ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்யும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம்!…. முருகபூபதி.

நனவிடை தோய்தற் குறிப்புகள்
முருகபூபதி ( கல்லூரியின் முதலாவது மாணவர் )
![]()
இலங்கையில் மூவின மக்களும் ஐந்து மதப்பிரிவினரும் நீண்டநெடுங்காலமாக வாழும் பிரதேசம் நீர்கொழும்பு.![]()
இந்துமகா சமுத்திரத்தை அண்டிய நெய்தல் நிலம். முதலில் போர்த்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் அதன் பின்னர் பிரிட்டிஷாரும் ஆக்கிரமித்தமையினால் கத்தோலிக்க மற்றும், புரட்டஸ்தாந்து மதப்பிரிவினரும் தத்தமக்கு தேவாலயங்களை கட்டி எழுப்பினர்.
நீர்கொழும்பூரில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்திருப்பதனால், இதனை சின்னரோமாபுரி எனவும் அழைப்பர்.
பௌத்த சிங்களமக்கள் செறிந்து வாழும் ஹங்குருக்காரமுல்லை என்ற பகுதியில் பௌத்த விஹாரை தோன்றியது.
முஸ்லிம்கள் காமச்சோடை, பெரியமுல்லை, கம்மல்துறை முதலான பிரதேசங்களில் படிப்படியாக வாழத்தலைப்பட்டு அவர்களும் அவ்விடங்களில் மசூதிகளை உருவாக்கினர்.
கத்தோலிக்கர்கள் முன்னக்கரை, குட்டித்தீவு ,குடாப்பாடு, நஞ்சுண்டான்கரை, ஏத்துக்கால், பலகத்துறை, தோப்பு, கொச்சிக்கடை முதலானபிரதேசங்களில் செறிந்து வாழ்ந்தனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கடலை நம்பி வாழ்ந்த மக்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் வர்த்தகத்திலும் ஆசிரியப்பணிகளிலும் ஈடுபட்டனர்.
கத்தோலிக்க மக்களில் வர்ணகுலசூரியர் என்ற பிரிவினர் கடலையும், குருகுலசூரியர் என்ற பிரிவினர் கல்வி சார்ந்த உத்தியோகங்களையும் நம்பி வாழ்ந்தனர்.
சிங்கள பௌத்தர்கள் வர்த்தகத்திலும் கல்வி, அரசுப்பணி மற்றும்,தனியார் துறைகளிலிருந்து வருமானத்தை தேடினர்.![]()
இந்தப்பின்னணிகளிலிருந்தே அங்கு வாழ்ந்த இந்து சமயம் சார்ந்ததமிழர்களின் வாழ்வையும் வளத்தையும் அவதானிக்க முடியும்.
அங்கு தொழில் நிமித்தமோ, திருமண உறவு பந்தங்களினாலோ வெளியூர்களிலிருந்து வரும் பெரும்பாலான மக்கள் திரும்பிச்செல்வதில்லை. அங்கேயே வீடுகளும் தேட்டங்களும் தேடிவிடுவார்கள்.
அதனால், வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு எனவும் பெருமை பெற்றது இந்த நகரம்!
மேலே சொல்லப்பட்டிருக்கும் பகுதிகளின் பெயர்களிலிருந்து நீண்ட நெடுங்காலமாக அங்கே பூர்வகுடிமக்களாக தமிழர்கள்வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவானது.
எனினும், அங்கே 1954 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்த தமிழ்க்குழந்தைகள் அனைவரும் தமது கல்வியை அரிச்சுவடியிலிருந்து கற்கத்தொடங்குவதற்கு கத்தோலிக்க பாடசாலைகள்தான் உதவின.![]()
மேற்கிலே நீர்கொழும்பு கடற்கரைக்கும் கிழக்குத்திசையில் டச்சுக்கால்வாய்க்கும் இடையே இருக்கும் கடற்கரை வீதி ஒரு காலத்தில் கன்னாரத்தெரு என்றே அழைக்கப்பட்டது.
அந்தவீதியில்செப்பு, பித்தளை பாத்திரங்கள் செய்பவர்கள், தங்க நகைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் சுருட்டுத்தொழிலாளர்களின் இந்து தமிழ்க்குடும்பங்களே பெருமளவில் வாழ்ந்தனர்.
இந்திய வம்சாவளி மக்களுக்கும் வடக்கு – கிழக்கிலிருந்து தொழில், வர்த்தகம் , திருமண உறவு நிமித்தம் குடியேறிய மக்களுக்கும் கடற்கரைவீதியில் வணங்குவதற்கு முத்துமாரியம்மன், சித்திவிநாயகர், சிங்கமாகாளி அம்பாள் ஆலயங்கள் ஏற்கனவே எழுந்தருளியிருந்தாலும் அவர்களின் குழந்தைகளின் கல்வித்தேவைக்கு கத்தோலிக்க பாடசாலைகளையே நம்பியிருந்தனர்.
1954 ஆம் ஆண்டு நவராத்திரி காலம் வரும் புரட்டாசி மாதம் வரையில், அவர்களுக்கென்று ஒரு இந்து தமிழ்ப்பாடசலை இருக்கவில்லை. ஆனால், வடக்கின் காரைநகரிலிருந்து தொழில் நிமித்தமும் வர்த்தகத்தின் நிமித்தமும் இடம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு
பெரியவரை இவ்வூர் தமிழ் மக்கள் அந்தப்பகுதியின் மூன்றாம் வட்டாரத்திலிருந்து நகரசபைக்கு தெரிவுசெய்து
அனுப்பினார்கள்.![]()
அவர்தான் நீர்கொழும்புவரலாற்றில் முதலாவது தமிழ் மேயர் எஸ்.கே. விஜயரத்தினம்.![]()
அந்தவீதியில் அன்று வாழ்ந்த இளைஞர்கள் இந்து வாலிபர் சங்கத்தையும் சுருட்டுத்தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தையும் உருவாக்கினர். இவர்கள் அனைவரையும் நீண்ட காலமாக வாட்டிக்கொண்டிருந்த கவலைக்கு 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று விடிவுகாலம் பிறந்தது.
இற்றைக்கு அறுபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக அரசமரநிழலில் எழுந்திருந்த இந்து வாலிபர் சங்கத்தில் குறிப்பிட்ட விஜயதசமி காலத்தில் விஜயரத்தினம் அய்யா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 32 குழந்தைகளுக்கு பனைஓலை ஏட்டில் பதிந்த அ முதல் ஃ வரையில் சொல்லிக்கொடுக்கப்பட்டு, தாம்பாளத்தில் அரிசியில் எழுதப்பழக்கி கற்கண்டும் பழமும் கொடுத்து கல்விக்கான அத்திவாரத்தை அந்தச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து அமைத்தார்கள்.
எந்தவொரு புதிய ஆக்கபூர்வமான விடயத்தையும் தொடங்கும்பொழுதும் சாதகமானதும் பாதகமானதுமான கருத்துக்களும் பரவுதல் சாதாரணமானதே.
இந்தப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் முருகபூபதி ஆகிய என்னை அன்று காலையிலேயே துயில் எழுப்பி புத்தாடை அணிவித்து வழியனுப்பிய எனது அம்மா, என்னைத் தூக்கிச்செல்ல வந்திருந்த எமது உறவினரான மயில்வாகனன் மாமாவிடம் “ தம்பி…. புதுசா பாடசாலைதொடங்குகிறீர்கள். நல்லது. ஆனால், அது தொடர்ந்து நடக்குமா?” என்றுதான் கேட்டார்களாம்.
” அக்கா, நல்ல நோக்கத்துடன் தீர்க்கதரிசனமாக தொடங்கப்படும் எந்தவொரு பொதுப்பணியும் அர்ப்பணிப்பினாலும் கடின உழைப்பினாலும் நிச்சயமாக வளரும். பொறுத்திருந்து பாருங்கள் ”
எனச்சொல்லிவிட்டு என்னை அழைத்துச்சென்றதாக நான் வளர்ந்த பின்னர் அம்மா சொல்லியிருக்கிறார்கள்.
என்னைப்போன்று மேலும் 31 குழந்தைகளின் வீடுகளிலும் அத்தகையகேள்விகளும் கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டிருக்கும்.
அக்காலப்பகுதியில் அரசாங்கப் பாடசாலைகள் இல்லை. முகாமைத்துவ பாடசாலைகள்தான் இயங்கின. ஏனைய மதவழிபாட்டுத்தலங்களுக்கு அருகாமையிலேயே அந்தந்த மதம் சார்ந்தகுழந்தைகளுக்காக பாடசாலைகள் உருவாகின.
பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட்டன. அவற்றில் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மெத்தட்டிஸ்ட் மதப்பிரிவினரே ஆசிரியர்களாக பணியாற்றினர்.
நீர்கொழும்பு கடற்கரைவீதியில் வாழ்ந்த தமிழ்க்குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப்பாடசாலைக்கு விவேகானந்தா வித்தியாலயம் எனப்பெயர் சூட்டப்பட்டதற்கு, கொழும்பில் ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய விவேகானந்தா சபையும் அதன் பரிபாலனத்தில் தொடங்கப்பட்ட விவேகானந்தா பாடசாலையும் முக்கியமான பின்னணிக் காரணிகள்.![]()
கொழும்பு விவேகானந்தா சபையின் முகாமைத்துவத்துடன் தொடங்கப்பட்ட நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தலைமை ஆசிரியராக அழைத்து வரப்பட்டார் பண்டிதர் க. மயில்வாகனன். அவர் வடக்கில் சித்தங்கேணியைச்சேர்ந்தவர்.
அவருக்குத்துணையாக வருகைதந்தார் நாமெல்லோரும் பெரிய
ரீச்சர்அம்மா என அழைக்கும் திருமதி திருச்செல்வம். இவர்கள்
இருவருக்கும் துணையாக பணியாற்ற வந்தார் மயில்வாகனன் மாமாவின் தங்கை திலகமணி ரீச்சர்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து அவ்வூர்தமிழ்மக்களின் கல்விக்கான கலங்கரை விளக்கமாக ஒளிவீசியது விவேகானந்தா வித்தியாலயம். 1964 ஆம் ஆண்டின் பின்னர், வித்தியாலய ஸ்தாபகர் அமரர் விஜயரத்தினம் அய்யாவை நினவுகூரும் வகையில் அதன் பெயர் விஜயரத்தினம் வித்தியாலயமாகவும் பெயர் மாற்றப்பட்டு, பின்னர் மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டு, காலப்போக்கில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியாகவும் உயர்ந்தது.
![]()
மேற்கிலங்கையில் கம்பகா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து மத்திய கல்லூரியாக விளங்குகிறது.
அறுபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 32 மாணவர்களுடன் தொடங்கிய இப்பாடசாலை தற்பொழுது ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் இயங்குகிறது.
இந்தக்கலங்கரைவிளக்கத்திற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அத்திவாரம் இட்ட பல மூத்த பிரஜைகள் இன்றில்லை.
அமரர் விஜயரத்தினம் அவர்களுக்குப்பின்னர் அவரது துணைவியார் பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்களாகவும் மூத்த உறுப்பினர்களாகவும் விளங்கிய நல்லதம்பி, சண்முகநாதன், சுரேந்திரன், ஓவஸீயர் நடராஜா, ஜெயம் விஜயரத்தினம், மயில்வாகனன், கந்தசாமி, டொக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் இரா. சுப்பையா, தில்லைநாதன், கந்தையா, செல்லையா, தேவராஜா, அழகரத்தினம், இராஜரத்தினம் முதலான பலரும் கல்லூரியின் வளர்ச்சியில் அளப்பரிய சேவையாற்றினர். மேலும் பலரது பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
இந்தக்கல்லூரி தலைநிமிர்ந்து நிற்பதற்கு மூலகாரணமாக விளங்கிய இந்து வாலிபர் சங்கம் காலப்போக்கில் இந்து இளைஞர் மன்றமாகியது. அதன் வரலாறும் எண்பது வருடங்களை கடந்துள்ளது.
இதனை முன்னிட்டு தபால் திணைக்களம் ஞாபகார்த்த முத்திரையும் வெளியிட்டுள்ளது.
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
இலங்கையில் மேற்குப்பிரதேசத்தில் தமிழர்களின் பூர்வீகமாக நீர்கொழும்பும் இருந்ததென்பதும் -அதற்கு அடையாளமாக ஆழமாக பதிவாகியிருக்கும் பிரதேசங்களின் தமிழ்ப்பெயர்களும் – ஒரு காலத்தில் தமிழர் ஒருவர் நகரபிதாவாக பணியாற்றி யிருக்கிறார் என்ற செய்தியும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்படமுடியாத பதிவுகள் ஆகும்.
நீர்கொழும்பில் தமிழர்கள் இருந்தார்களா…?அங்கும் தமிழ் வாழ்ந்ததா…? என்று, இன்றும் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இக்கட்டுரை தெளிவுகளை வழங்கும்.
எமக்கெல்லாம் கல்விக்கண் வழங்கிய இக் கல்லூரியில் தொடக்கத்தில் பெற்றோர் – ஆசிரியர் சங்கம்தான் இயங்கியது.
மாணவர் – பெற்றோர் – ஆசிரியர்கள் மத்தியில் புரிந்துணர்வையும், அதன் மூலம் கல்வி மற்றும் கலை, கலாசார, விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்படுவதே இத்தகைய சங்கங்கள்.
எமது கல்லூரி விவேகானந்த சபை நடத்திய சமயபாடப் பரீட்சை, மற்றும் ஆறாம் வகுப்பில் நடைபெறும் அரசாங்க புலமைப்பரிசிலுக்கான பரீட்சை உட்பட க. பொ. த. ( சாதாரண தரம் ) பரீட்சை ஆகியனவற்றிற்கும் மாணவர்களை அக்காலப்பகுதியில் தோற்றச்செய்திருந்தாலும்,
விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லாதமையினால், வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள் கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான பிரதேசங்களில் விஞ்ஞானம் கற்கச்சென்றனர்.
ஏனையோர் பெரியமுல்லையிலிருந்த அல்-ஹிலால் மகா வித்தியாலயம் சென்றனர். இதனை அவதானித்துக்கொண்டிருந்த பழைய மாணவர்கள் சிலர் ஒன்றுகூடினர்.
1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அந்த ஒன்றுகூடல் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் நடந்தது. அவ்வாறு தொடங்கப்பட்ட பழைய மாணவர் மன்றத்தின் முதலாவது தலைவராக ‘ அப்பர் ‘ என அழைக்கப்பட்ட சோ. யோகநாதன் தெரிவானானர்.
சு. தங்கவேல் செயலாளராகவும் செல்வி விஜயலக்ஷ்மி துணைச் செயலாளராகவும் செல்லையா நவரத்தினம் பொருளாளராகவும் சு. நவரட்ணராஜா துணைப்பொருளாளராகவும் முருகபூபதி, செல்வராஜா ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தெரிவாகினர்.
ஆட்சி மன்ற உறுப்பினர்களாக செல்விகள் சோ. தில்லைநாயகி, லலிதா இராசையா, தருமலிங்கம், கந்தையா சிவராசா , இரத்தினசிங்கம் ஆகியோரும் தெரிவாகினர்.
மன்றத்தின் காப்பாளர்களாக ஜெயம் விஜயரத்தினம், டாக்டர் சோ. பாலசுப்பிரமணியம், அ. மயில்வாகனன் ஆகியோர் தெரிவாகினர்.
1972 ஆம் ஆண்டு நவராத்திரி காலத்தில் எமது பழைய மாணவர் மன்றம் முதலாவது நாமகள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் எமது பழைய மாணவர் மன்றம் இவ்விழாவை கலை, இலக்கிய பெருவிழாவாகவே நடத்திவந்தது.
இர. சிவலிங்கம், சில்லையூர் செல்வராசன், கமலினி செல்வராசன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பணிப்பாளர் நாவற்குழியூர் நடராசன், குப்பிழான் சண்முகன், லோகேந்திரலிங்கம், மேமன்கவி, ஈழவாணன், இரகுபதி பால ஶ்ரீதரன், த. மணி , மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம் முதலான எழுத்தாளர்களையும் அம்பிகா தாமோதரம் , நேசம் தியாகராஜன் முதலான கலைஞர்களையும் பழைய மாணவர் மன்றம் நாமகள் விழாக்களுக்கு அழைத்திருக்கிறது.
குறிப்பிட்ட 1972 ஆம் ஆண்டு உதயமான பழைய மாணவர் மன்றம், இந்த ஆண்டு ( 2022 ) தனது ஐம்பது வருட நிறைவினை கொண்டாடுகிறது.![]()
முதலாவது தலைமை ஆசிரியர் பண்டிதர் க. மயில்வாகனம் அவர்களைத் தொடர்ந்து, திருவாளர்கள் கந்தசாமி, வித்துவான் சோதிநாதன், வ. சண்முகராசா, வீ. நடராஜா, திருமதி அசலாம்பிகை கல்யாண சுந்தரம், கணேசலிங்கம், முதலானோர் அதிபர்களாக பணியாற்றினர். மேலும் சிலர் பணியாற்றினார்கள். தற்போது திரு. நா. புவனேஸ்வரராஜா அதிபராக பணியாற்றுகிறார்.![]()
இந்த ஆக்கத்தினை எழுதி தனக்குத் தெரிந்த வரலாற்றை பதிவிடும் முருகபூபதி, இக்கல்லூரி, சாதாரண பாடசாலையாக விளங்கிய காலப்பகுதியில் 1954 முதல் 1963 ஆம் ஆண்டுவரையில்தான் இங்கு கல்வி கற்றேன். அதன்பின்னர் நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் ஆறாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் அனுமதி பெற்று சென்றுவிட்டோம்.
எமக்கு அக்காலத்தில் ஆசான்களாக விளங்கிய பண்டிதர் மயில்வாகனம், பெரிய ரீச்சர் திருமதி திருச்செல்வம், திருமதி திலகமணி தில்லைநாதன், சுப்பிரமணியம் ஆசிரிய தம்பதியினர், உடப்பூர் பெரி சோமாஸ்கந்தர், நிக்கலஸ் அல்ஃபிரட், கௌரி, மணிமேகலை சகோதரிகள் இராமலிங்கம், நாகராஜா ஆகியோர் எம்மை மாணவர்களாக மாத்திரம் பார்க்காமல் தங்கள் சொந்தப்பிள்ளைகளாகவே நேசம் காண்பித்தனர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன்.
நாம் பாடங்களில் மேலதிகமாக தெரிந்துகொள்வதற்கு அவர்களிடம் செல்லும்போது இலவசமாகவே மாலை நேர வகுப்புகளையும் நடத்தியிருக்கின்றனர்.
அக்காலத்தில் எமது மாணவர்களின் சில வீடுகளில் மின்சாரமும் இல்லை. வானொலி இல்லை. அத்தகைய குறைந்த வளமுடன் வாழ்ந்த பிள்ளைகளை தங்கள் உறவுகளாக பேணியவர்கள் அவர்கள்.
இன்று காலம் மாறிவிட்டது. கணினி யுகத்தில் பல்வேறு வசதி வாய்ப்புகளுடன் இன்றைய தலைமுறை வாழ்கிறது.
அன்று 1972 ஆம் ஆண்டு எமது பழைய மாணவர் மன்றம் தோன்றியபோது, அங்கு ஒரு விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கவேண்டும் என்பதே கனவாக இருந்தது.
அக்கனவை நனவாக்குவதற்கு மன்றம் பாடுபட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தை நிதியுதவிக்காட்சியாக நீர்கொழும்பு ரீகல் திரையரங்கில் காண்பித்து நிதி சேகரித்து கொடுத்தோம்.
தென்னிந்திய தமிழ்த்திரைப்படங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த அக்காலத்தில் துணிந்து ஒரு ஈழத்து திரைப்படத்தை அரங்கு நிறைந்த மக்களுடன் காண்பித்தது அன்று சாதனையாகவே பேசப்பட்டது.
எதிர்பாராதவகையில் 1987 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர நேரிட்டது. எனினும் எனக்கு கல்வியை வழங்கிய முதல் பாடசாலையை நான் மறக்கவில்லை.
கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் பழைய மாணவர் மன்றத்திற்காகவும் நான் எழுதிய சில நூல்களை வழங்கி அவற்றை அங்கே வெளியிட்டு, அவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியை எனது சமுகமின்றியே வழங்கினேன்.
அத்துடன் நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பினையும் உருவாக்கி, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் வறுமைக்கோட்டிலும் தந்தையை இழந்தும் வாழும் பல மாணவர்களுக்கு உதவும் பணிகளையும் இங்கு வாழும் அன்பர்களின் ஆதரவுடன் வழங்கி வருகின்றோம். இன்றளவும் இந்தப்பணி தங்கு தடையின்றி தொடருகின்றது.
இந்நிதியத்தினால் பயனடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் பிரவேசித்து தற்போது சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
எமது கல்லூரியில் கற்று உருவான எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களும் பலர். சிலர் மறைந்துவிட்டனர், சிலர் புலம்பெயர்ந்துவிட்டனர்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம், நீர்கொழும்பு தருமலிங்கம், கனகலதா, செல்வரத்தினம், தேவசேனா, ஶ்ரீரஞ்சனி, , பஞ்சநாதன் விக்னேஸ்வரன், சூரியகுமாரி ஶ்ரீதரன், ரவி பிரதீபன், நடராஜா செல்வராஜா, முத்துலிங்கம் ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களும், இவர்களுடன் கெங்காதேவி ஶ்ரீமுருகன், நித்தியகலா கிருஷ்ணராம், மாலதி முருகபூபதி, திலகா தில்லைநாதன், பரிமளஜெயந்தி நவரட்ணம், இராஜரட்ணம் சிவநாதன், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, முன்னாள் அதிபர்கள் திருவாளர்கள் ந. கணேசலிங்கம், வீ. நடராஜா, திருமதி அசலாம்பிகை கல்யாணசுந்தரம், தற்போதைய அதிபர் திரு. நா. புவனேஸ்வர ராஜா ஆகியோரும் எழுதிய ஆக்கங்களுடன் கல்லூரியின் வைரவிழா காலத்தில் 2015 ஆம் ஆண்டு நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும் என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டிருக்கின்றோம்.
இந்த வரலாற்றுப் பின்புலத்துடன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் தனது ஐம்பதாவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்றது என்பதை மனநிறைவுடன் பதிவு செய்கின்றோம்.
தற்போது, இம்மன்றத்தின் பணிகளை முன்னெடுத்துவரும் பழைய மாணவர்கள், தொடர்ந்தும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் அங்கு கற்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தம்மாலியன்ற பங்களிப்புகளை வழங்கவேண்டும்.
எமது தாயகமான இலங்கை, கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தையும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தையும் கடந்துகொண்டிருக்கிறது.
இதனால் மாணவர்களின் கல்லூரிக் கல்வி நேரம் குறைவடைந்திருக்கிறது. அதன் பாதிப்பு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் சவாலாக விளங்குகிறது.
இந்த சமகால நிலைமைகளை கருத்திலும் கவனத்திலும் கொண்டு, இக்கல்லூரியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பழைய மாணவர் மன்றத்தினரும் புலம்பெயர்ந்து சென்று புகலிட வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் பழைய மாணவர்களும் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தல் வேண்டும்.
ஐம்பது ஆண்டுகள் நிறைவான பொன்விழாக்காலத்தில் இந்த சிந்தனைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியும் பழைய மாணவர் மன்றமும் கல்லூரி அபிவிருத்திச்சங்கமும் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றேன்.
—-0—-
![]()