இலக்கியச்சோலை

மாத்தளையின் ஜீவநதி – கார்த்திகேசு!… மு. நித்தியானந்தன் – இங்கிலாந்து

( கடந்த 06 ஆம் திகதி மாத்தளையில் மறைந்த ஈழத்தின் மூத்த கலைஞரும் எழுத்தாளருமான மாத்தளை கார்த்திகேசு அவர்களைப்பற்றி, இம்மாதம் ( ஓகஸ்ட் ) ஞானம் இதழில் வெளியான ஆக்கம். )

மலையகத்தில் தாங்கள் பிறந்த மண்ணை நெஞ்சுயர்த்தி, பெருமிதத்தோடு பிரகடனப்படுத்தும் எழுத்தாளர்கள், கலைஞர்களில் பலர் மாத்தளையின் அசல் மைந்தர்கள். தங்களுக்கு ஸ்நானப்பிராப்திகூட இல்லாத ஏரியாக்களின் பெயர்களை முன்னொட்டாக வைத்து, கேகாலை கொட்டாப்புளி, பொல்காவலை சிதம்பரநாதன் என்னும் புனைபெயர்களில் உலாவும் போலிகளைப் பார்க்கும்போதுதான், அசல்களின் பெருமிதம் தெரிகிறது. மலையகத்தின் அசல் மைந்தன் என்றதும் இத்தகைய போலிகள் ‘அசல் மைந்தன்’ என்பதை மேற்கோளுக்குள் போடும்போது, அது இவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது. சிலர் இறந்த பிறகுதான், இவர்கள் எங்கே பிறந்தார்கள்? எங்கே படித்தார்கள்? என்பதைத் தேடி ஆராய வேண்டியிருக்கிறது.

விஜய கல்லூரியில், கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில், மாத்தளை புனித தோமையர் கல்லூரியில், மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தில் மாத்தளை கார்த்திகேசு மேடையேற்றிய நாடகங்களின் பட்டியலை, மாத்தளையில் அரங்க ஆர்வம் கொண்ட யாரிடம் கேட்டாலும் ஒப்புவிப்பார்கள்.

மாத்தளையில் தமிழ் மாணவர் சார்ந்த கலைவிழாக்களா? தமிழ்த் தினப் போட்டிகளா? நாடக மேடையேற்றங்களா? எதுவென்றாலும் முன்னணியில் நின்று உழைப்பை நல்கும் பெரிய மனம் அவரிடம் இருந்திருக்கிறது. மாத்தளை இளைஞர் மன்றம், வள்ளுவர் மன்றம் போன்ற அமைப்புகளை ஆரம்பித்து, மாத்தளையில் சமூக, இலக்கிய செயற்பாடுகளுக்கு உந்துவிசையாக இருந்தவர் கார்த்திகேசு. தமிழகத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பேச்சாளர்களை மாத்தளைக்கு அழைத்து, சொற்பொழிவுகளை நடத்தும் பெரு முயற்சிகளை அசராமல் செய்தவர் இவர். அறுபதுகளில் துடிப்புமிக்க இளைஞர்கள் தத்தம் தோட்டங்களில் மன்றங்களை அமைத்து, நூலகங்களை நிறுவி, கலைவிழாக்களை நடத்தி, நாடகங்களை மேடையேற்றி, சொற்பொழிவுகளை நிகழ்த்தி, பத்திரிகைகளை வெளியிட்டு ஆத்மார்த்தமாக உழைத்தார்கள். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட பேரணியின் முக்கிய கண்ணி மாத்தளை கார்த்திகேசு.

அரங்க ஈடுபாடு என்பது ஒரு கலைஞனை மக்கள் மத்தியில் துரித கதியில் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது. மாத்தளை மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் கலைஞன் கார்த்திகேசு. மாத்தளை ஆலயப் பணிகளில் அவர் காட்டிய ஈடுபாடு அவரின் மீது மக்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தேடிக்கொடுத்தது. தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் கறைபடியாத கண்ணியவான் அவர்.

மாத்தளை கார்த்திகேசு கொழும்பு நோக்கி நகர்ந்தபோதும், அவர் கலைமீது கொண்டிருந்த நாட்டம் குறைந்துபோகவில்லை. கொழும்பில் கவின்கலை மன்றம் என்ற அமைப்பில் ஜே.பி றொபர்ட் அவர்களுடன் இணைந்து, நாடக மேடையேற்றங்களில் தீவிரமாக உழைத்தார். தீர்ப்பு, களங்கம், போராட்டம், ஒரு சக்கரம் சுழல்கிறது போன்ற நாடகங்கள், அவரது கொழும்பு நாடக முயற்சியின் உன்னதமான அறுவடைகள். நாட்டு நிலைமை சீரற்ற நாட்களில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் இவை.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ‘குன்றின் குரல்’ நிகழ்ச்சியை நான் நடத்தியபோது, நிகழ்ச்சிகளை நடத்த எனக்குப் பேருதவியாக இருந்தவர் மாத்தளை கார்த்திகேசு. மலையக இசைக் கலைஞர்களை, பங்கேற்றுநர்களை ஒருங்கிணைத்து உதவியர் அவர்.

ஜே.பி.றொபர்ட் உயரமான மனிதர். பம்பலப்பிட்டியில் அவரை நான் அடிக்கடி காண்பதுண்டு. அவரும் மாத்தளை கார்த்திகேசுவும், அந்தனி ஜீவாவும் இணைந்து கொழும்பு நாடக இயக்கத்தினை வலிமையுறச் செய்தவர்கள். கூர்மையான நாடக நெறியாளுகைத் திறன் மிக்க சுஹைர் ஹமீட் அவர்களின் பங்களிப்பும் கார்த்திகேசுவின் நாடக வெற்றிக்குப் பலமாய் அமைந்தது.

மாத்தளை கார்த்திகேசுவின் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம், அவரின் பெயரை ஈழத்து நாடக அரங்கில் நிலைநிறுத்தும் நாடகமாகும். மிகப் பல களங்களைக் கண்ட நாடகம் அது.

நாடகத்திலிருந்து சினிமாவை நோக்கித் திரும்பிய கார்த்திகேசுவின் கலைப்பயணம் ‘அவள் ஒரு ஜீவநதி’ என்ற திரைப்படமாகக் கனிந்தபோது, ஒரு எழுத்தாளனின் பிரதியாக்கம் என்றும், வெற்றிகரமான மேடைநாடகத் தயாரிப்பாளன் என்ற வகையிலும் பெரும் எதிர்பார்க்கைகளின் மத்தியில், அப்படம் பெரும் வெற்றியைத் தரவில்லை. மீண்டும் அத்துறையில் முயன்றிருந்தால், தனது முன்னைய பட அனுபவத்தின் பலத்தில் அவர் வெற்றிகரமான ஒரு படத்தைத் தந்திருக்கக்கூடும். ஒரு படத் தயாரிப்பு என்பது அவ்வளவு சுளுவான காரியம் அல்லவே!

கொழும்பில் நாடக, சினிமா முயற்சிகள் என்பன மிகப் பெரும் நண்பர்கள் வட்டத்தையும், நம்பிக்கையானவர்களையும், எதற்கும் உதவ முன்வரும் நெருக்கமானவர்களையும் கொண்டது. கார்த்திகேசு நேசம் மிக்கவர். உதவி என்று போனால் தன்னால் முடிந்த எதனையும் செய்துதரும் பண்பு கொண்டவர். கொழும்பில் அவர் சந்திக்க நேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அவர் என்றும் மதித்துப் போற்றினார்.

நாடகம், சினிமா என்று கலைத்துறையில் பயணித்த கார்த்திகேசு மலையக நாவல் துறையில் கால் பதித்து, பிரசுரம் தந்த நாவல் ‘வழி பிறந்தது’. தோட்டத்திற்கும் கொழும்பிற்குமாக இரண்டு தளங்களில் இயங்கும் இந்த நாவல், டி .ஆர்.பி (Temporary Resident Permit) என்று, இந்திய வம்சாவளித் தமிழர்களைப் போதுமான தஸ்தாவேஜுகள் இல்லாத காரணம் காட்டி, கைது செய்து சிறையில் அடைத்து, இந்தியாவிற்கு நாடுகடத்தும் இலங்கை அரசின் கொடுமையைப் பேசும் முதல் நாவல் இது. இலங்கையில் தமிழர்களுக்காகத் தடுப்புமுகாம் ஒன்று அமைக்கப்பட்டது என்றால் அது, கொழும்பு கொம்பனி வீதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புமுகாம்தான். சாப்பிட்டுவிட்டு, கைகழுவ வெளியில் வந்த வையாபுரி என்பவரை, சாப்பாட்டுக் கையோடு கைது செய்த பதுளை போலீசார், அன்று மாலையே உடரட்டமெனிக்கேவில் அவரைக் கைவிலங்கோடு கொழும்பிற்கு கொண்டுசென்ற காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு டி.ஆர்.பி.காரர் என்றார்கள்.

கார்த்திகேசுவின் ‘வழி பிறந்தது’ நாவலின் சில பகுதிகள் இவை:

‘பரமசிவம் போலிசின் உதவியுடன் இமிகிரேசன் அதிகாரிகளினாலே கைதுசெய்யப்பட்டு, கொம்பனி வீதியிலுள்ள தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டபொழுது, தன்னுடைய எளிமை நிறைந்த வாழ்க்கைக்குப் பின்னாலே இப்படி ஒரு சதிப்பின்னல் சிக்கலாகப் பின்னப்பட்டிருக்கும் என்று கனவுகூடக் காணவில்லை.’

‘கொழும்பு நகரின் மத்தியிலே, இந்திய வம்சாவளியினருக்காக அமைக்கப்பட்டிருக்கும் தனியொரு நரக உலகத்திலே தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான உண்மையை நிதானிப்பதற்குப் பரமசிவத்திற்கு அதிக நாள்கள் பிடிக்கவில்லை.’

‘(அந்த தடுப்புமுகாமில்) முகம் மட்டும் தெரியக்கூடியதாகப் பொருத்தப்பட்டிருக்கும் ‘வயர்மெஸ் கிராதி’ மூலமே முகதரிசனம் நடைபெறும்.’

டி.ஆர்.பி.காரர்கள் எனப்பட்டவர்களை கொம்பனித் தெருவில் அடைத்து, விசாரணை நடத்தி, அவர்களை நாடுகடத்தும் வரையிலான

விபரங்களை இந்த நாவலில் கார்த்திகேசு துல்லியமாகக் கொண்டு வருகிறார். கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு கைதிகள் எவ்வாறு காட்டப்படுகிறார்கள் என்று விபரிக்கும் இடங்கள் நெஞ்சைத் தொடுவன. கலாபூர்வமாக இந்நாவல் வெற்றிபெறுகிறதா என்பது கேள்விக்குரியதாயினும், தோட்ட வாழ்க்கையை கொண்டு செலுத்தும் இடங்களில், அந்த வாழ்வோடு எவ்வளவு தூரம் பின்னிப்பிணைந்திருக்கிறார் என்பதை நாம் உணர முடிகிறது. தோட்டத்து மக்களோடு நகமும் சதையுமாய் வாழ்ந்த அனுபவத்தின் பலமே, மாத்தளை கார்த்திகேசுவிற்கு இந்த நாவலை எழுதும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

கைவிரல் கொண்டு எண்ணக்கூடிய அளவிலேயே மலையக நாவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு நாவல் தொகுதியை நாம் உருவாக்க இவ்வாறு எண்ணற்ற நாவல்கள் எழுதப்பட வேண்டும்.

மலையகக் கலை, இலக்கிய விகசிப்பிற்கான எல்லா ஓடங்களிலும் துடுப்பெடுத்து ஓடியிருக்கிறார் கார்த்திகேசு.

மலையகத்தின் நூல் வெளியீட்டுத்துறையில் மாத்தளை கார்த்திகேசு ஆழ்ந்த தடங்களைப் பதித்திருக்கிறார். அந்தனி ஜீவாவின் ‘மலையக வெளியீட்டகம்’, சாரல்நாடனின் ‘சாரல் வெளியீடு’, துரை விஸ்வநாதனின் ‘துரைவி’ வெளியீடு போன்ற வெளியீட்டகங்களுடன் நோக்கும்போது கார்த்திகேசு சில தனித்தன்மைகளையும் வெளிப் படுத்தியிருக்கிறார்.

‘மலையகப் பாரம்பரிய கலைகளைப் பற்றி இதுவரை காலம் ஆய்வு நூல்கள் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று கூறி, மாத்தளை வடிவேலன் எழுதிய ‘மலையக பாரம்பரியக் கலைகள்’ என்ற முன்னோடி நூலை வெளியிட்டவர் கார்த்திகேசு.

மாத்தளை ரோஹிணி தனது நூலை வெளியிடுவது பற்றி கார்த்திகேசுவிடம் கேட்டபோது, ‘இது நம்ம வீட்டு வரலாறு அல்லவா? இதைப் புத்தகமாக வெளிக்கொணர வேண்டியது எனது கடமை’ என்று சொன்னவர் அவர். ‘உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ நூல் வெளிவந்த கதை அது.

மலையகத்தின் நாடிபிடித்து எழுதவல்ல நுட்பமான எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களின் ‘மலைகளின் மக்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாவதற்கு, ‘எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எப்படியும் உருவாக்கியே தீருவேன் என்றுழைத்த என் அருமை நண்பர், கலைஞர் மாத்தளை கார்த்திகேசுதான்’ என்று சாட்சியம் தருபவர் மு.சிவலிங்கம்.

‘எனது நாவல்களைப் புத்தகமாகப் போட வேண்டுமென்பதில் பலர் ஆர்வம் காட்டியபோதும், இறுதியாக, கார்த்திகேசு அவர்கள்தான் இந்த நாவலைப் புத்தகமாகக் கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்று மாத்தளை ரோஹிணி அவர்கள் தனது ‘இதயத்தில் இணைந்த இருமலர்கள்’ என்ற நாவல் வெளியாவதற்கு நன்றி கூறுகிறார்.

‘கதைக்கனிகள்’ என்ற மலையகத்தின் முதல்தரமான சிறுகதைத் தொகுப்பினை, அத்தொகுப்பு கைக்குக் கிடைக்காத கனியாக இருந்த நிலையில், இருபது ஆண்டுகளுக்குப் பின் அதன் இரண்டாவது பதிப்பினை வெளியிட்டு, சிறுகதை வளத்திற்கு நீர் வார்த்திருக்கிறார் மாத்தளை கார்த்திகேசு.

இதற்கப்பால், பெனடிக்ற் பாலன் எழுதிய ‘தலைவிதியைப் பறிகொடுத்தோர்’, நா.சோமகாந்தன் எழுதிய ‘நிலவோ நெருப்போ…’ என்ற சிறுகதைத் தொகுப்புகளையும், அருணா செல்லத்துரை எழுதிய ‘வீடு’ என்ற நாடகப்பிரதியையும் வெளியிட்டு, பிற பிராந்தியங்களின் எழுத்துவளத்திற்கும் கால்வாய் வெட்டியிருக்கும் பெரியமனதுக்காரன் இவர்.

பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கும் மாத்தளை கார்த்திகேசு கனடாவிலிருந்து டொலர்களாகவும், லண்டனிலிருந்து பவுண்டுகளாகவும் வந்த காசில் சொகுசு வெளியீடுகள் நடத்தியவர் அல்ல. சாமானியராக, அவரது சாதனை அது. கர்மயோகியின் யாகம். சித்தனின் சாந்தநிலை. ஓட்டையும் பொன்னையும் ஒப்பென நோக்கும் சாதகம். இம்மாதிரி மனிதர்கள் நம் காலத்தில் கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியிலும், இன்று மாத்தளையிலும் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவரை அறிந்த எங்களுக்கு பெருமையைத் தருகிறது.

எதனைச் செய்தாலும் அதனை மனமுவந்து, அர்ப்பணிப்போடு செய்வது என்பது அவர் நமக்கு சொல்லித்தரும் பாடம்.

——-0——

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *