கட்டுரைகள்

நாங்கள் யார்?…. 1…. ( கட்டுரை ) …… ஏலையா க.முருகதாசன்;

நாங்கள் யார்?.நாங்கள்!…  உண்மையானவர்களா?.மற்றவர்களுடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பாடல் உண்மையானவையா?.மற்றவர்களுடன் நாங்கள் உரையாடும் போது உண்மையான அக்கறையுடந்தான் உரையாடுகிறோமா?.

இப்படியாக ஆயிரமாயிரம் கேள்விகள் எமக்குள் முட்டி மோதுகின்றன.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனி டுசில்டோப் நகரத்திலிருந்து எனது நகரம் நோக்கி புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனது இருக்கையின் நடைபாதைக்கு மற்றப்பக்கம் நேர் இருக்கையில் இருந்த ஒரு பயணி ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவரின் முகத்தை புத்தகம் மறைத்துக் கொண்டிருந்தது.அந்தப் புத்தகத்தின் முன் அட்டையில் இருந்த தலைப்பைப் பார்த்தேன் பெரிய எழுத்தில் ஆங்கிலத்தில்  who are we ? என்றிருந்தது.தமிழில் அந்தப் புத்தகத்திற்கு நாங்கள் யார் என்றே பொருள்படும்.

புத்தகத்தின் தலைப்பு எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.நான் யார்? நாங்கள் யார்? பயணம் செய்து கொண்டிருக்கும் இவர்கள் யார்?.ஒவ்வொரு தனிமனிதனையும் நோக்கிய கேள்வியாக அல்லது வெளிப்படுத்தலாக அந்த தலைப்பு எனக்குள் அலையலையாக எழுந்தது.

அப்பொழுது பயணச் சீட்டுப் பரிசோதகர் எல்லோருடைய பயணச் சீட்டுக்களையும் பரிசோதித்துக் கொண்டு வருகையில் எனக்கு முன்னால் இருந்த இளம் பெண்ணின் பயணச் சீட்டைப் பரிசோதித்த பரிசோதகர் இது செல்லாது என்று சொன்னார். அவள் மாணவியாக இருக்கிறாள் என்பது அவள் கொடுத்த விளக்கத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.அவள் விளக்கத்தைச் சொல்ல, பரிசோதகர் அவளின் அக்கறையீனத்தை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.அவளின் மனநிலையையும் நடத்தையையும்கூட இப்புத்தகம் சொல்லியிருக்கலாம்.

அவர்களிடம் இருந்து பார்வையை எடுத்த நான், எனது கண்கள் பார்க்கக்கூடிய பயணிகள் அனைவரிடமும் என் பார்வை சென்றது.நான் உட்பட இப்பொழுது பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகள் அனைவரின் ஆழமான மனங்களையும் மூளையையும் அறுவை செய்து அங்கிருந்த நுண்மைகளைக் கண்டறியும் புத்தகமாகக்கூட இருக்கலாம் என நினைத்தேன்.பயணிப்பவர்கள் பயணம் முடியும்வரை மட்டுந்தான் பயணிகள், அந்தப் பயணிகள் பயணிக்கும் கால எல்லைவரை அவர்கள் சக பயணிகளோடு பயணம் செய்யும் போது, சூழ்நிலையால் ஏற்படும் சாதக பாதக விளைவுகள் பற்றியும் இப்புத்தகம் சொல்லியிருக்குமா எனவும் எண்ணியது மனம்.

அவளின் சூழ்நிலைக்கு நாங்கள் யார்? என்ற அந்தப் புத்தகத்தின் தலைப்பு அச்சொட்டாக பொருந்தியிருக்கிறதோ என நினைத்தேன் ஏனென்றால் நான் என்ற தனியலகின் கூட்டமே நாங்கள் என்பதாகும்.

அந்தப் புத்தகம் எதையெல்லாம் சொல்லியிருக்குமோ என எனது எண்ணம் பரவிப் படர்ந்தது.

ஒரு சமூகம் பற்றிய உளவியல் பாங்கை ஒன்றை ஒன்று குறுக்கும் நெடுக்குமாக வெட்டி ஏற்படும் சற்சதுரமாக்கி, அச்சதுரத்திற்குள் இன்னும் இன்னும் மிக மிகச் சிறிய சதுரங்களை உருவாக்கி சமூகத்தை ஆய்வு செய்யும் போக்கைக் கொண்டிருக்கிறதா இந்தப் புத்தகம், இருக்கலாம், அல்லது ஒரு மனிதன் தனது வெளிநடத்தை மூலம் மூடிமறைக்கப்பட்ட அவனுடைய உண்மையான குணாதிசயங்களை இப்புத்தகம் அக்குவேறு ஆணி வேறாக வெளிப்படுத்திய புத்தகமா என பல எண்ணங்கள் எழுந்தன.

ஒரு மனிதன் போல இன்னொரு மனிதன் இருப்பதில்லை.மாந்த இனத்தின் வழிவழி வந்த படிமுறை பரிணாம வளர்ச்சியூடாக சமூக மாந்தராக வளர்ச்சி பெறும் போது, சமூக மாந்தர்களை ஒழுங்கமைத்தலுக்கான சட்டங்கள் மூலமாக ஒரு வடிவமைக்கப்பட்ட தனிமனித குணாம்ச செயல்பாடுகளுக்கு அப்பாலும் ஒவ்வொரு தனிமனிதனும்,ஒவ்வொருவருக்கொருவர் குணாம்ச வித்தியாசம் கொண்டவர்கள் என பகுப்பாய்வு செய்யும் புத்தகமா எனவும் எண்ணியது எனது மனம்.

அதன் விளைவாக அங்கிருந்த பயணிகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குணாம்சம் உடையவர்வர்களாக கற்பனை கொண்டு அவர்களை என் கற்பனைகளோடு பொருத்திப் பார்க்க முயன்றேன்.

காரணம் ‘நாங்கள் யார்?’ என்பது சாதரண வார்த்தை அல்ல.கிரேக்க தத்துவஞானி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே கேள்வி கேட்பதற்காக ‘உனை நீ அறி’ என்றார்.

என்னை நான் அறிவதற்கான புத்தகமா இது என நான் நினைத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு தனிமனிதனும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒரு நிலை எடுத்த போது சமூக மனிதனாக, சமூகமாக மாற்றம் அடைந்தான்.

அதனால் தனக்கான சமூக கட்டமைப்பை உருவாக்கிய போது பல தேவை கருதிய படிமங்களை ஏற்படுத்தி மொழி, பண்பாடு,கலை இலக்கியம் என்ற தொடர்பாடல் கருவிகளையும் வாழ்வியலுக்கான பொருளாதார தளத்தையும் ஏற்படுத்தினான்.அப்படியானால் நாங்கள் யார் என்ற இந்தப் புத்தகம் இதையெல்லாம் சொல்கின்றதா எனவும் நினைத்துக் கொண்டேன்.

இதற்கிடையில் நான் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். ஆனால் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த பயணி தனத பயணத்தை புத்தக வாசிப்புடன் தொடர்ந்தார்.

வரும் வழியிலும் வீடு வந்து சேர்ந்ததன் பின்பும் இக்கட்டுரையை எழுதுகின்ற இன்றுவரையும் ‘நாங்கள் யார்?’ என்ற அந்தப் புத்தகம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியவண்ணமே இருக்கின்றது.

நாளாந்த வாழ்க்கையில் பலபல அலுவல்களுக்கு மத்தியிலும், பரபரப்பான வாழ்வியலுக்கு மத்தியிலும் அந்தப் புத்தகம் என் கண்முன்னே அடிக்கடி வந்து போகின்றது.

அந்தப் புத்கத்தை எழுதியவரைவிட,அந்தப் புத்தகத்தின் உள்ளீடுகள் சொல்லும் செய்திகளைவிட, ஒவ்வொரு வரிகளிலும் காணப்படும் அறிவியல் சார்ந்த அறிவியல் நுட்பங்களைவிட, அந்தப் புத்தகத்தின் நாங்கள் யார் என்ற தலைப்பு பலவாயிரம் சிந்தனைகளை உருவாக்கும்.

நாங்கள் யார்

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button