Featureஇலக்கியச்சோலை

“முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை”…. ஒரு பார்வை!…. மைதிலி தயாநிதி – கனடா.

நூல் திறனாய்வு!

முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை – ஒரு பார்வை

மைதிலி தயாநிதி – கனடா

பைந்தமிழ்ச்சாரல் மெய்நிகர் அரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இக்கட்டுரை அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை என்ற சிறுகதைத் தொகுதி பற்றியதாகும்.

இத்தொகுப்பு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முருகபூபதி அவர்களின்எழுபதாவது அகவையை முன்னிட்டு, ஜீவநதியின் 189 ஆவது வெளியீடாக வெளிவந்தது. பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பிற்கு, இந்நூலின் மூன்றாவது கதையாக இடம் பெற்றுள்ள ”கதைத்தொகுப்பின் கதை” என்பதே தலைப்பாகச் சூட்டப்பட்டுள்ளது. பெண், பெண்ணியம் சார்ந்த கதைகளுள் இது ஒரு முக்கியமான கதை.

படைப்பிலக்கியவாதியான முருகபூபதி தமிழிலக்கிய உலகிலே நன்கறியப்பட்ட எழுத்தாளர். இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் வீரகேசரிப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1987 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகரில் வசித்து வருகிறார்.

சிறுகதை, நாவல் , கட்டுரை, நேர்காணல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், விமர்சனம், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருபவர். 1972 ஆம் ஆண்டில் ”கனவுகள் ஆயிரம்” என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமான இவர், இதுவரையில் 25 நூல்கள் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் எனும் நூல் இலங்கையில் தேசிய சாகித்திய விருதினை 1976 ஆம் ஆண்டு பெற்றது. ஐந்து தசாப்தங்களாகச் சிறுகதைகள் படைத்து வரும் இவரின் ஏழாவது சிறுகதைத் தொகுதியே “ கதைத்தொகுப்பின் கதை “ யாகும்.

இத்தொகுப்பின் விசேட அம்சமாகத் திகழ்வது இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பதினைந்து சிறுகதைகளையும் குறித்த வாசகர்

பார்வைகளாகும். பதிப்புரை, முன்னுரை என்பவற்றைத் தொடர்ந்து, உரோமன் இலக்கம் 09 முதல் 34 வரையிலான 26 பக்கங்கள் வாசகர் அனுபவப் பதிவுகளாக விளங்குகின்றன. குறிப்பிட்டதோர் இலக்கியப் படைப்பிற்கு எல்லா வாசகர்களும் ஒரே விதமாக எதிர்வினையாற்றுவர் என்று கூறமுடியாது. ஒவ்வொரு வாசகரினதும் இலக்கியப் பரிச்சயம், வாழ்வியல் அனுபவங்கள், கல்வி நெறி வேறுபாடுகள் முதலியனவற்றால் ஓரிலக்கியப்படைப்பானது அவர்களிடத்து வெவ்வேறு வகையான உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் தூண்டும். அதனால்,, அப்படைப்பின் அர்த்தங்களை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று கருதப்படுகின்றது.

தமிழிலக்கிய மரபிலே வாசகர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டே வந்துள்ளது. களவியல் எனும் இறையனார் அகப்பொருள் நூலுக்கு எழுந்த உரைகளிலே சிறந்த உரை என்று மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனின் உரை தெரிவுசெய்யப்படுதற்கு உருத்திரசன்மன் எனும் வாசகனின் மெய்ப்பாட்டு எதிர்வினையே (Reaction) ஆதாரமாக இருந்தது. (”…பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு!’ என்றார்.”) மேலும், அற இலக்கியமான திருக்குறளுக்கு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் இற்றை வரை எழுந்த உரைகள் யாவும் வாசகர் எதிர்வினைகள் என்றே கருதப்படவேண்டியவை.

