கதைகள்

நீ மகானடா!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

பாலனும் நானும் ஹிக்கின் பாதம்ஸ் புத்தக விற்பனையகத்தில் பணியை முடித்துவிட்டு மகாத்மா காந்தி சாலையில் நடந்து கொண்டிருந்தோம். பல ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் நடந்தது இன்று நாயுடன் நடந்து போகும்போது நினைவுக்கு வந்தது. என்னடா இவன் தன் நண்பனை நாயுடனா ஒப்பிடுவான் என்று தவறாக எண்ணாதீர்கள்.பழைய திரைப்படப்பாடலில் ஒரு வரி வரும். தம்பி! நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா! நாய்கள் மேலடா!! என்பதே அந்த வரி.மகனை விட நாயை உயர்வாக எண்ணும் அளவிக்கு அத்திரைப் படத்தில் கதையமைப்பு இருந்தது. ஆனால் என் நண்பன் அப்படியல்ல. மிகவும் சிறந்தவன். அவன் இப்போது என்னுடன் இல்லை. நான் மெல்பன் வந்தபின் சில ஆண்டுகளிலேயே அவனைவிட்டு நான் பிரிந்ததுபோல் அவனும் இம்மண்ணைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான். என்னையும் அறியாமல் என் கண்கலங்க சிறிதுநேரம் நின்றேன்.என்னோடு ஆஸ்திரேலியா வர விண்ணப்பித்திருந்தவனுக்கு சரியான புள்ளிகள் கிடைக்காததால் வரமுடியாமல் போனது.அவன் உயிரோடு இருந்து என்னோடு வந்திருந்தால் இன்று இந்த பேட்டர்ஸன் புல்லவாடில் என்னுடன் அவன் நடந்தபடி வந்திருப்பான். நின்றிருந்த என்னை நாய் இழுக்கவே நான் நடையைத் தொடர என் மனமோ பின்னோக்கி பயணித்தது.பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் பனி மேகம்போல் கவிழ்ந்திருக்க அலசூர் செல்லும் பேருந்தை தவறவிட்டதால் வீட்டிற்கு நடந்தே போய்க் கொண்டிருந்தோம். இன்று என்னிடம் மகிழுந்து உள்ளது. அன்று எங்களிடம் மிதிவண்டி கூட இல்லை. த்ரீ ஏஸஸ் என்ற காபரே நடனம் நிகழும் இடத்தருகே ஒருவர்அந்த குளிரிலும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் மேலாடையில் பல பொத்தல்கள். குளிரில் நடுங்கிக் கொண்டே,“தர்ம தொர, படுவனுகே ஏனாதிரேனு கொடுறீ” என்றார்.அவர் கையில் சில நாணயங்களைக் கொடுத்தேன். அதைப் பெற்றுக்கொண்டே,“தும்பா சளியாகிதே” என்றார்.ஒரு நொடியும் தாமதிக்காமல் மனைவி ஆசையாய் வாங்கிக் கொடுத்த கம்பளி ஸ்வட்டரை கழற்றி அவருக்கு கொடுத்த நான் குளிரில் நடுங்கியபடியே நடக்கலானேன்.“நீ சரியான பைத்தியம்” என்றான் பாலன்.“பைத்தியம் இல்லடா, பாரி வள்ளல்”“சந்தேகமில்லை. பைத்தியமேதான்” என்றான்.அப்படியாடா! அப்படியென்றால் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் பைத்தியமா என்று கேட்டேன். அவனோ  பாரியும் நீயும் ஒன்றா என்று எதிர்க்கேள்வி கேட்டான். ஏன் பாரி முல்லைக்கு தேர் கொடுத்தான் அதையாவது சொல் என்றேன். அதற்கு,“பதிலை நீயே சொல்லிவிடு” என்றான்.“சரி, நானே சொல்கிறேன். பாரி நினைத்திருந்தால் வேறு ஏதாவது கொம்பை நட்டு முல்லைக்கொடி படர ஏற்பாடு செய்திருக்கலாம். அதை அப்படி ஏற்பாடு செய்வதற்குள் மனம்மாறி விடக்கூடாது என்பதற்காகவே அந்த எண்ணம் தோன்றிய உடனே முல்லைக்காக தேரைக் கொடுத்தான்”“அப்படி பாரியைப்போல நீ நினைத்தவுடன் கம்பளி ஸ்வட்டரை கழற்றிக் கொடுக்க என்ன காரணம்?”“எல்லாம் இளமையில் கண்ட வறுமைதான்”“என்னடா, எனக்குக்கூடத் தெரியாத சோகக்கதை?”ஆமாண்டா. நான் பள்ளிசென்ற நாட்களில் வறுமை தாண்டவமாடியது. இருந்ததோ இரண்டே சட்டை. அதையே மாற்றி மாற்றி துவைத்துப் போட்டதால் தோள் பட்டையில் நைந்து போய் இருக்கும். அதனால் எனது நண்பர்கள் சட்டையில் கைவைக்காதவாறு கவனமாக இருப்பேன். அப்படியும் ஒரு நாள் நான் ஏதோ சிந்தனையில் இருக்க என்னை ஒரு நண்பன் கூப்பிட்டும் என் காதில் விழாததால் சட்டையின் கையைப்பற்றிஇழுக்க நைந்திருந்த தோள்பட்டைப் பகுதி கிழிந்நுவிட எனக்கு அழுகையே வந்தது.மறுநாள் பள்ளிக்கு கிழிந்திருந்த இடத்தை ஊசி நூல் கொண்டு தைத்து போட்டு வந்தேன். இப்போது அந்தப் பிச்சைக்காரரின் சட்டை நைந்துபோய் பல பொத்தல்களுடன் இருக்க அவர் குளிரில் நடுங்கியபோது என் கிழிந்த சட்டை நினைவுக்கு வந்ததால் உடனேயே மனம் மாறுவதற்குள் அந்த கம்பளி ஸ்வட்டரை கழற்றி அவரிடம் கொடுத்தேன் என்றேன்.அதுவரை என்னைக் கேள்வியால் துளைத்தெடுத்த பாலன் நா தழுதழுக்க நீ ஒரு மகானடா என்றான். அப்படி பேசியபடியே வந்ததால் வீட்டையும் சென்றடைந்தோம். நான் வழிநடத்திச் செல்லாவட்டாலும் எனது நாய் என் முன்னே நடந்தபடி என்னையும் இழுத்துக் கொண்டுவீட்டிற்கு வந்திருந்தது.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *