கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..20…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

இந்த கோவிலில் எளிமை மட்டுமல்ல. கடவுளுக்கு சிலையே கிடையாது. இந்த மாரியம்மன் அக்கா தங்கை என இருவர் என்பதால் இரண்டு சூலங்கள் மட்டுமே இருக்கும். திருவிழாவுக்கு இரு தினங்களுக்கு முன் ஏழு குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்ணால் குயவர் ஒருவரால் பிள்ளையார் கோவிலில் வைத்து செய்யப்பட்டு பின் சுடப்பட்டு வர்ணங்கள் பூசப்படும். பின் செவ்வாய் கிழமை பிள்ளயார் கோவிலில் சப்பரம் செய்து இரு அம்மனையும் சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்பார்கள்.

சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன்
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்
பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு தெருக்களையும் வலம்வரும். அப்படி வரும்போது அந்த அம்மன் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நான்கு தெருக்களையும் சுற்றிவரும்போது பல இடங்களில் சப்பரம் நிற்கும். அப்போது ஊர்மக்கள் தேங்காய் பழத்துடன் தேங்காய் உடைத்து பூசை செய்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் நிற்கும்போதும் கரகாட்டம், நையாண்டி மேளமெல்லாம் சப்பரத்தின் முன் நடக்கும்.

நான்கு தெருக்களையும் சுற்றி கோவிலில் வந்து சப்பரம் இறங்கும்போது விடிந்து சூரியன் உதித்துவிடும். இப்படி அம்மன் சப்பரத்தில் வந்து இறங்கியபின் கயிறு குத்து, கும்மியாட்டம், வில்லுப்பாட்டு, ஆடு வெட்டுதல், படையல் போடுதல், சாமி ஆடுதல் எல்லாம் நடக்கும். மத்தியானக் கொடை என்பது மிகவும் சிறப்பாக நடக்கும். வில்லுப்பாட்டில் அம்மன் கதையைச் சொல்லும்போது சாமி ஆடுபவர்கள் கதையில் முக்கியமான இடங்களில் எல்லாம் வெறிகொண்டவர்கள் போல் ஆடுவார்கள்.

வில்லுப்பாட்டுக்கு சற்று ஓய்வு கொடுக்க கும்மியடித்து அம்மனை மகிழவிப்பார்கள்.
இந்த கும்மியடுத்தலில் ஆண்கள் மட்டுமே பங்களிப்பார்கள். சிறுவர்கள் முதியவர்கள் வரை உடம்பில் தெம்பு இருப்வர்களால் மட்டுமே இதில் கும்மியடிக்க முடியும். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த ஆட்டம் கிடுகிடுவென சூடுபிடித்து மிகவும் வேகமெடுக்கும். வேகமெடுக்கும்போது ஈடு கொடுக்க முடியாதவர்கள் தாமாகவே
வெளியேறிவிடுவார்கள். அல்லது அந்த வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாதவர்களை கும்மியின் வேகம்
வெளியேற்றிவிடும.

இந்த கும்மியை பாடிக்கொண்டே ஓரிடத்தில் நிற்கமல் சுற்றி வந்து கொண்டே இருக்கவேண்டும். சில சமயங்களில் ஆட்கள் அதிகமிருந்தால் உள்வட்டமும் இருக்கும். உள் வட்டமும் வெளிவட்டமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும்படியாக நின்றுகொண்டு சுற்றிவந்து கும்மியடிப்பார்கள். கும்மியடிக்கும்போது நடுவில் ஒருவர் நின்றுகொண்டு கும்மிப்பாட்டை பாடுவார்.

இந்த பாட்டு அம்மனைப் பற்றி அவர்கள் கதையைக் கூறுவதாக இருக்கும். அந்த அம்மன் இருவரும் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் அந்த ஊருக்கு வரக் காரணம் என்ன? வந்த பின் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்கள்? அதனபின் என்ன நடந்தது? ஊர்மக்களுக்கு
எப்படித் தெரிந்தது?  எப்படி கோவில் உருவானது என்ற கதையை பாடலாகப் பாடுவார். அவர் பாடுவதை கும்மியடிப்பவர்கள் திரும்பிப் பாடியபடி சுற்றி வந்து கும்மியடிக்க வேண்டும்.

“தன்னைதானே தனம் தன்னானே தன்னை தன்னேதானே தனம் தன்னானே” என்று நடுவில் இருப்பவர் பாடலைத் தொடங்க
கும்மி அடிப்பவர்கள் தொடர வேண்டும். கும்மி அடிப்பவர்கள் பாடி முடித்ததும் பாடுபவர் அடுத் அடியை பாட இவ்வாறு அம்மன் கதை முழுவதையும் சொல்லி கும்மி அடிப்பார்கள.

கும்மியடிக்கும்போது சட்டை வேட்டி எல்லாம் நனைந்து உடம்பெல்லாம் வியர்வை ஆறாய் ஓடும். போதாக்குறைக்கு நல்ல கோடைகாலத்தில்தான் திருவிழா நடக்கும். ஒருபக்கம் இசைத்தட்டுகளில்
பாடல் ஒலிபெருக்கியின் மூலம் அலறிக் கொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம் கரகாட்டம் நடக்கும். நையாண்டி மேளம் ஒருபக்கம் அடித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியாக நடைபெறும் விழாவினால் மகிழ்திருக்கும் அம்மன் இருவரையும் புதன் கிழமை நள்ளிரவில் இரு சலவைத் தொழிலாளிகளின் தலையில் முறத்தில் வைத்து கொஞ்ச ஆட்களுடன் காட்டில் கொண்டு வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சியாய் இருந்த மாரியம்மன் இருவரின் முகமும்
நள்ளிரவை நெருங்க நெருங்க மக்களை விட்டு பிரியப்போகிறோமே என்பதால் கவலையால் வாடத்தொடங்கும். காட்டுக்குப் போகும்போது அழுவதுபோல் முகம் மாறிவிடும்.

இவ்வளவு சிறப்பான திருவிழாவில் தன் மகனின் கயிறு குத்தலை தனது முக்கிய உறவினருக்கு கடிதத்தில் எழுதாமல் விட்ட தவற்றை உணர்ந்த அந்த அத்தை இனி
கடிதம் போட்டு தெரியப்படுத்த நாளில்லாததால் தந்தி கொடுக்க என்னிடம் வந்தார்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கிணங்க என்னதான் முக்கியமான ஆங்கில வார்த்தைகளை தந்தி கொடுக்க குறித்து வைத்திருந்தாலும் கயிறு குத்துதல் என்பதை தந்தி கொடுக்க வேண்டிய சோதனை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கயிறு குத்தலுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லவும் முடியவில்லை. தன்மானம் தடுத்தது. இதுவரை கட்டிக்காத்து வந்த கௌரவத்தையும் இழக்க விரும்பவில்லை. ஆதலால் கயிறு குத்துதல் என்பதற்கு ஆங்கில எழுத்தையே பயன்படுத்தி எழுதினேன். எல்லாவற்றிற்கும் முன் அனுபவமே காரணம்.

ஒருமுறை ஆங்கிலத்தில் கடிதம் எப்படி எழுதுவது என்பதை ஆங்கில ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் அனுப்புபவர் விலாசத்தை எழுதச் சொன்னார். மாணவர்கள் எல்லோரையும் போல் நானும் எழுதினேன். கடிதத்தை எல்லோரும் முடித்ததும் நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் எல்லோரும் சரிபார்ப்பதற்காக ஆசிரியரின் மேஜைமேல் வைத்தோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button