மேனாட்டு இலக்கியக் கோட்பாடுகளிலும் வாசகர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுவதை அவதானிக்கலாம். வாசகரை மையமாகக் கொண்டெழுந்ததே Reader Response criticism. மேலும், “The Death of the Author” (”எழுத்தாளனின் இறப்பு”) என்று 1967 ஆம் ஆண்டு Roland Barthes (1915–1980) எனும் கோட்பாட்டியலாளர் தாம் எழுதிய கட்டுரையில் நூலாசிரியரின் நோக்கங்களையும் ( intentions), அவரின் வாழ்க்கைச்சரித்திர விவரங்களையும் அடிப்படையாக வைத்து இலக்கிய விமர்சனம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுவதுடன் மட்டுமன்றி, ஆசிரியனுக்கும், படைப்புக்கும் தொடர்பில்லை என்றும் வாதிக்கின்றார்.

ஆகவே, இலக்கியப் பிரதியை வாசித்து விட்டு ஆசிரியரின் கருத்து என்ன என்று authorial intent ஐ வாசகர்கள் உசாவிக் கொண்டு திரிவதும் ,

“எனது படைப்புக் குறித்து வெளியிடப்பட்ட கருத்துகள் தவறானவை. நான் கருதியது இதுதான்” எனப் படைப்பாளி தனது கருத்தை வாசகர்நிலையில் நின்று முன்வைப்பதும் என ”தமிழ் கூறு நல்லுலகம்” இருக்கும் காலகட்டத்தில், முருகபூபதி தனது கதைகள் குறித்த வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களை முதன்மைப்படுத்தித், தொகுத்தளித்துள்ளமை எனக்குச் சற்று வியப்பையே அளிக்கின்றது.

பொதுவாக, ஒரு இலக்கியப் பிரதியை வாசித்தவுடன் வாசகருக்கு அதை ஏனையவர்களுடன் பகிரவோ அல்லது அது குறித்து உரையாடவோ ஆவல் எழும். பிரதியின் நோக்கம் குறித்த தனது கருத்துகள், அது கூறும் விடயம் குறித்த தனது புரிதல்கள், அது மனதில் எழுப்பிய எண்ண அலைகள் முதலியவற்றை ஏனையவர்களுடன் பகிர மனம் ஆசைப்படும். இந்நூலில் ஒவ்வொரு கதைக்கும் வாசகர் மனப்பதிவு காணப்படுகின்றமையால், நூலை வாசிப்போர் தமது சொந்த வாசிப்பு அனுபவத்துடன் மற்றவரின் அனுபவத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. ”எந்தெந்த அம்சங்களில் நம் இருவரினதும் வாசிப்பு அனுபவம் ஒத்துள்ளது? நான் கதையிற் கண்ட எந்த அம்சங்களை அவரும், அவர் கண்ட எந்த அம்சங்களை நானும் தவற விட்டுள்ளோம்? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்?” என்று அறிவுப்பூர்வமான ஆய்வில் வாசகர் ஈடுபடவும் நூலின் இப்பகுதி உதவுகின்றது.

இத்தொகுப்பில் 141 பக்கங்களிற் காணப்படும் பதினைந்து சிறுகதைகளையும் அவை பேசும் பொருளுக்கேற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம் என்று கருதுகின்றேன். அதேசமயம் வேறு விதமான பாகுபாடுகளுக்கும் சாத்தியப்பாடு உண்டு என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.

1. இலங்கையில் போரும் சமாதானமும் பற்றிய இரு கதைகள்

(”கணங்கள்”, ”தாத்தாவும் பேத்தியும்”)

2. அவுஸ்திரேலியத் தமிழர்களுக்கும், அவர்களின் தாயக உறவுகளுக்குமான தொடர்பினை விமர்ச்சிக்கும் மூன்று கதைகள்

(”காத்தவராயன்”, ”எங்கோ யாரோ யாருக்காகவோ”, ”தினம்”)

3. பெண்ணை மையமாகக் கொண்ட மூன்று கதைகள்

(”கதைத்தொகுப்பின் கதை”, ”அம்மம்மாவின் காதல்”, ”அவள் அப்படித்தான்”)

4. அவுஸ்திரேலியப் பிரச்சினைகளையும், கோவிட் 19 கால உளச்சிக்கல்களையும் கூறும் நான்கு கதைகள்

(”பார்வை”, ”எங்கள் ஊர் கோவூர்”, ”கொரோனா கால உறவுகள்”, ”நடையில் வந்த பிரமை”)

5. வாழ்க்கைத்துணையைத் தேடுவது/ சேர்த்து வைப்பது தொடர்பான மூன்று கதைகள்

(”நேர்காணல்”, ”காதலும் கடந்து போகும்”, ”ஏலம்”)

எல்லாக் கதைகள் பற்றியும் எடுத்துரைப்பது சாத்தியமற்றதாகையால் முக்கியமானவை என்று நான் கருதும் சில கதைகள் பற்றிய எனது கருத்துகளை இங்கு பதிவிடுகின்றேன்.

போரின் அவலங்களையும், வலிகளையும் பேசும் பல புனைவுகள் இலங்கைத் தமிழிலக்கியத்தில் தோன்றியுள்ளபோதும், இத்தொகுதியிற் காணப்படும் முதலாவது சிறுகதையான ”கணங்கள்” என்பது தனித்துவமானது. போரில் ஈடுசெய்ய முடியாத இழப்பினைச் சந்தித்த, அதாவது, தன் வாழ்வை இழந்த, சாதாரண தமிழ்ப் பெண்ணொருத்தி, தன்னைப் போலவே போரில் கணவனை இழந்த, முகம் தெரியாத சிங்களப் பெண்ணின் வலியைத் தன்னது போலவே உணர்வதைச் சித்திரிக்கும் அற்புதமான கதையே இது. இக்கதை போர் எவ்வாறு இருதரப்பினரையுமே பாதித்துள்ளது என்பதை ’நடுவுநிலைமையில்’ நின்று சொல்ல முற்படுகிறது. இது போருக்கு எதிரான கதை.

அம்மே இது கடவுளுக்கான மௌனம் இல்லை. எனது அப்பாவுக்கானது. எனது அப்பா ஆர்மியில் பிரிகேடியராக இருந்தவர். ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட்டி அள்ளியதாக அம்மே சொல்லியிருக்கிறாங்க. அப்போது எனக்கு இரண்டு வயதிருக்கும். அப்பாவின் முகத்தை அவரது படங்களிற்றான் பார்த்திருக்கிறேன்.”

அதைக் கேட்டு நான் உறைந்து போய் நின்றேன். அவர் காணாமல் போன நாளன்றும் நான் இப்படித்தான் நின்றேன்.

என்று இக்கதை முடிகின்றது.

பிறரின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தானும் புரிந்து கொள்வதுடன் அவற்றைத் தானும் அனுபவிக்கும் திறனே empathy என்று சொல்லப்படும். இது தமிழில் ஒற்றுணர்ச்சி அல்லது இணைத்துயர்மை

எனக் கூறப்படுகின்றது (Eudict dictionary: English – Tamil). இதற்கு எடுத்துக்காட்டே இக்கதையின் பிரதான பெண் பாத்திரம். இது ஒரு அசாதரண பாத்திரம். எனினும், இக்கதை காலத்தின் தேவை கருதி, காலப்பகுப்பொன்றினை உணர்த்தும் சொல்லொன்றைத் தலைப்பாகக் கொண்டு (கணம்) படைக்கப்பட்டுள்ளது. இக்கதையை வாசித்தபொழுது, “மானுடம் வென்றதம்மா” என்ற கம்பனின் வரியும், ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதி பாடலும் நினைவுக்கு வந்தன. அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த தோமஸ் ஹாடி எனும் புலவனின் அர்த்தமில்லாத போரைப் பேசும் ”The man he killed” என்ற ஆங்கிலக் கவிதையும் நினைவிற்கு வந்தது.

விடயரீதியில் ”கணங்கள்” என்ற கதையுடன் தொடர்புடையது எனக் கருதத்தக்கது ”தாத்தாவும் பேத்தியும்” என்ற சிறுகதை. அவுஸ்திரேலியாவில் வெவ்வேறு மொழி, பண்பாட்டுப் பின்புலம் கொண்டவர்களுடன் தான் பழகுவதைப் பேத்தி குறிப்பிட்டவுடன் தாத்தாவுக்கு தன் தாயகநிலை குறித்த ஆதங்கம் எழுகின்றது.

எல்லா நாட்டினரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு வாழும் பல்தேசிய கலாசார நாட்டில் புகலிடம் பெற்றிருக்கும் எனக்கு, இரண்டு மொழிகள் பேசும் இனங்கள் வாழும் தாய்நாட்டில் ஏன் புரிந்துணர்வு இல்லாமல் போனது என்ற ஏக்கம் வந்தது.

சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடித்ததும், வெறும் தட்டத்தை எனக்குக் காண்பித்த பேத்தி “ தாத்தா finished ” என்றாள்.

எங்கள் தாயகத்தில் முடிவுக்கு வருவதற்கு இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாக மனதிற்குப் பட்டது.

என்று கதை நிறைவுறுகின்றது.

இக்கதை முடிந்தபின்னர்தாம் வாசகர்கள் யோசிக்கத் தொடங்குவர் என்று நினைக்கிறேன். பன்மைத்துவமானது மொழிகளில், சமயங்களில் , கலாசாரங்களில் அதிகாரவர்க்கத்தினரால் அங்கீகரிக்கப்படாத பொழுது, அது அமைதியின்மைக்கும், தீராப்பூசலுக்கும் வழி வகுக்கின்றது என்பதையே இக்கதை சுட்டுகின்றது எனக் கருதுகிறேன்.

அவுஸ்திரேலியாவில் குடியேறிய தமிழருக்கும், தாயகத்திற்குமான தொடர்பினை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட மூன்று கதைகளை என்னால் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் மரபு ரீதியிலான பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான

”காத்தவராயன்” எனும் நாட்டுக்கூத்தினைத் தலைப்பாகக் கொண்ட கதையானது, அவுஸ்திரேலிய தமிழர்கட்கும், தாயகத்தில் இருப்போருக்குமான பண்பாட்டு விரிசலைக் காட்டுகின்றது. இக்கதை குறித்த தனது கருத்தினைப் பதிவு செய்துள்ள எஸ். கிருஷ்ணமூர்த்தி, “மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடை பிடிப்பார்கள் என்று இடது சாரியினரை முன்பு கேலி செய்வதுண்டு. அது போன்று வன்னியில் மழை விட்டாலும் மெல்பனில் தூறல் விடாது என்பதையே குறியீட்டில் உணர்த்துகின்றது இந்தச் சிறுகதை” என்கிறார்.

”எங்கோ யாரோ யாருக்காகவோ” என்ற கதை விளம்பரமின்றித் தாயக உறவுகளுக்கு உதவ இயலாத மனநிலையில் உள்ள புலம்பெயர் தேயத்தவர்களைச் சாடுகின்றது. மூன்றாவது சிறுகதையான ”தினம்” என்பதில் கதைசொல்லியாக வருவது இறந்தவரின் ஆவி. போராட்டத்தில் தானும் பங்கெடுக்காது, தமது பிள்ளைகளையும் பங்கெடுக்கவிடாது புலம் பெயர்ந்தவர்கள், தாம் குடியேறிய தேசத்தில் தம் மக்களைப் படிப்பித்து, நல்ல வேலைகளில் அமரச்செய்து செல்வச் செழிப்பில் மினுங்கும் அதே சமயம், வாய்ப்பேச்சின் மூலம் விடுதலைக்குப் பங்களிப்பவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டிருத்தலை இக்கதை விமர்சிக்கின்றது. இது பற்றி கந்தையா குமாரதாசன் ” போரின் ஏற்பட்ட இழப்புகளின் வேதனையையும், வலியையும் புலம் பெயர் நாடுகளில் தேசியத்தைப் பேசிப்பேசியே தம்மை வளப்படுத்தும் சிலரின் உண்மை முகங்களைத் தோலுரித்துக் காட்டுவது இக்கதை” என்பர்.

பெண்ணை மையமாகக் கொண்ட கதைகளுள் முதலாவதான ”கதைத்தொகுப்பின் கதை” எனும் சிறுகதையில், ஆசிரியரும், எழுத்தாளருமான ஒரு பெண் தனது அண்ணனுக்காகப் பொருத்தமில்லாத திருமண பந்தத்தில் சிக்குண்டு, தான் காதலிக்கும் வேலையைக் கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றாள். வேலையை விட்ட அவள் எழுதுவதற்கும் கணவனிடமிருந்து போதிய ஊக்கம் பெறாதவளாய், கணவன் குடும்பத்தாரின் நகைக்கடையில் காசாளராகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். அவளிறப்பின் பின்னர் பெண்ணிய சிந்தனை கொண்ட அவளின் புத்தகத்தின் பிரதிகள் பழைய பேப்பர் விற்பனை செய்யும் கடையில் இருப்பது பெண் எழுத்தை சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இக்கதை ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணானவள் திருமணத்தின் முன்னரும், பின்னரும் ”தியாகச்சுடராக “ விளங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வலியுடன் பதிவு செய்கின்றது. இரண்டாவது சிறுகதையான ”அம்மம்மாவின் காதல்” என்பது சாதியம் காரணமாகத்

தனது காதலை தியாகம் செய்த பெண்ணையும், அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து தனக்கென வேறு இனத்தானைத் தெரிவு செய்யும் துணிவு கொண்ட பேத்தியையும் எதிரெதிரே நிறுத்துகின்றது. மூன்றாவது சிறுகதையான “அவள் அப்படித்தான்” ஆணாதிக்க சமூகத்தின் ஓரங்கமாகி விட்ட குடும்ப வன்முறையினை தாய் தொடர்ச்சியாக அனுபவித்து வந்தமையை நேரே கண்ட பெண் திருமணம் செய்துகொள்ளாது, வைத்திய சிகிச்சைகள் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றிட முடிவு செய்கின்றாள். ”குடும்பத்தில் ஆணின் வன்முறை என்பது மிக இயல்பாகிப் போய்விட்ட காரணத்தால், சமூகம் அதை ஒரு பெரிய பிரச்சினையாக’ எடுத்துக் கொள்ளத் தவறிவிடுகின்றது. மனைவி மீது கணவன் பிரயோகிக்கும் வன்முறையானது குழந்தைகளின் மனதில் எத்தகைய உளத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இக்கதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது” என்று இக்கதை குறித்த எனது பதிவு இந்நூலிலே உள்ளது.

இவ்விடத்தில் இத்தொகுதியில் உள்ள கதைகளில் இடம் பெறும் பெண்பாத்திரங்கள் பற்றி சி. ரஞ்சிதா ”முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் – ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் அக்கினிக்குஞ்சு இணைய இதழில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, அவுஸ்திரேலியாவின் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான இரு கதைகள் உண்டு. பார்வை என்பது அவுஸ்திரேலியாவின் போதைவஸ்து, யாசகம் கேட்டல், வீடற்றிருத்தல் எனும் பிரச்சினைகளைப் பேசுவது. அரசாங்கத்தின் தீர்க்கமான திட்டங்கள் மூலமே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இக்கதையின் முடிவு குறிப்பால் உணர்த்தும்.

இரண்டாவது கதையான ”எங்கள் ஊர் கோவூர்” என்பது, மனைவியுடன் வாழும் வெள்ளையரல்லாத கதைசொல்லிக்கும், விவாகரத்துப் பெற்றவரும், முன்னாள் மனைவியிடத்து இன்னமும் கசப்புணர்வுடன் நாளைக் குடியில் கழித்துக் கொண்டிருப்பவருமான வெள்ளையின மனிதர் ஒருவருக்குமிடையில் மலரும் நட்புப் பற்றிப் பேசுகிறது. மேற்கூறிய இருகதைகளிலுமே கதைசொல்லி தமிழராகவும், பிரச்சினைப்படுபவர்கள் தமிழரல்லாதவராகவும் காட்டப்படுகின்றனர்.

மறைந்த எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் மிதுனம் எனும் நாவலிலும், மெலிஞ்சி முத்தனின் உடக்கு நாவலிலும் கூட நான் இத்தகையதொரு தன்மையை அவதானித்தேன். வாசகர் இப்புனைவுகள்

குறித்து வெவ்வேறு கருத்துகளைக் கூறலாம். ஆனால், தமிழரல்லாத பாத்திரங்களைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளைச் சொல்லும்போது, இப்பிரச்சினைகள் எமது சமூகத்தில் இல்லை என்ற கருத்தும் இத்தகைய கதைகளில் தொக்கி நிற்பதாக எனக்குப் பட்டது. அதாவது ஏனைய இனத்தினரை விட நாம் சிறந்தவர்கள் (morally superior) என்ற பெருமிதத் தொனிப்பு இத்தகைய புனைவுகளில் காணப்படுகின்றது.

கதாசிரியரின் மொழி தொடர்பாகவும் சிறிது குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். பெரும்பாலும் சிறிய வசனங்களைக் கொண்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட, சராசரி அளவு கொண்ட சிறுகதைகள் இவை. கட்டுரைப்பாங்கில் எழுதப்படும் சிறுகதைகளும் தமிழில் உண்டு. ஆனால், இச்சிறுகதைகளின் மொழிநடை அத்தகையதன்று. எழுத்தாளரின் எழுத்தின் முதிர்ச்சியை இவற்றில் தரிசிக்கக் கூடியதாகவுள்ளது.

சில கதைகள் தன்மை நோக்குநிலையிலிருந்தும் (09 ) , சில படர்க்கை நோக்கு நிலையிலிருந்தும் (06) சொல்லப்படுகின்றன. தன்மை நோக்குநிலையிலிருந்து சொல்லப்பட்டவற்றில் வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக. ”கணங்கள்” என்ற கதை பெண்ணொருத்தி தன் சொந்தக் கதையைக் தன்மை நோக்கு நிலையிலிருந்து கூறுவதாக அமைந்துள்ளது. ஆனால் ”கதைத்தொகுப்பின் கதை” எனும் சிறுகதையில் தனது பள்ளி ஆசிரிபை குறித்து, கதைசொல்லியானவர், தான் மாணவனாக இருந்தபொழுது நேரடியாக அறிந்தனவற்றையும், கேள்விப்பட்டனவற்றையும், பல ஆண்டுகளுக்குப் பிறகு ”நினைவு மீட்பு” (flashback) உத்தி ஊடாகத் தன்மைநோக்கு நிலையிலிருந்து கூறுகின்றார்.

மேலும் ஓர் இடத்தை அல்லது நிகழ்வைப் பற்றி மிக நுணுக்கமாக விவரிப்பதன் மூலமாகச் செய்தியொன்றினை உணர்த்தும் பாங்கினை ”பார்வை”, ”காத்தவராயன்” என்ற கதைகளில் அவதானிக்கலாம். இருகதைகளிலும் கதைப்பின்னல் என்று சொல்லுமளவிற்கு ஏதுமில்லை. ஆனால், புகையிரத நிலையம் பற்றிய செறிவான விவரணங்கள் மூலமாக அவுஸ்திரேலியாவின் நகர்ப்புற சமூகப் பிரச்சினைகளையும், , அவை அரசாங்க கவனத்தைப் பெற வேண்டிய தேவையையும் ”பார்வை” வெளிப்படுத்துகின்றது. அதுபோன்று, சாதாரணமாக வீட்டில் நடைபெறும் விருந்துபசாரம் மூலமாகவும், அங்கு நடைபெறும் உரையாடல்கள் மூலமாகவும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் தாயகத்திலிருப்பவர்களுக்குமான அடிப்படை விரிசல் உணர்த்தப்படுகின்றது.

ஒப்புமையானது (analogy) ”ஏலம்” என்ற கதையில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. கார் வாங்குவதையும், மகளுக்கு வரன் தேடுவதையும் ஒப்பீடு செய்வது இக்கதை. அதே போல, எதிரெதிரான பண்புகளைக் கொண்ட (contrast) பாத்திரப் படைப்புகளும் கதைகளுக்கு வலுவூட்டுகின்றன. ”எங்கோ யாரோ யாருக்காகவோ ” கதையில் தாயகத்தைச் சேர்ந்த வண்டியோட்டி தனது வாகனத்தில் பிரயாணம் செய்பவரிடம் காட்டும் அக்கறையை, போராடியவர்களுக்கு உதவி புரிந்து விட்டு விளம்பரம் தேடும் மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனப்பாங்குடன் ஒப்பீடு செய்யாதிருக்க முடியாது. அதே போன்று ”எங்கள் ஊர் கோவூர்” கதையை வாசிக்கும் போதும் கதைசொல்லிக்கும் அவர் மனைவிக்குமான உறவும், கதைசொல்லியின் நண்பரான டேனியலுக்கும் அவரின் பிரிந்து சென்ற மனைவிக்குமான உறவும் எதிரிடையானதாக இருக்கக் காணலாம்.

மேலும், குறிப்பால் விடயங்களை உணர்த்துதல் படைப்பாளிகளுக்குத் தேவையான ஆற்றலாகும். அதை இந்நூலில் ஆங்காங்கே காணலாம். உதாரணமாக, ”கதைத்தொகுப்பின் கதை” என்ற சிறுகதையில் வரும் பந்தி ஒன்று:

” ஏதோ இருக்கிறன். உங்களையெல்லாம் ஸ்கூலையெல்லாம் மிஸ் பண்ணிட்டு இங்கே இருக்கிறன். எல்லாம் துபாய்க்குப் போன அண்ணனுக்காகத்தான்” என்ற போது ரீச்சரின் கண்கள் மின்னியதை கண்டேன். இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்தபோது நான் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஷோகேஸைப் பார்த்தேன். அதில் நகைகள் லைட் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன.”

”ஷோகேசில் உள்ள நகைகள் லைட் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன” என்ற வாக்கியமானது, முன்னாள் ஆசிரியை தற்போது வீட்டுக்கு அலங்காரமாக முடங்கிப் போன அவலத்தை நயத்துடன் காட்டுகின்றது.

 

நூலின் குறைபாடுகள் என்று சொன்னால் ஒன்று எழுத்துப்பிழை. இந்நூலில் பத்துப் பன்னிரண்டு எழுத்துப் பிழைகள் கண்ணிற் பட்டன. இவற்றைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், எழுத்துப் பிழைகள் எதுவுமில்லாத பிரதியொன்றினைத் தமிழிற் படைத்தல் என்பது மிகச் சிரமான காரியமாகவே இருக்கிறது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். மற்றது, கதைகளின் போக்கு பெரும்பாலும் தங்கு தடையின்றிச் செல்வதை அவதானிக்கும் அதே சமயம், ”கணங்கள்”,

“அவள் அப்படித்தான்” போன்ற சில கதைகளின் ஓட்டம் இடையிடையே தடைப்படுவது போன்ற உணர்வு வாசிக்கும்போது உண்டாயிற்று. இவற்றின் கதை வடிவமைப்பு இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மேலும் 38 ஆம் பக்கத்தில் இடம் பெறும் “ பூர்வீக அவுஸ்திரேலிய வெள்ளை இன மக்கள்” என்ற தொடர் அவ்வளவு பொருத்தமானதாகப் படவில்லை. அண்மைக்காலங்களில் குடியேறிய வெள்ளையரல்லாதாருடன் ஒப்பிடும்போது, வெள்ளையினத்தவர் இரு நூற்றாண்டுகட்கும் மேற்பட்ட வரலாறு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் ‘பூர்வீக’ என்று அடைமொழி கொடுத்தல் சரியானதாகப்படவில்லை.

நிறைவாக, கதைத்தொகுப்பின் கதை எனும் நூலை புலம்பெயர் சமூகத்தில் எழுந்த முக்கியமானதொரு கதைத் தொகுப்பாகப் பார்க்கிறேன். வாசகர் கருத்துகளைச் சேர்த்துக் கொண்ட விதத்திலும், பலர் பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசுகிறது என்ற வகையிலும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வது இந்நூல். இது பேசும் அரசியல் சிலருக்கு உவப்பானதில்லையாகலாம். ஆனால், இலக்கியம் என்ற வகையில் அரசியலுக்கு அப்பாலும் இந்நூலைப் பார்க்க வேண்டியுள்ளது. நல்லதோர் சமூக, இலக்கிய உரையாடல்களுக்கு இடமளிக்கக் கூடிய ஆக்கங்களைத் தன்னகத்தே இது கொண்டுள்ளது.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *