கட்டுரைகள்

நாங்கள் யார்?… 5 …. ( கட்டுரை ) ….. ஏலையா க.முருகதாசன்.

நாங்கள் யார் என்பததை அறிய எங்கிருந்து எதனை ஆரம்பமாகக் கொண்டு அறிவது என்பதற்காக ஒரு தொடக்கப் புள்ளியைத் தேர்வு செய்வது எவ்விதத்திலும் சாத்தியப்படாது.

தனிமனித இயல்பு நிலை என்பதும் எது சார்ந்த இயல்பு நிலையை மனிதன் கொண்டிருக்கிறான் என்பதும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

அண்ணளவாக உலக மக்களின் தொகை 750 கோடி என அறியப்படுகிறது.இந்த 750 கோடி மக்களும் தனித்தனி உள்ளக்கிடக்கைகள் கொண்டிருப்பவர்கள்தான்.

இந்தக் உள்ளக் கிடைக்கைகளை அவரவர் மொழி சார்ந்தும் மதம் சார்ந்தும் கலைப்பண்பாட்டு அலகுகள் சார்ந்தும் பழக்கவழக்களிலிருந்தும் அத்துடன் இவையனைத்தையும் நீக்கிவிட்டு தனிமனிதர்களின் குணங்களை ஆராய வேண்டியுள்ளது.

இந்தக் கட்டுரை நகர்த்திச் செல்வதற்கு எடுகோளாகவே ‘எக்ஸ்’ என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கதாபாத்திரத்தை 750 கோடி மக்களுக்குள் உலாவவிட்டு கண்டறிவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.இந்த „ எக்ஸ்’ என்ற குறியீட்டுக் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து கொள்ளும் கூடுவிட்டுக் கூடு பாயும்.

இந்த எக்ஸ் கதாபாத்திரத்துடன் நிழலாக நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்பது யாரென்றால் அது உன்னிப்பாக கவனிக்கும் நுண்மையான ஊடுருவும் அறிவாகும்.

இந்த எக்ஸ் கதாபாத்திரத்துடன் கோவிலுக்குப் போனேன்.எக்ஸ் கோவிலுக்குள் நுழையுமுன்பே தேவையில்லாமல் கோவிலைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.கடவுள் என்று ஒன்றுமே இல்லையென்று நினைக்கும் எக்சுடன் நானும் உள்ளே போனேன்.

எல்லோரும் போல அவனும் எல்லா விக்கிரகங்களையும் கும்பிட்டான்.கும்பிடும் போதும் இந்தக் கல்லால் செய்த விக்கிரத்தை நான் ஏன் கும்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கோவிலைச் சுற்றி வந்தான்.

கைகள் வணங்கிக் கொண்டிருக்க இறைபக்தி எதுவுமே இல்லாது அவன் இயந்திரமாகச் செயல்பட்டான்.கோவில் வணிகமாகிவிட்டது என்று நினைத்தவாறே குருக்கள் நீட்டிய விபூதி சந்தனம் எல்லாவற்றையும் நெற்றியில் இட்டுக் கொண்டான்.

வணங்குதல் முடிந்ததும் பக்தர் ஒருவருக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தான.; நான் அவனாகி அவன் நானாகிய நிலை என்பதால் பக்கத்தில் இருந்த பக்தரிடம் அவரின் ஊர் பற்றிக் கேட்டான்.அவர் சொன்னதும் இவருக்கு வேலை இல்லை அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே அவ்வளவு தூரத்தில் இருந்தா வந்தீர்கள் என்றான்.

கோவிலுக்குள்ளே நுழையும் போது தேவையில்லாமல் கோவிலைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தவன் தனக்கருகில் இருந்த பக்தரிடம், கட்டாயம் கோவில்கள் தேவை எமது சமயத்தை வளர்க்க வேண்டும் என்றான்.

கோவில்களின் தேவைபற்றி பெரிய பிரசங்கமே செய்தான்.சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம் நான் சொல்வதை உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறார் என எக்ஸ் நினைத்தான்.

அப்பொழுது ஒரு பெண் அவனருகில் வந்து வணக்கம் சொன்னாள் எக்சும் வணக்கம் சொன்னான்.அந்தப் பெண்ணுக்கு வணக்கம் சொல்லும் போதே கோவிலுக்கு வருகிற மாதிரியே வந்திருக்கிறாள் அழகுராணிப் போட்டிக்கு போவது போலல்லவா வந்திருக்கிறாள் என்ற எக்ஸ் நினைத்துக் கொண்டே இன்றைக்கு மிக எளிமையாக வந்திருக்கிறீர்கள்.சில பெண்கள் கோவில்களை திருமண வீடு மாதிரி நினைக்கினம் என்றான்.

அவனருகில் இருந்தவர் அதை ஆமோதித்தார்.நான் இந்தப் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது இவர் ஆமோதிக்கிறார் என எக்ஸ் நினைத்தான்.

கோவில் பூசை முடிந்து வெளியே வந்த எக்ஸ் தன்னோடு பேசியவரைப் பார்த்தான்.அவர் எக்சுக்கு கிட்ட வந்து நீங்கள் அடிக்கடி கோவிலுக்கு வருவீர்களோ என்றார்.

வேறவேலையில்லாமல் நான் அடிக்கடி ஏன் இங்கு வருவேண்டும் என்று எக்ஸ் நினைத்துக் கொண்டே கோவிலுக்கு வந்தால் நிம்மதி ஏற்படும் என்றான்.

அப்பொழுது எக்சுக்கு வணக்கம் சொன்ன பெண்ணும் அவனக்கருகில் வர நீங்கள் இன்றைக்குப் பேரழகியாக இருக்கிறீர்கள் என அவன் சொல்லும் போதே தனக்குள்ளை இவளுக்கு பெரிய அழகி என்ற நினைப்பாக்கும் என்று நினைத்தான்.

ஒரு தனிமனிதனை அவனின் பெற்றோர் தொடங்கி கல்விச்சாலைகள் உள்ளிட்டு சமூகம் வரை செப்பனிட்டாலும், நல்ல குணங்களுக்கான இசைவாக்கத்தைப் பெற்றிருந்தாலும் பிசிறில்லாத குணம் எவரிடமும் இருப்பதற்கு சாத்தியம் இல்லை.

நான் யார்? நாங்கள் யார்? மனிதர்கள் யார்? மனிதன் யார்?.குணங்கள் என்றால் என்ன?.

மானிடவியலின் எந்த ஆய்வு அளவு கோலும் மனிதனின் குணங்களை அவனின் மனப்புறள்சிகளை முற்றுமுழுதாக அளந்தறிய முடியாது.

இதுவரைதான் இவ்வளவுதான் என்பது ஆய்வாளர்கள் தமக்கான எல்லையை முற்றப்புள்ளி வைத்து முடித்தாலும் முற்றப்புள்ளியை கடந்து செல்ல வைக்கும் மனிதனின் குணங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button