கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. பகுதி….7…. க.வள்ளிமகன்.

உளவு நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை இன்னொரு நாட்டில் விரிவுபடுத்தி செயல்படுவதற்கு அந்நாட்டு அரசின் பல்துறைக் கட்டமைப்புகளின் காத்திரமற்ற நலிவடைந்த தன்மைகளே காரணமாகின்றன.

கடந்த காலங்களைவிட இன்று உளவுபார்த்தல் என்பது மிகவும் இலகுவான வேலையாகிவிட்டது.இன்றை நவீன கணிணி தொழில்நுட்பங்களும், வகைதொகையான சட்லைட்டுகளின் வரவும் உளவு பார்த்தலை இலகுபடுத்தியுள்ளன.

கணிணி, சட்லைட் அகியவற்றின் தொழில்நுட்பத்தினதும் அதனுடைய ஒருமித்த செயல்பாட்டினுடைய ஒருங்கிணைக்கப்பட்ட தளமாக வல்லரசு நாடுகளே தொடர்ந்தும் அதனைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம் இதற்கு ஒரு வாய்க்கலாக அத்தனை இரகசியங்களும் போய்ச்சேரும் நுழைவாயிலாக அமைந்துவிட்டது.

தகவல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ச்சியடையாத நாடுகளில் உளவுபார்த்தல் வேலையை வேறொரு அணுகுமுறையில் செய்து வருகின்றது வல்லரசு நாடுகள்.

உளவு பார்த்தலில் கடந்த பகுதிகளில் முக்கியமாக வல்லரசு நாடுகளின் உணவகங்களை சுட்டிக்காட்டிய போதும் அவைமட்டுந்தான் இந்த வேலைக்கான தளமாக இயங்குபவை அல்ல.

உலகளாவிய பொதுநிலையில், ஒவ்வொரு நாடும் குழுமத்தன்மையுடனும் தனிநிலையிலும் பலநாடுகளுடன் பன்முக அபிவிருத்திகளுக்காக ஒப்பந்தங்:களைச் செய்து வருகின்றன.

இந்த அபிவிருத்திகள் கல்வி, உற்பத்தித் தொழில், தகவல் தொழில்நுட்பங்கள் என பலவகையாகக் கொண்டிருக்கின்றன.

மேலெழுந்தவாரியாக பார்க்கின்ற போது ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தலில் எவ்வித உள்வெளி இரகசியங்களை ஒப்பந்த நாடுகளிடையே கண்டறிய முயற்சிகள் இல்லையென்ற பார்வை இருந்த போதிலும், கண்டறியும் எண்ணம் ஒப்பந்த நாடுகளிடையே இருக்கவே செய்கின்றன.

கல்வித் தளங்களான பல்கலைக் கழகங்கள், துறைசார் உயர்கல்விப் பல்கலைக் கழங்கள் போன்றவற்றில் கல்வி கற்பித்துக் கொடுக்கும் வல்லரசு நாடுகளின் பேராசிரியர்கள் கலாநிதிகள் போன்றவர்கள் தாங்கள் கல்விப்பணிப் புரியும் நாடுகளில் கல்விப்பணியின் கட்டுமாணம் எத்தகையது எனக் கண்டறிவதிலும் கவனம் செலுத்துகின்றார்கள்.

தாம் பணியாற்றும் கல்வித்தளங்களின் கல்விக் கட்டமைப்பின் திட்டமிடலுக்கு அமையவே அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஒரு நாட்டினுடைய அரசியல் சமூக பொருளாதார விஞ்ஞான வளர்ச்சி என்பது அந்நாட்டின் கல்வியின் காத்திரதன்மையிலேயே தங்கியிருப்பதென்பது இன்றியமையாத கட்டமைப்பாகும்.

மாணவர்களை அறிவுத்திறன் பெற்ற மனிதர்களாக உருவாக்குவதில் கல்விக்கே முக்கிய பங்குண்டு.துறைசார் விற்பன்னர்களையும்,வல்லுனர்களையும் ஒரு நாடு கொண்டிருக்க வேண்டுமென்றால் கல்விக் கொள்கை மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

அதற்கமைய பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்தப் பாடத்திட்டங்கள் மீதான உற்றுக் கவனித்தலை ஒற்றர்களாகச் செயல்படும் வெளிநாட்டு கல்வியிலாளர்கள் இதனை உள்வாங்கி தமது நாட்டுக்கு இதனைக் கையளிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து இன்னொரு நாட்டில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அனைவரும் ஒற்றர்கள்தான் சொல்லிவிட முடியாது. அவர்களுள் சிலர் ஒற்றர் போன்று செயல்படுவார்கள்.

உளவு வேலைக்கான திட்டமிடல் அணுகுமுறை என்பன மிகவும் நுட்பமாகக் கையாளப்படும்.

ஒரு வீதம் தன்னும் சந்தேகப்படாதவாறு இந்த திட்டமிடல் அமைந்திருக்கும்.இன்றைய கணிணி சட்லைட்: தொழில்நுட்பம் அதனை இலகுபடுத்துகின்றது.

வல்லரசு நாட்டின் முக்கிய நோக்கமே தனக்கு நிகரான இன்னொரு நாடு இருக்கக்கூடாது என்பதே.

இந்த நிலைப்பாட்டுக்கமைய ஒரு நாட்டினுடைய பன்:முகப்படுத்தப்பட்ட அனைத்து கட்டமைப்பு அலகுகளையும், அதன் பரிமாண நிலைகளையும் தொடர்ச்சியாக அறிந்து கொண்டேயிருப்பதுதான் வல்லரசு நாட்டின் ஒரு பிரிவுச் செயலாகும்.

இது எப்படியெனில் ஒருவருடைய உடல் அங்கங்களின் முழுச்; செயல்பாட்டினை ஒரு மருத்துவன் அறிந்து கொள்வது போன்றதே.

தேசிய விசுவாசம் அற்ற மக்கள் வாழும் நாடுகளில் உளவு நிறுவனங்கள் தமது உளவு வேலைகளைச் சுலபமாகச் செய்கின்றன.

ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் செய்து கொள்ளும் பல்துறைசார்ந்த பரஸ்பரம் ஒத்துழைக்கும் அல்லது உதவி செய்யப் போகும் திட்டங்களுக்கு ஊடாகச் சுலபமாக நுழைந்துவிடுகின்றன உளவு நிறுவனங்கள்.

வல்லரசு நாடுகளில் இருக்கும் ஒரு தொழிற்சாலையின் தொழிற்பிரிவுக் கட்டமைப்பினை வளர்முக நாடுகளில் உள்ள தொழிற்சாலையில் ஏற்படுத்துவதற்காக வரும் வல்லரசு நாடுகளின் பொறியியலாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் முகாமையாளர்கள் தொழில்சார்துறை சார்ந்தவர்கள் என வளர்முக நாடும் அங்கு இருக்கும் தொழிற்சாலை நிர்வாகமும் நம்பிக் கொண்டாலும் அவர்களில் சிலர் வல்லரசு நாடுகளின் உளவாளிகளாகவே இருப்பார்கள்.

தமது தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக உதவி செய்ய வந்தவர்கள் ,என அத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடங்கி அதிகாரிகள், சாதரண தொழிலாளிகள் வரை நினைத்துக் கொண்டாலும் அவர்கள் உதவி செய்யும் போது உளவாளிகளாகவும் செயல்படலாம் என அத்தொழிற்சாலை நிர்வாகம் ஊகித்தல் மூலமோ அல்லது திட்டவட்டமாகவோ அறிந்து கொண்டாலும் தமது சந்தேகத்தை உணரும் விதத்தில சுதேச அதிகாரிகளால் நடந்து கொள்ளவே முடியாது.

அதே வேளை வல்லரசு நாடுகளிலிருந்து வளர்முக நாடுகளின் தொழிற்சாலைகளுக்கு உதவி செய்ய வந்திருக்கும் அதிகாரிகள் தம்மை வெறும் உதவியாளர்களாகவே காட்டிக் கொள்வார்கள்.

ஒரு துறைசார் மனிதன் தான் வாழும் நாட்டிற்காக உளவு பார்க்கத் தயங்கமாட்டான். அது ஒரு தேச விசுவாசமாகவே அவன் கருதுவான். உளவு நிறுவனங்களுக்காக வேலை செய்பவர்கள் தனக்குப் பக்கத்திலிருக்கும் ஒருவர் தன்னைப்பற்றி ‘இவன் அதிகாரி மட்டுமல்ல எங்கள் தொழிற்சாலையை உளவு பார்க்க வந்தவன்’ என்று சக தொழிலாளிக்குச் சொல்லும் போதுகூட அந்த உளவு அதிகாரி தெளிவாக அதைக் காது கொடுத்து கேட்டாலும் எதுவுமே கேட்காதது போல கல்லுளி மங்கன் போல தன்னை வைத்திருப்பான்.

உளவு பார்த்தலுக்கான கல்வியும் பயிற்சியுமே மிகவும் சிக்கலானது. உளவு பார்க்க அனுப்பப்படுபவர்களுக்கு ; உளவு பார்க்கும் நிறுவனங்களால் பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படும்.

தனக்கருகில் இருந்து தன்னை உளவாளி என்று பேசும் ஒருவர் தனது மொழியில் உரையாடியிருந்தாலும் அந்த மொழியை உளவாளி பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தாலும் தனக்கு அந்த மொழி தெரியும் என்பதை காட்டிக் கொள்ளவே மாட்டான்.

அத்தொழிற்சாலையின் சுதேச தொழில்சார் அதிகாரிகள,; சாதரண தொழிலாளிகள் உட்பட தமது மொழியிலேயே பேசும் போது உளவு பார்க்கும் அதிகாரி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெளிவாகவே விளங்கிக் கொண்டாலும் தனக்கு அந்த மொழி தெரியும் என்பதை எச்சூழ்நிலையிலும் வெளிப்படுத்த மாட்டான் என்பதுடன்சில வேளைகளில் உளவு பார்ப்பவனை கெட்ட வார்த்தையால் அவனை கோபமடையும் அளவுக்குப் பேசினாலும்கூட எந்தச் சலனத்தையுமே காட்டிக் கொள்ள மாட்டான்.

தேசிய விசுவாசமற்ற ஒரு தொழிலாளி, அதிகாரி அத்தொழிற்சாலையில் இருக்கிறானா என்பதை உளவாளி கவனிக்கத் தொடங்குவான்.அவனுடன் நெருங்கிப் பழகுவான்.குறிப்பக உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் புத்திஜீவிகளுடன் அவன் நட்புக் கொள்ளத் தொடங்குவான்.

உளவு பார்ப்பவனுக்கு அத்தொழிற்சாலையின் உற்பத்திக்கான மூளையாக இயங்குபவனை நோக்கி அணுகி அவனிடமிருந்து இரகசியங்களைப் பெற்றுக் கொள்வதே உளவாளியின் திட்டமாகும்.

தமது நாட்டின் தொழில்நுட்ப நவீனங்களை சொல்லிக் கொடுக்கும் அதே வேளை அத்தொழிற்சாலையின் உற்பத்திப் பொருளைப் பாவிக்கும் மக்களின் தொகை எவ்வளவு என்பதை இயல்பாக அறிவது போல அறிந்து கொள்வான்.

வல்லரசு நாடுகளில் உற்பத்தி செய்கின்ற அதே பொருளை உற்பத்தி செய்யும் வளர்முக நாட்டின் அத்தொழிற்சாலையின் உற்பத்திப் பொருளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் மதிப்பை அறியத் தொடங்கிய உளவாளி காலப் போக்கில் அத்தொழிற்சாலை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் அறிந்து கொள்வான்.

அத்தொழிற்சாலையின் அதிகாரிகளிலிருந்து சாதாரண தொழிலாளிவரை தனக்குத் தொழிற்சாலைபற்றிய உள்ளீட்டுத் தகவல்களைச் சொல்லக்கூடியவரை தேடும் அவன் ஒருவருடன் பேசும் போது

தனக்குரியவராக இருப்பாரா என்பதை அவன் அறிந்து அத்தகையவர்களுடன் நட்பை ஏற்படுத்துவதும் பின்னர் மெதுவாக அவர்களுடன் உணவு உண்டல் மது அருந்துதல் சுற்றுலா செல்லுதல் என்பதுவரை இது செல்லும்.

இந்த நிலையிலும்கூட தான் உளவாளி என்பதைக் காட்டிக் கொள்ளவே மாட்டான். சுதேச அதிகாரியோ சாதரண தொழிலாளியோ தனது தொழிற்சாலை பற்றிச் சொல்லும் எந்தவொரு இரகசியத்தினையும் ஆர்வத்துடன் கேட்காதது போல ஏதோ பேச்சுவாக்கில் கேட்பது போலவே கேட்பான். உற்றுக் கவனித்து தேவையேற்படின் அதனைப் பதிவு செய்தாலும் உற்றுக் கவனிக்காதது போல அவன் பாவனை செய்து கொள்வான்.

அதிகாரியும் அவனும் பேசும் போது தனது கைத்தொலைபேசியை அதிகாரி கேட்குமாறு ‘இதை நிறுத்தி வைத்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக பேசமுடியும்’ எனச் சொல்லியவாறு தனது தொலைபேசியை நிறுத்தி மேசையில் ஒரு ஓரத்தில் வைப்பான்.

ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டதாக உளவு பார்ப்பவன் சொல்லிய அத்தொலைபேசி அவர்கள் பேசிய அத்தனையையும் பதிவு செய்து கொண்டேயிருக்கும்.

உறங்கு நிலையில் உள்ள அத்தொலைபேசி, உறங்கு நிலையிலிருந்து கொண்டே செயல்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதை சுதேச அதிகாரி அறிய வாய்ப்பிருக்காது. தொலைபேசியிலிருந்தும் எந்த அதிர்வலைகளுமே ஏற்படாது.

தொழிற்சாலைகளில் உளவு நிறுவனங்கள் தமது கவனத்தை ஏன் செலுத்துகின்றன?.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button