கட்டுரைகள்

உள்ளொன்று வைத்து!…. ( கட்டுரை )….. சங்கர சுப்பிரமணியன்.

வள்ளலார் அருளிய திருவருட்பாவில் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் ….. என்று தொடங்கும் பாடலொன்று வருகிறது. இதிலிருந்து என்ன தெரிகின்றது? மனதில் கள்ளமுடன் பழகும் மனிதர்களிடம் நட்பே வேண்டாம் என்று வேண்டுவது தெரிகிறது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்வினை எண்ணும்போது அந்த பாடலில் வள்ளலார் ஏன் அப்படிச் சொன்னார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அப்படி என்ன நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா? அதுதான் வேல் பூஜை. தமிழ் கடவுள் முருகனுக்கு பூஜை நடத்தினார்கள். அதற்கு காரணம் எல்லோருக்கும் முருகனிடம் அபரிமிதமான அன்பு ஏற்பட்டதே காரணம். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வேல் பூஜையா அல்லது முருகன் பூஜையா? என்ற சந்தேகம். அதை போக்க தொலைக்காட்சியின் உதவியை நாடினேன். சில காணொலிகளைப்
பார்த்தேன். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிக்க முடியாததால் இந்த கருத்தை யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று விரும்பினேன்.

பலருக்கு தெரிந்தால் நல்லதுதானே என்ற உணர்வினால் இக்கட்டுரையை
எழுதுகிறேன். ஒரே தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமல்ல பல அலைவரிசைகளில் பார்த்தபின் தான் சந்நேகம் எழுந்தது. அதில் பலர் வேல் பூஜை பண்ணுவதை காண்பித்தார்கள். ஒருவர் சமையலறையில் தரையில் இருந்தபடி பூஜை பண்ணுகிறார். அவருக்குமுன் ஒரு கண்ணாடி பெட்டிபோன்ற ஒன்றினுள் வேல் இருக்கிறது. அந்த வேலைப் பார்த்தால் இதற்குமுன் அதற்கு பூஜை நடந்ததுபோல் தெரியவில்லை.

வேல்பூஜை என்றால் அதை சமையலறையில் வைத்துதான் செய்ய வேண்டுமா? அந்த வீட்டில் பூஜை அறை என்று ஒன்று இல்லையா? என்ற சந்தேகங்கள் எல்லாம் எழுகின்றன. அடுத்ததாக ஒருவர் முருகன் படத்தை தெருவில் வைத்து வணங்குகிறார். இன்னும் ஒருவர் வேல் பூஜை செய்யும் முறையே வினோதமாக இருந்தது. அவர் வேலுக்கு பூஜை செய்கிறாரா அல்லது அவரை முருகனாக எண்ணி பூஜை செய்யச் சொல்கிறாரா என்பதே புரியவில்லை. அவர்
மல்லிகை சரத்தை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார். அத்துடன் முருகன் கையில் வேலப் பிடித்து நிற்பதுபோல் நின்றிருந்தார். அந்தவேலில் கொஞ்சம் பூ
சுற்றப் பட்டிருந்தது.

இன்னொருவர் எங்கோ கிடந்த காலண்டரில் இருந்த முருகன் படத்தத்தை கிழித்து எடுத்துவந்து சுவரில் ஒட்டியிருந்தார். அப்படத்தின் கீழ் ஒரு ஸ்டூலில் பூக்கள் இருந்தன. அந்த படத்தின் அருகே ஒருவேல். அந்த வேலைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அதற்கு கோல் போன்ற ஒன்றை உபயோகப்படுத்தி இருந்தனர். அந்தக்கோலைப் பார்த்தால் அதை எங்கிருந்து எடுத்தார்கள் என்பதே தெரியவில்லை. அதன்மேல் கூரான பகுதிக்கு ஏதோ அட்டைபோன்ற ஒன்றில் வடிவமைத்து ஒட்டியிருந்தார்கள். எல்லாம் சரி. அவர் வீட்டிலும் பூஜை அறை இல்லையா? அந்த பூஜை அறையில் முருகன் படமில்லையா? முருகன் படமில்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வேலையாவது பூஜை அறையில் வைத்து கும்பிடலாம் இல்லையா? குழப்பமாக இருக்கிறது.

இப்போதுதான் எனக்கு இல்லாத சந்தேகம் எல்லாம் வருகிறது. வேல் பூஜை செய்தவர்கள் வீட்டில் ஒருவர் வீட்டிலாவது பூஜை அறை இல்லாமலா போகும். அப்படி இருந்தால் அந்த பூஜை அறைகளில் முருகன் படம் இருக்காதோ? அப்படியே இல்லாவிட்டாலும் வேலையோ அல்லது முருகன் படத்தையோ பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணக்கூடாதோ? இந்துக்கள் என்றால் முருகனும் அதில் அடக்கம் இல்லையா? ஒருவேளை வள்ளி என்ற குறத்தியை முருகன் மணம் முடித்ததால் தீண்டத்தகாதவராகி விட்டாரா? ஒரே குழப்பமாக உள்ளது. தமிழர் என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் வீட்டில் கூட முருகன் படம் இருக்கும். நான் தொலைக்காட்சியில் பார்த்த தமிழர் ஒருவர் வீட்டில்கூட பூஜை அறையில் முருகன் படமிருப்பதாகக் காட்டப்படவில்லையே. அது ஏன்? ஏன்? ஏனோ?

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button