எழுத்தும் வாழ்க்கையும்!…. அங்கம் 26….. முருகபூபதி.

மல்லிகை ஜீவாவின் தமிழகப்பயணம் பற்றிய நேர்காணல் கட்டுரை ஏற்படுத்திய திருப்பம் !
ரஸஞானி பிறந்த கதை !
வீரகேசரி பணிமனைக்கு வெளியே பிரதேச நிருபராக சிறிதுகாலமும், உள்ளே முதலில் ஒப்பு நோக்காளராக 1977 நடுப்பகுதி முதலும் 1983 இற்குப்பின்னர் சில மாதங்கள் விளம்பரப்பிரிவிலும் அதன் பிறகு ஆசிரியபீடத்திலும் பணியாற்றிவிட்டு, 1987 ஜனவரி 31 ஆம் திகதியுடன் விடைபெற்று, பெப்ரவரி 06 ஆம் திகதி தாயகத்தை விட்டு வெளியேறினேன்.
எழுத்துலகத்திற்குள் வந்தது முதல் எங்கிருந்தாலும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் “ சோறு “ போட்ட வீரகேசரியையோ, அங்கு பணியாற்றிய சகோதர, சகோதரிகளையோ நான் மறப்பதில்லை.
இன்றளவும் அவர்களில் பலருடன் தொடர்பிலிருக்கின்றேன். மேலும் பலர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர். சிலர் எனக்கு முன்பும் பின்னரும் தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். டிஜிட்டல் யுகத்தில் கணினியில் தமிழ் அறிமுகமானதும் பல அச்சுக்கோப்பாளர்கள் வேலை இழந்து, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர்.
நான் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து அவ்வப்போது வீரகேசரியில் எழுதிவந்தமையால் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வதியும் எனது நண்பர்களான இலக்கியவாதிகள், நான் ஆசிரியபீடத்தில்தான் பணியாற்றுகிறேன் என நம்பிக்கொண்டு தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள். சில சமயங்களில் அந்த இணைப்பு ஆசிரிய பீடத்துக்கு வந்தால், செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ அங்கிருக்கும் சிற்றூழியரிடம் தகவல் சொல்லி அனுப்புவார்.
இது எனக்கு மிகுந்த சங்கடத்தையும் ஏற்படுத்தும்.
செய்திகளை முதல் கட்டத்தில் ஒப்புநோக்கும்போது இரண்டு பேர் இணைந்து அதனைச்செய்யவேண்டும் . ஆசிரியபீடத்திலிருந்து வரும் செய்திகள் எழுதப்பட்ட பிரதிகள் முதலில் அச்சுக்கோப்பாளர்களுக்குச்செல்லும், அங்கிருப்பவர்கள்
அச்சுக்கோர்த்த செய்தியை மைபூசி ஈரலிப்பான காகிதத்தில் பதிந்து அதன் Proof Copy யை செய்தியின் மூலப்பிரதியுடன் எமது பிரிவுக்குள் நீட்டுவார்கள்.
மூலப்பிரதியை ஒருவர் வாசிக்க, மற்றவர் Proof Copy யில் நேர்ந்துள்ள எழுத்துப்பிழைகளை திருத்தவேண்டும். திருத்திய அந்தப்பிரதி உரிய அச்சுக்கோப்பாளரிடம் திரும்பிச்சென்று அவர் ஏற்கனவே அச்சுக்கோர்த்திருந்ததில் நாம் சுட்டிக்காண்பித்திருந்த பிழைகளை திருத்தி, சரியான எழுத்துக்களை வைத்து மீண்டும் மற்றும் ஒரு Proof Copy பதிவுசெய்து தருவார்.
அதனை ஏற்கனவே Proof பார்த்தவர்கள் மீண்டும் பார்க்காமல் மற்றும் ஒருவர் பார்த்துவிட்டு அனுப்புவார். அதனால், ஒருவர் கண்ணில் தவறிவிட்ட எழுத்துப்பிழைகள் மற்றும் ஒருவர் கண்ணில் தென்படும் என்பதுதான் ஒப்புநோக்கும் தொழிலில் பால பாடம்.
வெள்ளீய அச்சு எழுத்து உருபுக்கள் பயன்பாட்டில் இருந்த காலத்தில் இந்தப்பால பாடம்தான் எமக்கு பெரிதும் உதவியது.
அதனால், நான் மற்றும் ஒருவருடன் இணைந்து ஒப்புநோக்கும்போது ஆசிரியபீடத்தில் எனக்காக வரும் தொலைபேசி அழைப்புகளுக்காக எழுந்து செல்வதும் சங்கடமாகியிருந்ததுடன், என்மீது மற்றவர்கள் எரிச்சல்பட்ட சந்தர்ப்பங்களும் நேர்ந்துள்ளன.
எமது பிரிவுக்கு அருகில் உற்பத்தி மேலாளர் அறை ஒன்று இருந்தது. அங்கும் தொலைபேசி இணைப்பு இருந்தமையால், அதற்கு எனக்கு வரும் அழைப்புகளை அனுப்புமாறு வரவேற்பு உபசரணையாளர்களாக பணியாற்றும் சகோதரிகளிடம் சொல்லி வைத்துவிடுவேன்.
திருமதி விஸ்வநாதன், செல்வி தர்ஷினி ஆகியோர் அந்தப்பணியிலிருந்தார்கள்.
வீரகேசரி ஆசிரியபீடத்தில் அறுபது அண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் அன்னக்கா
என நாமெல்லோரும் அழைக்கும் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை இலக்கியவாதி, எழுத்தாளர். எனக்கு முன்பே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய மூத்த படைப்பாளி. இவருடன் முன்னர் பணியாற்றிய திருமதி யோகா பாலச்சந்திரனும் சிறுகதை எழுத்தாளரே.![]()
![]()
அத்துடன் செல்வி கமலா தம்பிராஜாவும் நாவல், சிறுகதைகள் எழுதியவர். அத்துடன் காவலூர் இராசதுரையின் பொன்மணி திரைப்படத்திலும் நடித்தவர். இவர் எழுதிய நாவல் நான் ஒரு அனாதை வீரகேசரி பிரசுரமாகவும் வெளியானது. இலங்கையில் முதல் முதலில் ரூபவாஹினி
தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கு தமிழில் செய்தி வாசிப்பாளராகவும் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவரைப்பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். இவர் கனடாவில் 2018 இல் மறைந்தார்.
நான் ஒப்புநோக்காளர் பிரிவுக்கு தெரிவுசெய்யப்பட்ட காலத்தில் யோகா பாலச்சந்திரன் குடும்ப நலத்திட்ட இலாகாவிலும் கமலா தம்பிராஜா அரச தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார்கள்.
அன்னலட்சுமி இராஜதுரை யாழ்நங்கை என்ற புனைபெயரிலும் எழுதியவர். சிறுகதை, நாவல், கவிதை , பத்தி எழுத்துக்கள் வரிசையில் விழிச்சுடர் (குறுநாவல்) – உள்ளத்தின் கதவுகள் (புதினம்) – நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு)- இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு) – நினைவுப் பெருவெளி முதலான நூல்களையும் வரவாக்கியவர்.
பின்னாளில் அன்னக்கா, ஜோதி, மித்திரன் வாரமலர், கலைக்கேசரி ஆகியனவற்றின் பொறுப்பாசிரியராகவும் விளங்கியவர். வீரகேசரியில் நீண்ட நெடுங்காலமாக பணியாற்றி வருகிறார். இவர் பற்றி எனது பெண்ணிய ஆளுமைகள் தொடரில் விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
ஆசிரிய பீடத்திலிருந்த மற்றும் ஒரு நண்பர் மூர்த்தி நல்லைலோஜினி என்ற புனைபெயரிலும் வீரகேசரியில் எழுதிவந்தார். மல்லிகையில் மலையக மூத்த எழுத்தாளர் என். எஸ். எம். ராமையா அட்டைப்பட அதிதியாக பாராட்டி கௌரவிக்கப்பட்டபோது, அதற்கான நேர்காணல் ஆக்கத்தை எழுதியவரும் மூர்த்திதான்.
இலங்கையில் எடை பார்ப்பதில் இறாத்தல் நடைமுறை மாறி, கிலோ கிராம் அறிமுகமானபோது, ஒரு தமிழ் மூதாட்டி, பேசுமாப்போன்று, நடைச்சித்திரமொன்றையும் மூர்த்தி எழுதியிருந்தார்.
“ எட.. மோனே… அது என்ன… என்ன இழவோ… கில்லோவோ… அல்வாவோ..? .” என்ற பாணியில் அந்த அங்கதக்கட்டுரை அமைந்திருந்தது.
மூர்த்தி கனடாவுக்கு புலம்பெயர்ந்தபின்னரும் எழுத்துப்பணியை தொடர்ந்தார். எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை படித்துவிட்டு தொடர்புகொண்டிருந்த நண்பர் மூர்த்தி, மிகுந்த உற்சாகமுடன் என்னுடன் மின்னஞ்சலிலும் பேசினார்.
சுதந்திரமண், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் முதலான கதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். கனடா ஊடகங்களிலும் எழுதினார். தற்போது அவருக்கு 76 வயது. பவளவிழா கண்டுவிட்ட எமது இனிய நண்பர் மூர்த்தி பற்றி மற்றும் ஒரு முக்கிய தகவலையும் இங்கு பதிவுசெய்யவேண்டும்.
எனக்கும் மற்றும் சிலருக்கும் வீரகேசரி நிறுவனம் ஒப்புநோக்காளர் தெரிவின்போது நடத்திய நேர்காணல் தேர்வில் நான் எழுதிய ஒப்புநோக்காளரின் கடமைகள் என்ற கட்டுரை பரிசீலனைக்காகவும் புள்ளியிடுவதற்காகவும் மூர்த்தியிடம்தான் சென்றுள்ளது.
இந்தத்தகவலை நான் தெரிவாகி சில வருடங்களின் பின்னர்தான் மூர்த்தி எனக்குத் தெரிவித்தார். அதனால், எனது வாழ்க்கை திசை திரும்பியதில் இவருக்கும் முக்கிய பங்கிருப்பதாக நன்றியோடு நினைவுகூருகின்றேன்.![]()
மூர்த்தி, கனடாவில் ஒரு பல்லின பத்திரிகையாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் அங்கம் வகிக்கின்றார். கிரேக்க நாட்டைச்சேர்ந்த திரு. தோமஸ் அதன் தலைவர். அவரது பரிந்துரைப்பில் மூர்த்திக்கு கனடா பிரதமர் ஸ் ரீஃபன் காப்பர் ( 2006- 2015 ) மற்றும் ஒன்ராரியோ மாநில முதல்வர் திரு. டால்டன் ஆகியோரிடமிருந்து விருதுகளும் சான்றிதழும் பெற்றவர்.![]()
நான் 2007 இல் கனடா சென்றிருந்தபோது என்னை சந்தித்து நீண்டநேரம் உரையாடிய நண்பர் மூர்த்தியும் தற்பொழுது என்னைப்போன்று பேரப்பிள்ளைகள் கண்ட தாத்தா.
சோ. ராமேஸ்வரன் என்னைப்போன்று முதலில் வீரகேசரி – மித்திரன் வவுனியா பிரதேச நிருபராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்திருந்தபோதிலும் தனது பதினைந்து வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராக வளர்ந்து, கண்ணன் என்ற தமிழக சிறுவர் இலக்கிய இதழில் எழுதத்தொடங்கியவர். இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் விஞ்ஞான முரசு என்ற இதழிலும் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.![]()
தமது வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் சம்பவங்களையும் கதைகளாக புனைந்து மித்திரனில் எழுதிவிடுவார். சிறுகதை, நாவல், நகைச்சுவை நடைச்சித்திரம், சிறுவர் கதை, நாடகம் என எழுதியதுடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் பங்கேற்ற சகல கலா வல்லவன்.
தேசிய சாகித்திய விருது உட்பட, வடக்கு – கிழக்கு மாகாணசபை வழங்கிய இலக்கியத்திற்கான விருதுகளும் பெற்றவர். அத்துடன் இவர்
எழுதிய பல சிறுகதைகள் பரிசில்களையும் பெற்றுள்ளன. சில நூல்கள் தமிழ் – சிங்கள மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் அருண். விஜயராணியின் உறவினரான சோ. ராமேஸ்வரனின் ஏற்பாட்டால்தான் வீரகேசரி வாரவெளியீட்டில் அருண். விஜயராணி, தாமரைச்செல்வி, மண்டுர் அசோக்கா, தேவமனோகரி ஆகிய நான்கு பெண் எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நாளைய சூரியன் தொடர்கதை வெளியானது.
இந்தத்தொடரையும் அச்சில் ஒப்புநோக்கியிருக்கிறேன். எனினும் இந்த பெண்கள் எவரும் எனக்கு அக்காலப்பகுதியில் அறிமுகமாகியிருக்கவில்லை!
ஸி. எஸ். காந்தி என்ற துணை ஆசிரியரும் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகள் எழுதிவந்தார். இவர் ஈழத்தின் மூத்த மலையக எழுத்தாளரும் பிரபல தொழிற்சங்கவாதியும் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான சி.வி. வேலுப்பிள்ளையின் உறவினர். காந்தியும் தொடக்கத்தில் ஒப்புநோக்காளராகவிருந்து பின்னர் துணை ஆசிரியரானவர். மறைந்துவிட்டார்.
வீரகேசரி அலுவலக நிருபராகவிருந்த அ. சொலமன்ராஜ் என்பவரும் அவ்வப்போது சிறுகதைகள் எழுதினார். பின்னாளில் இவர் மித்திரன் பொறுப்பாசிரியராகவும் அதன்பிறகு கிறிஸ்தவ மதபோதகராகவும் மாறியவர். மறைந்துவிட்டார்.
ஜி. நேசன் என்பவர் மித்திரனில் பட்லி, ஜமேலா, பூலான்தேவி முதலான பரபரப்பு தொடர்களை எழுதினார். இந்தத் தொடர்களுக்கு ஆரம்ப அடியெடுத்துக்கொடுத்தவர்தான் வீரகேசரி முன்னாள் ஆசிரியர் கே.வி. எஸ். வாஸ். இவர் ரஜனி என்னும் புனைபெயரில் எழுதிய மைதிலி மர்மத்தொடர்கதை மித்திரனில் வெளிவந்த காலப்பகுதியில் நான் பாடசாலை மாணவன்.
ரஜனி வாஸ் ஏற்றிவைத்த அந்த விளக்கின் வெளிச்சத்தில் அங்கிருந்த மேலும் சிலரும் மர்மத்திகில் தொடர்கதைகளை எழுதித்தள்ளினார்கள். அந்த விபத்தில் நானும் சிக்கவேண்டிய சந்தர்ப்பம் பின்னாளில் வந்தது. அதுபற்றியும் பின்னர் எழுதுவேன்.
இவ்வாறு இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்களும் மர்மக்கதைகள் எழுதுபவர்களும் பணியாற்றிய வீரகேசரியில் எனது இலக்கியத்தாகத்தை தணித்துக்கொள்வதற்கு முக்கியகாரணமாக விளங்கியவர் அங்கிருக்காமல் வெளியிலிருந்ததுதான் எனது விதிப்பயன் !
அவர்தான் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா.
அவரை 1963 ஆம் ஆண்டு முதல் முதலில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரி மேடையில் பார்த்தேன். அவரது நெற்றி நரம்பு புடைக்கும் தர்மாவேச உரையை அன்று கேட்டிருந்தாலும், 1971 இற்குப்பின்னர்தான் அவர் எங்கள் ஊரில் அறிமுகமாகி எனது நண்பரானார்.![]()
1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச அறிமுக அரங்கு எங்கள் இல்லத்தில் நடந்தபோது அவருக்கு மலர்மாலை சூட்டி வரவேற்றேன். அன்று முதல் இற்றைவரையிலும் கடந்த 48 வருடகாலமாக எனது நேசத்திற்குரிய மல்லிகை ஜீவா எனது வாழ்வில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்.
அதனால் குடும்ப நண்பராகவும் திகழ்பவர்.
1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவர் தமிழகம் சென்று திரும்பியிருந்தார்.![]()
ஒருநாள் ஆசிரியபீடத்திலிருந்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபால் ஒரு சிற்றூழியர் ஊடாக என்னை அழைத்தார்.
யாரோ எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துவிட்டார்களாக்கும் என நினைத்துக்கொண்டு எழுந்துசென்றேன்.
அவரது அறையில் மல்லிகை ஜீவா என்னை முகம்மலர வரவேற்றார்.
“ உம்மையும் பார்க்கத்தான் வந்தேன். “ என்றார் ஜீவா.
“ முருகபூபதி, உம்மை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜீவாபற்றி நீர்தான் ஒரு கட்டுரை எழுதித்தரவேண்டும். அவர் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அவரது பயண அனுபவங்களை எழுதித்தாரும் “ என்று இராஜகோபால் சொன்னதும் இன்ப அதிர்ச்சியடைந்தேன்.
அந்த ஆசிரியபீடத்தில் இலக்கிய படைப்பாற்றல் மிக்கவர்கள் சிலர் இருக்கும்போது, இந்தப்பணியை அவர் என்னிடம் ஒப்படைத்தமையால் சற்று திகைத்துவிட்டேன்.
அன்றைய அந்தத்தருணமும் எனது எழுத்துலக வாழ்வில் மற்றும் ஒரு திருப்பத்தை தோற்றுவித்தது.
அன்று வெள்ளிக்கிழமை. ஜீவா, அந்த வாரவிடுமுறையில் எங்கள் ஊருக்கு தமது உறவினர்களை பார்க்க வரவிருப்பதாகச்சொன்னார். எனக்கோ திங்கட் கிழமைதான் விடுமுறை நாள்.
ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பும்போது கொழும்பில் ஜீவா தங்குமிடம் சென்று அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
திங்களன்று எமது வீட்டில் ஜீவாவுக்கு மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு எனது சைக்கிளில் ஜீவாவை ஏற்றிவந்தேன். அன்றைய பகல் பொழுதில் ஜீவாவை பேட்டிகண்டு குறிப்புகள் எழுதினேன்.
எனது மூத்தமகள் பாரதிக்கு அப்பொழுது ஒரு வயது. அவள் ஜீவாவின் பேச்சை எனது அருகிலிருந்து மிரட்சியோடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவர் கையை உயர்த்தி உணர்ச்சிவசமாக பேசும்போது வாய்விட்டு சிரித்தாள்.
“ ஜீவா நீங்கள் பல மேடைகள் கண்டவர். அங்கே இருந்த பார்வையாளர்கள் வேறு. இங்கே இந்த பார்வையாளர் ஏதும் புரியாமல் உங்கள் சைகைகளை ரசிக்கிறாள் “ என்றேன்.
அந்த நேர்காணல் கட்டுரையை இராஜகோபால் 11 ஆம் திகதி நவம்பர் மாதம் 1981 ஆம் திகதி, ஜீவாவின் படத்துடன் வாரவெளியீட்டில் பதிவேற்றினார். அதனைப்படித்த பல மல்லிகை வாசகர்களும் எழுத்தாளர்களும் இராஜகோபாலுடன் தொடர்புகொண்டு அது பற்றி பேசியிருக்கிறார்கள். அந்தக்கட்டுரைக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ஒரு நாள் என்னை அழைத்து, ஒவ்வொரு வாரமும் வாரவௌியீட்டில் இலக்கிய புதினங்கள் எழுதுமாறு இராஜகோபால் பணித்தார்.
அதற்கு இருபது ரூபா சன்மானம் பெற்றுத்தருவதாகவும் சொன்னார். “ ஆனால், முருகபூபதி என்ற பெயரில் அந்தப்பத்தி எழுத்து வராது. உமக்கு வேறு ஒரு பெயர் சூட்டப்போகிறேன். “ என்றார்.
அந்தப்பெயர் ரஸஞானி !.
ஆனால், அந்த புனைபெயரில் நான்தான் எழுதுகிறேன் என்று வெளியில் தெரியக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். அதன்பின்னர் 1987 ஜனவரி இறுதி வரையில் இந்த ரஸஞானி வீரகேசரி வாரவெளியீட்டில் வலம் வந்தான்.
அந்தப்பெயரே என்னைப்பற்றி பின்னாளில் அவுஸ்திரேலியா நண்பர்கள் இருவர் எடுத்த ஆவணப்படத்தின் பெயராகவும் இடம்பெற்றது.
அவர் அரசியல் ஆய்வுகள் எழுத முன்வந்த தனபாலசிங்கத்திற்கு சத்தியன் என்றும் சமையல் குறிப்புகள் எழுதிய பற்றீஷியா ஆரோக்கியநாதனுக்கு பதார்த்தகுணா என்றும் அரசியல் அதிர்வலைக்குறிப்புகளை எழுதிய ஜோன் றெஜீஸுக்கு உளியன்
என்றும் சினிமா மற்றும் உலக அரசியல் எழுதிய சுபாஷ் சந்திரபோஸுக்கு நேதாஜி என்றும் புனைபெயர்களை சூட்டினார்.
மித்திரன் வாரமலரில் மருத்துவம், உளவியல் சார்ந்த கேள்வி – பதில் பகுதியை எழுதிய தனக்கு டாக்டர் லலிதா என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.
ஒருநாள் அல்ல, பல நாட்கள் டாக்டர் லலிதாவை பார்க்கும் ஆவலில் வீரகேசரி வாசல்வரையும் வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருக்கிறார்கள்.
பத்திரிகை ஊடகத்தின் இந்தச்செல்வாக்கு காலப்போக்கில் வந்த டிஜிட்டல் யுகத்தினால் படிப்படியாக மறைந்துபோய்விட்டது.
( தொடரும் )
![]()