கரையில் மோதும் நினைவலைகள்!,,,, தொடர் 2….யாழ் இந்துக்கல்லூரி. …. ( நடேசன்)

ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும் மற்றவருக்கு நல்லவராகவும் நமக்கு வில்லனாகவும் இருப்பதை பல தடவை பார்த்துள்ளேன்
2011ல் நான் இலங்கையில் நீர்கொழும்பில் ஒரு கடற்கரையோரக் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அதிகாலை நேரம் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது.
இரவு ஒரு மணியளவில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து படுத்தேன் ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்கு பழக்கமான உடல் என்பதால் கண் விழித்துவிட்டேன் ஆனால் உடல் அயர்வாக இருந்தது..
எனது மோபைல் அடித்தது.
நான் இலங்கைக்கு வந்த காலத்திலே எனது மகனோடு மனைவியும் வருங்கால மருமகளின் குடும்பமும் திருமணத்திற்காக நகை சேலை வகையறாக்களை எடுப்பதற்காக சென்றிருந்ததார்கள்
அப்பொழுது எனது மகன் தொலைபேசியில்
‘சிறி அங்கிளது பாஸ்போட்டடை வாங்கி சென்னை ஏர்போட்டில் வைத்துவிட்டார்கள்’
‘ஏன்?’
‘அவரது பெயரில் தேடப்படும் ஒருவர் இருப்பதாக நினைக்கிறார்கள்’
மனைவி என்னிடம் பேசினார்;. அப்பொழுது சொன்னேன்.
‘இலங்கையில் ஏதாவது நடந்தால் தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து ஏதாவது பார்க்க முடியும் இந்தியாவில் ஒன்றும் செய்ய முடியாது. பாவம் சிறி விசாரித்துவிட்டுக் கொடுப்பார்கள் எனநினைக்கிறேன்.
அப்பொழுது என்மனைவி ‘உங்களுக்கு தெரிந்த அந்த மிருகவைத்தியர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாரே அவரது பெயர் சிறிஸ்கந்தராஜாதானே?
‘எவர்?’
‘நாங்கள் அவுஸ்திரேலியா வந்ததுமே போய் சந்தித்தோம்’
‘டாக்டர் சிறிஸ்கந்தராஜாவா?
‘அவரேதான் அவர் விடுதலைப்புலி ஆதாரவாளர் அல்லவா?’
‘ஆமாம் ஆனால் அவரை ஏன் இவர்கள் தேடவேண்டும்?’
‘எனக்குத் தெரிந்தவரையில் அவரைஎன நினைக்கிறேன். அவரது தகப்பனது பெயரும் சரியாகப் பொருந்துகிறது.
‘அடப்பாவமே யாரோ ஒருவர் என எண்ணி எந்த அரசியலிலும் தலைவைக்காத வரைப்பிடித்து.குறைந்த பட்சம் படத்தையாவது வைத்திருக்கலாமே? இப்படித்தான் இலங்கையில் இருந்துபோன ஹெஸ்புல்லா என்றொருவரை அமரிக்க இமிக்கிரேசன் இவர் லெபனானைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்தவரோ என ஐந்து மணிநேரம் விசாரித்தார்கள்.’ என சொல்லிவிட்டு வைத்தேன்
நான் 87ல் அவுஸ்திரேலியா வந்ததும் ஒருமாத காலத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை பலருடன் பேசினேன். நான் காத்திருப்பதுபோல் நாட்கள் காத்திராது. என மகளின் மூன்றாவது பிறந்ததினம் வந்தது. மகனுக்கு அடுத்தமாதம் ஐந்தாவது வயதாக இருக்கும். எனக்கு முன்பாக அவுஸ்திரேலியா வந்த வந்த தர்மாவதி திருமணம் முடித்து சிட்னியில் இருக்கிறார் அவரும் அக்காலத்தில் பரிட்சைக்காக படித்துக்கொண்டிருந்தாலும் அவுஸ்திரேலியால் மிருக வைத்திய பரிட்சையை எடுத்து பாஸ் பண்ணுவது மிகவும் கஸ்டமான விடயம் எனப் பயப்படுத்தினார்
மோகன் மாலா இருவரும் விலங்கு மருத்துவர்கள். அவர்கள் அந்தத் துறையை விட்டு விஞ்ஞானத்தில் மேல்படிப்பு படித்துவிட்டு விஞ்ஞானகூடங்களில் ஆராச்சியாளர்களாக வேலை செய்கிறார்கள். எல்லோரையும் விட அவுஸ்திரேலியாவில விலங்கு மருத்துவ பரீட்சையை வில்லங்கமானது என என்னைப் பயப்பிடுத்தியவர் என் மண்டைக்கயிறு மோகன் என்றே சொல்லவேண்டும்.
ஏன்னைப் பொறுத்தவரை எனது மிருக வைத்தியம் அவ்வளவு இலகுவாக கிடைத்தது அல்ல. அதை விட்டு செல்வதற்கு. நாலு வருடப்படிப்பு மட்டுமல்ல அதற்கு மேல் பல சோதனைகளை தாண்டிவந்தேன்.
பேராதனைப் புல்கலைக்கழகத்திற்கு புகுந்தது இலகுவானதல்ல.
1974ம்ஆண்டு இலங்கையில் தரப்படுத்தலும் மாவட்டரீதியாக குறிப்பிட்ட மாணவர்களை எடுத்தலும் என்ற முறை அமூலாகிய வருடம். எனக்கு முதல் ;வருடத்தில் தரப்படுத்தல் மட்டுமே இருந்தது. அடுத்த வருடத்தில தரப்படுத்தலை நீக்கி மாவட்டமுறை மட்டும் வைத்திருந்தார்கள் வருடத்தில் எனது வகுப்பில் இருந்த 20 பேரில் நான் ஒருவனே பல்கழைகழகம் சென்றேன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலே 5 பேர் மட்டும் சென்றது வரலாற்று விடயம். வழமையாக 50 -60 பேர் என பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள்
1974ன் கடைசியில் என நினைக்கிறேன். நடுப்பகல் யாழ்பாணத்து வெயில் வெளியே தணலாக இருந்தது. உள்ளே நுவரெலியாவின் சீதோஸ்ணத்தை நடுங்கியபடி உணர்ந்தேன். நீங்கள் நினைப்பதுபோல் ஏர்கண்டிசன் எல்லாம் இல்லை. பயம்தான்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் அறையின் உள்ளே நின்றேன். ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இருப்பதால் அதிபர் சபாலிங்த்தின் அறையில் அவரது மேசையின் முன்பாக ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன். அந்த நாற்காலிகளில் நாங்கள் இருந்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையான பத்திரங்களை நிரப்ப அதில் அதிபர் கையெழுத்திடவேண்டும். மற்ற நான்கு பேர்களில் இருவர் பொறியியலுக்கும் இருவர் கலைப்பீடத்திறகும் செல்பவர்கள். மற்றவர்கள் அவரவர் கதிரையில் கலாதியாக இருந்தர்கள். பல்கலைக்கழகம்போகும் சந்தேசத்தில் விறைத்த உடலுடன் நிமிர்ந்தபடி இருந்தார்கள். போதாக்குறைக்கு எனது நாற்காலி அதிபரின் வலது புறத்தில் கை எட்டும் தூரத்தில்.
நான் மட்டும் தலை கவிழ்ந்தபடி குற்றம் செய்துவிட்டு நிற்கும் மாணவனாக நின்றேன்.
சுபாலிங்கம் என்னை நோக்கினார.; நான் அவரை நோக்கினேன.; இருவரும் சில கணங்கள் பார்த்தபின்பு என்னை ‘சிட் டவுன் என்றார்.
இவன் என்னிடமிருந்து தப்புகிறான். எப்படியும் நன்னடத்தைக்கு சேட்டிபிக்கற் வாங்க வருவான் அப்போது பார்த்துக்கொள்ளமுடியும் என நினைத்தது பிழைத்துவிட்டதே. ஆப்பப்ப விடயத்தை கவனித்திருக்கவேண்டும்.
குரலில் அதிகாரம் இருந்தது.
மெதுவாக பத்திரங்களை நிரப்பியதும் மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு தனது கையொப்பத்தை வைத்தார்.
அதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்திருக்கும் ஆனால் அது எனக்கு ஐந்து யுகங்களாக இருந்தது
ஒருக்கா இரண்டு தரமா அந்த மனுசனிடம் பிரச்சனைப்பட்டது. மூன்று முறைகள் அவரோடு உரஞ்ச வேண்டிவந்தது.
பத்தாம் வகுபில் படித்த காலத்தில் சபாலிங்கம் எங்களுக்கு அதிபராக நியமிக்கப்பட்டார் அவர் வரும்போது அவரது யாழ் மத்திய கல்லூரியை கலக்கி எடுத்தவர் என்ற மெய்க்கீர்த்தியும் காற்றோடு வண்ணார்பண்ணைக்கு வந்தது.
யாழ்பாணம் இந்துக்கல்லூரியில் எல்லோரும்போல் கணிதம் படித்தபோது அது எனது மூளையில் ஏறாதபடியால் இரண்டாவது தரமாக பத்தாம் வகுப்பில் மீண்டும் உயிரியல் விஞ்ஞானம் படித்த காலம். பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை. ஓட்டுமடம் பகுதியில் ஒரு ரியூசன் வகுப்பை முடித்துக்கொண்டு நல்லுரை நோக்கி அரசடி வீதியால் மெதுவான மாலைக் கருக்கலில் பல நண்பர்களோடு வந்தேன். அதிபர் சபாலிங்கத்தின் கற்பகம் என்ற வீடு வந்ததும் என்னோடு வந்தவர்கள் தங்களை மறந்து ‘அடோய்
சபாலிங்கம் எனக் கத்திவிட்டு சைக்கிளில் வேகமாக ஓடினார்கள். எனக்கு வேறு வழியில்லை நானும் அவர்களுடன் ஓடினேன் நல்லூர் கோவிலை நோக்கி.
அதிபர் சபாலிங்கம் அவரது தம்பி கனகலிங்கம் (அவரும் அக்கால பரமேஸ்வராக் கல்லூரி அதிபர்) அதிபர் சபாலிங்கத்தின் மூன்று மகன்களும் அந்த ரோட்டில் இரண்டு கார்களில் தொடர்ந்து வந்தார்கள். இதையறியாது நாங்கள் ஜனசக்தி சமூகநிலயத்தில் ஓய்வெடுத்து எங்கள் வீரத்தை பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து வேகமாக பிரேக் போட்டு நடுவீதியில் நின்றன.
அது ஒரு வெள்ளிக்கிழமை. இரணடு பக்கதாலும் நல்லூர்க் கோயிலுக்கு வந்தும் போய்க்கொண்டிருந்த பக்தர்கள் இருந்தார்கள்;. காரின் பிரேக்கில் பலர் அதிர்ந்து போய்விட்டார்கள். ஒரு காரில் இறங்கியவர்களில் அதிபர் சபாலிங்கம் என்னைப் பாய்ந்து பிடித்து சேட்டில் உலுப்பியபடி தனது காரில் ஏறு என்று கேட்டபோது நான்; எனது சைக்கிளை விட்டு வரமுடியாது என மறுத்தேன். அக்காலத்தில் எனது பெரிய சொத்து அந்த பிஎஸ் ஏ சைக்கிளே.
அவரது கை எனது சேட்டில் இருந்தபோது நான் பின்பகுதியில் சாய்ந்தபடி வைத்திருந்த எனது சைக்கிள் நிலத்தில் விழுந்தது. நானும் நிலத்தில் விழுந்தேன்.
அரசடி எனப்படும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு என்னைத் தெரியும். நான் அங்குள்ள ஜனசக்தி வாசிகசாலையில் சஞ்சிகைகளான குமரனையும் மல்லிகையையும் வாசிப்பதற்கு அங்கு நிற்பதால் அவர்களுக்கு என்னை அறிமுகம் ஆனால் அதிபரைத் தெரியாது.
அவர்களில் ஒருவர் ‘ஏன் தம்பியைத் தாக்குகிறீர்கள்?’ என்றபோது அதிபரின் மகன் அவரைத் தாக்கியதும் சுற்றி நின்றவர்கள் அதிபரின் மகனைத் தாக்க அவர் சித்தப்பா சித்தப்பா என்றார். அங்கு அப்பொழுது சிறிய வளைகுடாப் போர் நடந்தது.
சுதாரித்துக்கொண்டு எழுந்து அந்த கிளைமாக்ஸ காட்சியை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிபர் சபாலிங்கம் ‘உன்னை பாடசாலையில் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி சேட்டில் இருந்து கையை எடுத்து பின் வாங்கிச் சென்று காரில் ஏறினார்கள். சண்டையை பார்த்த பக்தர்கள் வந்து மத்தியஸ்தம் செய்து அதிபரையும் குடும்பத்தினரையும் அமைதியாக காரில் போகும்படி செய்தார்கள். அடுத்த நாள் பாடசாலைக்கு சென்றபோது எனக்கு மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு அக்காலத்து ஹாஸ்டலின்முன்பாக நின்ற தேக்கு மரத்திற்கு கீழ் நடந்தது. அந்த வரவேற்ப்பு எனது பயத்தை மேலும் கூட்டியது. அன்றிலிருந்து நான் நடுங்கியபடி உயிர் வாழ்ந்தேன். பூனையைக் கண்டால் பொந்தில் பதுங்கும் எலியும்போல்
இரண்டு வருடங்கள் ஏதோ அதிஸ்டத்தால் நான் எந்த பிரச்சனையிலும் மாட்டவில்லை.
12 வகுப்பு பரீட்சை முடிந்த பின்பு நான் தலைமயிரை கழுத்துவரை வைத்திருந்தேன் அக்காலத்தில் எனக்கு காதலியியும் இருந்ததால் அக்காலத்து பாஷன்படி இருந்தேன்.
ஒரு நாள் எனது பின்பாக வந்த அதிபர் சபாலிங்கம் கையில் பிடித்து என்னை தனது அறைக்கு அழைத்து சென்றார். இனி நான் போஸ்மோட்டத்திற்கே வெளியில் வருவேன் என நினைத்தபடி ஒடுங்கிய என்னிடம் முகக்கண்ணாடி ஒன்றை தந்து என்னைப் பாரக்;கச் சொல்லி ‘உன்னைப் பார் பக்கிங்காம் பலஸ் கூர்க்;கா மாதிரி இருக்கிறாய். இது நல்லா இல்லை. தலைமயிர் வெட்டாவிடில் இனிமேல் பாடசாலை வரவேண்டாம் என மிகவும் பொறுமையாக கூறினார்.
இதைப்பற்றி ஆலோசனைகேட்டபோது எனது நண்பர்கள் அவருக்கு மயிரின் அருமை தெரியது( அவருக்கு மொட்டைத் தலை )எனநக்கலாக சொன்னார்கள.; நானும் ஏற்கனவே பரிட்சை எழுதிவிட்டேன் என்பதால் தலைமயிரை வெட்டவில்லை. பரீஷ்சையில் பாஸ்பண்ணுவேன் என என்னில் நம்பிக்கையிருந்தது. பாடசாலைக்கு வருவது லைப்பிரியில் புத்தகம் எடுப்பதற்கு மட்டும்தான் அவரிடம் பிடிபடாமல் சில காலம் லைபிரரிக்குப் போய் வந்தேன்.
நல்ல காலம் தொடர்ந்து வராது. தம்பி காத்து மாறும் என்பார்கள்
யாழ் இந்துக் கல்லுரியில் காங்கேசன்துறை வீதியில் மாணவர்கள் மானிப்பாய் பக்கமிருந்து டிபிள் டெக்கர் பஸ்சில் இறங்கும்போது வாசலில் நிற்கும் மாணவிகள் இறங்கி அவர்களுக்கு வழிவிடுவார்கள். முக்கியமாக கொக்குவில் பக்கத்தில் ஏறிய வேம்படி பெண்கள் அதில் இருப்பார்கள் அவர்களை விசில் அடிக்க அக்காலத்து ஒரு மாணவர்கள் கூட்டம் அந்த தரிப்பில் நிற்கும் இந்த நாளாந்த நடவடிக்கையை அவதானித்த அந்த வழியால் காரில் செல்லும் நீதிபதி இதை அதிபருக்கு சொல்லிவிட்டார்.
இப்படியான மாணவர் கூட்டம் மீண்டும் பாடசாலைக்கு வரும் அவர்களை கோழி அமத்துவதுபோல் அமத்துவதற்காக அதிபர் விளையாயாட்டு மைதானத்தில் பதுங்கி நிற்கிறார் அந்த மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வராமலே புதிதாகத் திரையிட்ட படம் பார்க்க செல்கிறார்கள். அப்பொழுது அவர்களோடு நின்ற நான் மட்டும் மீண்டும் லைபிரரியில் எடுத்த புத்தகத்தைக் கொடுக்க மீண்டும் உள்ளே வருகிறேன்.
புலி பிடிக்கபோன அதிபருக்கு எலியாக என்னைக் கண்டதால்; விளையாட்டு மைதானத்தில் ஒழித்து நின்றவர் என்னைத் துரத்துகிறார் நான் அவருக்கு பிடிபடாமல் பாடசாலையின் உள்ளே சென்று வகுப்பகளின் கொரிடோரில் பிரேயர் ஹோலை நோக்கி வேகமாக செல்கிறேன். இருவருக்குமிடையே சிறிது தூரமிருந்தது. என்னைப் பிடிக்கும்படி அக்காலத்து மாணவர் தலைவரான இராஜகுலசிங்கத்திடம்(பாபு)உத்தரவிட்டபோது அவன் என்னை பிடிக்க நான் அவனிடமிருந்து விலக முயற்சித்போது அதிபர் வந்து என்னை பிடித்துவிட்டார்.
‘உன்னைப் பாடசாலைக்கு வரவேண்டாம் என்று சொன்னே வெளியே போ. என ஆங்கிலத்தில் சொல்லிய பின்புதான் அடிப்பதற்கு கையை ஓங்கினார். அவரது வார்த்தைக்கும் செயலுக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவரது முதல்க் கட்டளையை சிரமேல் கொண்டு அந்த கொரிடேரில் இருந்து கீழே பாய்தேன் அவரது விசுக்கிய கையால் விலகிய காற்று எனது முதுகில் பட்டது. கிட்டத்தட்ட அரை மீட்டர் உயரமான கொரிடோரில் அவரால் உடன் இறங்க முடியவில்லை. அப்படியே பாடசாலையைக்கு வெளியே வந்துவிட்டடேன். அதன் பிறகு 8-9 மாதம் பின்பாக இப்பொழுது பல்கலைக்கழகப் பத்திரங்களை நிரப்ப
நிற்கிறேன்.
அக்காலத்தில் எங்களுக்கு அவரே இலங்கை இராணுவம் அவரே பொட்டம்மான்.
இப்படி பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும் அங்கும் எனது பட்டப்படிப்பை முடிக்காமல் விடுவத்ற்கான சந்தர்பம்ஏற்பட்டது.
மூன்று தடவைகள் ஒரேபாடத்தில் பெயிலாகினேன்.பல முறை பல்கலைக்கழகத்தை விட நினைத்தேன்.எனது காதல் காதலி தடுத்ததால் தொடர்ந்தேன்.
அங்கு சபாலிங்கமில்லை. மகாலிங்கம் வைரோலஜிப் விரிவுரையாளர் மகாலிங்கம் எனது வில்லனாக இருந்தார்.
மூன்றாவது வருடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண் விரிவுரையாளர் ‘ நீ ஏன் மைக்கிறோபயலஜி நல்லா செய்யவில்லை. நான் நன்றாக படிப்பிக்கவில்லையா?’
‘இல்லையே நான் நல்லா செய்தனான்
‘ஆர் சொன்னது?’
‘டாடர் மகாலிங்கம்’
‘நான் போய்க் கேட்கிறேன்’
நூன் சொன்னது எனச் கேட்கவேண்டாம்’
நேரடியாக டாடர் மகாலிங்க்கம் கேட்டபோது ‘ யார் சொன்னது உனக்கு?’
அந்தப் பெண் விரிவுரையாளது பெயரை மறைக்க முடியவில்லை
‘கெட் அவுட்’ என்றார்
அவரது முகத்தில் கோபம் பொங்கியது.
இப்படி ஏன் மனிதன் கோபப்படவேண்டும்? நான் சாதாரணமாகக் கேட்டதில் என்ன பிழை? இவருக்குப் பிரச்சனை நான் பெண் விரிவுரையாளரிடமிருந்து அறிந்ததா? இல்லை அந்த விரிவுரையாளருக்கு பரிச்சை விடயங்கள் தெரிந்ததா?
புரியாத புதிராக அவரது நடத்தை இருந்ததால் இதன் பின்பு நான் விரிவுரைகளுக்குப் போவதில்லை. இடைக்கிடை நான் காதலியோடு போகும்போது அவரும் நோக்குவார் நானும் நோக்குவேன் ;.
மீண்டும் நான் பெயலானேன்.
இறுதியாண்டில் பரிச்சை எடுத்த பின்பு என் முக்கிய இரண்டு விரிவுரையாளர்களான டாக்டர் பெரேராவும் டாக்டர் பொங்சோவும் என்னைச் சந்தித்தார்கள்’ ‘நீ இறுதியாண்டில் நன்றாக பாஸ் பண்ணி கிளாஸ் எடுத்திருக்கிறாய். ஓரு பாடத்தில் யு ஆனால் மூன்றாவது வருடப் பாடமான மைகிறோ பயலஜியை பெயலாகிவிட்டாய் பல்கலைக்கழக முதல்வரிடம் இந்த இறுதிப் பரிச்சையை முடிவுகளை இப்பொழுது வெளியிடாது வைக்கச்சொல்லி விண்ணப்பம் செய்’ என்றார்கள்.
நான் சென்று பல்கலைக்கழக முதல்வரிடம் கேட்டபோது அவர் சம்மதித்தாலும் பின்பு மற்றவர்களது அழுத்தத்தால் எனது இறுதிபரிட்சை முடிவுகள் இரத்து செய்ப்பட்டது.
மைகிரோ பயலஜியை விரிவுரையாளர் மகாலிங்கம் இருக்கும்வரை பாஸ் பண்ணமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கிட்டத்தட்ட 4 கிலோக்கள் குறைந்து சோமாலியராகி விட்டேன். பேராதனை பல்கலைக் கழக இரசாயனகூடத்தில் இருக்கவேண்டிய அமிலம் எனது வயிற்றில் தேங்கி இரைப்பையை அரித்தது. மனத்துக்குள் பல முறை பேராசிரியர் மாகாலிங்கத்தை கொலை செய்தேன். அக்காலத்தில் அமைதிக்காலம். ஆயுதங்கள் கிடைக்காது. ஒரு முறை கல்லால் இருட்டில் தாக்க எடுத்த முயற்சியை நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்
இப்படி இருந்த காலத்தில் மைக்கிரோ பயலஜின் பேராசிரியர் விஜவந்தா வெளிநாட்டில் அவரது லீவு முடித்தபின் பாஞ்சாலிக்கு கண்ணனாகினார்
வீட்டுக்கு என்னையும் எனது நண்பன் சில்வாவையும் அழைத்து தேநீர் தந்து ‘மகனே உன்னைப் பற்றி அறிந்தேன் பயப்பிடவேண்டாம் இம்முறை எழுது’ என்றார்
நாப்பது நாட்களில் அந்த பரிட்சையில ;தேறி அதன்பின்பு இறுதியாண்டுகள் பரிச்சையை மீண்டும் எடுத்து பாசாகினேன் ஆனால் எனது விசேட சித்திகள் அற்று சாதாரணமாக பாசாகினேன். இப்படியாக பாஸ்; பண்ணினாலும் எனது நண்பர்களுக்கும் எனக்கும் நாப்புது நாட்கள் மட்டுமே வித்தியசமே இருந்து.
இப்படி மிகவும் கஸ்டப்பட்டு பாசாகிய எனது மிருக வைத்தியத்தை தொடர்வதா இல்லையா என்பதைக் கேட்க டாக்டர் சிறிஸ்கந்தராஜாவிடம் போவிரும்பினேன் துங்காபேயில் இருந்து இரயில் தனியாக ரிச்மண்ட் செல்லவிருந்த என்னை காரில் கொண்டு செல்லம்படி மாலா அக்கா மோகனிடம் கூறினார்
டாக்டர் சிறிஸ்கந்தராஜா இலங்கையில் மிருகவைத்தியராகி பின்பு ஆவுஸ்திரேலியாவில் மேல்படிப்பு படித்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பவர்.
அவரிடம் கேட்டபோது அவரும் மோகனைப்போல் இங்கு மிருகவைத்தியம் கடினம் என ஆலோசனை கூறி தற்போது முக்கியமான பகுதியான பயோரெக்னோஜி செய்யலாம் என்றார். அவரது ஆலோசனைப்படி நியு சவுத் வேல்ஸ்பல்கழைகழகத்தில் விண்ணப்பம் செய்தேன்
அந்தவிதத்தில் அவரை எனது வழிகாட்டியாக நினைத்தேன். மெல்பேனில் எந்த ஒருகாலத்திலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் நிகழ்சிக்கு போகாத நான் அவர் பேசவந்த ஒருவருட நிகழ்வுக்கு மனைவியுடன் சென்றேன்
அவர் பேசி முடிந்ததும் வெளியே சென்ற என்னை பார்த்து தெரிந்தவர்கள் கேட்டனர்.
ஏன் அரைவாசியில் போகிறீர்கள்
இவர்களில் கொல்லப்பட்டவர்களுக்கு இதுவரை இருந்தேன் இவர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞசலி செய்ய என நானும் மனைவியும் வெளியே வந்தோம்’ என்றேன்
அவர்கள் முகங்களில் கவலை வந்தது.
டாக்டர் சிறிஸ்கந்தராஜாவின் ஆலோசனைப்படி பயோரெக்னோலஜி படித்து அதில் வேலைபார்த்துக்கொண்டு மிருகவைத்தியம் படித்து என்னை மீண்டும் மிருக வைத்தியராக்கிக் கொண்டேன்…..![]()
தொடரும் .
![]()