ஆரியின் வெற்றிக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது!…. (கட்டுரை )…. ஏலையா க.முருகதாசன்.

(எனது பார்வை) ….
ஏலையா க.முருகதாசன்.
தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனமான ஒல்லாந்து நாட்டிலிருக்கும் எண்டமொல் சைன தயாரித்து உலக நாடுகளில்உள்ள தொலைகாட்சிகளில் வேறுவேறு பெயர்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்தியத் தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒளிபரப்பப்படும் பிக்பொஸ் என்ற நிகழ்ச்சியாகும்.
இது எண்டமொல் சைன நிறுவனத்தின் தொலைக்காட்சி வணிகமாகும்.விஜய் தொலைக்காட்சியின் தலைமையக நிறுவனத்தினுடனான வணிக ஒப்பந்த நிமித்தம் விஜய் தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பில் பிக்பொஸின் நான்காவது நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துவிட்டது.
வெற்றியாளராக தமிழ்த் திரைப்பட நடிகர் என்று சொல்லிக் கொள்ளப்படுபவரும் சமூக ஆர்வலருமான ஆரி தேர்வு செய்யப்பட்டு அவர் பிக்பொஸ் வெற்றிக் கோப்பையையும் ஐம்பது இலட்சம் ரூபாயையும் வென்றிருக்கிறார்.
இவர் எப்படி இந்த வெற்றியை பெற்றார் என்பதை உற்றுக் கவனித்தால் இவருக்கான வெற்றி தன்னால் என்ற தன்வினைத்திறன் செயல்பாட்டால் இவர் இந்த வெற்றியை அடையவில்லை.
இவரோடு இருந்த போட்டியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியை அன்பளித்திருக்கிறார்கள்.மற்றவர்களின் தோள்களின் நடந்து சென்று,குறிப்பாக பாலாஜியின் தோளில் அழுத்தி நடந்து வெற்றி என்ற இலக்கைச் சென்றடைந்திருக்கிறார்.
இந்த வெற்றியை ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் ஒருவருடன் ஒப்பிடுகையில், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும்
ஒலிம்பிக் வீரர் ஒருவர் தனது உடல் வலுவிலும்,ஓடுவதற்கான பயிற்சி முறைகளிலும்,முந்துதல் என்ற நுட்பத்தினையும் தனது பயிற்சி மூலம் கற்று வைத்திருப்பார்.
பிக்பொஸ் வெற்றியாளர் ஆரி மற்றைய போட்டியாளர்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தி தனது கேவலமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
எல்லாரும் ஆகா ஓகோ என்று கொண்டாடும் ஆரியை இவர் என்ன விமர்சிக்கிறார் என பலருக்குத் தோன்றலாம், என்மீது அதிருப்தியும் தோன்றலாம்.
தனிமனித கருத்தை பொதுக்கருத்தாக மாற்றுகின்ற ஒற்றைவழிப் கருத்துப் பாதையில் நடப்பதால்தான் ஊன்றிக் கவனிக்கத் தவறுகிறோமோ என நினைக்கத் தோன்றுகின்றது.
ஆரி சமூக ஆர்வலராக பலரால் அறியப்பட்டவர் என்ற அத்திவாரத்தில்தான் அவரின் பிக்பொஸின் வெற்றியின் கற்களை இவர் அடுக்கியிருக்கிறார்.இவர் பிக்பொஸ் வீட்டிலிருந்த அனைவரையும் விட தான் புத்திசாலி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதை அவர் அங்கிருந்த நாட்களில் எதற்கெடுத்தாலும் புத்திசொல்லும் மனிதனாகவும் அதை எளிமையாகச் சொல்லாது சுற்றிவளைத்து கேட்பவர்கள் இவர் என்ன சொல்லுகிறார் என்ன சொல்ல வருகிறார் என்பதை அரைகுறையுமாக விளங்கிக் கொள்ளும் மற்றைய போட்டியாளர்கள் ஆமாம் ஆமாம் என்ற விளங்கிக் கொள்வது போல பாவனை செய்திருக்கிறார்களே தவிர இவர் என்ன எல்லாத்தையும் போட்டுக் குழப்புகிறார் என்றும் „என்னமோ சொல்கிறார்’ என்றும் தமக்குள் பேசிக் கொண்டனர்.
ஓவ்வொரு சனி ஞாயிறுகளில் அவர்களின் வீட்டுத் திரையில் தோன்றும் கமலகாசனும் நீங்கள் நீங்களாக இருங்கள் கோபத்தை அடக்குங்கள் என்ற வார்த்தையையும்,
தந்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி பார்த்தவர்கள் இதைப் பற்றி அறிந்திருக்கலாம்.அது இதுதான்.தமது மாடுகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக அதற்கென்று செய்யப்பட்ட ஒரு ஊசியால் மாடுகளின் பிட்டத்தில் ஏர்க்கால் சட்டத்தில் உட்கார்ந்து மாடுகளை விரட்டுபவரும் அவரோடிருப்பவரும் குத்துவார்கள்.மாடுகள் வலி தாங்காமல் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவையும் வேகமெடுத்து ஓடும்.அவை வலி தாங்காமல் ஓடுவதை மனிதன் தான் வெற்றியடைந்துவிட்டதாக கர்வம் கொள்வான்.ஆக மொத்தத்தில் காளைமாடுகளுக்கு செய்யப்பட்ட கொடுமைமீது மனிதன் கேவலமான வெற்றியைத் தேடியிருக்கிறான்.
கமலகாசனும் அதே வேலையைத்தான் குறிப்பாக பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலைத்தான் செய்திருக்கிறார்.
வெளித் தோற்றத்தில் அவர் சுதந்திரமான கருத்தாளர் அறிவுஜீவி என்று தோற்றப்பட்டாலும் பிக்பொஸ் நிகழ்ச்சியை பலரும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்ற என்பதற்காக கமலனகாசனுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நுள்ளிவிடும் செயலை அவர் செய்ய வேண்டும் என்பதுடன் நுள்ளிவிடும் செயலுக்கு பண்டமாற்றாக அவரின் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார மேடையாக பிக்பொஸ் மேடையைப் பயன்படுத்தலாம் என்பதும் ஒன்று.
உதாரணமாக ஒரு பெற்றோருக்கு பல பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே ஒரேவிதமான நடத்தையுள்ளவர்களாகவோ கல்வியில் ஒரே விதமான ஆற்றல் உள்ளவர்களாகவே இருப்பதில்லை.
தம்பிள்ளைகள் அனைவருமே மேம்பட வேண்டுமென்பதற்காக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கிடையில் ஒரு ஒப்புநோக்குதலைச் செய்து நடத்தையிலோ கல்வியிலோ குறைகளைக் கண்டுபிடித்துச் சதா அவர்களை குறைகூறிக் கொண்டேயிருப்பார்கள்.
இத்தகு நிலையானது எந்தப் பிள்ளையை நோக்கி கண்டனங்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டு ஒப்புநோக்குதல் செய்யப்படுகிறதோ அந்தப் பிள்ளையின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் செயலாக மாறி அவனுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி அவனை எரிச்சலடைய வைக்கின்றது.வெளிக்காட்டிக் கொள்ளாத தோற்றத்தில் அந்தப் பிள்ளைக்கு பெற்றோர் மீதும் சதோதரங்கள் மீதும் வெறுப்பு ஏற்படும் சூழ்நிலை தோன்றுகின்றது.
ஆரி பிக்பொஸ் வீட்டிலிருக்கும் மற்றையவர்களைவிட தான் அறிவுஜீவி என்ற ஒரு கர்வத்துடன் மற்றவர்களுக்குத் தான் ஆசான் என்ற கருத்தியலை மற்றவர்கள் மீது திணிப்பதன் மூலம் பலரும் அவரை எதிர்க்கும் நிலையை தோற்றுவித்தார்.
குறிப்பாக அவ்வீட்டில் உள்ளவர்கள் பிக்பொஸ் வீட்டிற்கு வெளியே சமூகத்தில் அவர்கள் யார் என்பதையும் அவர்களின் நடத்தைகள் என்ன என்பதையும் அறிந்து வைத்துக் கொண்டு அவர் அதை தனது ஏணியாக பாவித்து அவர்களை பலமுறை சீண்டி அவர்களை நோகடித்திருக்கிறார்.
ஒருவர் தவறு விட்டால் அத்தவறு அவர் மட்டுமே பொறுப்பு என்ற போது தவறைச் சுட்டிக் காட்டுவதற்கும், பலரோடிணைந்த தவறுக்கு ஒருவரை மட்டுமே குற்றம் சாட்டுவதற்கும் வேறுபாடு உண்டு.
ஆரி மற்றவர்கள் தன்மீது கோபப்பட வைக்கும் செயலை மிக நுட்பமாகச் செய்ததுடன் மற்றைய போட்டியாளர்கள்
மோசமான மனிதர்கள் என்பதை வெளி உலகத்துக்குக் காட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அவருடைய கேவலமான நரித்தந்திரத்தை பல இடங்களில் அவர் காட்டியிருந்தாலும் அதில் ஒன்றாக சோற்றை குப்பைக்குள் போட்டது (உணவை வீணடிப்பது முழுத்தவறே)யார் என்று சனம் செட்டியிடம் ஆரி கேட்ட போது தனக்குத் தெரியாது என்று சொன்ன சனம் செட்டியிடம் வியாக்கியானம் பேச நானாக இருக்கலாம் என்று அவர் சொல்கிறார்.
அத்தோடு ஆரி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசி சனம் செட்டிக்கு கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்குகிறார்.
ஆரி சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் பூதாகரமாக்கி நேரடியாக தொடுகிற மூக்கை தலையைச் சுற்றித் தொடுவது போல அங்கை சுற்றி இங்கை சுற்றி அந்த வீட்டில் உள்ளவர்களின் சுயமரியாதை மீது பெரும் தாக்குதலை ஏற்படுத்தி அவருக்கு எதிரான கோபங்களை வாக்குகளாக பெறும் நோக்குடந்தான் அவர் செயல்பட்டார்.
ஆரி தான் உள்ளும் புறமும் நல்லவன்,நல்லவனிலும் பார்க்க நல்லவன்,மற்றவர்களால்: தனித்துவிடப்பட்ட அனாதை அனுதாபத்துக்குரிய ஏதிலி என்ற உருவகத்தை இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதனை வாக்குகளாகப் பெற வேண்டுமென்பதில் குறியாக இருந்தார்.
எம்மிடம் இருக்கும் ஒரு குறைபாடு என்னவெனில் ஒருவர் இன்னொருவரில் வைத்திருக்கம் தனிக் கருத்தை கண்ணை மூடிக் கொண்டு தனக்கான சுயசிந்தனை எதனூடும் பார்க்காமல் ஓமோம் எனச் சொல்லி ஏற்கும் பழக்கமுண்டு.
தனிக்கருத்தை தமது நோக்கில் ஆய்வு செய்யாமல் அதனைப் பொதுக் கருத்தாக ஏற்கும் பழக்கந்தான் ஆரியின் உளவியல் என்ன என்பதை ஆராய முற்படாத செயலாகும்.
ஆரிக்கு கடுமையான போட்டியாளராக இருந்தவர்கள் ரம்யா பாண்டியன், பாலாஜி,ரியோ ஆகிய மூவருமே.இவர்களில் ரம்யா பாண்டியன் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக மிக நுட்பமாக நடந்து கொண்டதனால் அவரைக் கோபப்படுத்த ஆரியால் முடியவில்லை.
அடுத்து ரியோ,ரியோவை குழுத்தன்மைக்குள் கொண்டு போய் விட்டவரே ஆரிதான்.ஒரு இடத்தில் ரியோ சாதாரணமாகச் சொன்ன விசயத்தை ஆரி மிகப்பெரும் உலகப் பிரச்சினையாக ஊதிப் பெருப்பித்து அதற்கு அறுபத்தெட்டு வியாக்கியானங்களை புரியாமல் இருக்க வேண்டுமென்பதற்காகச் சொல்ல அது நோக்கியே ஆரியோ மெதுவாக வார்த்தைகளைச் சூடாக்க இறுதியில் ரியோ கெட்டவனாக தோற்றமளிக்கப்பட்டார்.
பாலாஜி தனது குடும்பத்தைப் பற்றிச் சொன்னதை ஆரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார்.எப்பொழுதும் பெற்றோரின் கவனிப்புக்கும் பாசத்திற்கும் உட்படாத பிள்ளைகள் உளரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.அத்தகு பிள்ளைகளிடம் வன்முறை எண்ணங்களும் தாழ்வுமனப்பான்மையும் ஏற்படுவது இயற்கையே.
அந்த இயலாமையை பெற்றோரின் அரவணைப்பு இல்லாத ஒரு மனிதனின் உளவியலை ஆரி பகடைக்காயாக பயன்படுத்தி அவரை கோபப்பட வைத்து அழ வைத்து அவரின் தோளின் மீது ஏறி தனது வெற்றியை ஈட்டியிருக்கின்றார்.
நீ நீயாகவே இரு ரௌத்திரம் கொள் என்று கமலகாசன் சொல்வதும் பின்னர் போட்டியாளர்கள் சீண்டலுக்கு உட்பட்டு
கோபம் ஏற்படும் போது கோபத்தை அடக்கு என்பதும் கமலகாசனின் நேர்மையற்ற ஒரு தலைப்பட்சமான புத்திமதியேயாகும்.
ஆரி மட்டுமல்ல கமலகாசனும் பாலாஜியைச் சீண்டிக் கோபப்பட வைத்திருக்கிறார்.நீ நீயாக இரு என்றால் ஒரு மனிதனிடம் எல்லா நவரச உணர்வுகளும் இருக்கும்.சீண்டினால் எவனும் கோபப்படுவான்.
ஆரியிடம் காணப்பட்ட மற்றையவர்களைவிட தான் அறிஜீவி என்ற கர்வத்தை அவர் முகத்தில் காணக்கூடியதாக இருந்தது.இரண்டு வார்த்தைகளில் எளிமையாக இலகுவாக,இயல்பாக சொல்ல வேண்டியதை சுற்றி வளைத்துச் சொல்வது ஆரியின் தந்திரங்களில் ஒன்று.
ஆரியை புகழ்ந்து தள்ளிய கமலகாசன் அவரை தனது கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான சமிக்ஞையாக சந்தேகப்பட வாய்ப்புண்டு.
ஆரியின் வெற்றி பிக்பொஸ்ஸில் பங்குபற்றிய போட்டியாளர்களின் சுயமரியாதையை சீண்டி பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.
பிக்பொஸ் வீடு கோவிலும் அல்ல, ஆன்மீக மடமும் அல்ல.நீ நீயாக இரு என்று சொல்வது பிக்பொஸ் வீட்டுக்கான வரைவிலக்கணமானால் பாலாஜின் குணாம்சங்கள் தவறானவை அல்ல.பாலாஜியை இழிவான பார்வையுடன் ஆரம்பித்திலிருந்தே பார்த்தமை நேர்மைத் தவறு.ஒருவரைக் கோபப்பட வைத்துவிட்டு கோபப்படுவதே தவறு என்று சொல்வது மிகத் தவறு.
ரம்யா பாண்டியனை விசப் போத்தல் என்றவர்கள் ஆரிதான் உண்மையான விசப் போத்தல் என்பதை உணருவார்களா?.ஆரியைத் தனியாகச் சந்தித்து கேட்டால்
அவரின் சுயரூபம் தெரியும். நல்லவன் என்பதற்கும் கெட்டவன் என்பதற்கும் வரைவிலக்கணம் என்ன?
![]()
பிக்பாஸ் என்பது முழுமையான வணிகமயமாக்கப்பட்ட பொழுது போக்கு விளையாட்டு. இதை நடத்துபவர்கள் இப்படித்தான் செல்லவேண்டும் என்ற திட்டமிடலுடன் இயக்கப்படும் ஒரு நிகழ்ச்சி. கவர்ச்சி காட்டுவதையும கட்டிப்பிடிப்பதையும் காட்டி வணிகத்தை பெருக்குவதே இதன் நோக்கம். விஜய் டிவி நினைத்தால் எவரையும் வெற்றியடையச் செய்யமுடியும். குறிப்பாக ரியோவை வெற்றியடையச் செய்திருப்பார்கள். அதை நோக்கியே காயை நகர்த்தினார்கள். ஒரு கட்டத்தில் அது அப்படி நடக்க வாய்ப்பு குறையவே ஐந்நு லட்சத்தை கேபியிடம் வாங்கிக் கொண்டு வெளியேபோக முயன்றார் ரியோ. இதற்கு வாக்கெடுப்பும் ஒரு காரணம். இந்த வாக்கெடுப்பையும் விஜய் டிவி நினைத்தால் மாற்றியிருக்க முடியும். அதை கண்காணிப்பவர் யார் என்பது யாருக்கு தெரியும்? இந்த நிகழ்ச்சியைப்பற்றி அக்கு வேறு ஆணி வேறாக படமிட்டு behindwoods tv அலைவரிசையில் தினமும் ரவீந்திரன் மற்றும் தாரா நடத்தும் biggboss v/s fatman நிகழ்ச்சியைப் பார்த்தால் ஓரளவு புரியவரும். பொதுவாக இதை ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றே பெரும்பாலானோர் கடந்து செல்வார்கள். உண்மையில் இது ஒன்றும் தரப் பரிசோதனை செய்து விருது வழங்கும் ஒலிம்பிக் போட்டி போன்றோ ஆஸ்கார் போட்டி போன்றோ தரமான ஒன்றல்ல. அவைகளிளிலேயே ஏகப்பட்ட முரண்பாடுகளைக் காணும்போது இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. மற்றவர்களின் கருத்தையும் மதிக்கிறேன்.