கட்டுரைகள்

பாரம்பரிய உடையெனும் பம்மாத்து!… சங்கர சுப்பிரமணியன்.

பாரம்பரிய உடை என்பதெல்லாம் அவரவர்
வகுத்துக் கொண்டது. ஆன்மீகத்தில் இருப்பவர் ஆன்மீக அடையாளங்களை உடல்மீது கொண்டால்தான் ஆன்மீகம் என்பது போல. உள்ளத்தில் அது இருந்தால் போதாதா? ஒரு இனத்தின் பாரம்பரிய உடை என்பதை எவர் வகுத்தார்? எவரும் வகுக்க வில்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அவரவர் வசதிக்கேற்ப அணியும் உடையை எப்படி பொதுவான பாரம்பரிய உடை என்பது?

சீருடை போன்று ஒரே மாதிரி எந்த நாட்டில் வாழ்ந்தாலும் உடை அணிந்தால் மட்டுமே அதை அவ்வினத்தின் அடையாள உடையாக ஏற்கலாம். தமிழின அடையாளமாக ஒரேமாதிரி உடையை இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அணிகிறார்களா? ஒருவர் தோளில் துண்டு போட்டால் ஒருவர் நீளமான துண்டை கழுத்தைச்சுற்றி தொங்கவிடுகிறார்.

ஒருவர் கரையில்லாமலோ அல்ல மெல்லிய கரையுடன் உள்ள வேட்டி உடுத்தினால் மற்றவர் ஒரு சாண் அளவில் சரிகை கரையோடு  உடை உடுத்துகிறார். மலையாளப் பெண்கள் ஓணம் பண்டிகையில் உடுத்தும் புடவையை வேண்டுமானால் இன அடையாளமாக கொள்ளலாம். அதிலும்கூட விதவிதமாக வரத் தொடங்கிவிட்டன.

தமிழ்ப் பெண்களை எடுத்துக்
கொண்டாலும் அப்படியே. புடவைதான் நம் இன அடயாளம் என்றாலும் ஒருவர் சாதாரண புடவை அணிந்தால் இன்னொருவர் ஆடம்பரமான புடவை அணிகிறார். ஒருவர் தம் பொருளாதார வேற்றுமையைக் காட்டப்பயன்படுத்த உதவும் ஆடையை எவ்வாறு இன அடையாளமாகக் காட்டமுடியும். அதிலும் கொடுமை என்னவென்றால் இதை பாரம்பரிய உடை என்கிறார்களே அதைத்தான் ஏற்க மனம் மறுக்கிறது. எதை பாரம்பரிய உடை என்பது?

கோபாலசாமியின் மூதாதையர் இலை தளைகளை உடுத்தியருந்தனர். பின் அவர்
வழித்தோன்றல்கள் கொன்று தின்ற பிராணிகளின் தோலை உடுத்தினர். விவசாயம் செய்ய ஆரம்பித்த பின் பருத்தி கண்டுபிடிப்பால் கோவணம் கட்ட ஆரம்பித்து அதன் பின் முண்டு கட்ட தொடங்கி வேட்டிக்கு மாறியிருப்பார்கள். பெண்களும் இதையொட்டியே உடை அணிந்திருப்பார்கள். அதன் பின் பட்டு மற்றும் செயற்கை இழை கண்டுபிடித்தபின் உடை உடுத்தும் முறையும் மாறி இருக்கிறது.

இதில் எந்த காலகட்டத்தில் வாழ்ந்த தமிழனின் உடையை பாரம்பரிய உடையாக ஏற்பது. பாரம்பரியம் என்றாலே தொன்மரபுதானே. அப்படியானல் தொன்மரபு உடையை பாரம்பரிய உடை பாரம்பரிய உடையா அல்லது இப்போது ஒவ்வொருவருர் தம் விருப்பத்துக்கு உடுத்துகிறார்களே அது பாரம்பரிய உடையா? தலை சுற்றுகிறதே. இதில் சிலர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிவதே தமிழர் மரபு என்கிறார்கள். அப்படியென்றால் நீண்ட மேலங்கியையும் நீண்ட துண்டையும் எந்த மரபில் சேர்ப்பது?

ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப ஒரு விழாவில் எந்தவித பண்பாடும் கெடாத உடை அணியலாம். சில இனத்தவர்கள் சாவு வீட்டில் கருப்பு உடை அணிந்திருக்கும் வழக்கம் உண்டு. நமது வழக்கு சாவு வீட்டில் ஒப்பாரி. மகிழ்ச்சி என்றால் குலவை. தாய்ப்பாசத்தில் தாலாட்டு. களைப்பென்றால் ஏலேலோ என்ற உள்ளத்தில் இருந்து எழுகிறது. அதை உடையில் காட்டியதில்லை. விதவிதமாய் உடுத்தினாலும் விதிவைத்து உடை உடுத்தாத சமூகத்தில் பாரம்பரிய உடை என்ற ஒன்று இப்போது பவணி வருகிறது.

ஒரு நாட்டில் வெப்பமான இடத்தின் ஆலயத்திலுள்ள பூசாரி மேலாடை இன்றி இருக்கும்போது அதே நாட்டிலுள்ள குளிரான இடத்தில் தலையில் குல்லா பாதத்தில் காலுறை என்று பூசாரி இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆடை உடுத்துவதே மானம் காக்கத்தான். அதை மரபைக் காக்கும் விதமாக மாற்ற முயல்வதேன்?

எல்லா நாட்களிலும் விருப்பம்போல் உடையணிபவர்கள் விழா சமயத்தில் மட்டும் பாரம்பரிய உடை அணிவதென்றால் அது பம்மாத்து அல்லவா? உண்மையிலேயே பாரம்பரிய உடை மீது ஆர்வமிக்கவர்கள் அதை தினமும் அணியவேண்டும். சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது போல. பாரம்பரிய உடை அணிந்தால் மட்டும் போதுமா?
முதலில் உலகத் தமிழர் அனைவருக்கும் அது எப்படிப்பட்ட உடை என்பதை வரையறுக்க வேண்டும். அதன்பின் அதை தமிழர் எந்நாட்டில் வாழ்ந்தாலும் கண்டிப்பாக அணியவேண்டும்.

அப்படியின்றி அவரவர் விருப்பத்துக்கு ஒரு உடை அணிந்து கொண்டு அவரவர் மனதில் அதை பாரம்பரிய உடை என்றால் அது சரியாகாது. வேறு வழியின்றி நாமும் இக்கூத்துக்கு துணைபோக வேண்டியுள்ளது. இதற்கு தமிழினம் ஒரு இன அடையாள உடையை வரையறை செய்யாதா? அது சரி, தமிழைக் காக்கவும் தமிழினத்தை ஒன்றாய்த் திரட்டவுமே தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இதில் இது வேறா என்றும் வேறு பிழைப்பு இருந்தால் போய் பாருங்கள் என்று எண்ணுவதையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button