வீட்டுக்கு பின்னால் புதைந்திருந்த மிகப்பெரிய டைனோசர்! – போர்ச்சுகலில் ஆச்சர்யம்!
போர்ச்சுக்கலில் ஒருவர் வீட்டின் பின்பக்கம் தோண்டியபோது மிகப் பெரிய டைனோசர் ஒன்றில் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மனிதன் தோன்றும் முன்னரே பல பில்லியன் காலத்திற்கு முன்பாக பூமியில் வாழ்ந்த ராட்சத ஜந்துக்கள் டைனோசர்கள் என அழைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் டைனோசர்களின் எலும்புக்கூடுகள், புதை படிமங்கள் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட டைனோசர்களை விட பெரிய டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு போர்ச்சுக்கலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கலில் போம்பால் என்ற பகுதியில் வசித்து வந்த ஒருவர் வீட்டை விரிவுப்படுத்தும் வேலைக்காக நிலத்தை தோண்டியபோது மிகப்பெரிய எலும்பு ஒன்று தெரிவதை கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து லிஸ்பன் பல்கலைகழக ஆய்வாளர்களிடம் அவர் தெரிவித்த நிலையில் அப்பகுதியை மெல்ல தோண்டிய அவர்கள் அங்கு இருப்பது மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு என கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசர் 39 அடி உயரமும், 82 அடி நீளமும் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இதுவரை ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ள டைனோசர்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த டைனோசர் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்திருக்கலாம் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுற்று வட்டாரத்தில் வேறு ஏதேனும் டைனோசரின் எச்சம் கிடைக்கிறதா என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![]()