சாமானியனின் சரடு…..14….. ( கட்டுரை ) … சங்கர சுப்பிரமணியன்.

மருத்துவச் சான்றிதழைக் கொடுத்து 
என்னை மேல் வகுப்புக்கு அனுப்பிய பின் என் தாத்தா அவருக்கு தெரிந்த ஆசிரியரான நாகசுந்திரம் ஆசிரியரை சென்று பார்த்திருக்கிறார். அவர் இந்த பள்ளயில் இடம் கிடைக்க பெரிய பெரிய இடத்திலெல்லாம் இருந்து சிபாரிசுகள் வருகின்றன. நீங்கள் தெரிந்தவர் என்பதால் உமது பேரனுக்கு இடம் வாங்கி கொடுத்தேன். இவன் என் பெயரைக் கெடுத்துவிடுவான் போலிருக்கிறதே என்று புலம்பியிருக்கிறார். அதைக் கேட்டு வந்த தாத்தா என்னிடம் வந்து மனம் வருந்தி பேசினார். உனது அப்பாவுக்கும் அரசாங்கம் கொண்டுவந்த தங்க கட்டுப்பாடு சட்டத்தால் தொழில் மந்தமாகி முதலாளி மாதிரி இருந்தவர் தொழிலாளியாகி விட்டார்.
இப்போது தொழிலாளியாக இருப்பதற்கும்கூட வழியின்றி சிரமப்படுகிறார். அவர் சிரமம் அவருக்கு. உன்னையாவது படிக்கவைத்தால் படித்து முடித்து ஒருவேலைக்குப் போய் உன் குடும்பத்தை பாதுகாப்பாய் என்று பார்த்தால் நீ உருப்படுவது மாதிரி தெரியவில்லை. உன் தலையில் அப்படித்தான் எழுதி இருக்கிறது சிரமப்படத்தான் வேண்டும் என்றால் நான் என்ன செய்ய முடியும்? நடப்பது நடக்கட்டும் என்று மனம்நொந்து பேசினார். என் தாத்தாவின் பேச்சு எனது சிறுபிள்ளைத் தனத்தையும் குறும்பு மற்றும் பொருப்பற்ற தனத்தையும் உணரவைத்தது. தனக்கென்ன இருந்து விடாமல் ஒரு நல்ல எண்ணத்துடன் உதவிசெய்கிறார்.
அதை தக்கவழியில் பயன்படுத்தாமல் இருப்பதை உணர்ந்தேன். அவர் மனம் வருந்தி பேசியது எனக்குள் அந்த சிறுவயதிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்க அன்றே என் சிறுபிள்ளைத் தனத்துக்கு விடைகொடுத்து என் நிலையை உணர ஆரம்பித்தேன். தவிர என்னைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொள்வதும் என் காதில் விழுந்து என்னை மனவருத்தத்துக்கு ஆளாக்கியது. அதைப்பற்றியும் சொல்லிவிடுகிறேன். மற்றவர்கள் என்வயதை ஒத்த அவர்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அவர்கள் அறிவுரை வழங்கியவிதம் என்னை உறுத்தியது. அப்படி என்னதான் அறிவரை பண்ணினார்கள்? சொல்கிறேன் கேளுங்கள். ஒழுங்காக வேலையை கற்று பிழைக்கும் வழியைப்பாருங்கள். பாவூரான் சங்கரன் கூட சேர்ந்து கெட்டுப் போகாதீங்க. அவன் ஒழுங்கா படிக்கவும் மாட்டேன்கிறான். படிச்சாலும் என்ன பெரிதாய் கலைக்டர் வேலைக்கா போகப்போகிறான். ஆதலால் அவன்கூட சேராதீர்கள் என்று புத்திமதி சொல்ல ஆரம்பித்தார்கள். அதன்பின்தான் எனது நிலைமை எனக்கு புரிந்தது. அதேசமயம்
உலகம் எப்படியெல்லாம் பச்சோந்தியாக நிறத்தை சந்தர்ப்பத்திற்காக ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறது என்பதையும் உணர்ந்தேன்.
ஆனால் யார்மீதும் தவறில்லை அவரவர் கவலை அவரவர்களுக்கு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்களுக்கு தொழில் கற்கும் அவர்களது குடும்பத்து பிள்ளைகள் படிக்கும் என்னோடு சேர்ந்து தொழிலைச் சரிவரக் கற்காமல் உருப்படாமல் போய் விடுவார்களோ என்ற கவலை? பெண்களுக்கு மட்டும் ஊரில் இருக்கும் உறவுகளுக்கு கடிதம் எழுதுவதற்கு என் தயவு தேவைப்படுகிறது. ஆதலால் அவர்களைப் பொறுத்தவரை நான் மிகவும் நல்லவனாகவே தென்பட்டேன்.
இந்த உலக ஞானம் எனக்கு அப்போதே தெரிந்தது. அது ஒன்றும் பெரிய ஞானமில்லை. இதை நாம்தான் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு நம்மால் பயன் கிடைக்கும்போது உலகம் நம்மை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும். அதே உலகம் நம்மைவைத்து பயனடைந்தபின் அல்லது இனி நாம் தேவையில்லை என்று ஆனபின்
தூக்கி எறியவும் தயங்காது. ஓரிடத்தில் மதிப்பு குறைகிறது என்றால் அதை ஒன்றும் பெரிதாக எண்ணக்கூடாது. அதுதான் இயற்கை. அதை நாமாக உணர்ந்து நம்மால் முடிந்த நல்லவற்றை மட்டும் செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வீட்டுப் பையனுடன் சேர்ந்து விளையாடாமலும் பெண்கள் கடிதம் எழுதவரும்போது அவர்கள் உடன் அழைத்து வரும் பெண்பிள்ளைகளுடன் மட்டும் பேசவும் செய்தேன். என்னாங்கடா உங்கள் புத்திமதி என்று எனக்கு எண்ணத் தோன்றியது. ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்.
இதையெல்லாம் நன்றாக உணர்ந்த நான்
அப்போதிருந்து ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்தேன். இரவு நேரங்களில் தூக்கம் மறந்து தெருவிளக்குகளில்கா இருந்த மழை குளிர் என்று எதையும் பொருட்படுத்தாமல் படித்தேன். முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல் உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைத்தது. படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த நான் பாஸ் மார்க் வாங்குமளவுக்கு முன்னேறினேன்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதில் பத்தாம் இடத்துக்கும் கடைசியாக முதல் மூன்று இடத்துக்கும் முன்னேறி பள்ளி இறுதித் தேர்வில் மேற்படிப்புக்கு உதவித்தொகை பெறுமளவுக்கு மதிப்பெண்கள் பெற்றேன். நாம் எப்படி இருக்கிறோமோ அந்த அளவுக்கு உலகமும் நம்மிடம் நடந்து கொள்கிறது. என்னுடன் சேர்ந்தால் உருப்படுவது கடினம் என்றவர்களே என்னோடு தங்கள் பிள்ளகளை தாராளமாக பழகவிட்டார்கள்.
நான் ஒழுங்காக படிக்க ஆரம்பித்ததும் எனக்கு மதிப்பும் கௌரவமும் கிடைத்தது. எனது தெருவிலேயே நான்தான் பள்ளி சென்று படிக்கிறேன் என்பதால் எனக்கு பெருமிதமாக இருந்தது. அந்த கிராமத்தில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள். தேவர், கோனார், பிள்ளை பண்டிதர் என எனது தாத்தா ஊரின் வடக்கு பாகத்தில் இந்த இனக்கூட்டமும் இடையே ஆட்களின்றி கொஞ்சநிலமும் அதைத்தாண்டி தெற்கூரில் நாடரும் சற்று இடைவெளி விட்டு பரையர் என்ற இனமும் அதற்கு அடுத்தபடி ஊருக்கு வெளியே பல்லர் இன்னும் சற்று தள்ளி அருந்ததி இனமும் வாழ்ந்தன.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா கிராமங்களும் இந்த அமைப்பிலேயே இருக்கும். என் தெருவில் நான் ஒருவனென வடக்கூரில் மொத்தம் நான்கைந்து பேரே படிக்க சென்றதால் எனது தெருவில் எனக்கு கொஞ்சம் மதிப்பு. எந்த அளவுக்கு மதிப்பு என்றால் அந்த தெருவில் உள்ள அத்தை முறையுள்ள பெண்களெல்லாம் என்னிடம் வலிய வந்து அவர்களது என்வயது பெண்கள் முன்னாலேயே “மருமகனே என் மகள் உங்களுக்குத்தான். என் பெண்ணை நீங்கதான் கட்டிக்கனும்“ என்று சொல்லுமளவுக்கு மதிப்பிருந்தது. அவர்கள் அப்படிச் சொல்வதும் அப்போது அவர்களின் பெண்கள் வெட்கத்தில் நெளிவதும் அப்போது என்னுள் ஏற்படும் இரசாயண மாற்றங்களையும் வார்த்தைகளால் விளக்க முடியாது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()