கதைகள்

“அடையாளம்”…. 4 …. (நிறைவுப் பகுதி) …. ஏலையா க.முருகதாசன்.

சரசுவின் தாய் பதட்டத்துடன் கடுக்காயை சிரடஐடயில் வைச்சு உரசி சரசுவிடம் கொடுத்து „இந்தா இதைக் குடி „ என்று குடுத்தவள் ஒரு யொக் நிறையத் தேத்தண்ணியையும் போட்டுக் குடுக்கிறாள்.

ஒருவர் வீட்டுக் கதையை இன்னொரு வீட்டுக்கு இரசித்து இரசித்து சொல்வதில் பாக்கியலட்சுமி அந்த ஊரில் பிரபலமானவள்.அவளுக்கு றேடியோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

மகளுக்கு யொக் நிறையத் தேத்தண்ணியைக் குடுத்துக் குடி என்று சொன்ன நேரம் பார்த்து சரசுவின் வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி’ என்னக்கா அவளுக்கு இவ்வளவு தேத்தண்ணியைக் குடுக்கிறாய்’ என்று கேட்க, எதைச் சொல்லக்கூடாது என்று கவனமாக சரசுவின் தாயிருந்தாளோ அதை, சரசுவுக்கு மாதவிடாய் இன்னும் வரவில்லையே என்ற மனக் கலக்கத்தில் மறந்து „இல்லைப் பாக்கியம் கல்யாணத்துக்கு முந்தி பொம்பிளை மாப்பிளைக்கு பேதி குடுக்கிறது வழக்கந்தானே, வயித்துக்குள்ளை அழுக்கிருந்தாள் வாய் மணக்குமல்லோ, வாய் மணந்தால் ….பொம்பிளை மாப்பிளைக்கு அது இடைஞ்சல்தானே…என்ன பாக்கியம் குடும்பகாரி உனக்குத் தெரியாதோ அந்தச் சங்கதி எதுக்கு புருசன் பெண்சாதி படுக்கப் போகிற போது வெற்றிலை பாக்கு போடுறது என்று தெரியாதோ „என்று சரசு சொல்ல,அதைக் காதிலை வாங்கியும் வாங்காதவளாக பாக்கியலட்சுமி ;,’மெய்யே சரசுக்கு சூதகம் வந்திட்டுதானே’ என்று எதையோ அறிவதற்கு தூண்டில் போடுவது போல கேள்வி கேட்க,’ஓமோம்…அது வந்திட்டுது ஐஞ்சு நாளைக்கு முந்தி அது வந்திட்டுது „ என்று சரசுவின் தாய் பொய் சொல்ல, அதை நம்பாத பாக்கியலட்சுமி’ உனக்கென்ன விசரே ஐஞ்சு நாளைக்கு முந்தி சூதகம் வந்தவளுக்கு கடுக்காய் உரசி பேதி குடுத்திருக்காய் இது எல்லாத்தையுமல்லோ கழுவிவிடும்….விசர்த்தனமான வேலையைச் செய்திட்டியே’ என்று சரசுவுக்காக அனுதாபப்படுவது போல பாக்கசியலட்சுமி கதைக்க’ பாக்கியம்’ அப்படி ஒன்றும் நடக்காது’ என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறாள் சரசுவின் தாய்.

சரசுவின் தாய் சரசுவை நினைச்சு நினைச்சு கலங்கிக் கொண்டிருக்க, பாக்கியலட்சுமி இன்னும் பயத்தை அதிகரிப்பது போல கதைத்துக் கொண்டிருந்தாள்.

சரசுவுக்கும் தாய்க்கும் இருந்த மனநிலையில் பாக்கியலட்சுமி கெதியிலை வீட்டிலிருந்து போனால் நல்லது என்று தவித்தார்கள்.

கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் செந்திலும் சரசுவும் உரிமையெடுத்து மனம் பிறழ்ந்ததால் சரசுவுக்கு மாதவிடாய் வராமல் போனதும்;,அதனை ஊரறிந்தால் மானம் மரியாதை போய்விடுமே என்று தவித்தார்கள், நெருப்புக்கு மேல் நிற்பது போல உணர்ந்தார்கள்.

„மெய்யே செந்திலுக்கும் சரசுவுக்கும் மாணிக்காராசாவைக் கண்டாலே கீரியும் பாம்பும் போல அப்பிடியிருக்க அவன் இஞ்சை வந்து போறானே’ என்று இழுக்க…’பாக்கியம் அதுக்க நாங்கள் என்ன செய்கிறது…வலிய வந்து கல்யாண வீட்டு வேலைகளுக்கு உதவி செய்கிறன் „ என்கிறான், என்று உடனடியாகவே சரசுவின் தாய் காட்டமாகப் பதில் சொல்ல,’ என்னெண்டாலும் கவனமா இரு „ என்று சரசுவின் குடும்பத்தில் அக்கறையுள்ளவள் போல சொல்லிவிட்டுப் போனவள்,வைக்கல் பட்டடையில் நெருப்புக் கொள்ளியை செருகியது போல சரசுவும் செந்திலும் தனியாகச் சந்திச்சதால் சரசுவுக்கு இன்னும் மாதவிடாய் வரவில்லை என்பதை கசிய விட்டது மட்டுமல்ல உவப்பாக ஊறுகாயாக சரசுவின் தாய் சரசுவுக்கு கடுக்காய்ப் பேதி கொடுத்ததையும் பரப்பி விடுகிறாள்.

இரண்டு நாளைக்குள் அந்தச் செய்தி புயலாக ஊருக்குள் அடிக்கத் தொடங்கிவிட்டது.

பலரும் பலவிதமாக தமது கற்பனைக்கு ஏற்றவிதமாக கதைக்கத் தொடங்கினர்.’அமசடக்குக்காரி அமசடக்காக இருந்து கொண்டு என்ன காரியம் பண்ணியிருக்கிறாள்’ என்று சிலரும்’ இப்படி வயித்திலை வாங்கினாள்தானே, செந்திலை நழுவாமல் கைக்குள்ளை வைச்சுக்கலாம்’ என்று இன்னும் சிலரும் கதைக்கத் தொடங்க சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி அந்த ஊருக்குள் கதைச்சுக் கொண்டிருந்த செய்தி மாணிக்கராசாவின் காதிலும் எட்டியது.

நீண்ட நாள் வன்மத்தை பழிதீர்க்கத் தயாரானான் மாணிக்கராசா.இரவோடு இரவாக சீமெந்துத் பைத்தாளில் அந்த வாசகங்களை எழுதி யாருமே தெருவில் நடமாடாத சாமநேரத்தில் சங்கக்கடைக் கதவில் ஒட்டியவன் அமைதியாக நித்திரை கொள்ளப் போய்விட்டான்.

அடுத்த நாள் சங்கக்கடையைத் திறக்கவந்த கிளை முகாமையாளரான நகுலேஸ்வரன் சங்ககக்கடை கதவில் சீமெந்துப் பைத்தாளில் வாசகங்கள் சில எழுதி ஒட்ப்பட்டிருந்ததை வாசித்து திடுக்கிட நேரத்தோடு சாமான்களை வாங்கவென்று வந்தவர்களும் அதை வாசித்தனர்,அவர்களும் குழம்பித் திடுக்கிட்டனர்.

அரைகுறையாக பசைபூசப்பட்டு ஒட்டப்பட்டிருந்த அந்த தாள் கிழிபடாமல் சுலபமாக முழுத்தாளும் உரிபட ஒருவர் மாறி ஒருவர் மனப்பாடம் செய்வது போல அந்த வாசகங்கள வாசித்தனர்.

பாக்கியலட்சுமியால் முதல் தூவிவிட்ட நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்க’ சரசுவின் வயிற்றில் மாணிக்கராசாவின் வாரிசு,ஆனால் அவளின் கழுத்தில் தாலிகட்டப் போவது ஏமாளியான செந்தில், அப்படியானால் உண்மையான கணவன் யார்?.காதலித்தவனா?வாரிசைக் குடுத்தவனா’ என்று எழுதி அதன் கீழ் ஊரின் நலன்விரும்பியான ஊர்க்குருவி என்று எழுதப்பட்ட வாசகங்கள் இன்னொரு காட்டுத் தீயாகியது.

மாணிக்காராசா எதுவுமே தெரியாதது போல வீட்டில் இருந்தான்.மாணிக்கராசாவின் வீடு, செந்திலின் வீடு சரசுவதியின் வீடு என ஊரில் அனைவருக்கும் என

வேலிதாண்டி அனைத்து வளவுகளுக்கும் சமனாக நின்ற வெள்ளம் போல நிரம்பி நின்றது.

அந்த ஊரின் ஒழுங்கைகளிலும் குச்சொழுங்கைகளிலும் அவரவர் வீட்டுப் படலைகளிலும் கூட்டம் கூட்டமாக நின்று கதைக்கத் தொடங்கினர்.

„ எந்த நாயடா இந்த வேலையைச் செய்தது, ஆரெண்டு தெரியட்டும் எழுதினவனை மேடர் செய்து போட்டு மறியலுக்குப் போகவும் தயார்’ என்று, அப்பதான் தனக்கு அந்தச் செய்தி தெரியுமென்பது போல அவனுடைய நண்பர்களுக்குச் சொல்வதும், ஆங்காங்கே படலைக்குப் படலை நின்றவர்களின் காதுகளில் விழத்தக்கதாக மாணிக்கராசா சத்தம் போட்டு சைக்களில் திரிந்து திரிந்து சொல்லிக் கொண்டிருந்தான்.மாணிக்கராசாவின் சுயரூபம் தெரிஞ்ச சிலர் „ உந்த கேடுகெட்ட பொறுக்கிதான் எழுதி ஒட்டியிருப்பான் என்றும் சொன்னார்கள்.

செந்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான்.சரசுவோ நெருப்பிலை விழுந்த புழுவாய் துடிச்சுக் கருகிக் கொண்டிருந்தாள்.சரசுவின் தாயும் தகப்பனும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளுக்கொரு மூலையாக சுருண்டு கிடந்தனர்.

சங்கக்கடைக் கதவில் எழுதி ஒட்டிய செய்தி முழுப் பொய் என்று செந்திலின தாய் தகப்பனுக்க விளங்கப்படுத்த வேணும் என்று நினைத்த சரசுவின் தாயும் தகப்பனும் இன்னும் சில நல்லவர்களும், சூட்டோடு ‚சூடாகக் கதைக்காமல் ஆறப் போட்டு மனம் ஒரு நிலைக்கு வரட்டும், நாளைக்கு கதைப்பம் என்று முடிவெடுத்திருந்த நேரம், இரவு ஒரு மணி போல செந்திலின் வீட்டிலிருந்து பெரும் ஓலம் கேட்க,பல வீடுகளுக்கும் அந்தச் சத்தம் கேட்க சரசுவின் தாயும் தகப்பனும் சரசுவும் பக்கத்து வீடான செந்திலின் வீட்டுக்குப் பதட்டத்துடன் ஓட, செந்திலின் தாய் „உன்னாலை என்ரை பிள்ளை செத்திட்டானடி,அவமானம் தாங்காமல் செத்திட்டானடி,நீ தேவடியாளடி போய்ப் பாரடி அவன் வேப்ப மரத்திலை தூங்கிறதை „ என கோபத்துடனும் அழுகையுடனும் குமுற, சரசு வேப்பமரத்தடிக்குப் போய்ச்சேர முந்தியே அங்க ஊர் கூடிவிட்டது.

சரசுவை வைச்ச ஊஞ்சலாட்டிய கயிற்றை கத்தியால் அறுத்து அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செந்திலின் உடலைக் கீழே இறக்கி வைச்சிருந்தார்கள்.

சரசுவின் அழுகை கோபமாக மாற „ சின்ன வயசிலிருந்தே நீதான் என் புருசன் என்று எண்ணி எண்ணி வளர்ந்தவளடா நான் .என்னை நம்பாமல் யாரோ ஒருத்தன் எழுதியதற்காக அதை நம்பி எங்கள் காதலை நம்பாமல் இப்படிக் கோழையாய் செத்துக் கிடக்கிறியே.செந்தில்….செந்தில,; என் வயிற்றில் வளருறது உன்ரை இரத்தமடா..அதைச் சொல்ல நான் வெட்கப்படமாட்டன் அதை எல்லாரும் அறியட்டும்…’ என்று விம்மி வெடித்துக் குழறி அழுதவள்,’இந்த வேப்பமரம் சாட்சியாகவும் இந்த ஊஞ்சல் சாட்சியாகவும் இந்த வேப்பமரத்தில் எழுதியிருக்கும் எங்கள் இரண்டு பேற்றை பேர் சாட்சியாகவும் சொல்றன் ..செந்தில் உன்ரை பிள்ளையை நான் வளர்த்து ஆளாக்குவன்.

இனி இந்த ஊரில் இருக்க மாட்டன்.எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் யாரென்று எனக்குத் தெரியும்.அவன் அனாதையாக இங்கேதான் இந்த இடத்தில் துடிக்கத் துடிக்கச் சாவான்’ என்று சொல்லி எழுந்தவள் செந்திலின் சொண்டில் முத்தமிட்டவள் தாயையும் தகப்பனையும் கூட்டிக் கொண்டு பலர் தடுத்தும் இரவோடு இரவாக கிளிநொச்சிக்குப் போனாள்.

கிளிநொச்சியில் தோட்டம் செய்வதற்கென தகப்பன் ஏற்கனவே வாங்கி வைச்சிருந்த வெறுந்தரையில் ஒரு கொட்டிலைப் போட்டு சரசுவும் தாயும் தகப்பனுமாக ஒரு இலட்சிய வெறியோடு வாழத் தொடங்கினர்.ஆனால் ஒரு கோழையாக செந்தில் தற்கொலை செய்தது அவளின் மனசை அரித்துக் கொண்டே இருந்தது…ஆனால் என்ன செய்வது விதியின் மேல் பாரத்தைப் போட்டு பெருமூச்சில் அதை மறக்க நினைச்சாள்…ஆனால் அதை மறக்க முடியவில்லை…

அவளின் மனத் திரையில் செந்திலும், ஊஞ்சலும் வேப்பமரமும் வந்து போயக் கொண்டேயிருந்தன எப்பொழுதும்.நாட்கள் செல்லச் செல்ல வெறுந்தரை வாழைமரங்களாலும் தென்னை மரங்களாலும் மாமரங்கள் பலாமரங்கள்; என பெரும் சோலையாவே மாறியது.

சரசு ஒரு தையல்கடையில் தையல் பழகி தனியாக வீட்டில் வைச்சு தைச்சுக் குடுக்கத் தொடங்கினாள்.அவளுக்குப் பெண்குழந்தை பிறந்தது.செந்தில்குமாரி என்ற பெயர் வைச்சாள்.செந்தில்குமாரியை படிக்க வைச்சாள்.பேராதனைப் பல்கலைக் கழகத்தில் செந்தில்குமாரி பட்டதாரியானாள்.

இதற்கிடையில் சரசுவின் தாயும் தகப்பனும் மூப்புக் காரணமாக இறந்துவிடுகிறார்கள்.தான் இருந்த ஊருக்குக்கூட தாய்தகப்பன் இறந்ததை அவள் அறிவிக்கவில்லை.

செந்தில்குமாரி கிளநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரானாள்.தக்க தருணத்தில் தனக்க நேர்ந்த கொடுமையை மகளுக்கு சரசு சொன்னாள்.அமைதியாக தாயின் கதையைக் கேட்ட செந்தில்குமாரி பிரதிபலிப்பாக எதையுமே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

நினைவுகளிருந்து மீண்ட சரசு யாழ்ப்பாணத்திலிருந்து கிளநொச்சி போகும் பஸ்ஸைப் பிடித்து கிளிநொச்சி போய்ச் சேர்ந்தாள்.

ஊரில் , சரசு ஊருக்கு வந்த போது சரசுவைக் கண்டதும் பூட்டிய மாணிக்கராசாவின் தேத்தண்ணிக் கடை இரண்டு நாட்களாக பூட்டியிருப்பதைக் கண்ட ஊரார் கடைக்கு கிட்டப் போய் அசிகை பார்த்த போது பொலிடோலின் மணம் வரவே கடையை உடைத்து பார்த்த போது அங்கே மாணிக்கராசா பொலிடோல் குடித்து தற்கொலை செய்து செத்துக் கிடந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் வடிந்திருந்தது.

மாணிக்கராசாவிற்கு கல்யாணம் நடக்கவேயில்லை.அவன் பிரமச்சாரியாகவே செத்தான்.அவனுக்கு கல்யாணம் பேசி வந்த போது செந்திலுக்கும் சரசுவுக்கும்

செய்த சூழ்ச்சியை அறிஞ்ச ஊராரில் சிலர் அவனை வெறுத்து அவனுக்க பெண் குடக்க வருபவர்களிடம் அவனைப் பற்றிச் சொல்லி தடுத்து நிறுத்தினர்.

மாணிக்கராசா பொலிடோல் குடிச்சு தற்கொலை செய்ததை சரசு அறிஞ்ச போது முப்பதிநாலு வருடங்களாக அவளின் நெஞ்சில் முட்டிநின்ற அழுத்தம் இல்லாமல் போய் நிம்மதியானாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *