இலக்கணம் இனிதும், இக்கணத் தேவையும்!… அண்டனூர் சுரா.


பிழை தெரியாமல் வாழ்வதும், பிழையில்லாமல் வாழ்வதும் ஒன்றல்ல. முந்தைய வாழ்வை நாம் என்ன பெயரிட்டேனும் அழைத்துக்கொள்ளலாம். ஆனால் பிழையின்றி வாழ்தல் என்பது அறநெறி வாழ்வு! இலக்கிய இங்கிதங்களிலும் அப்படித்தான். இங்கு இலக்கியம் என்பது எழுதுதல் மட்டுமல்ல. மொழியைப் பரிமாறுதல். இதற்குள் பேச்சு, எழுத்து, ஓவியம் எனப் பல கலைகளும் இருக்கின்றன.
பிழையில்லாமல் ஒரு படைப்பை வெளிக்கொணர்வதும், பிழையே இல்லாமல் ஒரு படைப்பைப் படைப்பதும் ஒன்றுபோல் தெரிந்தாலும் இரண்டும் வேறு வேறு. மகாகவி சி.சுப்பிரமணிய பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் இருவரும் கவிஞ – பத்திரிகையாசிரிய – மொழி செயற்பாட்டாளர்கள். பாரதி எழுதும் படைப்புகள் பிழைத்திருத்தத்திற்குப் பிறகே அச்சு ஏறும். ஆனால், பாரதிதாசனுக்கு அப்படியான ஒருவர் இடையில் தேவைப்படவில்லை. காரணம், பாரதியார் எழுதுகையில் அவரையும் அறியாமல் சந்திப்பிழைகள் வந்துவிடுவதுண்டு. பாரதிதாசனுக்கு அப்படியான பிழைகள் நேர்ந்திடவில்லை.
எவ்வளவு பெரிய படைப்பாளனும், அவரது படைப்பில் சந்திப்பிழை, மரபுப்பிழை, வல்லின மிகு, மிகா இடங்களைச் சுட்டிக் காட்டுகையில் கூனிக்குறுகவே செய்வான். இது, மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு நிகழ்ந்திருக்கிறது, ஜெயகாந்தனுக்கும் நடந்தேறியிருக்கிறது. எழுதுவதும் பேசுவதும் பெருங்கலையாக இருக்கலாம். அதைப் பிழையின்றி செய்கையில், அருங்கலை வடிவம் கொண்டு, கோபுரம் ஏறுகிறது.
புலவர் நன்னன், தவறின்றித் தமிழ் எழுதுவோம், என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலை அரும்பெருஞ்சுவடி என்றே சொல்ல வேண்டும். தவறின்றி எழுத, தொடக்க நிலையில் பிழைகளைக் களைதல் வேண்டும். தொடக்க நிலையில் பிழைகளைக் களைவது எப்படி? என்கிற மில்லியன் டாலர் கேள்விக்குப் பதில் நா.முத்துநிலவனின் ‘இலக்கணம் இனிது’ என்கிற கையடக்க நூல். பல எழுத்தாளர்கள் ஒரு கட்டத்தில் தேக்கநிலையை அடைவதற்கும், பல பேச்சாளர்கள் ஒன்றிரண்டு மேடையோடு தேங்கிப்போவதற்கும், அவர்கள் கையாளும் பிழைகள் ஒரு காரணம், என்பதை உள்வாங்குவதோடும் இந்நூலை அணுகி, வாசிக்கத் தொடங்கலாம்.
ஒருவரின் பயன்பாட்டில் மொழிப்பிழை நேர்வது நோய் அல்ல. நோயியம். நோயியம் என்பது நோய் அல்ல, குறைபாடு. தொடக்கத்திலேயே, மொழி ஊட்டம் கொடுப்பதன் மூலம்,
மொழியைச் சுகாதாரமாக மீட்டெடுக்கலாம். இதைக் கற்பிதமாகப் பார்க்க வேண்டியதில்லை. வெற்றியாளர்களின் அனுபவம்.
பாரதியார் 1908 ஆம் ஆண்டு புதுச்சேரி வந்தடைந்தார். அரவிந்தர், வ.வே.சு அய்யர், கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன், பாரதியார் இவர்களின் சங்கமத்துடன் பங்காரு பத்தர் என்கிற ஆசிரியரும் இணைகிறார். பாரதியார் இலக்கணக் கெட்டித்தன்மையை உதறி, பாமர மக்களுக்குப் புரியும் படியாக எளிய கவிதை, எளிய வடிவமென கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய கவிதைகள் பங்காரு பத்தர் என்கிற மொழியாசிரியர் கைக்குச் சென்றது. அவர் பாரதியார் எழுதிய பாடல்களை எடுத்துவைத்துக்கொண்டு, அதிலுள்ள பிழைகளைப் போவோர், வருவோரிடம் குறையாகச் சொல்லிக்காட்டினார். ‘ சுட்டுக்கு முன்னாலே வல்லெழுத்து மிகுங்கிற சாதாரண இலக்கணமே கூட தெரியல’ எனப் பாரதியைப் பற்றிப் பாரதிதாசனிடம் சொல்ல, அச்சுட்டுகை பாரதியை முன்னோடியாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசனைக் கூனிக் குறுக வைத்தது. பாரதியாரை அவர் சந்தித்துக் கேட்டார், ” அங்குக் கண்டான் ” என்பதை “அங்கு கண்டான், என எழுதியிருக்கிறீர்களே, இது நன்றாகவா இருக்கிறது? ” என்று. “ அங்கு கண்டான் என்பதும் சொல்ல நன்றாகத்தானே இருக்கிறது” என்ற பாரதி சிரிக்கச் செய்தார். ( பாவேந்தர் நினைவுகள் – முருகுசுந்தரம் )
இலக்கணத்தை மீறுவது ஒருவகைக் கட்டுடைத்தல்தான், மறுப்பதற்கில்லை. கட்டுடைத்தல், மொழியை வளர்த்தெடுத்தலுக்கு மாறாக மொழியைச் சிதைப்பதாக இருந்துவிடக்கூடாது, என்பது நா.முத்துநிலவனின் வேண்டலும், விருப்பமுமாக இருக்கிறது.
மனிதனைப்போலவே மொழியும் பரிணாம வளர்ச்சி கொண்டது. உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும், கையாள்தல் என்கிற நிலையிலிருந்து பராமரித்தல் நிலையை அடைந்து, சுத்திகரித்தல் என்கிற நிலையை எய்தியிருக்கின்றன. சுத்திகரித்தல் என்பது மொழியை இயந்திரத்தனம் படுத்துவது. இடம், பொருளில் சரியான பொருத்தப்பாடு. பள்ளி என்பதை பல்லிக்கூடும் என எழுதிப் பள்ளிக்கூடத்தை விளக்கிவிடலாம். ஆனால் பள்ளி என்பதை பல்லியென கூகுளில் தேடினால், ஊர்வன பல்லியையே காட்டும். அல்லது, பள்ளிக்கூடம் என்று அதுவாகவே பொருள்கொண்டு தேடச் செய்யும்.
YOUTUBE என்பதை தொடக்கத்தில், நாளிதழ்கள் நீகுழல் என்றே எழுதிவந்தன. அச்சொல் பொருள் மயக்கம் தருவதாக இருக்க, மொழி சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு, வலையொளி என்றானது. இப்படியாக நிறையச் சொற்களைச் சொல்லலாம். இச்சொற்கள் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ZOOM என்பது வலையரங்கம், WEB என்பது இணையம்,… இப்படியாக. அனைத்து மொழிகளும், அதன் சொற்களும் வணிக மொழியாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் வேலை கொடு என்பதும், வேலைக் கொடு என்பதும் ஒன்றைப் போலிருக்கும் ஒன்றல்ல. இங்கு ‘க்’
என்பது வெறும் சந்தி எழுத்து மட்டுமல்ல. வல்லினம் மிகு, மிகா குறித்து சந்தேகங்கள், தமிழ்களின் தேசிய சந்தேகம் என்றே சொல்ல வேண்டும். அதற்கு இந்நூல் தீர்வு தந்துள்ளது.
THE OLDMAN AND THE SEA ஹெர்னஸ்ட் ஹெமிங்க்வே எழுதிய இந்த நாவல் நோபல் பரிசு பெற்றது. இதைத் தமிழில் இலக்கணம் தெரியாத ஒருவர் மொழிபெய்ர்ப்பதாக இருந்தால் எப்படி மொழிபெயர்ப்பார்? கிழவனும் கடலும் ! ஆனால் இதுவா சரியாக இருக்க முடியும்? கடலும் கிழவனும் என எழுதுவதே சரி! காரணம் அகர வரிசை. க கா கி கீ ,…இந்த அகர வரிசைக்கான விளக்கம், இந்நூலில் உண்டு.
ஜெயகாந்தனின் பிரபலமான நாவல், ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘ இந்த தலைப்பு சரியா, என இந்நூலில் கேள்வி எழுப்பியுள்ளார். ‘ ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ என்றே இந்நாவலுக்குப் பெயர்சூட்டியிருக்க வேண்டும். இதைவிடவும் சரியான தலைப்பு ” ஓர் உலகம் ஒரு மனிதன் ஒரு வீடு ” என்றே இருக்க வேண்டும். எதுகை, மோனை, பெயரழகு, சொல்லழகு கருதி அத்தலைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, என்கிறார் முத்துநிலவன்.
தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படியும் வல்லின மெல்லின வரிசையிலும் அடுக்கப்பட்டுள்ளவை. வல்லின எழுத்தைத் தொடர்ந்து மெல்லின எழுத்துகள் இடம் பெற்றுள்ள ‘ பெரிய ‘ ற , ‘சிறிய ‘ ர என்பவை இடையின ர கரம், வல்லின ற கரம் என அழைக்கப்பட வேண்டுமென்பதை, மொழியாசிரியர்க்குரிய அதிகாரத் தொனிப்பு இல்லாமல், கைகூப்பிய வேண்டுகோளாக வைக்கிறார். இதை வாசிக்கையில் எனக்குக் கரம்பக்குடி என்கிற ஊர் கறம்பக்குடி என எழுதப்பட்டு வருவதும், பெரிய ஊராக வளர்ந்து வருவதால், பெரிய ‘ ற ‘ போட்டு எழுதுகிறோம், என ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இடிப்பார் இல்லாது போனால், மன்னன் மட்டுமல்ல, மொழியும் கெடும். ஒரு சொல் தவறாகப் பரவுவதற்கு முன்பு, அதை எப்படியேனும் தடுக்கவும், திருத்தமும் செய்திட வேண்டும். மோரீசுத் தீவு நாட்டில் ஏழாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. தமிழக அரசின் சார்பில் சென்ற குழுவில் புலவர் நன்னனும் இருந்தார். அவர், அந்நாட்டில் பார்த்த ஐந்நூறு ரூபாய்த்தாளில் ‘ஐநூறு ‘ என்று எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தார். இத்தவற்றைச் சுட்டிக் காட்டி அவர் உசாவியபோது அதை வடிவமைத்தவர்கள், இந்தியாவிலுள்ள ஐந்நூறு ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருந்த தமிழ் வடிவத்தை அப்படியே தாமும் பின்பற்றி எழுதியதாகத் தெரிவித்தார்கள். பிறகு அவர் இந்தியா வந்து ஐந்நூறு ரூபாய்த் தாளை வாங்கிப் பார்த்தார். அதில் மோரீசு நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல ‘ ஐநூறு ரூபாய்’ என்றே எழுதப்பட்டிருந்தது. ஐநூறு என்பது தவறென்றும் ஐந்து + நூறு – ஐந்நூறு என்பதே சரி, என்றும் அவர் கலந்துகொண்ட கூட்டங்களின் வாயிலாக தொடர்ந்து பேசச் செய்தார். அதன்பிறகு இந்தியாவில் வெளியான ஐந்நூறு ரூபாய் பணத்தாள் ஐந்நூறு என்று திருத்தி அச்சானது.
நா. முத்துநிலவன் அவர்கள், மொழியின் சரியான பதப்பயன்பாட்டு மீது எப்பொழுதும் அதீத அக்கறை காட்டி வருகிறவர். அவர் கலந்துகொள்ளும் எந்த நிகழ்விலும், சொல், பொருள் பிழைகளைத் தயங்காது சுட்டிக்காட்டி, திருத்தம் செய்கிறவர். இந்நூலில் ‘சில சந்தேகங்கள்’ என்கிற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், சில சொற்றொடர்களுக்குத் திருத்தங்கள் தந்திருக்கிறார். ஆசிரியை – ஆசிரியர் ; ஐய்யனார் – ஐயனார்; கத்தரிக்கோல் – கத்திரிக்கோல் ; சுவற்றில் – சுவரில் ; பதட்டம் – பதற்றம் ; முஸ்லீம் – முஸ்லிம் ,.. இப்படியான சொற்கள் இன்றும் புழக்கத்திலிருப்பதையும், அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இந்நூலை வாசிக்கும் யாரும் உணரவே செய்வார்கள். இதுதவிர வடமொழிக் கலப்புச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களும் உண்டு.
நூலின் கடைசியில், தமிழில் பிழையில்லாமல் எழுதவும், பேசவும் படிக்க வேண்டிய நூல்களென ஒன்பது நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்த வரிசையில் பத்தாவது நூலாக இடம்பெறத்தக்க நூல், ‘ இலக்கணம் இனிது ‘. இந்நூல் தந்த, நூலாசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு தமிழ்கூறு நல்வாழ்த்துகள்.
நூல் – இலக்கணம் இனிது
வகை – கட்டுரைகள்
நூலாசிரியர் – நா.முத்துநிலவன்
வெளியீடு
பாரதி புத்தகாலயம்
ஜனவரி -2021
விலை – ரூபாய் 90.00
![]()
பயனுள்ள நூல் பற்றி படிக்கும் ஆவலைத் தூண்டும் பயனுள்ள கட்டுரை. நன்றி தோழர்.
அருமையான கருத்துரை.வாழ்த்துகள்.