Featureகட்டுரைகள்

சாணக்கியத்தை இழந்து, இணங்கிய அரசியலில் டக்ளஸின் வகிபாகம்!… 01 … சட்டத்தரணி செ. ரவீந்திரன்.

“ செய்திகள்தான் அரசியலுக்கு முக்கியம் “ – சாணக்கியர் அன்று சொன்னது !

“ நேற்றைய செய்திதான் நாளைய வரலாறு “ ஊடகங்கள் இன்று சொல்வது !

( அங்கம் -01 )

சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா.

நந்த வம்சத்தால் முற்றாக அழிக்கப்பட்ட மௌரிய வம்சத்தில், தப்பிய சிறுவன் சந்திரகுப்தன் தலைமறைவாக வாழ்ந்து, மீண்டும் தனது அரசுரிமையை எப்படிப் பெற்றான்…? என்பது ஒரு வரலாறு.

அதே நந்தவம்சத்தால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர், நந்த வம்சத்தினரை வீழ்த்துவதே தனது இலட்சியம் என்றிருந்தவர்.

சந்திரகுப்தன், சாணக்கியரை அணுகி, நந்தவம்சத்தை அழிக்கும் பணியில் தனக்கு உதவுமாறு கேட்டதுடன், அவரது புத்திமதியின் வழியில் நடக்கவும் தயாரானான்.

சாணக்கியர், சந்திரகுப்தனுக்கு அரசியல் என்றால் என்ன..?, ராஜாவாக வேண்டும் என்றால் யாரையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்…? , யாரையெல்லாம் தூரத்தில் வைக்க வேண்டும்…? , யார் பேச்சைக் கேட்க வேண்டும்..? முதலான புத்திமதிகளைக் கூறினார்.

அவர் சந்திரகுப்தனிடத்தில் , “ நீ திடீரென மக்கள் முன்தோன்றக் கூடாது, முதலில் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய் என்ற செய்தியை மக்களுக்கு பரப்பவேண்டும், அதன் பின்பு உன்னை இங்கு பார்த்தோம், அங்கு பார்த்தோம், எதிர்பாராத விதத்தில் தோன்றினார், அப்படி இருந்தார், இப்படி இருந்தார் என்ற ஊகங்களின் அடிப்படையில் செய்திகளை அறிந்தவர் மூலம் பரப்பவேண்டும்.

ஏனெனில், செய்திகள்தான் அரசியலுக்கு முக்கியம்.

மக்கள் உனது வரவை எதிர்பார்க்கிறார்கள், உனக்கு ஆதரவு தருவார்கள் என்பதை தெரிந்து கொண்டுதான், சரியான நேரத்தில் நீ வெளிப்பட வேண்டும் “ என்றார்.

பின்னர், மக்கள் மத்தியில் அந்த உத்திகளைப் பயன்படுத்தி ஆர்வத்தை எழுப்பிவிட்டு, “ சந்திரகுப்தனைப் பாதுகாக்க நீங்கள் இலட்சக் கணக்கில் திரண்டு வரவேண்டும், அப்படிச் செய்வீர்களா, அப்படி வருவீர்கள் என்றால் அவனைக் கொண்டு வருவேன் “ என்று கூறி, அவர்களிடம் அந்த ஆர்வத்தை படிப்படியாக வளர்த்து, சந்திரகுப்தனை களத்தில் இறக்கி, நந்தவம்சத்தை வீழ்த்தி தனது இலட்சியத்தையும் சாணக்கியர் அடைந்தார்.

இந்த வரலாற்றின் அடிப்படையில்தான் பெருமளவில் ரசிகர்களின் ஆதரவும் வசூலும் பெற்ற பாகுபலி திரைப்படம் அமைந்தது.

ஓரளவில் இந்த உத்திகளையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் “ தான் அரசியலுக்கு வருவேன், எப்பொழுது வருவேன், இப்பொழுது சொல்ல முடியாது, மக்கள் கேட்கும்போது வருவேன் “ என்று அடிக்கடி சொல்லி, தனது வரவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் ஆவலைத் தூண்டி, தனது சாணக்கியர்களான ஆலோசகர்களின் புத்திமதிகளோடு களத்தில் இறங்க முயற்சித்தார். இப்போது திடீரென, “ அரசியலிலிருந்து விலகி நிற்கிறேன், சுகவீனத்தால் ஒதுங்குகிறேன் “ என்று பரப்புரை தருகிறார்.

இந்த உத்திகளெல்லாம் புலிகள் தரப்பிலும் பிரபாகரனை முன்வைத்து நடத்தப்பட்டு, அவர் ஒரு ஆதர்ஷ விடுதலை நாயகனாக வடிவமைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பல செய்திகளால் உலாவ விடப்பட்டவர்.

அந்த வடிவமைப்புக்கு பிரபாகரனிடம் ஓர் ஆளுமைப்பண்பும் இலட்சியப்பற்றும் அர்ப்பணிப்பும் இருந்தது.

அவர் மறைந்து வாழ்ந்தாலும், எப்படியாக வாழ்கிறார், புலிகள் அவரை எவ்வளவு பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள், அவரை அணுகுவது எவ்வளவு சிரமம், என்ற செய்திகளால் அவர்தான் எங்களது ஒரே தலைவன், அவர் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு முத்திரை குத்தப்பட்டது.

இவையெல்லாம் யதார்த்தத்தை மிஞ்சிய ஊதப்பட்ட பிம்பங்கள் போன்று ஒரு கதாநாயக வழிபாட்டின் அடிப்படையில் நடந்தவை.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இந்தச்செய்திகள் கிலியைக் கொடுத்தன என்பதை மறக்க முடியாது. பிரபாகரனது பெயர் இன்றைக்கும் அவர்களை அந்தக் கிலியால் ஆட்டிப்படைக்கிறது என்பதும் உண்மை.

ஆனால், இறுதிக் கட்டப் போரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள். அந்த மக்கள் பிரபாகரனையோ புலிகளையோ பாதுகாக்க இலட்சக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் திரண்டு நின்று போரிட்டு, அதனால் மரணிக்கவில்லை. இரு பக்கத்து வியூகங்களுக்குள்ளும் அகப்பட்டவர்கள். பிரபாகரனும் அவருடன் சென்றோரும் போர் வலயத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இன்னுமொரு பிரதேசத்திற்குப் போக எத்தனித்த நேரத்தில் ஏற்பட்ட மோதலில் இறந்தார்கள் என்ற பரப்புரைகள் இருக்கின்றன.

“ அவர் சாகவில்லை, தக்க தருணத்தில் வருவார் “ என்று, அவரைச் சார்ந்தவர்கள், முக்கியமாக பழ. நெடுமாறன் முதலானோர் செய்திகள் தந்தார்கள் ! இப்பொழுதும் தருகிறார்கள் ! ! அப்படி அவர் தப்பியிருந்தால் சந்திரகுப்தன் போன்று இன்னுமொரு கிலியாக சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் அவர் உருவாகலாம். அதனால் எங்கள் தரப்புக்கும் கொஞ்சம் பலம் இருந்திருக்கும்.

ஆயினும், சாணக்கியர் “ மக்கள் உனது வரவை எதிர்பார்க்கிறார்களா…. நீ செய்ய விரும்புவதை ஆமோதிக்கிறார்களா… என்பதை தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் அவற்றை செய்ய வேண்டும், மக்கள் விரும்பாததைத் திணித்தால் அவர்களது ஆதரவு இல்லாமல் ஆர்வம் குன்றும். ஆகவே அதைத் தெரிந்துகொண்டு நடப்பவன்தான் சரியான அரசியல் விற்பன்னன், மக்களை ஆளுவதற்கு தகுதியுள்ளவன் “ என்று சந்திரகுப்தனுக்கு எடுத்துச் சொன்னார்.

 

இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவான காலத்தில், அது மக்களால் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கபட்டு, அவர்கள் ஆயிரக்கணக்கில் கூடிய சுதுமலை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்தில் கிட்டு, மாத்தையா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய போராளிகள், “ சிறிலங்கா எப்படி தங்கள் வீரர்களால் மடக்கப்பட்டது “ என்று பேசினார்கள்.

அவற்றையெல்லாம் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பும் ஆர்வமும் புலிகள் ஆயுதங்களைக் கையளித்து, சண்டையில்லாத ஒரு நிலைமையை ஊருக்கு கொண்டுவருவார்களா என்பதாகத்தான் இருந்தது.

கடைசியில் பிரபாகரன் எழுந்து பேசியபோது, அவரும் வரலாற்றைச் சொல்லி, முடிவில் “ தாங்கள் இந்தியாவை நம்பி தமிழ் மக்களின் பாதுகாப்பை அவர்களின் கைகளில் விட்டு ஆயுதங்களை கையளிக்க ஒத்துக் கொள்கிறோம் “ என்று அறிவித்தபோது மக்களின் கரகோஷ ஒலி வானைப் பிளந்தது.

அந்தக் கூட்டத்தின் வீடியோ ஒளிப்பதிவைப் பார்த்தால் மக்களின் எதிர்பார்ப்பின் பின்னணியிலிருந்த கரகோஷ ஒலியைக் காணலாம்.

அதேசமயம் அந்த கரகோஷத்தால் பிரபாகரனின் முகத்திலிருந்த ஏமாற்றத்தையும் விசனத்தையும் கூட பார்க்கலாம்.

பல்லாயிரக்கணக்கில் அன்று மக்கள் எதற்கு திரண்டு வந்தார்கள் என்று சாணக்கியரின் புத்திமதியில் அதனை பிரபாகரன் கணித்திருக்க வேண்டும். அன்றில் அதன் பின்னர் தொடர்ந்த நாட்களில் அவரது மதியுரைஞரின் பேச்சைக் கேட்டாவது நடந்திருக்க வேண்டும்.

அதன் பிறகு மதியுரைஞர் நோர்வே பேச்சு வரையில் பங்கு பற்றிவிட்டு, லண்டன் சென்று விட்டார். கருணா வந்து தன் வழி சென்றார். இவற்றைச் சாதகமாக்கிய மஹிந்த தனது திட்டங்களை அமுல்படுத்தினார்.

இந்த விளைவுகளை விபரிக்கும் மனநெருடல்கள் இந்த ஆக்கத்திற்கு வேண்டாம்.

அடுத்து, இனி நான் குறிப்பிடப் போவது , விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னாளில் வன்முறையைக் கைவிட்டு, ஜனநாயக அரசியலுக்கு வந்தவரின் அரசியல்பயணம் பற்றியதாகும்.

அவர், இந்தப்பதிவில் நான் தெரிவிக்கும் சாணக்கியர் குறிப்பிட்ட உத்திகளையும், செய்திகளையும் விடுதலைப் போராட்ட காலத்திலோ, அல்லது தான் நம்பிய அரசியலுக்காகவோ, தன் இருப்புக்காகவோ, தனது பெயருக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை.

‘‘போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி என்மேல் தூற்றுவோர் தூற்றட்டும், தோற்காத என் வழியை ஏற்றது நம் வரலாறு மாற்றத்தை தேடும் எம்மின இலட்சியத்தை வெல்வேன் “ என்று வீணைக் கொடியை ஏந்தி – ஓங்கி அசைத்து நாடாளுமன்ற அரசியலில் மக்களிடம் வாக்குகளைக்கேட்டவர்.

தன்னோடு இணைந்த தோழர்களின் தேவைகளை தனக்குமுன்னர் கவனித்து, அவர்களோடு உறவாடி, உணவருந்தி , எல்லோரையும்

சமனாக நடத்தி, ஒரு இடதுசாரி தத்துவ பின்னணியில் அரவணைத்து இயங்குபவர் என்று அறியப்பட்டவர்.

அந்த நாட்களில் ஈ.பி. டி.பி. யின் அதிகாரத்திலிருந்த தீவுப்பகுதி மக்கள், தாங்கள் பலவந்தமாக வேலை வாங்கப்படுகிறோம், தங்கள் மீன் அறாவிலைக்கு பறிக்கப்படுகிறது, தமது கருவாடு வர்த்தகத்தை அநியாயமாக கொள்முதல்படுத்தப்பட்டு ஈ.பி.டி. பி. யினரால் ஏற்றப்படுகிறது முதலான கூக்குரல்கள் எதிரொலித்தன.

அதேபோன்று 2002 இலிருந்து 2009 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா படைகளுடன் ஒத்தாசையாக இயங்கி, புலிகளின் ஆதரவாளர்கள் என்று கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட கணக்கில்லாத இளைஞர்களைத் தேடி பெற்றோர் இவர்களது அலுவலகங்களுக்கும் முகாம்களுக்கும் அலைந்தார்கள்.

இவைகள் எல்லாம் மக்கள் மனதில் என்றும் பட்டவர்த்தனமாக இருக்கின்றன. காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. அதற்காக உறவினர்கள் இன்றும் அலைகிறார்கள்.

டக்ளஸ் தேவானந்தா, இதுவரையில்

நடந்துள்ள தமிழரது விடுதலை அரசியல் போராட்டங்கள் முழுமையிலும் அனுபவப்பட்டவர். அதில் முழுமையாக அமுங்கி, பாதிப்படைந்தவர். அதனால் பல இழப்புகளை தனிப்பட்ட ரீதியிலும் தம்பியை – சகோதரியை என்று பல சொந்தங்களையும் இழந்தவர்.

அவரோடு தோள் கொடுத்து நின்றவர்கள் – சிங்கள அரசியல் தலைவர்கள் உட்பட – அவரை வாஞ்சையோடும் பிரமிப்புடனும்தான் பார்க்கிறார்கள். அணுகுகிறார்கள். தங்களது நம்பிக்கைக்கு உரியவராக கருதுகிறார்கள். செயல்படுகிறார்கள்.

அவரது உயிரைப் பறிப்பதற்கு புலிகளின் பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. ஒரு கண் பார்வையும் மங்கி, தலையில் பலத்த காயங்களையும் தாங்கி, உயிர் பிழைத்து மீண்டும் மீண்டும் எழுந்து நின்று அரசியல் செய்பவர்.

அதனால் பூனை ஒன்பது முறையும் செத்து பிழைக்கும் (Cat has nine lives) என்ற அடைமொழிக்கு இலக்கணப்படுத்தப்படுபவர்.

அவரைப்பற்றி மேலும் குறிப்பிட அவருக்கு உந்து சக்திகளாகவோ முன்னோடிகளாகவோ அவரது வாஞ்சையில் இருந்த ஒன்றிரண்டு பேரை குறிப்பிடவேண்டும்.

ஒருவர் ( அமரர் ) கே.சி.நித்தியானந்தா. சுருக்கமாக நித்தி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். இலங்கை அரச சேவையில்

சாதாரண லிகிதராக (Clerk) இணைந்து, படிப்படியாக நிர்வாக சேவைகளுக்கு உயர்ந்து இளைப்பாறியவர்.

இடது சாரிக் கொள்கைகளால் கவரப்பட்டு, அவற்றை கடைப்பிடித்து, சேவையாற்றிய காலங்களில் பொது எழுதுவினைஞர் சங்கத்தில் பதவிகள் வகித்து, அதன் தலைவராக பல காலம் பணியாற்றினார். இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர். டி . சில்வா, பீட்டர் கெனமன், டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பாலா தம்பு, ரி.பி.இலங்கரத்னா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

டி.யூ.குணசேகராவை கம்யூனிஸ்ட் கட்சியில் வளர்த்ததே இவர்தான். அதனால், இலங்கை அரசியலில் பொது எழுதுவினைஞர் சேவை சங்கத்தின் மூலம் எல்லோராலும் அறியப்பட்டவரானார்.

நித்தியின் ஆளுமையால், எழுதுவினைஞர் சங்கம் போராட்ட களத்தில் குதிக்க நினைத்தால் ஏனைய தொழிற் சங்கங்கள் பலவும் ஆதரவு தந்து நாட்டை முடக்கும் நிலைவரும் என்று அவர்களின் கோரிக்கைகள் பல அரசாங்க தலைவர்களால் சுமுகமாக தீர்க்கப்படுவது உண்டு.

1970 இன் முற்பகுதியில் இடதுசாரிகளிடையே வளர்ந்த தர்க்க ரீதியான வேறுபாடுகளும் அவற்றின் தாக்கங்களும், அவர்களைப் பிளவுபடுத்தவும், அதன் விளைவாக இனரீதியான ஓரங்கட்டலும் அவர்களிடையே தொடர்ந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரமசிங்காவின் பொறுப்பில் ரோகண விஜேவீர, பற்றிக் லுமும்பா ( Patrick Lumumba) பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க அனுப்பப்பட்டார். ரோகண விஜேவீர கம்யூனிஸ்ட் தத்துவங்களால் கவரப்பட்டமையால் ரஷ்ய அரசு அவரை தங்கள் அனுசரணையில் கற்பிக்க வழி வகுத்தது.

ஆனால், விஜேவீர அங்கு சென்ற சமயம் இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்து, ஒன்று என். சண்முகதாசன் தலைமையில் சீன சார்பாக இயங்கியது. சண்முகதாசனுக்குச் சார்பாக ரோகண விஜேவீர செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டில் அவரது கற்கைநெறி முடியுமுன்னரே அவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் இலங்கை வந்ததும் சண்முகதாசனையும் புறந்தள்ளி, முதலாளி வர்க்க அரசாங்கங்கள் மேல் வெறுப்பும் கோபமும் கொண்டிருந்த சிங்கள இளைஞர்களை ஊக்குவித்து, 1971 இல் ஏப்ரில் கிளர்ச்சியை நடத்தினார்.

சிறிமாவின் ஆட்சியில் இந்தக் கிளர்ச்சி இந்தியாவின் உதவியோடு ஈவிரக்கமில்லாமல் அடக்கப்பட்டு, பல சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

நடந்த இரத்தக் களரியைப் பார்த்து இடதுசாரிகள் அதிர்ந்து போனாலும், அவர்கள் கண்டும் காணாதது போலிருந்து விட்டார்கள்.

ரோகண விஜேவீர சிறையிலிருந்தார். அவர் வழிவந்த சிங்கள இளைஞர்களே இடதுசாரிக் கொள்கைகளை முன்னெடுத்தனர்.

இந்திய விஸ்தரிப்புவாதத்தை தமிழரின் ஊடாக இந்த நாட்டிற்குள் ஊடுருவ விடக் கூடாது, சிங்கள – தமிழ் மக்கள் இணைந்த இடதுசாரி ஆட்சியே இனவொற்றுமைக்கு வழி என்பது அவர்களின் பலமான சித்தாந்தங்களில் ஒன்றாய் அமைந்தது.

பாரம்பரிய இடதுசாரிகளான டாக்டர் என்.எம்.பெரேரா , கொல்வின், ஆர்.டி.சில்வா போன்றோர் தலைமை தாங்கிய சமசமாஜக் கட்சி ( L. S. S. P ) நாட்டில் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழியாக இருந்தால் ஒரு நாடு, ஆனால் சிங்களம் மட்டும் அரச கருமமொழியானால் இரண்டு நாடுகளாகும் என்று 1956 இல் இருந்தே பேசி வந்தவர்கள்.

இதனை கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்தது. வளரும் ஜே.வி.பியின் தாக்கத்தாலும், சீனப் பகுதியின் வளர்ச்சியினாலும், தங்களது எதிர்காலம் கேள்விகுறியாகிறது என்ற பயத்தில் இந்த இருமொழி கொள்கைகளெல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு, அவர்கள் இனவாதத்தில் ஊறியிருந்த சிறிமாவின் ஆட்சியை அரவணைத்து, மந்திரிகளாகினர்.

அதே கொல்வின் ஆர்.டி.சில்வாவே சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்று 1972 ஆண்டின் புதிய அரசியலமைப்பை தமிழரை புறந்தள்ளி நிறைவேற்றினார்.

இவற்றினால் அவர்களை நம்பியிருந்த – இணைந்தியங்கிய – தமிழர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து ஒதுங்கினார்கள், ஒதுக்கவும்பட்டார்கள்.

இவர்களில் முதன்மையானவர் தொழிற்சங்கவாதி நித்தியானந்தா. தொழிற் சங்கங்களையும் இடதுசாரி தத்துவங்களையும் இனப்பாகுபாடே இனி நிர்வாகிக்கும் என்றும், எந்த அனுசரணை அரசியலும் இந்த நியதியை மாற்றப்போவதில்லை என்றும் தனது அனுபவத்தாலேயே உணர்ந்தார்.

அந்த உணர்வுகளால் இன ரீதியாக தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை தோற்றுவித்து அதனோடு இயங்கினார். கோடீஸ்வரன் அதன் தலைவரானார். பாலசுப்பிரமணியம் காரியதரிசியானார். தமிழர்

சிங்களம் படித்தால்தான் சேவையில் பதவி, சம்பள உயர்வு என்ற சட்டத்தை எதிர்த்து கோடீஸ்வரனூடாக சங்கம் வழக்காடி வெற்றி அடைந்தது.

பாலசுப்பிரமணியம் பின்னாளில் திருச்செல்வம் அமைச்சரானபோது அவரின் காரியதரிசியாகப் பணியாற்றியவர்.

( தொடரும் )

( நன்றி: யாழ். காலைக்கதிர் )

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *