கட்டுரைகள்

தமிழகத் தேர்தல் முடிவும் ஈழத்தமிழ் தலைவர்களின் வாழ்த்துக்களும்!… அவதானி.

இந்திய கருத்துக்கணிப்புகளை தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் காப்பாற்றியிருந்தாலும், புலம்பெயர் ஈழத்தமிழ்த் தேசிய ஆர்வலர்களின் கணிப்பை ( ஏ ) மாற்றிவிட்டது.

அவர்கள் எதிர்பார்த்த செந்தமிழ்ச்செல்வன் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு ஆசனத்தையும் பெறவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு வருவது இயல்புதான்.

உலகநாயகனும் ஒரு ஆசனமும் பெறவில்லையே?.. என்பதும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

சீமானும், கமலும் , குஷ்புவும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். இவர்களுக்குப்பின்னர் சினிமாவுக்குள் பிரவேசித்த உதயநிதி ஸ்டாலின், இம்மூவரையும் விட வயதால் குறைந்தவர் – முதல் தடவையே தனது தந்தையை விட அதிகப்படியான வாக்குகள் பெற்று சட்டசபைக்குச் செல்கிறார்.

தாத்தா கலைஞரதும், அப்பா ஸ்டாலினதும், அத்தை கனிமொழியினதும் ஆசிர்வாதத்துடன் முத்துவேலர் பரம்பரைக்கு ஒரு அரசியல் வாரிசு கிடைத்துவிட்டது.

ஸ்டாலினும் ஒரு முன்னாள் நடிகர்தான். ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகம் ஒன்றிலும் நடித்தவர்தான்.

பாடசாலையில் படிக்கும்போதே அரசியலுக்கு வந்தவர். தி.மு.க. மாணவர் அணி, இளைஞர் அணியிலிருந்து களம் பல கண்டிருப்பவர். மிசா சட்டத்தில் கைதாகி சிறையிலும் இருந்தவர். சென்னை மேயராகவும் சட்டசபை உறுப்பினராகவும் பதவிகளை வகித்தவர்.

அத்தகைய ஒரு பின்புலம் அவருக்கிருந்தமையால், கலைஞருக்குப்பின்னர், தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்கு அவர் பெரும் பிரயத்தனம் செய்யநேர்ந்தது.

தேர்தல் பரப்புரையின் இறுதிவேளையில் எடப்பாடியின் அனைத்திந்திய அ.தி.மு.க.வும் மோடியின் பாரதீய ஜனதாவும், ராமதாஸின் பா. ம. க.வும் பத்திரிகை ஊடகங்கள் வாயிலாக நடத்திய விளம்பரப்புரட்சியும் மக்களிடம் எடுபடவில்லை.

பொதுவாக தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு வியூகம் அமைப்பதற்காக பெரும் செலவுசெய்து சில மதியுரைஞர்களை கட்சிகள் இரகசியமாக தெரிவுசெய்வது வழக்கம். அவ்வாறு யாரோ ஒருவரின் ஆலோசனையின் பிரகாரம், தற்போது தி. மு. க.வின் வெற்றிச்செய்திகளை அறிவிக்கும் தமிழக பத்திரிகை ஊடகங்களையே பயன்படுத்தி முதல் பக்கத்தில் – அது விளம்பரமா..? செய்தியா..? என்று மக்கள் மனதை குழப்பும் வகையில் தி.மு.க.வினரின் கடந்த காலத்தவறுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியது முன்னைய ஆளும் தரப்பு.

இன்று அதே பத்திரிகை ஊடகங்கள்தான் முதல்வர் ஸ்டாலினின் பெரிய உருவப்படத்தை பதிவுசெய்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் இதர கட்சித்தலைவர்களினதும் செய்திகளை வெளியிடத் தொடங்கியிருக்கின்றன.

மத்தியிலிருந்து பிரதமர் மோடியும், “ தேசத்தின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் இணைந்து செயற்படுவோம் “ என்று ஸ்டாலினை வாழ்த்தி செய்தி அனுப்புகிறார். அதனையும் ஊடகங்கள் முக்கியத்துவத்துடன் வெளியிடுகின்றன.

அங்குதான் அப்படியென்றால், இலங்கையில் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்டாலினுக்கும் தமிழகத்தை ஆளத்தொடங்கவிருக்கும் தி.மு.க.வுக்கும் வாழ்த்து தெரிவித்து சாமரம் வீசத்தொடங்கிவிட்டார்கள்.

சிங்களத்தலைவர்கள் தமிழகத் தேர்தலையே கண்டுகொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை. மத்திய அரசில் யார் பதவியில் இருக்கிறார்கள் என்பது பற்றித்தான் அக்கறைப்படுவார்கள். தங்கள் தாளங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஆடினால் சரி ! ஆடாவிட்டால், இருக்கவே இருக்கிறது சீனா. அந்த நாடு சுருதியை மாற்றிப்பாடும்.

காலம் காலமாக தாய்நாடு சேய் நாடு என்று சொல்லிச்சொல்லியே, தமிழ்நாட்டின் தொங்கு தசைகளாக ஈழத்தமிழினத்தை வைத்திருக்கவிரும்பும் எமது தமிழ்த்தலைவர்கள், இம்முறையும் தமிழகத்தேர்தல் முடிவுக்குப்பின்னர் வாழ்த்துத் தெரிவிப்பதிலும் அறிக்கை விடுவதிலும் ஆளையாள் முந்தினார்கள்.

மீண்டும் எடப்பாடி வந்திருந்தாலும் இதே காட்சியைத்தான் நாம் கண்டிருப்போம்.

எல்லாம் அரசியல் சம்பிரதாயக் கூப்பாடுதான். சரி போகட்டும்.

இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் பலவுண்டு. அவற்றுள் கடல் எல்லையும் கச்சதீவும் தமிழகத்தில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழ அகதிகளின் விவகாரமும் அடங்கும். சமகாலத்தில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காகவும் பலர் தமிழ்நாடு இராமேஸ்வரம், தனுஸ்கோடி மார்க்கத்தில் இலங்கைக்குள் பிரவேசிக்கும் செய்திகளும் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.

அத்துடன் கேரளாவிலிருந்து கடல்மார்க்கமாக வட இலங்கையில் மாதகல் பிரதேசத்திற்குள் வந்துசேரும் கஞ்சா முதலான போதைப்பொருட்கள்.

அவ்வாறு கடத்திவரப்படும் ஏராளமான பல இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப்பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இலங்கை கடல் எல்லக்குள் அத்துமீறிவந்து மீன் வளங்களை சூறையாடிச்செல்லும் இந்திய மீனவர்கள்.

இங்கும் அங்கும் அதனால் கைதாகும் மீனவர்களின் உயிர்பாதுகாப்பும் விவகாரமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் அவர்களின் பிள்ளைகளின் உயர் கல்வித்தேவைகளும் ஒரு முக்கிய பேசுபொருள்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழக அ.தி.மு. க. அரசில் அங்கம் வகித்த நடிகர் கருணாஸ் எம். எல். ஏ. வட இலங்கை வந்து, முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரனை சந்தித்து, “ தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமான கல்லூரிகள் அமைக்கப்போவதாக வாக்குறுதி வழங்கிச்சென்றார்.

தற்போது நீதியரசர் பாராளுமன்றப்பாதையில் சென்று கொழும்பில் மீண்டும் குடியேறிவிட்டார்.

அ.தி.மு.க.விலிருந்து கருணாஸ் விலக்கப்பட்டுவிட்டார். இம்முறை தேர்தலிலும் அவரைக்காணவில்லை.

அந்தச்செய்தி செய்தியாகவே போய்விட்டது.

தமிழகத்தலைவர்கள், அவர்கள் பின்வரும் தி.மு.க., ம.தி.மு.க, தே.மு. தி.க, அ.தி.மு.க. அம்மா தி.மு.க., பா. ம. க. , விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமையம் முதலான எந்த கட்சியிலிருந்தாலும் அவர்கள் அனைவருமே தங்கள்

அரசியலுக்காகத்தான் அடிக்கடி ஈழத்தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து உரத்துப்பேசுவார்கள்.

சீமான் அவர்களைவிட ஒரு படி முன்னே சென்று, தான்தான் ஈழத்தமிழர்பற்றி பேசுவதற்கு உரித்துடையவன், தேசியத்தலைவர் பிரபாகரனுடன் ஆமைக்கறி சாப்பிட்டேன், காப்பி குடித்தேன் என்ற ரீதியில் பேசுவார். அவரது நம்பிக்கைக்குரியவனாகத் திகழ்ந்தேன் என்றெல்லாம் முழங்குவார்.

சீமான் தமிழகத்தின் ஆட்சியை பிடிக்காது போனாலும் அவரும் வென்று தமிழக சட்டசபையில் சில ஆசனங்களும் பெறுவார் என்றுதான் புலம்பெயர் ஈழ ஆதரவாளர்கள் நம்பினார்கள். அதற்காகவே அவரது தேர்தல் செலவுகளுக்கும் வாரி வழங்கி, அவர் பவனி வருவதற்கு மிகவும் பெறுமதியான காரும் வாங்கிக்கொடுத்தார்கள்.

முன்னர் இதே புகலிடத் தமிழர்கள்தான் குளிரிலும் கோடையிலும் வாடி உழைத்து சேமித்த பணத்தை தமிழகத்தலைவர்களை அழைத்து பரப்புரை செய்வதற்கு செலவிட்டனர்.

பழ. நெடுமாறன், சுபவீரபாண்டியன், திருமாவளவன், சீமான், வைகோ, உட்பட பல தலைவர்கள் புகலிடத்திற்கு பரப்புரைசெய்ய வந்தவர்கள்தான்.

விடுதலைப்புலிகள் உச்சத்திலிருந்த காலத்தில் கனடாவுக்கு வந்த வைரமுத்து, “ நீங்கள் அனுமதித்தால் நானே தமிழ் ஈழத்தேசிய கீதம் இயற்றித்தருவேன் “ என்றார். அவரது வைரவரிகளை விட உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனும் புதுவை ரத்தினதுரையும் வெகு சிறப்பாக எழுதிக்கொடுப்பார்கள். நீங்கள் சினிமாவுடன் நின்றுகொள்ளுங்கள் என்று வழியனுப்பிவைத்தவர்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றும் ஒரு சாரார், இப்போது, தமிழக முதல்வராகவிருக்கும் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பியுள்ளனர்.

உலகத்தமிழினத்தின் தலைவரே என்று ஒரு காலத்தில் விளிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியையே 2009 இல் முள்ளிவாய்க்காலில் பேரழிவு வந்தபோது திட்டித்தீர்த்த சமூகம், இப்போது அவரது புதல்வர் ஸ்டாலினுக்கு செங்கம்பளம் விரிப்பதற்கு தயாராகியிருக்கிறது.

இலங்கை தமிழ்த்தலைவர்கள், தங்களுக்குள் நீடித்திருக்கும் முரண்பாடுகளை ஒருபுறம்வைத்துவிட்டு, தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் ஈழ அகதிகளின் எதிர்காலம் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு புதிய தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்.

அம்மக்கள் இலங்கையில் பாதுகாப்புடன் மீளக்குடியமர்த்தப்படல் வேண்டும். அல்லது இந்திய குடியுரிமை அவர்களுக்கு கிடைப்பதற்கு வழிவகைளை காணல் வேண்டும். அத்துடன் அம்மக்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் இல்லாதொழிக்கப்படல்வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் கல்வியும் வர்த்தகமாகியிருக்கிறது.

அத்துமீறி இலங்கை கடற்பிராந்தியத்துக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் குறித்து புதிய முதல்வருடன் பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ள தீர்வை நோக்கி நடத்தவேண்டும்.

தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் படலத்தையடுத்து, செய்யவேண்டிய பல கடமைகள் எமது ஈழத்தமிழ் தலைவர்களிடத்தில் இருக்கின்றன.

அதுபோன்று தமிழக தலைவர்களுக்கு நிதி வசூல் செய்துகொடுக்கும் புகலிட ஈழத்தமிழர்களும் அதனை நிறுத்திவிட்டு, ஈழப்போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் , உடல் ஊனமுற்ற முன்னாள் போராளிகளுக்கும், காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் கல்வி சார்ந்த பணிகளுக்கும் உதவுவதற்கு முன்வரல்வேண்டும்.

தலையணை உறையை மாற்றும் வேலையைத்தான் தேர்தல்கள் செய்யும்.

தலையணை மாறாது !

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button