Featureகட்டுரைகள்

வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்!…. ( கட்டுரை ) ….. செ.துஜியந்தன்.

செ.துஜியந்தன்.

தற்கொலைகள் தமிழ் இனத்தின் சாபக்கேடாகப்போய்விட்டதா? என எண்ணத்தோன்றும் அளவிற்கு தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் இளவயதினரின் தற்கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையம், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையில் முதலிடம் வகிக்கும் மாகாணம், வறுமையில் முதலிடம் வகிக்கும் மாகாணம்;, மதுபாவனையில் முதலிடம் வகிக்கும் மாகாணம்;, கல்வியில் பின்தங்கிய மாகாணம்;, கலாசாரசீரழிவுகளுக்குள்ளாகும் மாகாணம்; என பல வழிகளிலும் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாறி மாறி புள்ளி விபரங்கள் அடிப்படையில் முன்னிலை வகிப்பது இங்குள்ள கல்வியாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.

வடக்கு கிழக்கில் தினம் பல தற்கொலைச் சம்பவங்கள் அதிலும் இளவயது தற்கொலைகள் நடைபெற்றுவருது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதையாக ஏற்கனவே யுத்தத்தால் நொந்துபோய் இருக்கும் தமிழ் மக்களை தற்போது இடம்பெற்றுவரும் தற்கொலைகள் மேலும் வேதனைக்குள் தள்ளியுள்ளது. வாழவேண்டிய வயதில் வாழ்வை முடித்துக்கொள்ளும் இளசுகளை நினைத்தால் நெஞ்சுகொதிக்கின்றது.

எமது நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 பேர் தற்கொலை செய்த கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 150 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வடக்கு கிழக்கில்; தினம் நான்கு பேர் தற்கொலை செய்யுமளவிற்கு நிலமைமாறியுள்ளது. 2020 இல் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதமான இதுவரையான ஒன்பது மாதங்களில்; நாட்டில் 779 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 635 பேர் இளைஞர்கள், 144 பேர் யுவதிகள் என்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். இலங்கையில் வேலைவாய்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக உள ரீதியாக பாதிக்கப்படும் இளவயதினர் வாழ்க்கைப் போராட்டத்திற் குமுகம் கொடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்ப்பதற்கு தீர்மானிக்கின்றனர் என சுமித்ரயோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

கடுமையான சுகவீனம், கடுமையான விபத்து, உடலியல் துஸ்பிரயோகம், சித்திரவதை, தொழில் இழப்பு, சொத்திழப்பு, விவாகரத்து. பிரிவு, மரணம், பாலியல் துஸ்பிரயோகம். தீவிரசட்டப் பிரச்சினை, வறுமை, சீதனக்கொடுமை, முறைகேடான கர்ப்பம், வல்லுறவு, புகைத்தல், மது, போதைப்பொருள் பாவனை, ஊடகங்களின் தாக்கம், சமூகவலைத்தளங்களின் உளவியல் தாக்கம், வாழ்க்கையில் ஏற்படும்

நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணம், தோல்வியை ஏற்க முடியாமை, கொடூரமான ஏமாற்றம், தன்னைக்குறைவாக மதிப்பிடுதல், காதல்தோல்வி, பரீட்சை முடிவு, தனிமை, மனச்சோர்வு, உளப்பிரிவு, பொருளாதாரப்பிரச்சினை, இளவயது திருமணம், வெளிநாடு செல்வதால் ஏற்படும் மன உளைச்சல், முகவர்களால் ஏமாற்றப்படுதல், பொய், களவு உட்பட பல காரணங்கள் தற்கொலை முயற்சிக்கு காரணங்களாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பிள்ளைகள் சிறு சிறு விடயத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். இலங்கையில் 100 பிள்ளைகளில் 17பேர் ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பதாகவும், உடல்மற்றும் உள ரீதியான நெருக்கடிக்கு பாதிப்பு மட்டுப்பாடுகளை கொண்டவர்களாக இருப்பதாகவும் உலக வங்கியின் புதிய சுட்டெண் பட்டியல் காண்பிக்கின்றது. மனித முதலீட்டுச் சுட்டிகள் ஐந்து குறிகாட்டிகளைக் உள்ளடக்கியுள்ளது. 5வயது வரையான உயிர்வாழும் தன்மை, பிள்ளையொன்றின் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைக் கல்வி வருடங்கள், கற்பதற்கான தர அளவீடு, பராயம் எய்தியவுடன் உயிர்வாழும் வீதம் என்பன தொடர்பாகவே அதில் கணிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வாழ்வியல் கல்வியை கற்றுக்கொடுக்கவேண்டும். இன்றைய நவீன தொழில் நுட்பம் நிறைந்தயுகத்தில் மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வை வளப்படுத்தி வாழத்தெரியாதவர்களாகவே பலர் உள்ளனர். எல்லாப்பிரச்சினைகளுக்கும் தற்கொலைகள்தான் முடிவென்றால் வாழ்வு சிக்கலாகிவிடும். ஏன்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

இறைவன் போட்ட பிச்சைதான் இந்த உடலும் உயிரும் இதை வருத்தும் உரிமை எவருக்கும் கிடையாது. ஆன்மீக ரீதியில் மனதை ஒரு முகப்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொள்ளமுடியும்.

வடக்கு கிழக்கில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளவயதினரின் தற்கொலைகள் தொடர்பில் கல்வியாலர்கள், சமூக ஆர்வலர்கள் விரைந்து கவனம் செலுத்தவேண்டும். இத் தற்கொலைகளைத்தடுக்க திடமான ஒரு திட்டம் தீட்டப்படவேண்டும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் இருந்து தற்கொலையின் இழிநிலை பற்றியும், வாழ்க்கையின் உயர் நிலைபற்றியும் தன் நம்பிக்கையூட்டும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து செய்யப்படும் போதைப்பொருள் விற்பனையை இல்லாதொழிக்கவேண்டும் இது போன்ற பல திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு கணத்தில் எழும் தற்கொலை எண்ணத்திற்கு இடம் கொடுக்கப்போய் வாழ் நாள் முழுவதும் ஆறாதமனத்துயருடன் மற்றவரையும் வாழ வைக்கும் நிலைக்கே நாம் இட்டுச்செல்கின்றோம் என்பதை தற்கொலைகள் செய்துகொள்பவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும் இங்கு ஆயிரம் வருடங்கள் வாழ வரவில்லை. வாழ்க்கையில் ஒருவர் களவு எடுக்காது, பொய் சொல்லாது, மற்றவரை ஏமாற்றாது வாழ்ந்தாலே போதும் தற்கொலை எண்ணம் எமக்குள் எழுவதற்கு வாய்ப்பில்லை.

வடக்கிலும், கிழக்கிலும் இளவயது தரப்பினரிடத்தில் தற்கொலை பற்றி எழுந்துவரும் மனப்பதிவுகளை களைந்து வளமான வாழ்விற்கு வழிசமைப்போம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் இழந்த உயிரிழப்புக்களையே இன்னும் ஈடுசெய்ய முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்திற்கு மன அழுத்தங்களால் எழும் இளவயது தற்கொலைகள் மேலும் அதிர்ச்சியையும், இனப்பரம்பலையுமே ஏற்படுத்துகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக தற்கொலை எண்ணங்களுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *