Featureகட்டுரைகள்

மல்லிகைஜீவாவின் (1927 -2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள்!… முருகபூபதி.

யாழ். பல்கலைக்கழகத்தில் தனது சைக்கிளை பறிகொடுத்தார் !

79 வயதிலும் காதலிக்க விரும்பினார் ! !

தன்னை அடையாளம் காண்பிக்காமல் பிச்சை எடுக்கவும் விரும்பினார் ! !

முருகபூபதி.

ஈழத்தின் தர்மாவேசக்குரல் மல்லிகை ஜீவா, தனது குரலை இம்மாதம் 28 ஆம் திகதி நிரந்தரமாக நிறுத்திக்கொண்டாலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கை தலைப்பட்டினத்திற்கு அப்பால் புறநகரமான மட்டக்குளியவில் அமைந்த காக்கைதீவு என்ற இடத்தில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்திலிருந்தவாறு மௌனத்தவமியற்றிக்கொண்டிருந்தார்.

மல்லிகை ஜீவாவுடன் எனக்கிருந்த உறவு நான்கரை தசாப்தங்களுக்கும் மேற்பட்டது. 1971 முதல் 1987 தொடக்கம் வரையில் ஒவ்வொரு மாதமும் அவருடன் பல மணிநேரங்களை செலவிட்டிருக்கின்றேன்.

அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கும் இலக்கியப்பயணம் மேற்கொண்டேன். தலைநகரில் அவருடன் வீதிவீதியாக சுற்றியலைந்தேன். அவருக்குப்பிடித்தமான உணவகங்களில் பசியையும் போக்கினோம். அவருடனான பயணம் தமிழகம் வரையும் வியாபித்திருந்தது.

அதனால், அவரது 93 வயது முதுமையில் அவரது உடல் நிலையை கருதி, மறைவுச்செய்தி எந்தநிமிடத்திலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதாயிருந்தாலும், அச்செய்தி உறுதியானபோது உள்ளம் சமநிலையின்றி தவித்துப்போனது.

மின்னஞ்சல் ஊடாகவும் காணொளிகள் வாயிலாகவும் வந்துகொண்டிருந்த பதிவுகளை கண்ணுற்றபோது, மனம் பேதலித்து

தொண்டை அடைக்கிறது. விம்மலை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருக்கிறது.

உடன் பிறப்பினை இழந்துவிட்ட சோகம்தான் மனதை அலைக்கழிக்கிறது.

அதிலிருந்து விடுபடுவதற்கு மல்லிகை ஜீவாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களையும் மறக்கமுடியாத நிகழ்வுகளையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஜீவாவும் சைக்கிளும்

அவரை 1963 ஆம் ஆண்டு முதல் முதலில் சைக்கிளுடன்தான் அவரை யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். அந்தசைக்கிள்தான் அவரிடமிருந்த முக்கியமான உடைமை. அதில் அவர் யாழ். குடாநாடெங்கும் சுற்றியலைந்தார்.

அதனை எண்பது ரூபாவுக்கு வாங்கியிருந்தார். பின்னாளில் என்னிடமும் ஒரு சைக்கிள் இருந்தது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மல்லிகையிலும் எழுதியிருக்கிறார். மல்லிகை யாழ். கஸ்தூரியார் வீதியில் அவருடைய தந்தையின் ஜோசப் சலூனின் பின்புறத்து அறையில் மல்லிகையின் பக்கங்களை வெள்ளீய அச்சுக்களில் கோர்த்த பின்னர் அவற்றை பக்குவமாக ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி காங்கேசன்துறை வீதியில் அமைந்த ஶ்ரீலங்கா அச்சகத்திற்கு எடுத்துவந்து அச்சிடக்கொடுப்பார்.

ஒருநாள், யாரோ ஒரு பாதசாரி குறுக்கே வந்து அவரது சைக்கிளை மோதியதனால், அச்சுக்கோர்க்கப்பட்ட அந்தப்பக்கங்கள் அனைத்தும் சீர்குலைந்து நடுவீதியில் சிந்திவிட்டன.

சைக்கிளை ஒரு பறம் சாத்திவிட்டு, சிதறிக்கிடந்த எழுத்துக்களை கூட்டி அள்ளி எடுத்துச்சென்றார்.

பின்னர் சில வருடங்கள் கழித்துத்தான் அவர் யாழ். ராஜா தியேட்டருக்கு பின்புறம், கஸ்தூரியார் வீதிக்கும் கே.கே. எஸ். வீதிக்கும் இடையில் ஊடறுத்துச்செல்லும் குச்சொழுங்கையில் ஒரு சிறிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மல்லிகை காரியாலயத்தை தொடக்கினார்.

அவரிடம் நீண்டகாலம் அச்சுக்கோப்பாளராகவிருந்த சந்திரசேகரம் அண்ணர் தினமும் தமது ஊர் நீர்வேலி மதுவனிலிருந்து தனது

சைக்கிளில் வந்து பணியாற்றுவார். அவருக்கு தினக்கூலி கொடுக்கவேண்டும்.

அதற்கும் சிலசமயங்களில் ஜீவா சிரமப்படுவார்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வரவேண்டும் என்று விரும்பியவர்களில் ஜீவாவும் ஒருவர். அது சம்பந்தமாக மல்லிகையில் ஆசிரிய தலையங்கங்களும் எழுதினார்.

1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைந்ததும், அதனை வரவேற்றும் ஆசிரியத்தலையங்கம் எழுதியதுடன், அதன் முதல் தலைவராக பணியேற்ற பேராசிரியர் கைலாசபதி மற்றும் அங்கு விரிவுரையாற்ற வந்த இதர பேராசிரியர்கள் சிவத்தம்பி, வித்தியானந்தன், கலாநிதிகள் நுஃமான், சுப்பிரமணிய அய்யர், மௌனகுரு , சித்ரலேகா, நித்தியானந்தன், சண்முகதாஸ், நிர்மலா, மற்றும் ஏ.ஜே. கனகரத்னா, ஆ. சிவநேசச்செல்வன், சோ. கிருஷ்ணராஜா உட்பட சில கலை, இலக்கியவாதிகளை ஜீவா ஆழமாக நேசித்தார்.

அவர்களுக்கு மாதாந்தம் மல்லிகை பிரதிகளை எடுத்துச்சென்று வழங்கினார்.

பல்கலைக்கழக மாணவர்களும் மல்லிகை காரியாலயம் வந்து உசாத்துணைக்குத் தேவையான குறிப்புகளை எழுதிச்செல்வர்.

ஒரு நாள் ஜீவா யாழ். பல்கலைக்கழக வளவில் விட்டுச்சென்ற அவர் நேசித்த அவரது சைக்கிள் காணாமல்போனது. திருட்டுப்போன அவரது சைக்கிள் இறுதிவரையில் கிடைக்கவேயில்லை.

மதத்தை நம்பாமல் மருத்துவரை நம்பியவர்

அவரது மகன் திலீபன் குழந்தையாகவிருந்த காலப்பகுதியில் காலை உணவுக்கு அவன் ஆசைப்படும் அப்பம் வாங்கிக்கொடுக்கவும் வழியின்றி, அவன் துயில் எழுவதற்கு முன்பே வீட்டை விட்டு புறப்பட்டுவிடுவார்.

ஜீவாவின் வீடு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒரு சிறிய ஒழுங்கையில் அமைந்திருக்கிறது. அவரது மனைவியின் பெயர் புஷ்பராணி, மூத்த மகள் சுவர்ணலதா, இளைய மகள் பிரேமலதா, திலீபன்தான் வயதில் குறைந்த ஒரே மகன். அவன் அப்பாவின் செல்லம். கூட்டங்களுக்கும் அப்பாவுடன் தொற்றிக்கொண்டு வந்துவிடுவான்.

சுவர்ணலதாவுக்கு இதயத்தில் துவாரம் தோன்றியதால் உடல் உபாதை இருந்தது. யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றிய இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் நற்குணம்தான் ஜீவாவின் மகளுக்கு சிகிச்சையளித்தார்.

கொழும்புக்கும் அழைத்து சிகிச்சை செய்வித்தார். அந்தப்பிள்ளையின் சித்தியும் ஜீவாவுடன் வந்திருந்தார். மருதானையில் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் அந்த சித்தி பிரார்த்தனைக்கு மகளையும் ஜீவாவையும் அழைத்துச்சென்றார்.

ஜீவா வெளியே நின்றார். அவருக்கு மருத்துவரில் மாத்திரமே நம்பிக்கை இருந்தது !

மருத்துவர் நற்குணத்தின் மகத்தான சேவைபற்றியும் மல்லிகையில் ஜீவா எழுதினார்.

ஜீவாவின் தாயாரின் மரணம்

யாழ்ப்பாணத்தில் ஜீவாவின் தாயார் மரணமடைந்தபோது, அவரது இறுதிச்சடங்கின் பின்னர் பூதவுடல் நல்லடக்கத்திற்காக மயானம் சென்றது.

அந்த நிகழ்வு முடிந்ததும், ஜீவா நேரே றீகல் தியேட்டரில் ஆங்கில திரைப்படம் பார்க்கச்சென்றார். அவர் ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் சார்லி சப்ளின்.

ஜீவாவுக்கும் இளமையில் காதல் வந்தது. அவரது முதல் காதல் நிறைவேறாமல் தோல்வியில் முடிந்தது. அந்த யுவதி ஜீவாவின் வீட்டுக்கு அருகில் வசித்த உயர்சாதியைச்சேர்ந்தவர். இருவரும் உளமாற நேசித்தனர்.

ஒருநாள் இரவு, வேலிமறைப்பிலிருந்து இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப்பார்த்துவிட்ட அந்த யுவதியின் தாயார் ஜீவாவை கையெடுத்துக்கும்பிட்டு மன்றாடிக்கேட்டு, தனது மகளை விட்டுவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.

“ தங்கள் சாதிசனம் மகளுக்கு ஏதும் செய்துவிடும் தம்பி. தயவுசெய்து விட்டுவிடு. உன் காலில் விழுந்தாவது கேட்கிறேன் “ என்றதும், ஜீவா அந்தக்காதலைத்துறந்தார்.

பின்னர் தமது உறவினரின் மகளை திருமணம்செய்து மூன்று பிள்ளைகளின் தந்தையானார். தமது 75 வயதுக்குப்பின்னரும் தன்னை யாரும் காதலிக்கமாட்டார்களா..? அவ்வாறு காதலிப்பவருக்கு இலக்கிய உணர்வு இருக்கவேண்டும் “ என்று லண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிச்சை எடுக்க விரும்பினார்

ஜீவாவுக்கு பல விநோதமான விருப்பங்கள் இருந்தன. அவர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் அன்றாடம் காணும் பிச்சைக்காரர்கள் குறித்து அவதானம் இருந்தது.

பிச்சைக்காரர்கள் வீடுவாசல் இன்றி, தெருவோரங்களிலும் மரநிழலிலும் படுத்துறங்கும் காட்சிகளை பார்த்துவந்த ஜீவா, அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்..? அந்த அனுபவத்தையும் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று விரும்பியிருந்தார்.

தான் யார் என்பதை அடையாளம் காண்பிக்காமல், இலங்கையில் தான் என்றைக்குமே நடமாடாத பிரதேசத்தில் பிச்சைக்காரனாக வேடமிட்டு, மக்களிடம் தானம் வாங்கிச்சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் அவரது மனதில் துளிர்த்தது.

ஆனால், அந்த அவரது விநோத ஆசை என்றைக்கும் நிறைவேறவில்லை.

கொழும்பில் புறக்கோட்டை ஶ்ரீகதிரேசன் வீதியில் ஒருநாள் அவர் நடந்து சென்றபோது ஒரு தீப்பெட்டி தெருவோரத்தில் கிடந்ததை கண்ணுற்று, அதனை எடுத்துப்பார்க்கிறார்.

அதனுள்ளே ஐநூறு ரூபா மடித்துவைக்கப்பட்டிருந்தது. அது யாருடையதோ பணம். அதனை தான் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று எண்ணத்தில் அதனை ஐந்து ரூபா நாணயக்குற்றிகளாக மாற்றியிருக்கிறார்.

அந்த குற்றிகளை தனது நேஷனல் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டு, அந்த வீதியில் நடந்து திரிந்து ஒவ்வொரு நாணயக்குற்றிகளையும் மெதுவாக போட்டுக்கொண்டு சென்றிருக்கிறார்.

அவ்வாறு நூறு ஐந்து ரூபா நாணயக்குற்றிகளையும் வீதியின் இருமருங்கும் போட்டுவிட்டு, தனது மல்லிகை காரியாலத்திற்கு திரும்பினார்.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *