சிங்கப்பூரில் சிலகாலம்!…. 15 …. (உண்மைக் கதை) ஏலையா க.முருகதாசன்.

(இந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு ஒரு தகவல். சிங்கப்பூரில் அங்குள்ள தமிழர்களுடன் உரையாடும் போது அவர்களின் உரையாடல்களில் சில சொற்களின் முடிவுகளில் „லா’ என்ற எழுத்தையும் சேர்த்துக் கதைப்பார்கள்.அது கேட்பதற்கு இனிமையாக இருக்கும்)
மொலக்ஸ் கொம்பனிக்குள் நான் நுழைந்ததும் எனக்காகவே காத்திருந்தது போல சிங்கப்பூரியனான அந்தத் தமிழ்ப் பிள்ளை என்னை நோக்கி வருவதையும் கையில் ஒரு சிறிய பார்சல் இருப்பதையும் கண்டேன்.
நான் வேலை செய்ய வேண்டிய இடத்தில் உட்காரப் போன நான் எனக்கருகில் அவள் வந்துவிட்டதைக் கண்டதும் புன்முறுவலுடன் குட்டே என்று அவள் சொல்ல நானும் பதிலுக்கு அவளுக்கு சொல்ல, அந்தப் பிள்ளை அம்மா தந்துவிட்டவ லா.இதிலை கடலை வடை நான்கு இருக்கிறது இன்ரேவல்ல சாப்பிடுங்க என்றவள், அம்மா சொன்னா லா எங்க தாத்தா ஊரு சுண்ணாகம்னு என்றாள்
நாங்க பைவ் இயேர்சுக்கு முன்னே சிறீலங்காவிற்குப் போயிருக்கிறம்.மகாஜனாக் கொலிஜை நானும் பார்த்திருக்கேன்.பெரிய கொலிஜ் அது என்றவள்,அம்மா நீங்க தெல்லிப்பழைன்னு அறிந்து ரொம்பச் சந்தோசப்பட்டார். நீங்க இந்த வீக் மட்டுந்தான் இங்க வேர்க் பண்ணுவீங்கன்னு மகேந்திரன் சொன்னார்.நெக்ஸ் வீக்கும் வேலை செய்யலாந்தானேலா.
அம்மா சொன்னா தெல்லிப்பழையில தாத்தா வழிச் சொந்தக்காரங்கள் இருக்காங்க என்று,சம்ரைம் நீங்ககூட எங்க றிலேசன்ரா இருக்கலாம் லா.நீங்க மறி பண்ணினவர்
என்றத சொன்னேங்க.ஆனா உங்க கேர்ள் பிரண்ட் சாப்பாடு கோப்பி கொடுத்தனுப்புவதைச் சொல்லலே லா என்று வேகமாகச் சொன்னவள்,உங்க கேர்ள் பிரண்ட் சாப்பாட்டோ வடையையும் சாப்பிடுங்க லா சொல்லிவிட்டு தனது இருக்கைக்குப் அவள் போய்விட்டாள்.
அந்தப் பிள்ளையின் பெயர் என்னவென்று இதுவரை நான் கேட்கவே இல்லை. யோகமலரின் அன்பரவணைப்பில் இருந்த நான்,எவர் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் எனக்கு ஏற்படவேவில்லை.
வடைகளைச் சாப்பிடச் சொல்லி அந்தப் பிள்ளை சொன்னது மட்டுமல்ல அவளின் தாயார் ஒரு அனுதாபத்தில் நேற்றும் இன்றும் சாப்பாடு கொடுத்துவிடுவதையும் நிராகரிக்க முடியவில்லை.
அவளின் தாயார் தெல்லிப்பழையிலும் தங்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்றும், சிலவேளை நான்கூட அவர்களின் உறவினர் பரம்பரையிலிருந்து வந்தவராக இருக்கலாம் என்ற எண்ணம்கூட அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.அது மட்டுமல்லாது மனைவி பிள்ளைகளை விட்டிட்டு சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்கிறன் என்று இரக்கப்பட்டுக்கூட சாப்பாடுகளை கொடுத்தனுப்பியிருக்கலாம்.
யோகமலருடனான சந்திப்பு ஏற்படாதுவிட்டால், சில வேளை அந்தப் பிள்ளையின் பூர்வகத்தை அறியவும் என்னைப் பற்றியும் சொல்வதிலும்; நான் அக்கறைப் பட்டிருப்பன்.ஆனால் எல்லாமே அவள் என்பதால் அவளைச் சுற்றியும், எனது மனைவி பிள்ளைகளைச் சுற்றியும் மட்டுமே நினைப்பு முழுவதும் இருந்ததால், பொதுவான அறிமுக மரியாதை தெரிவிப்பதும் நன்றியுடனும் மட்டுமே தொடர்புகளை வைச்சிருந்தன்.
வடைப் பார்சலை வாங்கிய நான் யோகமலர் தந்த சாப்பாட்டுப் பைக்குள் வைக்கும் போதே , தான் தரும் சாப்பாட்டைத் தவிர யார் கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது என்று யோகமலர் சொன்னதால் இதையும் என்னுடைய அறை நண்பர்களுக்கு கொடுப்பம் என்று நினைத்துக் கொண்டன்.
சிறீலங்காவிலிருந்து வந்தவன், தங்களுக்கு தெரிந்த ஊரைச் சேர்ந்தவன்,குடும்பஸ்தனான ஒருத்தன் தனியாக சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்கிறவன், சில வேளை தங்களுடைய பரம்பரையோடு தொடர்பு கொண்ட உறவினனாக்கூட இருக்கலாம் என்ற எண்ணத்துடன் நேற்றுக் குண்டுத் தோசைகளையும் இன்று வடைகளையும் அவர்கள் தர,நான் சாப்பிடாமல் விட அந்தப் பிள்ளையும் அவளின் தாயாரும், நான் அவற்றைச் சாப்பிட்டிருப்பவன் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்க நான் அதை சாப்பிடாமல் விடுவது அவர்களை ஏமாற்றுவது போலவே இருந்தது.
அப்பொழுது வடைகளை நண்பர்களுக்குக் கொடுப்பது என்ற எண்ணத்தை மாற்றி யோகமலருக்கு கொண்டு போய்க் கொடுத்து நானும் சாப்பிடுவதென்று முடிவெடுத்த நான் நேற்றுத் தந்த குண்டுத் தோசை பற்றி நன்றிகூடச் சொல்லவில்லையே என்ற குற்ற உணர்வினால்;, இருக்கையைவிட்டு எழுந்து அந்தப் பிள்ளை இருந்த இடத்திற்கு போகவென எழுந்த போது,மகேந்திரன் என்னைப் பார்க்க வன் மினிட் என்று சொல்ல அவர் ஓகே என்பது போல தலையை ஆட்ட வேமாகப் போய் வெறி சொறி நேற்றுத் தந்த குழிப் பணியாரத்திற்கு தாங்ஸ் சொல்ல மறந்திட்டன், நல்ல ரேஸ்ற்றாக இருந்தது என்று பொய் சொன்ன நான், அம்மாவுக்கு தாங்ஸ் சொன்னதாகச் சொல்லுங்கள் என்றன், அந்தப் பிள்ளை நெவர் மைண்ட் லா அம்மாட்ட சொல்றன் என்றாள்.
சிங்கப்பூரியர்கள் கதைக்கும் போது மிகவும் அழகாகக் கதைப்பார்கள்.அதைக் கேட்க சுவையாக இருக்கும்.
கதைக்கும் போது வார்த்தைகளின் முடிவில் இடைக்கிடை லா போட்டுக் கதைப்பார்கள்.
அது மட்டுமல்ல அங்கு இந்தியத் தமிழர்களும் வாழ்வதால் இந்தியத் தமிழரின் பேச்சு வழக்கும் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கும் கலந்திருக்கும்.இரண்டுவிதமான பேச்சு வழக்கும் கலந்து கதைப்பதுகூட சுவையாகத்தானிருக்கும்.
அந்தப் பிள்ளையும் இடைக்கிடை ஆங்கிலச் சொற்களையும் லா வையும் கலந்து கதைச்சதுகூட கேட்க சுவையாக இருந்தது. சிங்கப்பூரியர்கள் பரவாயில்லை என்பதை நெவர் மைண்ட் லா என்று சிரித்தக் கொண்டே மெதுமையான தொணியில் சொல்வார்கள்.
நான் சிங்கப்பூருக்கு வந்த இடத்தில் யோகமலரைச் சந்திப்பன் என்று கற்பனைகூடச் செய்யவில்லை,மொலக்கிசில் இரவு வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பார்கள் என்பதையும் நினைத்ததும் இல்லை.
அவர்களில் பெண்பிள்ளைகள் இருவரும் சிறீலங்கா வம்சாவழியினராக இருப்பார்கள் என்றுகூட நினைக்கவில்லை.அவர்களில் ஒருத்தி ஒருநாள் அறிமுகத்திலேயே அடுத்த நாளே அவளின் தாயார் குண்டுத் தோசை கொடுக்க அதைக் கொண்டு வந்து தந்ததும்,இன்று கடலை வடை கொண்டு வந்து தந்ததும் எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது மட்டுமல்ல இதுதான் விதியோ விதி என்பது உண்மைதானோ என நினைத்த நான் மொலக்ஸ் விசயத்தையும் மனைவிக்கு எழுத வேண்டுமென்று நினைச்சவாறு வேலையைச் செய்து கொண்டிருந்தன்.
யோகமலர் கொண்டு வந்து தந்த உருளைக்கிழங்கு வைச்சுச் சுற்றித் தந்த பூரிகளை சாப்பிட என எடுத்த நான், வடை கொண்டு வந்து தந்தமைக்காக ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் பூரிகள் இருந்து பிளாஸ்ரிக்
பெட்டியை எடுத்துக் கொண்டு அவர்களிருவரும் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் போய் பிளாஸ்ரிக் பெட்டியைத் திறந்து பிளீஸ் எடுங்கள் என்றன்.
நோ லா வேண்டாம் லா , உங்களுக்கு ஜோகூர்பாருலயிருந்து உங்க லவ்விங் கேர்ள் பிரண்ட் கொடுத்து அனுப்பியதை நீங்களே சாப்பிடுங்க தாங்ஸ் லா என்று மறுக்க, பரவாயில்லை எடுங்கள் என்று கட்டாயப்படுத்த, எங்க ரெண்டு பேருக்கும் இது ஒன்னே போதும்,நாங்க பகிர்ந்து சாப்பிடுறம் என்று ஒரு பூரியை மட்டுமே அந்தப் பிள்ளை எடுத்துக் கொண்டாள்.
சாப்பாட்டு நேரம் முடிஞ்சு மீண்டும் வேலையைச் செய்யத் தொடங்கினன்.விடியற்காலை ஐஞ்சு மணிக்கு வேலை முடிய வழமையான பயணத்தின் ஊடாக வீட்டுக்குப் போய் அரைகுறை நித்திரை கொண்டிட்டு மீண்டும் ஜிஇ வேலைக்குப் போனன்.
அங்கும் வழமையான வேலைதான்.எங்களுடைய பஸ் நேரத்தோட ஜிஇக்குப் போய்விடுவதால் வேலை தொடங்க பதினைந்து நிமிடங்கள் இருந்தன.
நாங்கள் போகும் போது காலமை தொடங்கிய வேலை நடந்து கொண்டுதானிருக்கும்.அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது மிசின்கள் இருக்கும் இடத்திற்குப் போய் செற்றப்மென் வேலைக்காரர்களுடன் கதைச்;சுக் கொண்டிருப்பது வழக்கம்.
யோகமலர் வரும் பஸ் ஐஞ்சு நிமிசம் கழிந்துதான் வரும்.அன்றும் வழமை போல நான் எங்கை நிற்கிறன் என ஆவலாக கண்களைச் சுழலவிட்டபடியே வந்த யோகமலர் என்னைக் கண்டதும் அருகில் வந்து கையைக் கிள்ளிவிட்டு முன்னோக்கி நடக்க அவளை நான் பின் தொடர்ந்தன்.
ஓய்வெடுக்கும் மேசையடிக்குப் போனவள்,மேசையில் சாய்ந்தபடி தனது மூச்சுக்காற்று எனக்குப் படுமளவு தூரத்தில் என்னை அருகில் வரச் சொல்ல,அவளை எப்பொழுது பார்ப்பன் என்ற ஆவலில் இருந்த நான் அவளின் மூச்சுக் காற்றுப் படுவதை நானும் விரும்பினன் அதனால் அவளின் அருகில் நிற்க,புருசனாரே கொண்டு போன மூன்று பூரியையும் சாப்பிட்டனீங்களா என்று கேட்க,..ம்…சாப்பிட்டன் என்று மெதுவாகப் பதில் சொல்ல, என்ன புருசனாரோ பதில் சரியா இல்ல,ஏதோ இருக்கு…சாப்பிட்டீங்களா இல்லையா மூனையும் சாப்பிட்டு வாழைப்பழமும் சாப்பிட்டு கோப்பி குடிச்சீங்களா இல்லையா என்று அவள் என் கண்களைப் பார்த்துக் கேட்க எல்லாத்தையும் சாபபிட்டனான் என்று சொல்ல, என்னமோ இருக்கு இன்ரவேலிலை எப்படி உண்மையை அறிய வேண்டு மென்று எனக்குத் தெரியும் என்று சொன்னவள் இதாலை அறிவன் என்று தனது இதழ்களைத் தொட்டுக் காட்டியவள், நானும் ஒரு விசயம் சொல்ல வேணும் எனத் தயங்கினாள்.
நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே காலை நேர வேலைக்காரர்கள் தமது வேலையை முடிச்சுக் கொண்டு போகத் தொடங்கினார்கள்.யோகமலர் தனது மிசினில் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினாள்.
சாப்பாட்டு இடைவேளை வந்தது.சாப்பிடுவதற்கு முன்பே மொலக்சில் சாப்பிடுவதற்காக கொண்டு வந்த சாப்பாட்டை பையுடன் எடுத்து வைத்து „இன்னைக்கு நூடில்ஸ் கொண்டு வந்திருக்கிறன்.இன்னைக்கு கோப்பி இல்ல,கப்பிச்சுனோ இருக்கு,அப்பிள் பீசசும் இருக்கு’ என்றவள் எனக்கும் தனக்குமாகக் கொண்டு வந்த சாண்ட்விச்சை பெட்டியைத் திறந்து எடுத்து தந்து சாப்பிடச் சொன்னாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே,ஆமா கேட்க மறந்திட்டன் மத்தியானம் என்ன சாப்பிட்டீங்க என்றாள்.வேறென்ன சோறும் கறியுந்தான்
என்றன்.கத்தரிக்காய் கறி என்றன்.ஒரு கறிதான் அது போதுந்தானே என்றன்.
கவலைப்படாதீங்க இன்னும் ஒரு வாரந்தான், அதற்குப் பிறகு விதம் விதமாக சமைச்சுத் தருவன் என்று அவள் சொல்லும் போதே மொலக்சில் தமிழ்ப்பிள்ளை தந்த வடைப் பார்சலைக் கொடுக்க அதை யோகமலர் பிரிச்சுப் பார்த்து,மொலக்சிலை அந்தக் கேர்ள் கொடுத்தாங்களா என்றாள்.
நான் „ம் …என்று தலையாட்டினன். என்னங்க நீங்க வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசிறனீங்க,சொல்லுங்க இன்னைக்கு என்ன தயக்கம் என்று அவள் கேட்க,பூரி ஒன்றை மொலக்சில் வேலை செய்த பிள்ளைக்கு கொடுத்தனான் …..என்று இழுக்க என்னையே உற்றுப் பார்த்தவள் என்னைத் தன் முகத்தோடு சேர்த்துக் கொண்டே இதற்கா தயங்கினீங்கள்…
கடவுளே எனக்கு ஒரு நல்லவரைக் காட்டி கணவராக்கினீங்கள்..அவரை பாச்சுலராக காட்டியிருக்கலாமே என்றவள்,நீஙகள் இல்லாமல் நான் வாழமட்டன் என்றவள் தலையைக் குனிந்து விம்மி விம்மி அழுதாள்.ஆகாயத்தைப் பார்த்து கையைக் கூப்பி கடவுளே இவர் ஊருக்குப் போவதற்கு முதல் இவர் மடியில் என் உயிர் போக வேணும்.அந்த வரத்தைக் கொடுத்தால் அதுவே எனக்குப் போதும் என்றவளை அணைத்து அவளின் கண்களை துடைத்துவிட்டன்.
ஆறுதலடைந்த அவள் தனது தோழிகள் இருவரையும் அழைத்து வடைகள் இரண்டைக் கொடுக்கும் போது யார் எனக்கு வடை தந்தது என்பதைச் சொன்னவள் எனக்;கு ஒன்றைத் தந்துவிட்டு தானொன்றைச் சாப்பிடத் தொடங்கினவள்,அந்தக் கேர்ள் வேற என்ன உங்களோட பேசினாங்க என்று கேட்டாள் நான் உங்க பெண்டாட்டி உண்மையைச் சொல்லுங்க என்றாள். ஒன்றுமில்லை என்றன்.
நம்பிறன் என்றவள் சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு எனது கைகளுக்குள் தனது கைளைச் செருகியபடி எனது முகத்தை வைச்ச கண் வாங்காமல்
பார்த்தவளின் முகம் நடுங்கத் தொடங்க உங்களிடம் ஒன்று கேட்பன் இந்த உங்க பெணடாட்டியின் ஆசையை நிறைவேற்றுங்கள் என்றவள் இதழ்கள் நடுங்க என்னிடம் ஒரு வேண்டுகோளை விட்டாள்.
(தொடரும்)
![]()