இலங்கையில் நாகர் வழிபாடு!….. கட்டுரை….. (வாசித்ததைப் பகிர்கிறேன்) ஏலையா க.முருகதாசன்

நன்றி: கட்டுரையாளர் பேராசிரியர் திரு.புஸ்பரட்ணம் அவர்களுக்கும்,மின்தமிழ்குழு பதிவாளர் முனைவர்![]()
திருமதி.தேன் மொழி அவர்களுக்கும்.
இக்கட்டுரையை வாசித்த போது பல சிந்தனைகள் எழுந்தன.ஒரு இனம் நீண்ட பல நூறாண்டுகள் ஒரு இடத்தில் வாழும் போது தம்மொழியை தாமாகவே இழக்கும் நிலை தோன்றி வாழும் நாட்டின் மொழியைத் தம்மொழியாக உள்வாங்குவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்பது உண்மையே.
இக்கட்டுரைக்கான தரவுகளைச் சேகரித்த பேராசிரியர் திரு. புஸ்பரட்ணம் அவர்கள், நாகர் இனம் இலங்கையின் வடபகுதியில் இருந்ததற்கான சான்றுகள் உண்டென்பதை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளராக இருந்த கலாநிதி திருமதி.இரஜனி திரணகமவும் நிரூபித்துள்ளமையால் அவரின் கொலைக்கான காரணிகளை புதிய தடத்தில் பார்க்க வேண்டியுள்ளது.![]()
இக்கட்டுரையில் அவை இணர்டொரு வரிகளென்றாலும் ஏன் கொல்லப்பட்டார் என்பதை இந்த வரிகளுக்குள் ஏதோ ஒரு தொடர்பு உண்டென்பதை வைத்து நோக்க வேண்டியுள்ளது.
இன வரலாறுகள் மட்டுமல்ல, அவை எந்த வரலாறாக இருந்தாலும் அவற்றுக்கான ஆதியாவணமாக தொல்லியத் தடயங்களே சான்றாகின்றன.
இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதற்கு நாகர் இனம் சான்றாக அமைதலை இலஙகையரசு மட்டுமல்ல,ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்பதை படித்து அறி;ந்த பேராசிரியர்களாக இருக்கும் பௌத்த குருமார்கள், மற்றும் இனக்குழுமங்கள் சார்ந்த தொல்லியல் வரலாறுகளை ஆய்வு செய்த சிங்களப் பேராசிரியர்களும் தன்னினம் சார் பக்கசார்பு நிலையில் மறுத்துரைத்தும் எழுதியும் வருகின்றனர்.இது தாம் கற்ற கல்விக்கே துரோகமாகும்,அறமற்ற செயலாகும்.
இந்த நிலையில் தமிழர் சார்ந்த தொல்லியல் சான்றுகளை வெளிக்கொணர்பவர்களை தடுக்கும் நோக்கில் பயமுறுத்தலாக அரசாங்கமே அவரின் கொலைக்கு காரணமோ என யோசிக்க வேண்டியுள்ளது.
ஏனெனில் தமிழர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்பதை மறுக்கும் தொல்லியல் சான்றுகள் வெளிவருவதை, தொல்லியல் திணைக்களமே .
இன்றுவரை நேர்மையற்று மறுக்க முயற்சிக்கின்றது.
ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்
– பேராசிரியர் புஸ்பரட்ணம்
நாகபடுவானில் பானைக்குள் வைத்து நாகப் பாம்பை வழிபட்டதற்கான மிகத் தொன்மையான சான்றுகள் கண்டுபிடிப்பு.
![]()
தென்னாசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகம் பூமிக்குள் இருந்து வந்து மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதால் ஆதிகால மக்கள் அவற்றை மண் (பாம்பு) புற்றுக்குள் வைத்து வழிபட்டனர். இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வருவதே காரணமாகும்.![]()
இதன் காரணமாகவே வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகராக இருந்ததெனக் கூறப்படுகின்றது.
இலங்கையின் பூர்வீக மக்களது வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலான மக்கள் இலங்கை வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் விஜயன்
வருகையைத் தொடர்ந்து ஏற்பட்டது எனக் கூறும் அறிஞர்கள் பலரும் பாளி இலக்கியங்கள் கூறும் இயக்கர், நாகரை மனிதப் பிறவிகள் அற்ற
அமானுசராகவே எடுத்துக் கொள்ளுகின்றனர்.
ஆனால் பேராசிரியர் சத்தமங்கல கருணாரத்தினா போன்ற அறிஞர்கள் விஜயன் வருவதற்கு முன்னர் வாழ்ந்த நாகரை இலங்கையின் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்று என்பதற்கு இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புழக்கத்திலிருந்த கல்வெட்டுக்களில் வரும் நாககுலம் பற்றிய செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் விஜயன் தலைமையிலான வட இந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு
முன்னரே இலங்கையில் வளமான நாகரிக வரலாறு கி.மு.1000 ஆண்டிலிருந்து தோன்றி வளர்ந்தது பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் (பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள்) உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்லியற்திணைக்களப் பணிப்பாளராக இருந்த கலாநிதி .திருமதி.றஜனி திரணகம (பல்கலைக்கழக விரிவுரையாளர்- முறிந்த பனைமரம்(Broken Palmyra) என்ற நூலை எழுதியவர் இவரின் கன்னிப் பெயர் : Rajini Rajasingham ,Jaffana) இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றார். இப்பண்பாட்டு மக்கள் தென்தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறும் பேராசிரியர் கா.இந்திரபாலா இந்த நாக இன மக்களின் ஒரு பிரிவினரே இற்றைக்கு 2500 ஆண்டளவில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனக் கூறுகின்றார்.

![]()
தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு பாம்புப் புற்று வழிபாடு இருந்ததற்கான சான்றாதாரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆனால் இக்காலத்திற்கு முன் இருந்த ஆதியிரும்புக் காலப்பண்பாட்டில் இவ்வழிபாடுஇருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் வட இலங்கையில் அண்மையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது ஆதியிரும்புக்கால மக்களிடையே இவ்வழிபாடு இருந்ததற்கான அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இலங்கைக்கு ஆதியிரும்புக் காலப் பண்பாட்டை அறிமுகப்படு
த்தியவர்கள் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் என்பது உறுதியாகின்றது.
அவற்றுள் நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நாகத்தைப் பானையில் வைத்து வழிபடப்பட்ட மரபு வட இலங்கை மக்களிடையே நாக வழிபாடு தொன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாடு பற்றிய சான்றுகள் சில தென்னாசியாவின் ஏனைய வட்டாரங்களில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இவ்விடத்தில் நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. படுவம், படுவான் என்பவை பழமையான தமிழ்ச்சொற்கள். இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில்; அழைக்கப்படுகிறது எனலாம்.
கலாநிதி இரகுபதி இவ்விடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக் கொண்ட மக்கள் வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார்.
இவ்விடத்தில் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் அதிக எண்ணிக்கையில் சுடுமண்ணாலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாக, நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாதாரங்கள் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுமக்கள் மதவழிபாட்டில் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நாகச் சிற்பத்தைப் பானையில் வைத்து வழிபடப்பட்டதற்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்குப் புதிய அம்சமாகக் காணப்படுகின்றது.
இங்கு அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் குழிகளில் ஒன்றில் அரைவட்டவடிவில் செய்யப்பட்ட பெரிய பானை மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப்பகுதியும், அதைச் சுற்றி மூடிய நிலையில் பாம்புப் புற்றை அடையாளப்படுத்தும் நான்கு சிறு கலசங்களும் காணப்படுகின்றன. பானைக்குள் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த அழகான நாகப் பாம்பின் சிலை
பானையால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. இப்பானையின் மூன்று
திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் அமர்ந்துள்ள தெய்வத்தின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது. நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகப்பாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.
இவ்வாதாரங்கள் பாம்புப் புற்று வழிபாடு தோன்றுவதற்குமுன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் ஒன்றுக்கு மேற்பட்ட நாக வடிவங்கள் மண் சட்டிகளில் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் சமகாலத்தில் நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோசம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாகப்பாம்பை வைத்து ஆலயங்களுக்குக் கொடுக்கும் மரபு ஆதியிரும்புக் காலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது.
பண்டுதொட்டு திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியம் நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பெயர்களே கி.பி.13 ஆம் நூற்றாண்டுவரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15 ஆம் நூற்றாண்டில் யாழ்பாணயன் பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டிலிருந்து வந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும் அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்குத் தற்காலத்தில் வட இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே
கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம்.
![]()