காலமெல்லாம் கல்!…. (கட்டுரை ) ….. இளவாலை எஸ்.ஜெகதீசன்.

தடையறத் தாக்குவதற்கு ஆதியில் மனிதன் கையில் ஏந்திய முதலாவது ஆயுதம் – கல்!
ஊருக்கு வழிகாட்டியாகவும் புகழுக்கு மெருகூட்டியாகவும் என்றும் திகழ்பவை மைல் கற்கள் எனப்படும்.
உலக அதிசயங்கள் ஏழும் வெவ் வேறு வகையான ஏழு கற்களால் உருவானது வரலாற்றின் அதிசயம்.![]()
தூரத்திலிருந்து பார்த்தால் உருண்டு விழுந்து விடும் போல் தோன்றுவதும் அருகே சென்றால் நாமகவே உருட்டித் தள்ள முனைவதும் மகாபலிபுரத்திலுள்ள கிருஷ்ணர் வெண்ணெய் பந்து ஆகும். வான் இறைக் கல் எனவும் அழைக்கப்படும் இக் கருங்கற் பாறை 1200 வருடங்களாக அதே நிலையில் உள்ளது எனின் எத்தனை தலைமுறை அதனை உருட்ட முயன்றிருக்கும்!
திருவதிகையில் திருநாவுக்கரசு நாயனாரை கல்லில் கட்டி கடலில் விட்டுவிட அவர் குப்பம் என்னும் ஊரை மிதந்து அடைந்ததும் அப்பர் சுமந்த செங்கற்கள் பொன்னாக மாறியதும் இராமனின் பாதம் பட்டதும் கல்லாக இருந்த அகலிகை பெண்ணானதும் ராமாயணத்தில் கற்களால் பாலம் அமைத்து இலங்கை சென்றதும் சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை எடுத்ததும் மதுரையில் கல்யானை கரும்பு சாப்பிட்டதும் ஆத்தூரில் கல்லில் செய்த கிளிகள் வானில் பறந்ததும் வயதான வார்த்தைகளில் வரலாறு வணங்கும் கற்கள்.
கைலாயத்திலிருந்து கொண்டு வரப்படும் ஒவ்வொரு கல்லிலும் இறைவன் இருக்கின்றார் என்பவர்களும் உளர்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலும் மயிலை காபலீஸ்வரர் கோவிலும் கைலாசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் கட்டப்பட்டதாகத் தகவல்.
சிதம்பரத்தில் ரத்தினசபாபதியாக சிவபெருமான் பச்சை வர்ண மரகத கற்களில் ஜொலிக்கின்றார். அத்துடன் சனிபகவானை வழிபடும் இடத்திலும் மரகத கற்கள்தான். திருநள்ளாற்றில் மரகத லிங்கமாகவே காட்சி தருகின்றார்.
கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கல்லை வைக்கின்றார்கள். கழுவுகின்றார்கள். பொட்டு வைக்கின்றார்கள்.கும்பிடுகின்றார்கள். என 5 சத அறிவுடன் அங்கு செல்லும் புதிய தலைமுறைக்கு கற்களை பொடியாக்கின் மண்ணாவதும் கற்களோடு கற்களை உரசினால் தீப்பொறி பறப்பதும் கல்லைப் பிளக்கையில் நீர் சுரப்பதும் கற்களில் விரிசல் காற்றினால் ஏற்படுவதும் கல் மலையை குடையாகப் பிடித்து கிருஷ்ணர் ஆகாயமாக்கியதும் – கல்லில் காணும் பஞ்ச பூதங்களின் மகத்துவம் என இயற்கை வழிபாட்டை இலகுவாக அங்குள்ள புழுதியின் புதல்வர் கூட விபரமாக விளக்கம் சொல்வர்!
பிள்ளையார் பால் குடித்ததும் கல்லில் தானே?
கற்களில் ஆண் கற்களும் பெண் கற்களும் உண்டு.
தட்டினால் மணி ஓசை எழுப்புவது ஆண் கல். தாள ஓசையை எழுப்புவது பெண் கல்.
ஏழு ஸ்வரங்களை வெளிப்படுத்தும் கல்தூண்களை தட்டிப்பார்ப்பவர்கள் கற்களை காதலிப்பர்.
வைரம் வைடூரியம் மரகதம் பவழம் மாணிக்கம் கோமேதகம் புஷ்பராகம் ரத்தினம் முத்து என்ற நவரத்தினங்களை பெயரளவில் கூட ஞாபகம் வைத்திருக்க முடியாமற் போவது அவர்களின் ராசி!
உலக அழகி கிளியோபட்ராவிடம் பச்சை வர்ண விலையுயர்ந்த மரகத கற்கள் இருந்ததாக வரலாறு நினைவு கூரும்.
சாதாரணமாக கற்களை விட உலக உல்லாச பயணிகள் சபை விளம்பரப்படுத்தும் ரத்தின கற்கள் ஆதிவாசிகள் நெருப்பெடுத்த சிக்கி முக்கி கற்கள் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்டு இலங்கையிலும் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலாக்கல் இதர நாடுகளைப் போலவே இலங்கையிலும் விழும் விண்கற்கள் அல்லது எரிகற்கள் அடுக்கு அகங்களுக்காக இலங்கையில் கொட்டப்படும் சீன கற்கள் என்பனவே அங்கிருக்கும் என தூரத்திலிருந்தே துப்பறிபவர்களுக்கு அறிவூட்டுவது – சிக்கல்.
பூமியை தாக்க வரும் விண்கல் பற்றி பயமுறுத்துகின்றார்கள் ஒரு தரப்பு விஞ்ஞானிகள்.
‘1950டிஏ’ என்று பெயரிடப்பட்ட விண்கல் 44 800 தொன் எடையும் ஒரு கி.மீ. அகலத்தோடும் இருக்கின்றதாம்.இது விநாடிக்கு ஒன்பது மைல் வேகத்தில்
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. 2880 ம் ஆண்டில் இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியில் மோதலாம். அப்படி மோதினால் பூமி அதி பயங்கர சத்தத்துடன் வெடித்து தட்ப வெப்ப நிலை மாறி சுனாமி நிலநடுக்கம் என அடுக்கடுக்கான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றார்கள்.
இன்னொரு தரப்பு விஞ்ஞானிகளோ அது பூமியை நோக்கி வருவது உண்மைதான்.ஆனால் அது பூமியில் மோத 300 ல் ஒரு பங்குதான் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
குக் கிராமங்களில் தெருவிளக்கை தாங்கிய ராந்தல் கற்கள் வெப்பத்தை உறிஞ்சி ஊர் பஞ்சாயத்து இருக்கைகளுக்கும் பொது (வம்பு) மேடைகளுக்கும் சூடு தணித்த பட்டியக்கற்கள் கிராமங்கள் தோறும் இளைஞர் பலம் பார்த்த இளவட்டக் கற்கள் இளைப்பாறும் பயணிகளின் பாரம் சுமக்கவென சாலை ஓரங்களில் கர்ப்பிணிகள் ஞாபகமாக வைக்கப்பட்ட சுமைதாங்கி கற்கள் எனப்பல கற்கள் செயலிழந்து போனது நினைவுகளை கிண்டிக் கிளறினால் மேலே வரும்.
தானியங்களை அரைக்க அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் இல்லையே என்ற காரணக் கவலையுள்ள பாட்டிகளும் ஒரு கல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழே வருவதற்குள் தரையில் பரவிய கற்களை சேகரித்து சேகரித்த கல்லும் சிதறாமல் மேலே போன கல்லையும் கீழேவருமுன் தவற விடாது பிடித்திடும் கொக்கான் பாட்டிகளும் இப்பவும் உண்டு.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியே பெரும் அழிச்சாட்டியம் என்று கருதுபவர்கள் வேற்று கிரக வாசிகள் அல்ல.
கல்லும் புல்லும் கணவனாகுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.
கவனிக்கப்படாத வெறும் ஜடப்பொருள்களான கல்லையும் புல்லையும் இது குறிக்கவில்லை.. கணவன் மனது கல்லானாலும் அவன் உனக்கக்கணவனே் சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக வெறும் புல்லைப் போல இருந்தாலும் அவன் உனக்குப் புருஷனே என்னும் பழமை வாதிகளும் எல்லா ஊர்களிலும் இருக்கின்றார்கள்.
கல்லான் அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி ஒருவனுக்கு இருக்கிறது. புல்லன் அதாவது கல்வி கற்றவன் (புல் என்றால் கல்வி எனவும் பொருளுண்டு) என்றாலும் அவனுக்கு புருசன் ஆகின்ற தகுதி
இருக்கிறது என்ற பொருளில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என நம்பும் நமது புதிய தலைமுறையினர்களும் இருக்கின்றார்கள்.![]()
கருங்கல் சவுக்காரக்கல் கரும்பளிங்குக்கல் காரீயக்கல் காவிக்கல் சுண்ணாம்புக்கல் கூழாங்கல் குருவந்தக்கல் மணற்கல் தவளைக்கல் பளிங்குக்கல் பருக்கைக்கல் பருமணற்கல் கருபாக்கங்கல் சானைக்கல் சொறிக்கல் செங்கல் சுக்கான்கல் படிக்கட்டுக்கல் தீத்தட்டிக்கல் திருப்பதிக்கல் கொடிக்கல் உரைக்கல் சரளைக்கல் வெண்கல் வெட்டுக்கல் சீமைகாவிக்கல் மலடிக்கல் தீக்கல் தீத்தப்பிரக்கல் போன்ற பல பாவனையிலிருந்ததை பட்டியலிட பழந்தமிழ் பண்டிதர்கள் தேவையில்லை.
சேரன்செங்குட்டுவன் தமிழரைப் பழித்துப் பேசிய இமயமன்னர்கள் கனகனையும் விசயனையும் வென்று அவர்களின்தலைமீதேற்றிக் கல்லினைக் கொணர்ந்து கண்ணகிக்குக் கோவில் அமைத்தான் எனும் வரலாற்றைச் சிலப்பதிகாரம் நமக்குச்சொல்கிறதுல்கிறது
சட்டப்படி காணியில் ஊன்றிவிட்டால் சர்வ வல்லமை இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக யாரும் பிடுங்கிவிட முடியாது என்பதை தேசவழமை சட்டத்தின் மூலம் உணர்த்திடும் எல்லை கற்களை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம்.
துயிலும் இல்லங்களாக உறுதியின் உறைவிடங்களாக ஊரிலிருந்தவை நடுகற்கள் அல்லது கற்திட்டைகள்.
ஒரு புறம் திறந்து மிகுதி கற்பலகைகளால் மூடப்பட்டிருப்பவை கற்திட்டையாகும்.
மனிதர்களுக்கு மட்டுமன்றி சேவல்களுக்கும் வீரக்கற்கள் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.சேவல்சண்டை நடத்தப்பட்டு எதிர்த்துப் போரிட்ட சேவலைக் கிழித்து அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்த வீரச்சேவலைப் பாராட்டி வென்ற சேவலுக்குக் கோழிக்கல் வைக்கப்பட்டதைக் காணமுடிகிறது.
நெடுங்கல் கல்குவை கல்பதுக்கை குடைக்கல் போன்ற பெயர் சூட்டப்பட்ட கற்களும் நாகரீக நாடுகளில் அழியாதவர்களை அடையாளப்படுத்துகின்றன.
வாழ் நாள் சாதனைகளை குறிக்க பண்டைய மன்னர்கள் கல்லில் பொறித்த கல்வெட்டை காகிதத்தில் கசக்குகின்றது நவீனம்.
உண்ணா விரதமிருந்து உயிர் துறந்த சமணத் துறவிகளை நினைவுறுத்திய சல்லேகனம் கற்களும் உடன் கட்டை ஏறியோர்கான சதிக்கற்களும் தற்கால கதைகளிற் கூட வருவதில்லை.
செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைக்கும் கார்பைட் கல் இயற்கையான ஆரோக்கியத்தை சுக்கல் ஆக்கும்.
உடல் உபாதை தரும் உமிழ்நீர் சுரப்பிகற்கள் சிறு நீர்கற்கள் பித்தக்கற்கள் போன்றவை ரத்த சம்பந்தம் உடையவை. உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை மூலம் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காதவை.
ஆவுரஞ்சி கற்கள் உண்மையில் கற்கள் அல்ல. மரக்குற்றிகள். பழங் காலத்தில் கால்நடைகள் அதில் தேய்த்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் நீர் நிலைகள் அருகேயும் பாதை ஓரங்களிலும் மனிதரால் நாட்டப்பட்டவை.
சில இடங்களில் அவை கற்றூண்களாக இருந்த போதும் – கால்நடைகளை காய்ப்படுத்தும் என்ற காருண்யத்தால் பரவலாக மரக்குற்றிகளையே நட்டனர்.
திருமணத்தின் பொழுது அம்மிக்கல்லை மிதித்து கற்பை காட்டுபவர்கள் இங்கும் வந்துவிட்டார்கள்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழவிகல்லைக் கொடுத்து பரிகாரம் தேடியவர்கள் எங்கேயோ போய் விட்டார்கள்.
ஒரு கல்லால் ஒரு மனிதன் விழலாம்.ஆனால் ஒரு கண்டமே விழுந்த கதை தெரியுமா?
ஆபிரிக்காவின் ஓரஞ்சு நதியோரம் விளையாடிக் கொண்டிருந்த ஸ்டிபனாஸ் என்ற சிறுவன் கையில் வித்தியாசமான வெள்ளைக் கல் கிடைத்தது.
அதை அவன் அயல் வீட்டிலிருந்த உல்லாச பயணியிடம் கொடுக்க அதை அவர் இங்கிலாந்தில் ஒரு வைரவியாபாரிக்கு விற்க தகவல் கசிந்து ஆபிரிக்காவே ஒரு வைர சுரங்கம்தான் என கண்டுபிடித்தார்கள் ஐரோப்பியர்கள்.
மனிதர் உணர்ந்து கொள்ள இது சில்லறைக் காதல் அல்ல… அதையும் தாண்டி பெறுமதி வாய்ந்தது என்று கத்த ஆசையா?
உங்களை காதலிப்பவர் கவிதை எழுதுபவரா?
மிஸ்ட்ரி மாஸ்டர் பேனா வாங்கி கொடுங்கள்.
அதில் 840 அசல் வைர கற்கள் உண்டு.
மது அருந்துவாரா?
அதற்கும் தகதகக்கும் வைரங்கள் பதித்த கிண்ணங்கள் பல லட்சங்களின் விளிம்பில் வாங்கலாம்.
விளையாட்டுப் பிள்ளையா?
கறுப்பு வெள்ளை நிறங்களில் 9900 வைரங்கள் பதித்த சதுரங்க பலகை வாங்கி கொடுங்கள்..
உங்களுக்கே ‘செக்’ வைக்கலாம்.
பேச்சு தீவிர வாதியா?
120 கரட் வைரம் பதிகப்பட்ட அலைபேசி உள்ளது.
மடிகணணியை இயக்கும் ஆழி வைரக்கல்
……என பல கோடிகள் கற்களை காதலிக்கின்றன!
![]()
காலமெல்லாம் கல் கற்றுக்கொண்டே இரு என்று நினைத்துக்கொண்டு வாசித்தால், கற்களிலும் இத்தனை வகை உண்டா என்று உங்கள் கற்குவியலைப்பார்த்து திகைத்துப்போயல்லவா நிற்கிறோம் !!!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று கவியொருவன் பாட நீங்களோ எங்கெங்கோ சென்று கருங்கல்லையும் கூழாங்கல்லையும். நடுகல்லையும் வைரத்தையும் வைடூரியத்தையும் நவரத்தினத்தையும் விண்கல்லையும் அம்மிக்கல்லையும் ஆட்டுக்கல்லையும்இன்னும் இன்னும் வகை வகையான கல்லையும் கொண்டு குவித்து எம்மை அதிசயிக்க வைத்துவிட்டீர்களே!
நல்ல வேளை பூமியைநோக்கிவரும் கல்லால் ஆபத்துஇல்லை என்று சொல்லிவிட்டீர்கள் !
கற்களைசேகரிக்கும்போது இலக்கியத்தையும் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் சமூக நடைமுறையையும்
மறக்காது இணைத்துக்கொண்டுபோகும் உங்கள் வல்லமை பிரமிக்க வைக்கிறது !
ஓர் எழுத்தாளனுக்கே இது முடியும் !!!!!!
கல்லிலே பொறிக்கப்படவேண்டியது உங்கள் சாதனை!
வாழ்த்துகிறோம்!
திருமதி பராசத்தி சுந்தரலிங்கம்
அவுஸ்திரேலியா