இரட்டைப்பட்டுச் சங்கிலி!…. ( குறுநாவல் ) …… முல்லைஅமுதன்.

அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது.
நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு விடுமுறையில் மாமா அழைத்துச் செல்வார்.அப்போது பெரியப்பாவின் வீட்டில் இருந்து படித்து வந்ததினால் நான் தனியாள் என்று நினைத்து கூட்டிச்சென்று நிறைய சாப்பிடத்தருவார். மாமாவிற்கு அதீத பாசம் என் மீதிருந்தது.ஒவ்வொரு வாரமும் அழைத்துப்போவார்.திங்கள் அதிகாலையிலேயே எழுப்பி,அழைத்துவந்துவிடுவார்.அவர் அப்போது நெடுந்தீவில் படிப்பித்துகொண்டிருந்தார்.
.பாண்டி மாங்காய்,பனங்கிழங்கு,பனங்காய்ப்பணியாரம்…முரல் மீன்பொரியல்… மழைக்காலமெனில் வயல்க்கிணறுகள் நிரம்பிவழிய நீச்சல் பழக்குவார்.என் வயதொத்தவர்கள் நிறையப்பேர் இருந்ததினால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.மாமாவை ‘ஆச்சியின்ர மாமா’ என்றே அழைப்பேன்.அப்போது அம்மாவின் அம்மா இருந்ததினால் மாமாவை அப்படிக் கூப்பிடமுடிந்ததோ தெரியவில்லை. அங்கு பங்குக்கிணறு என்பதனால் ஆளுக்காள் வாளி ஒன்றில் கையிற்றைக் கட்டி அதனையே தண்ணீர் அள்ள பாவிப்பார்கள்.அதுவும் ஆழமான கிணற்றுள் எறிந்து தண்ணீரை அள்ள முயற்சிக்கையில் கற்பாறைகளில் மோதி சத்தம் எழுப்புவதுடன் வாளியையும் சேதப்படுத்தும்.அதனால் ஒவ்வொரு வாளியும் சேதமுற்றவையாகவே இருக்கும்.பொதுக்கிண்று என்பதால் கூச்சமாக இருக்கும்.பெரியய்யாவின் வீட்டில் கிணற்றைச் சுற்றி கிடுகுகளால் மறைக்கப்பட்டிருக்கும். பெரியய்யா வீடு சிறை மாதிரித்தான். யாருடனும் பேச முடியாது..யாரும் வருவதில்லை என்பதே உண்மை..என்னைப் பார்க்கையில் பலருக்கும் பரிதாபம்தான் வரும்.![]()
ஒரு நாள் வீரபத்திரர்கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிந்தது.மண்டபம் இருமருங்கும் ஊரவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.விதம் விதமான மரக்கறியுடன் கூடிய ருசிமிக்க உணவை முன்பு உண்டதேயில்லை. இரண்டாவது பந்தியில் தான் இடம் கிடைத்தது. கோயில் மண்டபம் திறந்தவேளி போல கட்டப்பட்டிருக்கும்.காற்று உடலில் மோதி சுகானுபவத்தை ஏற்படுத்திவிடும்.பொதுவாக ஆண்கள் வேட்டியுடன்,மேலாடையின்றி இருப்பார்கள்.நான் சேர்ட்டைக் கழற்றி இடுப்பில் சுற்றியிருந்தேன். என் கதறல் யாவர்க்கும் கேட்டாலும் பெரியய்யாவிற்குக் கேட்டமாதிரித் தெரியவில்லை.அவருக்குக் கவுரவம் முக்கியம்.சரியான நப்பி..பொது இடத்தில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. சாப்பிடக் கைவைத்த தருணம் பார்த்து பெரியய்யா வந்து தலையில் குட்டிவிட்டு கையைப்பிடித்து தறதறவென இழுத்தபடி வீட்டிற்கு கந்தையா மாமாவின் காணிக்கூடாக இழுத்துப்போனார். ‘பாவம் பொடியன்.பசியில குந்தியிருக்கும்’ யாரோ பேசிக்கொண்டது கேட்டது.அந்த நாட்களில் அக் காணிகள் சொரியலாகத்தான் இருக்கும்.ஆட்கள் நடந்து நடந்து ஒறையடிப்பாதையாகிவிட்டிருந்தது.பலருடன் உட்கார்ந்து சாப்பிடுவதே அலாதியானதுதான்.அது இல்லாமல் போனது ஏதோ மனசைக் குடைந்தது.எல்லாரும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கையில் கூனிக்குறுகிப்போகும்படியாயிற்று.
‘அக்காவிடம் சொல்லித்தானே வந்தேன்’
அவரின் கோபம் அதிகமாகியது.. நாக்கை மடித்து பற்களால் கடித்தபடி தன் கோபத்தைக் காட்டினார்.
‘வீட்டில் சாப்பிட சாப்பாடு இருக்கு.சாப்பாட்டுக்கு கஷ்டம் உள்ளவை சாப்பிடுறதில தப்பில்லை.மூக்கு முட்ட சாப்பிடுறவைக்கு அன்னதானம் கொடுக்கிறதில்லை..தங்கட பாவத்தைக் கழுவத்தான் அன்னதானம் கொடுக்கிறவை..’
அவரின் சொல்லை ஏற்றுக்கொள்கிற பக்குவம் அன்றில்லை.பெரியய்யாவின் பிம்பம் இப்படியில்லையே.கஞ்சப்பயல் என்றே பலரும் சொல்லுவார்கள்.
‘சின்னப்பெடியனிட்ட தன் கோபத்தைக்காட்டுது மனுசன்..சாப்பிடக்கூட அவனுக்கு சுதந்திரம் இல்லையாக்கும்’
பெரியப்பா இப்படி இழுத்துச் சென்றது பெருத்த அவமானமாக இருந்தது.பள்ளிக்கூடத்துக்கு இந்த ஒற்றையடிப்பாதையைத்தான் அதிக நாட்கள் பாவித்தது.அந்த நேரத்தில் பல வீட்டுப் படலைகளும் பிள்ளைகளை வழியனுப்ப திருந்திருக்கும்..எனி வேற பாதையாலதான் போகவேண்டியிருக்கும்…
அக்கா தன்னிடம் சொல்லவில்லை என்றும் பெரியய்யாவிற்கு முன்னால் சொல்லிவிட்டாள்.அக்காவை கொன்றிருக்கலாம்.![]()
சீமைக்கிழுவைத் தடியால் விழுந்த அடியில் வந்த தழும்பு மாற கனநாளாயிற்று.
‘ஐயோ..அம்மா’அன்று முழுவதும் வலியால் துடிக்கவே முடிந்தது.தழும்பும் இலகுவில் மாறிவிடவில்லை.நாட்கள் எடுத்தன.
என் நிறத்திற்கு காயத்தின் சிவப்பு பளிச்செனத் தெரிந்தது.
சில நாட்களில் அடிவிழப்போகுது எனத்தெரிய முன்னரே கத்திக்குழறி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவதுமுண்டு.அப்போதும் அடிவிழுவது நின்றுவிடாது.அடி விழும்போதெல்லாம் அக்கா ரசித்துச் சிரிப்பது போலிருக்கும்.திருவிழாவிற்குப்போகவென்று வந்திருந்தவர்கள் முன்னால் அம்புலிமாமாவில் வந்த சிறுவர் கதையை வாசித்துச் சொல்லவில்லை என்று சாத்து சாத்தென்று சாத்திவிட்டார் பெரியய்யா.வெட்கமாகப்போயிற்று.வெயில் வெளிச்சத்தில் உடற்காயங்கள் பளிச்சென்றிருந்தது.அன்று கோயிலிக்குப் போகும் எண்ணம் இல்லாது போனது.
வானம் வெளுத்திருந்தாலும் இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் நரகமாகவே இருந்தது.
அப்பாவின் கணிப்பு வேறுமாதிரி இருக்கும்.அன்று சூழல் இருள்மயமாகவே இருந்தது..
அப்பா வேலைநிமித்தம் திருகோணமலையில் இருந்தமையால் என்னை பெரியய்யா வீட்டில் தங்கி படிக்கவைத்தார்.தனிமை,பெரியய்யாவின் கண்டிப்பு,தனிமை பெரிதாக வாட்ட சோர்வுவந்துவிடும்.படிப்பும் ஏறவில்லை..அடிக்கடி சொல்லாமல் பஸ் ஏறிவிடுவேன்.பிறகு அப்பா மீண்டும் கொண்டுவந்துவிட்டிட்டு போவார்..தங்கைகளுடன் அரட்டை அடிக்க..சண்டை பிடிக்க…நண்பர்களுடன் மத,இன வேறுபாடின்றி பந்துவிளையாடுவது,வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்குபோய் பொங்குவதும்,வழிபடுவதும்…எல்லாம் இழந்து போனதாய்…பெரியய்யா தேவையில்லாதற்கெல்லாம் சீறிவிழுவார்.குழப்படி செய்தாலோ கைகளைக் கட்டிவைத்து சீமைக்கிழுவைத்தடி கிழியும் வரை அடிவிழும்…உடை அவிழ்ந்தாலும் எடுத்துப் போட அவகாசம் இருக்காது.தனது இயலாமையை கோபமாக என்னைத் தண்டிக்கிறாரோ..அப்பாவின் மீதான கோபமும் காரணமோ?.சனிக்கிழமை என்றாலென்ன..?திங்களென்றாலென்ன..?சிடு சிடுவென்று பாயும் பெரியய்யாவைக் கொன்றுவிடலாமோ எனக் கோபம் வரும்.
ஒருநாள் இரவு முழுவதும் அண்ணனின் மருத்துவப்பையில் இருந்த ஊசியைக் களவெடுத்து பெரியய்யாவைக் குத்திவிடவேண்டுமென்று
காத்திருந்தேன்.முடியவில்லை.பெரியய்யா ஊசியை வைத்த இடத்திலிருந்து எடுத்துவிட்டார்.
இன்னொரு நாளும் அந்த ஊசியை எடுத்து பாதுகாப்பாகவைத்திருந்தேன்.சரியான தருணம் வாய்க்கவில்லை.மீண்டும் பெரியய்யா அதனை எடுத்திவிடுவார் என்கிற பயத்தில் கவனமாக பாதுகாத்தும் பயனில்லாமல் போவிட்டது.பள்ளிக்கூடம் போகையில் காற்சட்டைப்பையில் வைத்துச் செல்கையில் ஊசி முனையின் மூடி இல்லாததினால் தொடையில் குத்தி இரத்தம் வந்துவிட்ட பயமும் தொற்றிக்கொண்டது.அப்படியே ஊசியை மெதுவாக எடுத்து கடைமாமாவின் வாய்க்கால் கரையில் எறிந்துவிட்டு நடந்தேன்.வலியும் குறைய கனநாளாய் போனது.
மாமா வந்து கூட்டிக்கொண்டு போவதனால் அவ்வப்போது கைதியாக பறோலில் வெளியே வருவது போலிருக்கும்.
அழுவேன்..
தனிமை வாட்டவே செய்தது.
பள்ளிக்கூடத்திலும் மகிழ்ச்சியாய் உட்காரமுடிவதில்லை..பூங்கோதை வாத்தியாருக்கும் இது விளங்கும்..ஆறுதல்படுத்துவார்.
யாரும் ஆறுதல் சொல்லவும் இருக்காது.அப்பாச்சி பாவம்..அவருக்கும் பயம்..கரிசனையுடன் பார்ப்பார்..
‘ சாப்பிடு.. ‘அரைச்ச புளிச்சாறென தருவாள்.அப்பாச்சியும் அம்மாவைப்போல நன்றாகச் சமைப்பாள்.மீன் காய்ச்சினால் வீடே மணக்கும்.அம்மியில் வைத்து அரைத்த மசாலாவைப் போட்டு விட்டால் கறி சுவையாக இருக்கும்தேங்காய்ச் சொட்டுக்களை அப்படியே அம்மியில் வைத்து அழுத்திய சாற்றுடன் கறியில் சேர்ப்பாள். சுடச்சுட புட்டிற்கு தலைமீனில் வைத்த சொதியையும் ஊற்றித்தருவாள்.வாயூறும்.அவளின் மனது போல கைப்பக்குவமும் சுவை சேர்க்க நாவூறும்..யாருக்கும் தெரியாமல் காசு தருவாள்.அம்மாவும் இப்படித்தான்..பக்கத்துவீட்டு புஞ்சி பண்டாவின் மனைவியிடம் கற்று கொண்டைப்பணியாரம் செய்துதருவாள்.உடம்பிற்கு இயலாத நாட்களில் கூட சமைப்பதை நிறுத்துவிடமாட்டாள்.
இங்கு அப்பாச்சி கூட இருப்பது ஆறுதலாக இருக்கும்.தினமும் குளித்து துடைக்கமலேயே வீபூதியை அள்ளி நெற்றியெல்லாம் பரவிப்பூசி வருவாள்.கோயிலுக்குப்போனதை நான் காணவில்லை..அவளுக்கு வெளியே செல்லக்கூடாது என்று எழுதாத சட்டமுள்ளதோ தெரியவில்லை.கணவன் காலமானதின் பின்னர் ஒதுங்கியவள் அப்படியே பழகியிருக்கலாம்.காலை பத்து மணிக்கு நல்லூர் மணி அடிக்க முருகா என்பாள்…ஞானவயிரவர் கோயிலில் மணி கலகலவென ஒலிக்கையில் அது பன்னிரண்டு மணியென்று சொல்வாள்.வெயிலைப்பார்த்தே நேரம் சொல்வாள்.வெத்திலைக்கொழுந்து அழிந்து போனதில் அவளுள் கவலை இருந்திருக்கிறது..சொல்லவில்லை.புரிந்தது.. முதலியார் வளவிற்குள் பெரிய வெத்திலைத்தோட்டம் இருந்ததாகவும்,அப்பப்பா இறந்ததும் முடியாது போனதாம்…கடனைக் கொடுக்கமுடியாத நிலைவர அப்பாச்சியின் அண்ணன் கவடுபோட்டு அளந்து காணியைப் பிடித்துக்கொண்டாராம்.
காணிகள் கடனில் மூழ்கி தோட்டங்களும் இல்லாமல் போக அப்பாச்சி கலங்கி நிற்கையில் யாரும் உதவ வரவில்லை என்பதே அவள் உலைந்து போயிருக்கலாம்.அப்போது அப்பா தன் பதினைந்தாவது வயதில் தம்பியின் கொப்பிக்குள் இருந்த பதினைந்து ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.எங்கு போவது என்று தெரியாமல் கண்டிக்குச் சென்று தபால்காரனாகவும்,பின்னர் திருகோணமலை சென்று அங்கு சின்னச் சின்ன வேலைகள் செய்கையில் தான் ஊரவரான வேதநாயகத்தைச் சந்தித்திருக்கிறார்.அவரின் தம்பி
பாடசாலைத்தோழன்.அவரே தான் கடமைபுரியும் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.அங்கிருந்தே உழைக்கும் பணத்தை செலவு போக மிகுதியை தாய்க்கு அனுப்பிவந்தார்.சில வருடங்களின் பின்பே றோயல் நேவி வேலை கிடைத்ததாக ஒருமுறை சொல்லியுமிருந்தார்.
கூனல் விழுந்திருந்தாலும் அப்பாச்சி துணிச்சல் அதிகமும் இருந்தது.துலாவில் நீர் இறைத்துக்குளிப்பாள். ‘உசார் கொஞ்சம் அதிகம்தான் அவளுக்கு’நைந்துபோன வெள்ளைப்புடவை ஆங்காங்கே கிழிசல்களைத்தை பகுதிகளை மறைத்தபடி உடுத்துவாள்.குளிக்கமுன்னர் புடவையினை அலம்பி கிணற்றடிச் சீமை கிளுவையில் கட்டிக்காயவிடுவள்.குளித்துமுடிய அடிக்கிற வெயிலில காய்திருக்கும் புடவையைச் சுற்றியபடி பின் பத்தியின் வளையில் தொங்கும் சிரட்டைக்குள் இருக்கும் வீபூதியினை கையினால் அள்ளி நெற்றியில் பூசிக்கொள்வாள்.ஈரத்துடன் வீபூதியும் ஒடிக்கொள்ள முகம் பளிச்செனத் தெரியும்.
அப்பாச்சி மேலாடை அணிந்து நான் பார்த்ததில்லை.சிலவேளைகளில் குறுக்குக்கட்டு கட்டியிருப்பாள்.அப்பாச்சி குனிந்துதான் நடப்பாள்.கூன் விழுந்துவிட்டது.துவரந்தடி கையில் எப்போதும் இருக்கும்.படுக்கையிலும் காவலுக்கென்று துவரந்தடியை மறக்காமல் வைப்பாள்.விளக்குமாற்றால் கூட்டமாட்டாள்.யார் என்ன சொன்னாலும் பூம்பாழையால்தான் கூட்டுவாள். நாங்கள் வளர்ந்து விளக்குமாற்றை வாங்கிக் கூட்டத்தொடங்கினாலும் பூம்பாழையை அவள் விடவில்லை..அதில் ஒரு சுகம் இருப்பதாக உணர்ந்திருக்கக்கூடும்.’சும்மா போடா அங்கால’ கேட்டாலும் தரமாட்டாள்.பெரியய்யா மச்சம் சாப்பிடமாட்டார்.குனிந்தபடியே தென்னம்பிள்ளை வளவிற்குச் சென்று தேங்காய் எடுத்துவருவாள்.அலவாங்கில் குத்தி தோலை உரித்து பொச்சை தனியாக்கி தேங்காயை என்னிடம் தருவாள்..அவளைப்பார்த்தபடியே வாங்கிக்கொள்வேன்..
பெரியய்யாவின் காணிக்குள் கறிவேப்பிலை மரம் மதாழிச்சு நிற்கும்.கிணற்றடித்தண்ணீர் பட்டு வாழையும் செழித்து நிற்கும்.இனிப்புப்புளியம் பழம் முற்றத்தில் கொட்டுண்டு கிடக்கும்.காலத்திற்குக்காலம் இலுப்பம்பழம் வவ்வால் கொண்டுவந்து போட அதனைப் பொறுக்கி ஆச்சியிடம் கொடுக்க அவற்றை காயவிட்டு பொன்னம்பலத்திடம் கொடுத்து எண்ணெயாகவும்,அரைப்பாகவும் தயார் செய்துவிடுவாள்.
‘என்ன பார்க்கிறாய்?ஒண்டரைக்கண்ணா’ சிரித்தபடி கடிவாள்.இந்த வயசிலயும் தைரியசாலிதான்..நான் சோம்பேறி என்பதை அப்போது ஒத்துக்கொண்டிருக்கவேண்டும்.குசினிக்குள்ள நிற்கும் போது யன்னலில் வந்து மோதிச்செல்லும் (ஒரு வகைப்பறவை) புழுனிகளை பார்க்க பரவசமாக இருக்கும்.வேலிக்கறையான்களைத் தட்டும்போது புழுனிகளும் சிறகடித்துப் பறக்கும். வைக்கோல் குவியலுகப்பால் பக்கத்துவீட்டுக் கோழிகள் நிற்பதைப்பார்த்து ஜிம்மி பாய்ந்தோடி அவற்றைக் கலைத்தான்.அப்பாச்சி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.பொக்கைவாய்ச் சிரிப்பில் கன்னத்தில் குழிவிழும்..![]()
அப்பாச்சி நிறையக் கதைகள் சொல்வாள்.அவ்வளவும் அவளின் வாழ்வின் அனுபவங்கள்.சுவாரஸ்யமாகச் சொல்லுவாள்.நானும் அம்புலிமாமா,சந்தா மாமா வில் வரும் கதைகளை வாசித்துக்காட்டுவேன்.எனது கதை சொல்லும் முறையில் அவளின் கவனம் இருக்காது.ஆனாலும் எனக்க ரசிப்பது போலிருப்பாள் என்பது தெரியும்.ஆனாலும் விடுவதில்லை.வெயில் என்றால் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கும்.மழை என்றால் நான் குதூகலிப்பேன்.நனையலாம்.பரிதாபமாகப் பார்க்கும் மாட்டைச் செல்லமாகத் தடவியபடி கொட்டிலுக்கைக் கட்டலாம்.பள்ளிக்கூடம் வெள்ளம் என்று லீவு விடும்.மாணவர்களுடன் சேர்ந்து சிரமதானம் எனும் பெயரில் களைபிடுங்கப்போகலாம்..அப்பாச்சி பாவம்..குளிரில் நடுங்குவாள்.மேலாடையின்றியே அதிகநேரம் இருப்பாள்.புடவையால் எல்லாம் மறைய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வாள். நிறச்சேலை அவள் உடுப்பதை நான் காணவில்லை.வெள்ளை நிறத்திலான சேலையில் பொட்டுப் பொட்டாய் அல்லது
சிறியளவிலான புள்ளிகள் இருப்பதுபோல பார்த்துக்கொள்வாள்.அவள் வயதிற்கு அது ஒன்றும் அதிசயமில்லை.பெரியய்யாவிற்குப் பீப்பயம்.அப்பாச்சிக்கு அடியும் விழும் என யாரோ சொல்லியிருந்தார்கள்.அப்பா தன் தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த தெரியும்.![]()
குளிரில் நடுங்கியபடியே படுத்திருப்பாள்.கொடியில் கிடந்த எனது சாரத்தை எடுத்துப் போர்த்துவிடுவேன்.அருகில் துவரந்தடி இரண்டிருந்ததாம்.எமன் அடிக்கடி வந்து வெருட்டுவதால் பாதுகாப்பிற்கு வைத்திருந்தாராம்.ஒருநாள் பக்கத்துவீட்டுக்கோழிகளை கலைக்க ஒரு துவரந்தடியை பெரியய்யா எடுத்து எறிந்திருக்கிறார்.கோழிகள் பறந்துவிட்டன.துவரந்தடியும் பக்கத்து வளவிற்குள் போய்விழுந்தது.போய் எடுக்கவேயில்லை..அப்பா வாங்கித் தந்ததென்று அப்பாச்சி சொல்லும்.
பெரியய்யாவின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகிருந்தது.அப்பா வரவில்லை.கொழும்பிலிருந்து சித்தப்பா குடும்பத்துடன் வந்திருந்தார். திருமண நாளன்று அனைத்து வாகனங்களிலும் எல்லோரும் ஏறிக்கொண்டிருந்தனர்.அண்ணரைப் பார்க்க கம்பீரமாக இருந்தார்.மாப்பிள்ளைக் கோலம் வேறு..என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.இதே வீட்டில்தான் இருக்கிறேன்.ஆனாலும் எனக்காக பேசுவதற்கு யாருமற்ற சூன்யமாக இருந்தது.வந்திருந்த கார்களில் ஒன்றிலேற முற்பட சித்தப்பா
‘எங்க வாறாய்? வீட்டில ஒருத்தரும் இல்லை..உனக்கே கலியாணம்? ஆட்டிக்கொண்டு வெளிக்கிட்டிட்டாய்.போ..அங்க இரு’
வார்த்தையில் கடுமை தெரிந்தது. உள்வளைந்த கண்கள் பார்க்கப் பெரிதாக இருக்கும்..பேசிக்கலைத்துவிட்டதும் வில்லன் மூஞ்சியாகவே அவர் முகம் தெரிந்தது.முறுக்கு மீசை வேறு..அப்பா மீசை இன்றி,எப்போதும் சேவ் பண்ணியே இருப்பார்.பெரியய்யாவும் முழுசாய் சேவ் பண்ணியிருப்பார்..மீசை இருந்தது ஞாபகமில்லை.
அந்த வயதிலும் வலித்தது.அழுகையாய் வந்தது.எல்லோரும் பார்க்கிறார்கள் என வெட்கமாகவும் இருந்தது.
.’அவனும் வரட்டுமே’ யாரும் சொல்லவில்லை.அநாதையாய் நிற்பது போல இருந்தது. அவர்களும் என்ன செய்வார்கள்.சபையில் முந்தியிருக்க முண்டியடிக்கும் உறவுகளால் வாய்திறக்கமுடியாதுதான்..கேற்றைத் தாண்டி உள்ளே வந்தது.வீடு பெரியதாய் பயமுறுத்தியது. அண்ணியைப்பார்க்க எனக்கும் ஆசை இல்லையா?
அப்பாவும் அம்மாவும் கூட இருந்தால் இப்படி அந்தரப்பட்டிருக்கத்தேவையில்லை..
‘யாரும் இங்கு அனாதைகளில்லை’
அப்பா வரவில்லை.அதற்காகவெனினும் என்னை அழைத்துப்போயிருக்கலாம்.சிறுவன் என்று அழைக்கவில்லையாயினும்,இந்த வீட்டில் இப்போதைக்கு நானும் ஒரு அங்கத்தவன் தானே.இதை ஏன் மறந்தார்கள்? யார் மறந்தார்கள்?
திருவிழாவில் கதாப்பிரசங்கத்தில் கேட்டது ஞாபகம் வந்தது.
அண்ணியின் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட மனது துடித்தது.ஆனாலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.பெற்றோர்களிடமிருந்து தனித்துவிடப்பட்டவன் எப்போதும் அனாதையாகத்தான் கணிப்பார்களோ? ஏதோ தங்கப்பதுமையை பாதுகாப்பது போல அண்ணியை கௌரவமாக நடத்தினார்கள் போலிருந்தது. அண்ணி பணக்கார வீட்டுப் பெண் என்பதும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம்.
அப்பாச்சி மூலையில் சுருண்டு கிடப்பது போல படுத்துக் கிடந்தாள்.அப்பாச்சியும் அனாதைதானோ??அருகில் போய் அமர்ந்தேன்…’சம்பளமில்லாத வீட்டுக் காவல்காரர்கள்தான்’ அப்பாச்சியின் முகத்தை பார்த்தேன்..அழுதிருக்கிறாள்.
பதினொரு பிள்ளைகளைப் பெற்றவள்..இப்போது தனித்த தீவாகி நிற்பதைப் போலிருந்தது.அப்பாச்சியை தன்னுடன் வைத்திருக்கவே அப்பா விரும்பினார்.எங்களுக்கும் அப்படியேதான் ஆசைப்பட்டோம்.அம்மா எதுவும் சொல்லமாட்டாள்.ஆதலினால் மாமி மருமகள் சண்டை வந்துவிடாது.அப்பாச்சிக்கு அப்பாவுடன் வந்திருப்பதில் ஆர்வம் இல்லை.மாதாமாதம் காசு அனுப்பத்தவறுவதில்லை.
அப்பாச்சிக்கென்று பழங்கள் வாங்கி அனுப்புவார்.அடிக்கடி பஸ்பிரயாணம் செய்வதால் அப்பாவிற்கு யாவரும் பழக்கம்.அப்போது இரவு அல்லது அதிகாலை யாழ்ப்பாணம் போற பஸ்ஸில் கொடுத்துவிட்டால் அப்பாச்சியின் கைக்குக் கிடைத்துவிடும்.
பற்கள் ஏற்கனவே விழுந்து பொக்கைவாயாகிவிட்ட அப்பாச்சி பொச்சுக்கொட்டியபடியே கதைப்பாள்.அவளின் மீதான பாசம் அவள்மீது எரிச்சல் வரவில்லை.
அப்பாவிற்குத் தன் தாயின் மீது அளவுகடந்த பாசம் இருந்தது.ஒரு முறை விமானத்தில் பயணிக்கவேண்டும் எனிகிற ஆசையை அறிந்த அப்பா அதையும் நிறைவேற்றினார்.இலங்கை முழுதும் சுற்றுலாவிற்காக அழைத்தும் சென்றிருந்தார்.
காரில் ஏறிய சித்தப்பாவின் பிள்ளைகளை ஞாபகப்படுத்தி அப்பாச்சியிடம் கேட்டும்விட்டேன்.
ஆச்சி தனக்கு மட்டுமே கேட்கும் படி சொன்னாள்.
அவையள் கொழும்பு..நீ திருகோணமலை…நான் இஞ்ச..’
‘ஒரு வகையில் நீயும் அனாதை..நானும் அனாதைதான்’ அப்பாச்சி அப்படிச் சொன்னது தாக்கமாக இருந்தது.அப்பாவிடவும்,அம்மாவிடவும் சொல்லி அழவேண்டும் போலிருந்தது.
சித்தப்பா கொழும்பில் நல்ல வேலையில் இருந்தார்.
கொழும்பெண்டா உசத்தி..திருகோணமலை எண்டா தாழ்ந்ததோ?
‘ஏன் அவ்வளவு இளக்காரமோ நாங்கள்?’
கேட்கவேண்டும் போலிருந்தது.கேட்கும் தைரியம் இல்லை.
அவை வரக்கு முதல் தொட்டிக்குள் தண்ணீர் இறைத்துவிடவேண்டும்..மோட்டர் இல்லையாதலால் குசினிக்கு,பூந்தோட்டத்து பைப்பில் தண்ணீர் எடுக்க கிணற்றடித் தொட்டிக்குள் காலையிலேயே குளிரென்றும் பாராமல் இறைத்துவிடவேண்டும்.
பக்கத்து வளவுக் கிணற்றில் துலாவில் ஏறி ஒருவர் மிதிக்க இன்னொருவர் தண்ணீரை வாளியில் மொண்டு இறைப்பார்.நிறைய வாழைமரங்கள் உண்டு.
துலாவில் இறைத்துக் குளிக்க நல்ல விருப்பம்..ஆனால் இப்போது சலிப்பாய் இருந்தது.
கால்களில் மிதிபடும் எதுவும் உணராமல் நடந்தேன்..
வானத்தில் அதிகமான நட்சத்திரங்கள் இல்லாமல் இருந்தன.மெதுவாக மரங்கள் அசைந்து அசைந்து சாமரம் வீசுவது போலவும்,அன்புடன் அமைதியாக வழியனுப்பிவைப்பது போலவும் இருந்தது.மறுநாள் சொல்லாமலேயே பஸ் ஏறிவிட்டேன். ஒரு தடவை இரதநாயகம் மாமா தனக்குத்தெரிந்த சாரதிகள் யாழ்ப்பாணம்,திருகோணமலை ரூட் பஸ்களை ஓட்டுபவர்களிடம் சொல்லி என்னை விடுமுறையில் அனுப்பிவைத்த
அனுபவமும் தனியே போகும் தைரியத்தையும் தந்திருக்கலாம். சொல்லாமல் போய்விடுவது இது மூன்றாம் முறை..எதுவும் சொல்லத்தெரியவில்லை..பிடிக்கவில்லை..சுதந்திரமற்ற உணர்வு..அந்தச் சிறுவயதிலும் உறைத்தது.அப்பா அடித்தாலும்,அம்மா திட்டினாலும் அவர்களுடன் இருந்துவிடவே மனம் பிரியப்பட்டது.
‘பிள்ளை படிக்கட்டும்’ அப்பாவின் விருப்பம்..
அப்பாவுக்குள்ளும் நிறைய எதிர்காலம் பற்றிய கனவுகள் இருந்திருக்கலாம்.மகனின் மூலம் அது நிறைவேறலாம்.இப்படி சாதாரண தகப்பனின் எதிர்பார்ப்பும் அப்படியேதானே.
பிற இடங்களில் கடமை புரிபவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊரில் படிக்க அனுப்பிப் படிக்கவைப்பார்கள்.அப்பாவும் அப்படி நினைத்திருக்கலாம்.
அப்பா சம்பளம் எடுத்ததும் என்னையும் ரவுனுக்குக் கூட்டிப்போவார்.செல்வச்சந்நதி ஸ்ரோர்ஸில கிழமைக்கேற்ற பொருட்களை வாங்குவார்.மத்தியவீதியிலிருந்த பரராசசிங்கம் கடையில் ஓடருக்கு சஞ்சிகைகள்,பேப்பர் என வாங்குவார்.வெற்றிலையும் அவரிடமே வாங்குவதைக்கண்டிருக்கிறேன்.முன்னாலுள்ள ஹோட்டலில் கொத்துரொட்டி
வாங்கித்தருவார்…கணேஸ்மாமாவின் கடையில் சர்பத் வாங்கித்தருவார்.கணேஸ் மாமாவும் எனக்கென ஐஸ்கட்டியும்,அன்னாசிப்பழத்தையும் சர்பத்தில் சேர்ப்பார்.ருசியாக இருக்கும்.
‘பிள்ளை யாழ்ப்பாணத்தில படிக்கிறான்’ என்று பெருமையாகச் சொல்லுவார்.பிறகு ஒரேயடியாக வந்தவுடன் அவரும் மனதுள் கவலைப்பட்டார்.பிறகு சர்பத்தும் இல்லாமல் போயிற்று.
இம் முறை அப்பா கொண்டு வந்து திரும்ப விடவில்லை.நிலைமையின் கொடூரத்தை உணர்ந்திருப்பாரோ?
பெரியய்யாவிற்கு எல்லோரும் பயம்..தன் மீது கோபப்பட யாரையும் வைத்ததில்லை..பிறர் கோபித்துக்கொள்ளும்படியானால் ஒதுங்கியே போய்விடுவார் அப்பா.
தங்கைகளுக்கு வருத்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.சிறியவர்களாக இருந்ததும் ஒரு காரணம்.அவர்களின் வயதை ஒத்தவர்களும் இல்லை என்பதும் உண்மையே.ஆனால் எனக்கு நிறையப்பேர் இருந்தார்கள்.
ஊரில் நிறைய என் வயதொத்தவர்கள் இருப்பினும் அவர்களுடன் விளையாட அனுமதி இல்லை..இதனால் அவர்களின் விளையாட்டில் என்னையும் சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டினார்கள் என்பதே உண்மை.
பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் பூசை நடக்கும்..நாகரத்தினம் மாமா.முருகேசு மாமா,சிவக்கொழுந்து மாமா,புண்ணியமூர்த்தி என பலரும் ஒன்றுகூட கொண்டாட்டமாக இருக்கும்.ஒருநாள் அப்பாவிற்கு முடியாது போயிற்று.ஆஸ்மா அதிகரித்தது.அப்பாவைப்பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.அதுதான் அப்ப யாழ்ப்பாணம் செல்ல முடிவெடுத்த நாளாய் அமைந்தும் விட்டது.யாழ்ப்பாணம் செல்வதில் துளிகூட மனமில்லை.
நீண்டகாலமாக அப்பா இருந்ததால் பலரும் கவலைப்பட்டனர்.எனினும் தங்களின் வாழ்க்கையும் இங்கு நிரந்தரமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அதனால் அப்பா மாற்றலாகிப்போகையில் வருத்தம் சற்று அதிகமாகவே இருந்தது.பொருட்களை எல்லாம் ஏற்றிவிட்டு தேவையானவற்றை மட்டும் அவசரத்திற்கென வைத்துக்கொண்டு புறப்பட்டோம்.பொருட்களை ஏற்ற அப்பாவுடன் கூட வேலைசெய்பவர்கள் உதவினார்கள்.எனக்கு அவர்களைப்பார்க்க கவலையாகவும் இருந்தது.’தூரமாகப் போய்விடவில்லையே..காலை பஸ் எடுத்தால் மத்தியானம் வந்துவிடலாம்..எங்கட வீடு
உங்களுக்காக திறந்திருக்கும்..மறந்துவிடமாட்டோம்’ என்றனர்.அது கடைசிவரை சாத்தியப்படவேயில்லை..ஆனந்தன்,சீலன்,பதியுதீன்,இர்பான்,ஜேசுதாசன் இப்படிப்பலரின் முகங்கள் ஞாபகத்திலிருந்து மறைய நாட்களாயிற்று.பிறிதொருமுறை நேர்முகப்பரிட்சைக்காக போனபோது கூட யாரையும் சந்திக்கமுடியாதபடி யாவரையும் மாற்றியிருந்தது.அம்மா எதுவும்பேசாமல் அப்பா பின்னாலேயே நடந்துகொள்வாள்.அதிகம் பேசமாட்டாள்..அதனால் அவளுள் எழும் எல்லா உணர்வுகளையும் புரிந்துகொள்ளமுடியாது.
அப்பா எது சொன்னாலும் தலையசைப்பாள்.அப்பா கோபப்பட்டாலும் சரியாகவே செய்வார் என்பது அம்மாவுக்குத் தெரியும்.அதனால் சரி பிழைகள் பற்றிக் கருத்துச் சொல்லமாட்டாள்.
அம்மா நன்றாகச் சமைப்பாள்.அப்பாவிற்கு கங்குங் கீரை விருப்பம் என அடிக்கடி சமைப்பாள்.அப்புக்காமி மாமாவின் மனைவியிடம் கற்றுக்கொண்ட கொண்டப்பணியாரம் அடிக்கடி செய்வாள்.யாழ்ப்பாணம் வந்ததும் அம்மாவிற்கு வேலை அதிகம்.அப்பாவிற்கு ஒத்தாசையாக ஆடு,மாடு,கோழிகளைப்பாராமரிப்பது.கொஞ்சம் இளைத்துமிருந்தாள்.
அப்பாவிற்குச் சின்னதாய் வருத்தம் இருந்திருக்க வாய்ப்புண்டு.எனக்குப் புரிந்தது..அப்பா வேலைக்குச் சேர்ந்த புதிதில் பிரிட்டிஷ்கார அதிகாரிகளால் தரம்பிரிக்கப்பட்ட வேலையாட்களை அந்தந்த துறைகளில் பயன்படுத்தினாலும் கெடுபிடிகளும் இருந்திருக்கின்றன.அவருக்கு வழங்கப்பட்டிருந்த இலக்கம் 26ஐ உச்சரித்தே கூப்பிடுவார்கள்.
பக்கத்துவீட்டு ஜோன் மாமி’ ரிவன்ரிசிக்ஸ் (twentysix)அண்ணே’ என்றுதான் கூப்பிடுவார்.அன்பின் நிமித்தமாக இருப்பினும் சங்கடமாக இருந்திருக்கும்..மற்றவர்களை அப்பா பெயர் சொல்லியோ,மச்சான் என்றோ கூப்பிட்டுக் கதைப்பார்.பெண்களெனில் இன்னாரின் அம்மா எனக் கூப்பிடுவார்.
குவார்ட்டஸில் குடியிருந்தவர்களின் குடும்பத்தார் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அண்ணே,மாமா என அழைத்தாலும் அப்பாவிற்கு இப்பெயரும் ஒட்டிக்கொண்டது.ஒரு நீளமான அறையை நடுவில் சுவர் அமைத்து இரண்டாக்கியிருந்தார்கள்.அறை பெரியது. யாழ்ப்பாணம் வந்த புதிதில் பெரியய்யா வீட்டில் தான் தங்கினோம்.அவரும் ஒன்றும் சொல்லவில்லை.அவரின் வீடு பெரிய வீடு.மாடிவீடாய் கட்ட முனைந்ததின் அறிகுறி அந்த வீட்டில் ஹோலுக்குள் நுழையும் போது தெரிந்துவிடும். கோழிகளும் ஏறித்தங்கிக்கொள்ளும்.பிறகு கலைப்போம்.அங்கிருந்தே வேலைக்கும் போய்வந்தார் அப்பா.முன்னர் வாங்கிவைத்திருந்த சைக்கிள் துருப்பிடித்தபடி பாவிப்பாரின்றி இருக்க அதை சைக்கிள் கடை தம்பிராசாவிடம் கொடுத்து திருத்தங்கள் செய்திருந்தார்.பெரியய்யாவின் மகன் வந்து பார்த்துவிட்டு சொல்லாமலேயே எடுத்துச்சென்றுவிட்டதில் அப்பா உடைந்துபோனார்.பெரியய்யாவும் ஒன்றும் சொல்லவில்லை.பிறகு லோன் போட்டு புதிதாய் ரலி சைக்கிள் ஒன்றை வாங்கினார்.அதையும் வந்து யாரும் எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயமும் ஏற்பட்டிருந்ததது. அண்ணரும் வருப்போது அப்பாவின் புதுச்சைக்கிளையும் தொட்டுப்பார்ப்பார்..ஏற்கனவே பிள்ளைகளின் குறும்புகளை ஏற்காமல் பெரியய்யா நச்சரிக்கத் தொடங்கத்தான் வளவிற்குள் கொட்டில் ஒன்றை போட்டு அங்கு குடிபெயர்ந்தோம்.
அப்பா மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்ததும் அவர் கட்ட ஆரம்பித்திருந்த வீடும் முடியாதநிலையில் இருந்தது.கறையான்,பாம்புப்புற்று வேறு.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தும் எதுவும் பேசாமல் சிறு கொட்டிலை போட்டு அதற்குள் இருந்துகொண்டு கட்டி முடித்தார்.மாலை நேரங்களில் வளவு பார்க்கிற சாட்டில் வந்து போன அப்பாச்சியும் எங்களுடன் தங்கிக்கொண்டார்.
அப்பாச்சி எங்களுடன் தங்கியது எமக்கு மிக்க மகிழ்வைத் தந்தது.அம்மாவும் அப்பாச்சியை சிறப்பாகக் கவனித்தாள்.தன் தாயை தன்னுடன் வைத்துக்கொள்ளும் பாக்கியம் அம்மாவிற்குக் கிட்டாத நிலையில் அப்பாச்சியின் மீதான கரிசனை இன்னும் அதிகரித்தது.கதைகள்
நிறையச்சொல்லுவார்.அந்தக் கதைகளுக்குள் மெல்லியதாய்ச் சோகம் இழையோடும்.அவளுடன் பயணித்தால் அதன் சோகத்தின் அர்த்தமும் புரியும்.
ஒருநாள் சாரைப்பாம்பு அம்மாவின் காலடியால் போனதாக அப்பா காலையில் தான் சொன்னார்.அம்மா பயந்துவிடுவாள் என்று அப்பா உடனே சொல்லவில்லை.![]()
அம்மாவின் பெற்றோரைப் பார்த்ததில்லை. அம்மாவும் தன் பெற்றோர்கள் பற்றி சொன்னதில்லை. அதனால் அப்பாச்சியின் மீதான நெருக்கம் அதிகமானது.
சிலசமயங்களில் தனது கரகரத்த குரலில் சத்தமாகப் பாடுவார்.நாங்கள் சிரிப்போம்.
‘மண்ணுக்கு மரம் பாரமா..மரத்துக்குக் கிளை பாரமா’ பாடுவாள்.அம்மாவிற்கும் ஆசைகள் இருந்திருக்கும்.அசல் கிராமத்தாள் என்றே சொல்லலாம்.உறவுகள் எல்லோரும் சேர்ந்து இரண்டு மூன்றுகார்களில் ரவுனுக்குப் படம் பார்க்கப்போகையிலும் அம்மா போவதில்லை.வானொலியும் கேட்டதில்லை.ஆனாலும் யாரோ பாடக்கேட்டு சில பாடல்களை ஞாபகத்தில் வைத்திருந்தாள்.எப்பவாவது எங்களுக்காக பாடுவாள்.
அம்மா அதிகம் படித்தவள் இல்லை.சங்கீதம் படித்ததில்லை.எனினும் பாடும்போது ரசிக்கும்படியாக இருக்கும்.அம்மா என்பதால் ரசிக்கிறோமோ? அப்படியில்லை…அம்மா எங்களுக்காக பாடுகிறாள்.அப்பா குளிக்கும்போது பழைய பாடலை முணுமுணுத்தது ஞாபகம்.ஒவ்வொருவரின் ரசனையும் ஏதோ ஒருகட்டத்தில் உடைந்துபோகவே செய்கிறது.அப்பாவும்,அம்மாவும் தங்கள் குடும்ம்பத்தை இப்படி வடிவமைத்திருக்கலாம்.
அன்று புதன்கிழமை.
கோயிலுக்கு அம்மா பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தாள்.கிணற்றில் தண்ணீர் அள்ளும் சத்தம் கேட்டது.
‘வேலி அடைக்கவேணும்.சனிக்கிழமை வாருமன்’ என சண்முகத்திடம் சொல்லிவிட்டுத் திரும்பி வேலிக்கறையானைத் தட்டிக்கொண்டிருந்த அப்பாவிடம் கடிதத்தை கொடுத்துச்சென்றார் தபால்காரர்.
வந்த பதிவுத்தபாலை உடைத்துப் படித்த அப்பாவின் முகம் மாறியது.அம்மா என்ன என்று கேட்கவில்லை.அருகில் வந்து நின்றாள்.
வீடு கட்ட வாங்கிய கடனை வட்டியுடன் கட்டும்படி கேட்கப்பட்டிருந்தது அக்கடிதம்.நான் பிறக்க முதல் அத்திவாரம் போட ஆரம்பித்தவர் கடனும் கட்டிமுடியாமலும்,வீடும் கட்டிமுடிக்கப்படாமலும் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு அப்பாவிற்கு விடையில்லை.வீட்டு உறுதியும் நொத்தாரிஸ் மூலம் ஈடுவைத்தும் கடன் பெறப்பட்டிருந்தது பிறகு தெரியவந்ததும் அப்பா கலங்கிப்போனார்.நண்பரை நம்பி ஏமாந்தது புரிந்தது.பகைத்துக்கொள்ளாமலேயே ஒதுங்கியும் போனார்.
அப்பாவின் மாத வருமானம் மளிகைச் சாமான்களுக்கே போதாமல் இருந்தது.கையில் காசிருக்கையில் சந்தைக்குப் போய் மரக்கறி,மீன் என வாங்கிவருவார்.காலையில் பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கும்,சம்பலும் தான்.பாணும் அவ்வப்போது தலைகாட்டும்.
பொன்னுத்துரை கடையில் பலசரக்குச் சாமான்களும்,செல்வரத்தினம் அண்ணரிடம் மூடையாக அரிசி,வைக்கல்,புண்ணாக்கு,தவிடு என வாங்கிவிடுவர்.சம்பளத்தை அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என பங்கிட சரியாகிவிடும்.அவர்களும் அப்பாவை நெருக்குவதில்லை.எங்களுக்கு எதுவும் தெரியக்கூடாது..பிள்ளைகள் படிக்கட்டும் என அம்மாவிடம் சொல்லியிருந்தார்.
‘மாமியிடம் ஐம்பது நூறு எண்டால் மாறிக்கொள்ளலாம்…இவ்வளவு பணம் எண்டால்?…’
பெரியய்யா வட்டிக்கு பணம் கொடுத்தே சகோதரர்களின் காணிகளை அபகரித்துக்கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்பா போய் கேட்கமாட்டார்.
அப்பா சொல்லாமல் அம்மா பெரியய்யாவிடம் கேட்கமாட்டாள்.
அவளுள் ஒரு யோசனை உதித்தது.
‘மாதகல் காணியை விற்றுவிட்டால் என்ன?’
அம்மாவிற்கென வயல்காணி ஒன்று இருந்தது.அம்மாவின் அண்ணர்தான் அதனை பராமரித்துவந்தார்.தன் ஆசிரியத் தொழிலுடன் வெள்ளாமையும் செய்துவந்தார்.அம்மாவின் காணியிலும் நல்ல வருமானம் வருவதாகவும்,விற்பதென்றால் தங்களுக்குத் தந்துவிடும்படியும் பலரும் கேட்டவண்ணம் இருந்தும் அப்பாவிற்கு மாமாவை பகைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.3000 ரூபா வரை பலரும் கேட்க மாமா வெறும் 500 ரூபா மட்டும் தந்து கணக்கை முடித்துக்கொண்டது அம்மாவிற்கு வருத்தம் தான்.
முன்பொரு முறை மாமா சொல்லியிருந்தார்.பச்சைபசேல் என்றிருந்த அந்த வயல்காணி.வரம்பெல்லாம் புற்கள் நிறைந்திருக்கும்…பன்குளத்து வயல்காணிகளும் எப்போதும் பச்சைபசேலென்றிருக்கும்.வாய்க்காலில் எப்போதும் தண்ணீர் வந்துகொண்டிருக்கும்.ஆசைப்பட்டதொன்றும் கைகளில் நீண்டகாலம் கைகளுக்குள் இருக்காதோ?
எமக்குத்தெரிய வயல்காணி ஒன்றே எனத்தெரிந்திருந்தது.மாதகல் போகும்போது மாமா சொன்னது நினைப்பு.ஆனால் அம்மாவிற்கே கிடைக்கவிருந்த காணியை அம்மாவிற்குத்தருவதாகச் சொல்லி கையெழுத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குள்ளேயே பகிர்ந்துகொண்டனர்.அம்மாவிற்கான பங்கைக்கூடத் தரவில்லை.அப்போது திருமணமாகியிருக்காதநிலையில் அம்மாவிற்கு அதுபற்றிய கவலை அல்லது ஏமாற்றம் பெரிதாகப் புரியவில்லை.கேட்டு என்னவாகிவிடப்போகிறது என்று அவள் நினைத்திருக்கலாம்.
அப்பா எதுவும் பேசவில்லை.
எப்படிப் பார்த்தாலும் கையில் கடனை முடிக்கக்கூடிய கையிருப்பு இல்லை.வீட்டைக்கட்டித்தருவதாக ஒத்தாசையாக இருந்த இரதநாயகம் மாமாவும் கையை விரித்தார்.அவர் தனது மூன்றாவது வீட்டையும் கட்டிமுடிந்தார்..தான் கேட்டபோது இல்லை என்று சொல்லிவிட்டதை எண்ணி அப்பா கலங்கினார்.அவரால்தான் தான் ஏமாந்ததை தற்போது உணர்கையில் காலம் கடந்துவிட்டிருந்தது.
‘அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது’ சித்தப்பாவும் தூரமாய் போனார்.
செய்வதறியாது திகைத்துநிற்கையில் தென்னம்பிள்ளைவளவு ஞாபகம் வர அதனை விற்க முடிவு செய்து செயல்பட்டார். சித்தப்பா புறுபுறுக்க கிணற்றுப்பங்கையிம் நீக்கி விற்றாயிற்று.விற்றகாசை அரசாங்கக்கடனை அடைத்தார்.மிச்சத்தில் நொத்தாரிஸ் மூலம் ஈடுவைத்ததையும் மீட்கமுடிந்தது..கடனும் ஓரளவிற்குத் தீர்ந்ததில் மகிழ்ந்தாலும்..வாழ்க்கை இன்னும் கஷ்டத்தில் தான் நடக்கும்போலிருந்தது.
கைகளுக்குள் எதுவும் அடங்கிப்போவதில்லை.வாழ்க்கையும் அப்படித்தான்.ஏதோ வழியில் ஏதோ ஒன்று துரத்திக்கொண்டுதான் இருப்பதை உணர்கையில் துவண்டுபோய்விடுகிறோம்.அப்பா கலங்கி நிற்கையில் அவரைப் பார்க்க கவலையாக இருந்தது..
பன்குளத்தில் அப்பாவின் நண்பரான மணியம் மாமாவை சிங்களவர் வாளால் வெட்டிக் கொன்றார்கள் என்று அறித்ததும்,தனது காணியையும் விற்றுவிடவேண்டும் என எண்ணினார்.ஆனால் அது முடியாது போயிற்று. மணியம் மாமா வாளால் வெட்டிக்கொலை
செய்திருந்தமையை நினைக்க உடம்பு உதறும்..மணியம் மாமி எவ்வளவு துடித்திருப்பார்?யாழ்ப்பாணம் வந்தவுடன் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவந்திருந்தார்.அவரிடன் பணம் கேட்டுப்போனபோது அவரின் பதில் அப்பாவைக் காயப்படுத்திவிட்டது.அதற்குப்பிறகு அந்தக் காணியைப்பற்றிய நினைப்பையே மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டார்.
‘பொம்பிளைப்பிள்ளைகளை வைத்திருக்கிறாய்..யோசிச்சு நட’ சின்னத்துரை சொன்னது ஞாபகம் வந்தது.புறொபிடன்ற் பணம் வரேக்கை சமாளிக்கலாம்..அதுக்கும் இன்னும் காலம் இருக்குத்தானே’ சமாதானம் அடைந்தார் அப்பா.
வீட்டைத்திருத்தலாம் என முயன்றபோது எங்கிருந்து ஆரம்பிப்பது?சாத்திரியார் அதை இடி இதை நீட்டு என்றார்.வேறொரு சாத்திரியார் வடக்கு வாசலாக்கு என்றார்.இன்னொருவர் அதையெல்லாம் முறியடிக்குமாப்போல குசினியை இடி…கிழக்கு வாசலாக்கு…வீட்டு வடிவத்தையே கொஞ்சம் மாற்றினால்தான் குடும்பத்திற்கு நல்லது என்றாரே பார்க்கலாம்.அப்பா இடிந்து போய் இருந்தார்.
‘கஷ்டம் என்று வரும்போது யார் யாரோவெல்லாம் வருவினம்.கனக்க சொல்லுவினம்.எரிச்சல் வரும்..அதுக்குள்ள வருகிற சாத்திரிமாரும் தங்கள் பங்கிற்கு ஏதாவது சொல்லி பிடுங்கிக்கொண்டு போயிடுவினம்.’
மறுநாள் விசும்பல் ஒலி கேட்டது…..
தொடரும்.
![]()