுமையாக ஈடுபடுத்தினால், கொலையாளிகள் சிக்க வாய்ப்புண்டு.
![]()