கவிதைகள்

அருள் தருவாய் கண்ணகைத் தாயே!…. ( கவிதை ) …. பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா)

பாரெல்லாம் கொரோனாவைரஸ் பரவல் அடங்கவில்லை

ஊரெல்லாம் கூடிஅம்மாளே! உனைவணங்க முடியவில்லை

யாரெல்லாம் எஞ்சுவரோ யாருக்கும் தெரியவில்லை

போரெல்லாம் வந்தபோதும் உன்பூசை குறைந்ததில்லை 

 

காவியத்தைப் பலர்பாடச் சிலருக்குக்

கண்ணீரோ வழிந்தோடும்

கூவியங்யொரு பெண்கள்கூட்டம் குரவையிட்டுக்

கும்பிட்டு உனைப்போற்றும்

காவடிகள் ஆடிவரும், ஆண்கள்படை

அங்கம் புரண்டு சுற்றும்

தீவட்டி ஏந்துவோரும் வலம்வருவார்,

சிறப்பம்மா உன்சடங்கு!

 

சீரோடும் சிறப்போடும் பலர்கூடிச் சேவிக்கும் நாள்வருமா?

ஊரோடிச் சென்றவர்கள் ஊர்வந்து உனைவணங்கும் நாள் வருமா?

தேரிழுத்துக் கால்வெட்ட ஊர்வலமாய் செல்லுமந்த நாள்வருமா?

சீரழுத்திக் காவியத்தை இளைஞர்படை சேர்ந்துபாட நாள்வருமா?

 

ஓடியங்கே வருவதற்கும், உன்கோயில் வீதியிலே கால்மடித்து

உட்கார்ந்து இருப்பதற்கும்,

கூடியங்கே பெண்கள்நின்று குடிவரிசை உலக்கைபெற்று நெல்லளந்து

குற்றுவதைப் பார்ப்பதற்கும்,

காலையிலே குழுத்தியாடல் கண்டுமனம் களிப்பதற்கும், தீர்த்தமதை

கையேந்திக் குடிப்பதற்கும்,

வேளையது வந்திடுமா? கண்ணகையே! தாயே உன் பாதமலர்

வேண்டிப் பணிகின்றோம்.

 

கட்டுண்டோம் தாயேநாம் உனைக்காணக்

கண்கலங்கி நிற்கின்றோம்

மட்டில்லா உன்கருணை நாடெங்கும்

மழைபோலப் பொழியட்டும்

பட்டதெல்லாம் போதுமம்மா

மக்களிப்போ படும்பாட்டைப் பார்த்திடம்மா!

இட்டமுடன் ஓடிவந்து உன்தலத்தில்

இறைஞ்சவழி பண்ணிடம்மா!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *