இலக்கியச்சோலை

அவரது ரயில் வந்துவிட்டது, விடைபெற்றுவிட்டார்!… கி.ரா குறித்த இரங்கல் உரை…. அண்டனூர் சுரா.

“அனைவருக்கும் வணக்கம். அனைவர் என்றால் வணக்கங்கள் என்றுதானே சொல்லணும்? எத்தனைபேர் கூடியிருந்தாலும் ரெண்டுகை சேர்ந்த ஒரு வணக்கம்தான்!” ‘ராயங்கஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம்’ இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் கி.ரா அவர்கள் ஆற்றிய ஏற்புரையின் தொடக்கம் இது.

‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு, 2016 ஆம் ஆண்டுக்கான சாதனையாளராக, கி.ராஜநாராயணனைத் தேர்வு செய்து இயல் விருது வழங்கி கௌரவித்தது. அதற்கான விழா 20.08.2016, மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. அவ்விழாவில் கி.ரா-வால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது இளைய மகன் பிரபியும் இளைய மருமகள் நாச்சியாரும் விழாவிற்குச் சென்றிருந்தார்கள். ஆனாலும் அந்த விருதை, அவரது புதுவை நண்பர் தாகூர் கலைக்கல்லூரி பேராசிரியர் வெங்கட சுப்பராயன் அவர்களையே பெற்றுக்கொள்ள பணித்திருந்தார். நட்புக்கு அவர் செய்த மரியாதையாகவும் இதைப் பார்க்கலாம். ஏற்புரையாக இரண்டொரு பத்திகள் எழுதிக் கொடுத்து அனுப்பிய கி.ரா அவர்கள் வணக்கம், வணக்கங்கள் குறித்து மேற்படி குறிப்பிட்டிருந்தார்.

வீதி கலை இலக்கிய களத்தின் 84 ஆவது கூடுகை இது. வீதி அமைப்புக்கென ஓர் அடையாள சின்னம் ‘லோகோ’ உருவாக்கத்தின் பிறகான முதல் கூட்டம். லோகோ நீலம் , கருப்பு, சிவப்பு என்கிற வண்ணங்களால் உருவாக்கப்பட்டதன் மூலம், வீதியின் இலக்கிய அமைப்பின் நோக்கை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘ஏழைச்சொல் அம்பலம் ஏறாது’, எனச் சொல்லுவர். ஆனால் வீதியில் நின்று சொல்லும் யார் சொல்லும் அம்பலம் ஏறும். நேற்றைக்கு எனது பிறந்த நாள். கி.ராவின் முதல் நாவலான கோபல்ல கிராமம், ‘ கிராமம் ஆழ்…..ந்த தூக்கத்தில் லயித்திருந்தது’ என்பதாகத் தொடங்கும். நான் அப்படியான தூக்கத்திலேயே இருந்தேன். தூக்கம் குறித்து கி.ரா. நிறையச் சொல்லாடல் பயன்படுத்தியிருக்கிறார். சோத்துத் தூக்கம். அடித்துப் போட்டதைப் போல தூக்கம், அசந்த தூக்கம், கோழி கண் தூக்கம், கும்பகர்ண தூக்கம், ரெண்டு நாள் தூக்கம், உடுத்திய உடை நழுவுறது கூட தெரியாம தூங்குற தூக்கம்,.. இப்படியாக. நான் தூங்கியது உண்ட மயக்கத் தூக்கம்.

அப்போது, என்னை அழைத்த வீதி ஒருங்கிணைப்பாளர் சகோதரி வீதி கீதா, பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னவர், நாளை வீதிக்கூட்டம் கி.ரா பற்றி சிறப்புரையாற்ற முடியுமா? எனக் கேட்டார். ‘ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய்’. அவர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து

சொன்னதுபோலும் ஆச்சு, கூட்டத்திற்கு ஒரு ஆளைத் தேடிப் பிடித்ததைப் போலும் ஆச்சு. ‘கல் எறிந்த சீருக்கும் கொக்கு வந்த நேருக்கும்’ மாய் என் நிலை. சிறப்புரையெல்லாம் வேண்டாம், பத்து பேரோடு என் பேரையும் வையுங்கள், என்றேன். புலன அழைப்பில் சிறப்புரையாக என் பெயர் இருந்தது. சொந்த மாவட்டத்தில் சிறப்புரையாற்றுவது, இதுவே முதல்முறை.

எனக்கு ஆலங்கட்டி மழையில் நனைகிற மாதிரி இருந்தது. ஆலங்கட்டி மழையை கி.ரா கல் மழை என்று சொல்கிறார். கோடையில் பெய்யும் மழை இது. அடிக்கிற வெயிலுக்கு மழை சுகமாக இருக்கும். ஆனால், கல்லாலே அடிக்கிற மாதிரி இருக்கும். பட்டம் தவறினால் நட்டம், தவறவிடக்கூடாதென என்னை நான் தயார் செய்தேன்.

நான் வாசித்த முதல் கி.ரா எழுத்து, ‘கோபல்லபுரத்து மக்கள்’. இந்த நாவல் 1991 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றது. இந்த நாவல் “ கொடியில் காயப்போட்டிருந்த சேலையை எடுப்பது போல மஞ்சள் வெயிலை உருவி எடுத்துக்கொண்டு மேமலைக்குள் இறங்கினாள் சூரியதேவி” என்பதாகத் தொடங்கும்.

இந்திய விடுதலை ரத்தமும் சகதியுமாக விடிகிறது. காந்தி, ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். பத்திரிகையாளர், காந்தியிடம் கேட்கிறார்கள் “பாபுஜி, தேசத்திற்கு விடுதலை கிடைத்துவிட்டது. தேசமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். ஒரு செய்தி சொல்ல வேண்டுமே?”

அவர் வேகமாக நூல் நூற்கிறார். பாபுஜி உங்களைத்தான், எதாவது சொல்லுங்கள். காந்தி நிமிர்ந்து பாராது சொன்னார். “ஒன்னுமில்லை”. அந்தச் சொல் கோபல்லபுரத்திலும் “ஒன்னுமில்லை ஒன்னுமில்லை ஒன்னுமில்லை“ , என எதிரொலித்தது, என்பதாக அந்நாவல் முடிவடையும்.

கி.ரா – வுக்கும் புதுக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரது முதல் நாவலான கோபல்ல கிராமம், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், செம்மணாம்பொட்டல் பிறந்து காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவராக உருவெடுத்த தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி இந்த நூலை வெளிக்கொணர்ந்தார். இந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருந்தால், இன்னும் நான் மகிழ்ந்திருப்பேன், என்கிறார் கி.ரா ஒரு பேட்டியில். கி.ராவுக்கும் புதுக்கோட்டைக்குமான மற்றொரு நெருக்கம் வீதி இலக்கிய நிகழ்வில் விரைவி செயலி வழியே ‘கி.ராவின் படைப்புலகம்’ குறித்துப் பேசியதும், அந்த நிகழ்ச்சியில் கி.ரா கலந்து கொண்டதும் அவரது கடைசிக் கால நிகழ்வுகளில் ஒன்று.

இந்த இடத்திலே வீதியைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேணும். ஒரு நண்பர் ‘புதுக்கோட்டை வீதி’ குறித்துக் கேட்டார். கேட்ட நண்பர் இலக்கியவாதி. எனக்கு கி. ரா அவரது நாவலில் சொன்ன, ஒரு வரி நினைவுக்கு வந்தது. “ரெண்டு நாத்துக்கு இடையிலே ஒரு நண்டு

போற அளவுக்கு இடைவெளி இருக்கணும். தென்னந்தோப்புல ரெண்டு தென்னை மரத்துக்கும் இடையிலே, ஒரு தேர் அளவுக்கு இடைவெளி இருக்கணும். புதுக்கோட்டை வீதிக்கு ரெண்டு மாதங்களுக்கு இடையில் கொஞ்ச நாட்கள் இடைவெளி இருக்கணும், என்று சொன்னேன்.

“நானொன்று கேட்க, நீங்க ஒன்னு சொல்றீங்களே” என்று சொன்னார். “ என் வீட்டுக்கு உயிர் எழுத்து, கணையாழி, காக்கை, போன்ற மாத இதழ்கள் வீடு தேடி வந்தால் மாதம் பிறந்துவிட்டது, என்று அர்த்தம். வீதி கூட்டத்துக்கு அழைப்பு வந்தால், மாதம் முடியப் போகிறது, என்று அர்த்தமென சொன்னேன். நண்பர் நல்லாவே ரசித்தார்.

எனக்கும் கி.ராவுக்கும் பெரிய நெருக்கமில்லை. நேரில் கூட பார்த்ததில்லை. ஆனால் இரண்டு பேரும் சந்தித்திருக்கிறோம். ஆனந்த விகடன், இதழில். இது நடந்து ஐந்தாறு வருடங்கள் இருக்கும். ஆனந்த விகடனின் மதன் என்றொரு எழுத்தாளர் இருந்தார். மதன் கேள்வி பதில், அன்றைக்குப் பிரபலம். அதற்கென பெருவாசகர் வட்டம், இருந்தது. ஆனந்த விகடன் உடனான கருத்து வேறுபாட்டால், ஆனந்த விகடனிலிருந்து விலக வேண்டியதாகி விட்டது. அந்தப் பக்கத்தை விகடன் வாசகர்களுக்குக் கொடுத்தது.

‘நானே கேள்வி, நானே பதில்’. நான் அந்தப் பக்கத்தில் சுரா. மாணிக்கம் என்கிற பெயரில் தொடர்ந்து எழுதி வருபவனாக இருந்தேன். அதில், சாதியப் பிரச்சனை குறித்து, நடவடிக்கை எடுத்ததில், முன்மாதிரியான நடவடிக்கை, எது? என்பது கேள்வி. அதற்கான பதில், கோபல்லபுரத்து மக்கள் என்கிற நாவலில், ஒரு சம்பவம். தூத்துக்குடி கலெக்டர், ஓட்டப்பிடாரம் கிராமத்தை தாலுகாவாக அறிவிக்கிறார். அந்த ஊரில் தாலுகா ஆபிஸை திறந்து வைக்க, கலெக்டர் வருகிறார். அவரை வரவேற்க, தாசில்தார் முன்கூட்டியே வந்திருக்கவில்லை. கலெக்டருக்கு மூக்கு நுனி சிவந்துவிட்டது. நேரம் கடந்து, தாசில்தார் ஓடி வருகிறார். ‘ஏன்யா தாமதம்?’ கலெக்டர் கேட்கிறார். ‘ வீட்டிலிருந்து வருகிறேன்’ என்கிறார் தாசில்தார். ‘ நீ தாசில்தார், இங்கேயே தங்க வேண்டியதுதானே, ஏன் வீட்டுக்குப் போனாய்?’, ‘ நான், தாழ்ந்த சாதிக்காரேன்க. பிள்ளைமார் பெருத்த இந்த ஊர்ல, என்னைத் தங்க அனுமதிக்க மாட்டாங்க’, என்றார். ‘தாசில்தாரை மதிக்கத் தெரியாத இந்த ஓட்டப்பிடாரத்துக்கு ஏன்யா தாலுகா ஆபிஸ், கோவில்பட்டிக்கு மாற்றுகிறேன்’ என மாற்றிவிட்டார்.

இது, நான் எழுதியது. அதே இதழில், கி.ராவின் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. இப்படித்தான், நானும் அவரும் சந்தித்துக்கொண்டோம். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து, நான் பசலி என்றொரு சிறுகதை எழுதினேன். தாமரை இதழில் வந்தது. கி.ராவின் பிரபல கதை ‘கதவு’, தாமரையில் வந்ததுதான். இந்தக் கதை எப்படி தாமரையில் பிரசுரமானது, இதுவொரு சுவாரசியமான செய்தி.

ஆனந்த விகடன் இதழில் சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். அந்தப் போட்டியில், கி.ராவும் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில், கதவு கதை முதல் பரிசுக்குரிய கதையாகத்

தேர்வாகவில்லை. இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கதையாகவும் தேர்வாகவில்லை. பிரசுரத்திற்கு பதினைந்து கதைகள் தேர்வு செய்தார்கள். அதிலும் அக்கதை தேர்வாகவில்லை. பிறகு இந்தக் கதையைத் தாமரை இதழுக்கு அனுப்பினார். தோழர் ஜீவானந்தம் அவர்களால் தாமரை இதழ் தொடங்கப்பட்டு, முதல் இதழ் வெளியாகியிருந்தது. இரண்டாவது இதழ் பொங்கல் இதழாக வெளியானது. அதில், ‘கதவு’ சிறுகதை பிரசுரமானது. கி.ராஜநாராயணன், C/o தாமரை என்கிற முகவரியில், அக்கதை குறித்து நண்பர்கள் கடிதம் எழுதிய கடிதங்கள் அவரது முகவரியைத் தேடி வந்தன. ஆக, சிறுபத்திரிகைகள்தான் இலக்கியத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

கதை எழுதுவதை விடவும், கடிதம் எழுதுவது அவருக்குப் பிடித்தமானது. ஒரு கடிதாசியைக் கூட இலக்கியமாக்குவேன், என ஒரு நேர்காணலில் சொல்லிருக்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய கடிதம் ஒன்று, மேன்மை இதழில் படித்தேன். அமைச்சர் கே. என். நேருக்கு எழுதிய கடிதம் அது. ‘இடைசெவலுக்காக ஒரு விண்ணப்பம்’ – என்பது கடிதத்தின் தலைப்பு.

அப்பொழுது, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் மாண்புமிகு கே.என். நேரு அவர்கள். “ தங்களுடைய பெயருக்குப் பின்னால் ஒரு சரித்திரம் இருப்பது போல தாங்கள் வகிக்கும் துறைக்கும் உண்டு”, என்பதாக இந்தக் கடிதத்தைத் தொடங்குகிறார். பேரறிஞர் அண்ணா அமைத்த அமைச்சரவையில், இத்துறையைக் கலைஞர் அவர்களுக்குத் தந்த துறை. அப்படி ஒரு சிறப்புக் கொண்டது இத்துறை.

நான் புதுச்சேரி வாசி. நான் எப்பவாவது என் ஊரான இடைச்செவலுக்குப் போவதுண்டு. என் ஊர் பல மாறுதல்களைக் கண்டுள்ளன. ஆனால், மக்கள் போக்குவரத்து மட்டும், அன்றைக்குக் கண்டது போல, இன்றைக்கும் இருக்கிறது. மனம் நொந்து திருப்புகிறேன். கயத்தாறுக்கும் கோவில்பட்டிக்கும் நடுவில் இடைசெவல் கிராமம். தேசிய நெடுஞ்சாலை – 7 ஆம் எண் ஒட்டியுள்ள கிராமம். “ தண்ணீர் தண்ணீர் எங்கு கண்டாலும் தண்ணீர்தான். ஆனால் ஒரு மடக்குக்கூட குடிக்க உதவாது” என்று கிராமத்தில் சொல்வார்களே, அதுபோல, எங்கள் ஊரையொட்டி போகிற பேருந்துகள் எண்ணிக்கையிலே அடங்காது. ஆயினும் என்ன பயன்?

1989 மே மாதம் 26 ஆம் நாள், அப்போது அதிகாரத்திலிருந்த தி.மு.க அரசு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி சுற்றறிக்கை மூலமாக, இடைசெவலில் பேருந்து நின்று போகும் படியாக அறிவித்திருந்தது. அதற்குப் பிறகு, அமைந்த அரசு அந்த சுற்றறிக்கையை நீக்கிவிட்டது. ஏனெனக் கேட்டதற்கு, இடைசெவலை ‘ஸ்டேஜ்’ அதாவது நிறுத்தம் என்கிற நிலையிலிருந்து நீ்க்கிவிட்டதால், பேருந்து இனி இடைசெவலில் நிற்காது, எனப் பதில் சொன்னார்கள். இப்போது தாங்கள் இவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்குச் செய்ய வேண்டிய பெரிய புண்ணியம் இடைசெவலை ஒரு நிறுத்தமாக ஆக்க வேண்டுகிறேன்.

31.05.2007 இல் நாளிட்ட கடிதம் இது. இதைப் படித்ததும், நான் பிறந்த ஊரான அண்டனூருக்கு ஏதேனும் செய்ய வேண்டும், எனத் தோன்றியது. உங்களுக்கும் கூட இப்படியான ஒரு ஆசை தோன்றவே செய்திருக்கும். இதுதான், கி.ராவின் எழுத்து.

கி.ராவை நாம் கரிசல் எழுத்தாளர், என்று சொல்கிறோம். இதை முதலில் யார் சொன்னது? நாமாகச் சொல்கிறோமா? ,இல்லை, வேறு யாரும் சொன்னதை வழிமொழிகிறோமா?

18.12.1991 ராத்திரி ஏழரை மணிக்கு கி.ரா எழுதிய ‘ கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது, அறிவிக்கப்பட்ட செய்தியை டி.வி செய்தி மூலமாக அவருக்குத் தெரிய வருகிறது. இந்த நாவல் ஆனந்த விகடனில் தொடராக எழுதியது. அடுத்த வாரம், விகடனுக்கு அவரொரு பேட்டிக் கொடுக்கிறார்.

“ எனக்கும் முந்தி கரிசல் மக்களைக் கதையில் சொன்னவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமிதான். அழகிரிசாமி கரிசல் இலக்கியத்தைத் தொடங்கினார். இதோ – இதுதான் கரிசல் இலக்கியம் என அதற்கு முழுமை கொடுத்தவன் நான்தான். மேலும் அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல் எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன் – சொல்கிறேன் – சொல்வேன். இப்போ – அப்போன்னு எப்பவுமே – எந்தக் காலத்திலும் எனக்கு இலக்கிய தாகம் – லட்சியம் என்கிறதெல்லாம் கொஞ்சமும் கிடையாது. பார்க்கிறேன் – கேட்கிறேன் – சிந்திக்கிறேன் – எழுதுறேன்., அவ்ளோதான், என்றார்

இவருடைய நாவல்களில் கோபல்ல கிராமம் , கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் மூன்றுமே அவரது ஊர் , மண், மக்களைப் பேசக்கூடியவை. வரலாற்று நாவல்கள். இதில் ‘அந்தமான் நாயக்கர்’ விடுதலை போராட்டக் கால நாவல். பர்தோலியில் நடைபெற்ற வரிகொடா இயக்கப்போராட்டத்தைப் பேசும் நாவல். இந்த நாவலை வாசிக்கும் யாருக்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவில் வரவே செய்வார்.

இந்த நாவலின் நாயகன் அழகரி நாயக்கர். ஊர் விவசாய சம்சாரிகள் வரிக்கட்டாமல், வெள்ளைக்கார அரசுக்கு எதிராகப் போராடுகிறார். இரவு நேரங்களில் அரசு அலுவகத்தில் ஏறி இந்திய கொடியைக் கட்டவும், மரத்தின் உச்சியில் கட்டவும் செய்கிறார்கள். அப்படியாகக் கட்டும், அழகிரி நாயக்கரை அந்த ஊர்மணி – அதாவது ஊர் மணியார் வெள்ளைக்காரரிடம் காட்டிக் கொடுத்துவிடுகிறார். 1925 முதல் 1970 வரையிலான காலகட்ட நாவலில் அழகரி நாயக்கர் நாற்பது வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார். அவரிடம் சென்று வெள்ளைக்காரர்கள், இந்த நாட்டைவிட்டு ஓடி விட்டதாகச் சொல்கிறார்கள். அச்செய்தியை அவர் நம்ப மறுக்கிறார். இந்த இடத்தில் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது, சிறை கைதிகளை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

ஆனால், போராட்டத்தின் பேரில், சிறைக்குச் சென்ற கம்யூனிஸ்ட்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பவில்லை, என்பது நினைவுகூர தக்கது.

கி. ரா தமிழுக்குச் செய்த பெருந்தொண்டில், வழக்குச் சொல்லகராதி, உச்சம். இவர், ‘சொல்லின் மூலதனம் பேச்சு’, என்றும். ‘தாய்மொழியின் தேவதையை நாமகள்’ என்றும் சொல்கிறார். 1982 இல் கி.ரா வட்டார வழக்குச் சொல்லகராதி கொண்டுவருகிறார். பிறகு மேலும் பல சொற்களை சேர்த்து 2008 ஆம் ஆண்டு அன்னம் – அகரம் பதிப்பகம் மூலமாகப் பெரிய தொகுப்பாகக் கொண்டுவருகிறார். இவருக்குப் பிறகு, பலரும் வட்டார வழக்குச் சொல் அகராதி தொகுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதர்சமாக இருந்தவர் கி.ரா.

பெருமாள் முருகன் – கொங்கு வடடார வழக்குச் சொல்லகராதி,

செம்பூரன் பாலக்காட்டுத் தமிழ் வட்டார வழக்குச் சொல்கள்,

அ.கா.பெருமாள் – நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி,

ப.முருகையா – நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி,

பழநியப்பா சுப்பிரமணியன் – செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி

கி.ரா. ‘மக்கா’ என்கிற சொல் குறித்து, ரொம்பவே வியக்கிறார். இந்தச் சொல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கையில், கிடைத்த சொல், என்கிறார்.

இந்த இடத்தில், என் துணைவியார் மூலமாக நான் கேட்டறிந்த ஒரு சொல் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் நானும் என் துணைவியாரும், ஒரு துக்கத்திற்குச் சென்று திரும்பினோம். அப்போது துணைவியார் சொன்னார், “பாவம் அந்த அம்மா. நான்கு மகன்கள், மறுமகள்கள் இருந்தும், ‘ஏசிருபத்தா’ கிடந்து செத்துப் போயிருச்சு” என்றார். அது என்ன ‘ஏசிருபத்து’?, அந்தச் சொல் குறித்துத் தேடத் தொடங்கியிருக்கேன். “என் உயிர் பத்து – ஏ உசிர் பத்து”. அதாவது பத்து பிள்ளைகள் பெற்றவள், யாரேனும் ஒரு பிள்ளை கடைசியில் தாங்குவான், என எதிர்பார்த்து, அது கிடைக்காமல் இறந்து போவது.

சுசியம் எந்தப் பறவையின் முட்டை? அம்ஷன் குமாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். சுசியம் என்பது நம் ஊரில் செய்கிற ‘சுழியம்’ பலகாரம். இதை ஒரு அம்மா செய்து வெள்ளைக்காரரிடம் கொடுத்தாளாம். அதைத் தின்ற வெள்ளைக்காரன், இது எந்தப் பறவையின் முட்டை, என்றானாம். இதையொரு கடிதமாக பதிவு செய்துள்ளார்.

அவரது மரணத்தின் மீது அவருக்கொரு பார்வை இருந்தது. அவரது இறுதி ஊர்வலம் எப்படியாக இருக்க வேண்டுமென, பதிவு செய்துள்ளார். “நான் ஒரு கட்டிலில் படுத்தப் படியே இறந்திருப்பேன். என்னைக் கட்டிலிலிருந்து தூக்கி சமுக்காளத்தில் கிடத்தணும். நான்

செத்துட்டேனென மருத்துவரிடம் இறப்பு சான்று வாங்கனும். அப்படி வாங்கினால்தான் தகனம் செய்ய முடியும். அதுக்கென பிரத்தியேகமாக உள்ள வண்டிக்குச் சொல்லணும். அந்த வண்டி வந்தபிறகு, சமுக்காளத்தில் கிடக்கும் என்னைத் தூக்கி வண்டியில் கிடத்தணும்.

வண்டியில் ஏத்திய பிறகு மாலைப் போடுறது, மரியாதை செய்றது எதுவும் வேண்டாம். நேரே தகனம் செய்கிற இடத்துக்குச் சென்று உரிய துட்டைக் கொடுத்தால், அவன் சாம்பலாக்கிடுவான். அந்தச் சாம்பல் எதுக்கும் உதவாது. பைசாவுக்குப் பிரயோசனம் படாது. அந்தச் சாம்பலை என்ன செய்யணுமோ செஞ்சுக்கலாம்.

16 ஆம் நாள் காரியம், 10 நாள் காரியம் எதுவும் வேண்டாம். குறிப்பா இரங்கல் கூட்டம் வேண்டாம். என்னுடைய இறந்த நாள் கொண்டாட்டம் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். என் படத்தை எங்கேயும் வைக்க வேண்டாம். மாலை போட வேண்டாம். எனக்கான அடையாளம் எனது எழுத்துதான். நான் அடிக்கடி சொல்வதைப் போல, டிக்கெட் எடுத்தாச்சு. ரயிலுக்காகக் காத்திருக்கிறேன்”.

கி.ராவின் மரணம் என்பது தமிழ்த்தாய் தான் பெற்ற தலைமகனை இழந்திருக்கிறாள், என்பதாகவே பார்க்க தோன்றுகிறது. புதிதாக அமைந்திருக்கிற திமுக அரசு, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது. அவருக்குச் சிலை நிறுவதாக அறிவித்துள்ளது. இது எழுத்துக்கான ஓர் அங்கீகாரம் என்பதாகவே பார்க்க வேண்டும்.

கனடா தோட்ட இயல் விருதளிப்பு விழாவில் கி.ராவின் ஏற்புரையுடன் இந்த உரையைத் தொடங்கினேன். அவரது ஏற்புரையின் கடைசி பத்தியோடு இந்த உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். கி.ரா இவ்வாறு ஏற்புரையை நிறைவு செய்கிறார். “ஏதோ ஒன்று நம்மையெல்லாம் இங்கே கூட்டிச் சேர்த்து வைத்திருக்கின்றன. உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அனைவருக்கும் என் வந்தனங்கள். நன்றி!“

உரையாற்றிய நாள் – 30.05.2021

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *