கவிதைகள்
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே!….. ( இரங்கல்கவிதை ) ….கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது
கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது
புலரும் பொழுதெல்லாம் புதுக்கவிதை தருவாயே
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே !
இசுலாமியப் பெண்ணாக இருந்தாலும் சோதரிநீ
இன்பத்தமிழ் அணைத்து இங்கிதமாய் பணிபுரிந்தாய்
வீறுகொண்ட பெண்ணாக வெற்றிபல குவித்தாயே
மாறுபடா குணமுடையாய் மனமேங்கி அழுகிறதே !
அரபுமொழி கற்றாலும் அன்னைத்தமிழ் அருந்தினாய்
அரவணைத்து அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டாய்
நினைவழியா படைப்புக்களை நீயளித்தாய் தமிழுக்கு
நீஇல்லா நிலைகண்டு படைப்பனைத்தும் அழுகிறதே !
கிழக்கிலங்கை முத்தாக ஒளிவிட்டு நின்றாயே
உளத்துணிவால் தலைநிமிர்ந்து உயர்ந்தாயே தமிழுலகில்
தனித்துநின்று பெண்ணாக சாதித்த நாயகியாய்
தமிழ்போற்றும் கலைமகளே தவிக்கவிட்டுப் போனதேனோ !
![]()