கதிரவன்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

தமெரிக்கா (அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை)
தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய கவியரங்கத்தில் கதிரவன் என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை.
கவியரங்கத்தலைவர் கவியருவி திரு. அப்துல் காதர் அவர்களுக்கும், கவியரங்கத்தில் என்னொடு பயணிக்க வந்துள்ள கவிஞர் பெருமக்களுக்கும்
கவியரங்கில் என்னை இணைத்த மெல்பன் கவிஞர் திரு. ஜெயராம சர்மா அவர்களுக்கும் இவ்விழாவுக்கு என்னை அழைத்த தமிழ் பணிச்செம்மல் திரு. பா. குமார் அவர்களுக்கும் மற்றும்
கவியரங்கத்தில் இணைந்திருக்கும் உலகத் தமிழன்பர்கள் அனைவருக்கும்
எனது உளமார்ந்த வணக்கங்களும் மனமார்ந்த நன்றிகளும்…. ![]()
இப்போது என் கவிதை.
அன்னைத் தமிழுக்கும்
ஆசான் வள்ளுவனுக்கும்
இங்கு இணைந்திருக்கும்
ஈடற்ற தமிழன்பர்க்கும்
உள்ளம் கனிந்து
ஊற்றாய்ப் பெருகி
என் அன்பு கலந்த
ஏற்றமிகு வணக்கம்
ஐயமேதும் வேண்டாம்
ஒப்பற்ற கதிரவன் பால்
ஓங்கும் வகை கவிதை செய்வேன்
ஔவை வாய்மொழிந்த அருந்தமிழில்
அஃதை இனிதே ஈண்டு கேண்மின்!
கதிரவன் எனக்கு கிடைத்த தலைப்பு
புதிராக அவனிருக்கும் தூரமோ வியப்பு
கதிரொளி கொடுக்கும் மிகையான தகிப்பு
அதில்லையேல் உயிர்க்கேது உயிர்ப்பு
பாலைவனத்தில் பசுஞ்சோலை போல
சோலையில் கேட்கும் குயிலோசைபோல
தட்பமாய் இருக்கும் பைந்தமிழ் இனிமை
வெப்பமாய் இயங்கும் கதிரவன் சேவை
வளி மண்டலத்திற்கு அப்பால் இயங்கி
துளிகூட பிசகின்றி நீ செயல் நடத்தி
துளிர்க்கும் பயிர் பச்சை அனைத்தும்
தளிர்க்க சேவைசெய்தாய் செங்கதிராக
கோளுனைச் சுழன்று வருவதாலே
நாளினை இரவும் பகலும் ஆக்கி
வாளுடன் பிறந்த எம்மவர்க்கு முன்னே
நீள் வானிலே நீயும் முந்தி நின்றாய்
அகரமுதல எழுத்தலாம் என்றான்
நிகரிலா நிலைகொண்டு நின்றான்
பகன்றிட்டான் பழுதின்றி வள்ளுவன்
பகலவன் உனை ஆதிபகவன் என்றான்
கதிரவன் நீ இன்றிப் போனால்
உதிரமும் உடலில் எவ்வாறு ஓடும்
அதிரும் இடி மின்னலொடு மழையும்
புதிராகப்போக புல் பூண்டும் அழியும்
செங்கதிர் வெம்மை நெற்கதிர் முற்றும்
இங்கு உழவர் வாழ்வில் நலம் சுற்றும்
பங்கமேதும் நிகழாது பாரும் செழிக்கும்
மங்காத வாழ்வுதனை மாநிலமே சுகிக்கும்
சுழல்கின்ற இப்புவி யாதென கேட்பின்
தழல்மிகு கதிரவன் உதிர்த்திட்ட கூறே
உதிர்ந்த அக்கூற்றில் ஆதவன் கூற்றும்
நிழல்நிறை கோடையில் அதிமிகையாக
நிழல்குறை வாடையில் மிகமிதமாகிடும்
ஆதி பகலவன் என்பதற்கு இணங்க
ஆகினன் அனைத்திற்கும் அவனே வழி
உழுதுண்டு வாழ்வார்க்கு உற்ற துணை
நீரின்றி அமையா உலககென அமைய
கடல் நீருண்டு மாமழைதரும் விண்மீன்
திருக்குற்றால மலையின் சிறப்பைக்கூற
திரிகூடராயப்பகவி கவிதை சொன்னார்
பரிக்காலும் தேர்க்காலும் வழுக்குமென்று
கவிதையில் அழகாய் பகர்ந்திட்டாலும்
கதிரவன் நிலைகுலைந்தால் ஏதாகும்
சங்கரன் கேட்கின்றேன் பதிலுமுண்டோ
ஏற்றம் இறைப்பவன் பாடிடக் கேட்டான்
எதுகை மோனை கண்ட கம்பநாட்டான்
அன்று பாடலை முடிக்காது போனதால்
மறுநாளும் கம்பன் வந்தான் முழுமைநாடி
வாங்கும்கதிரோனே என்று பாடியே
பாடலை முடித்தான் ஏற்றக்காரன்
பாட்டின் முழுமை கேட்டு மகிழ்ந்தான்
பாமரனும் கவிபுனையும் ஆற்றல் கண்டான்
கம்பன் தான்கொண்ட கர்வமும் துறந்தான்
மூங்கிலிலை தாங்கிய நீரை நீ உட்கொண்டதால்
அல்லாய் நின்ற கம்பன் கர்வம் கலைந்திட
கதிரவனே நீ இலக்கியத்தும் சிறந்திட்டாய்
கதிரவன் உன்கதிரால் பனிமலை உருக
நீராய் பெருகி ஆற்றில் வெள்ளமாய் ஓட
ஆற்றின் அருகே மாந்தர் குடியேற
பண்பும் பயனும் பெற்று செழித்திட
சிந்துவெளியிலே சீர்பண்பை படைத்து
உலகில் எம்மவர் தொன்மை உணர்த்தி
மூத்த குடியெனவும் முழங்கிட வைத்தாய்
அரும்பெரு மரங்கள் அடர்நிறைக்காட்டில்
பெரும்நெருப்பேற்றி காட்டுத் தீயாக்கியும்
அடர்பனி நிலத்தில் அங்கம் ஒடுங்கியே
உயிர்கள் யாவும் உன் வெப்பத்திற்கு ஏங்க
படர்பாலை நிலத்தே குடிக்கவும் நீரின்றி
இடர்தரும் பணிகள் எல்லாம் உன் விந்தை
அழியினும் வாழினும் மக்களோ மாக்களோ
வழியதுவாக புவியின் நிலைவகு கதிரவனே
உலகெலாம் வாழும் உழவர் நன்றியொடு
உனை நினைந்துமே போற்றி தொழுதிட
தமிழர் தரணியில் வாழும் திக்கெல்லாம்
வாழ்த்தித் துதித்தே போற்றிப் புகழ்ந்திட
உழவர் திருநாளாம் ஒப்பற்ற நன் நாளை
தமிழர் திருநாளாய் கொண்டாடி மகிழ்ந்தனர்
நீரையும் நிலத்தையும் ஆக்கிரமித்தே
விலைவைத்து விற்கிறான் விந்தை மனிதன்
ஆகாயத்தையும் காற்றையும் மாசுபடுத்தி
ஆதாயம் தேடினான் ஆரறிவு மாந்நன்
ஐம்புலனையும் அடக்கிட முடியாதவனோ
ஐம்பூதங்களையும் அடக்கிட நினைத்தான்
கதிரவா உன் கதிர்களை ஈர்த்துச் சேர்த்து
நெருப்பாய் ஐம்பூதங்களை வசமாக்கினான்
மழை பொழிந்து மாநிலம் மகிழ
பயிர்கள் வளர்ந்து பாரும் சிறக்க
உலகின் மாந்தர் அனைவரும் வாழ
துணையாய் நிற்கும் கதிரவனை நான்
கவிதையாய் வடித்துமே மகிழ்ந்தேன்
முடிக்கிறேன் ஈண்டு வணக்கத்துடனே!
நன்றி, வணக்கம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()