இன்று ஜூலை 13 அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன் நினைவு தினம்!… முருகபூபதி.

பனாகொடை இராணுவ முகாமில் பாரதி கவிதைகள் !
முருகபூபதி.
இலங்கையில் தென்பகுதியிலிருக்கும் மிகவும் பிரபலமான பனாகொடை இராணுவ முகாம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கும் இனவிடுதலைப் போராட்டத்திற்கும் இந்த பனாகொடை இராணுவ முகாமுக்கும் இடையில் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.
![]()
1961 ஆம் ஆண்டு நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது கைதான தமிழ்த்தலைவர்கள் மட்டுமன்றி பின்னாளில் கைதான ஈழவிடுதலைப் போராளிகளும் 2009 இல் நடந்த இறுதிப்போரின் பின்னர் கைதான தமிழினி சிவகாமி உட்பட பல பேராளிகளும் இங்கு தடுத்துவைக்கப்பட்டனர்.
ஒரு போராளியின் பெயருக்கு முன்னால் இந்த முகாமின் பெயரும் இணைந்து , இன்றுவரையில் அவர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்.
காரணம் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று அந்தப்பெயரில் ஹீரோவானவர். அவர்தான் பனாகொடை மகேஸ்வரன்.
இதே பனாகொடை முகாமுக்குள் மகாகவி பாரதியாரின் கவிதைகளும் பிரவேசித்தன என்ற செய்தி யாருக்காவது தெரியுமா…?
அக்கவிதைகளை அங்கே வைத்திருந்தவர் இன்றையதினம் நினைவுகூரப்படவேண்டிய ஒரு தலைவர் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்!![]()
அவர்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இன்று ஜூலை 13 ஆம் திகதிதான் அவரும் யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனும் கொழும்பில் கொல்லப்பட்ட ( 13 ஜூலை 1989 ) தினம்.
இவர்கள் இருவரையும் பற்றி ஏற்கனவே நான் நிறைய எழுதியிருப்பதனால், மீண்டும் அவற்றை பதிவுசெய்யாமல், பாரதி
எவ்வாறு பனாகொடை முகாமுக்குப்போனார் என்பதை, அவரை அங்கே அழைத்துச்சென்றவரின் வார்த்தைகளிலிருந்தே தருகின்றேன்.
மகாகவி பாரதியின் கவிதைகளுடன் அங்கே சென்றவர்தான் அமிர்தலிங்கம்.
இனி, அவர் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், 20- 03 -1983 ஆம் திகதி ஞாயிறன்று கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நீதியரசர் கலாநிதி எச். டபிள்யூ. தம்பையாவின் தலைமையில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் தெரிவித்த வாக்குமூலத்தை பாருங்கள்:
” எமது தமிழ்மொழியின் பெருமையைச்சொன்னால், நாம் தமிழரென்று எடுத்தியம்பினால் அதனை வகுப்புவாதம் எனச்சொல்லிவிடுகிறார்கள். உலகிலே பெரிய இனம் ஆரிய இனம் என்றால், நாமும் தனி இனம்தான் . எம்மை நாம் ஆளநினைப்பது இனவெறியல்ல.
அன்று நடந்த சத்தியாக்கிரகப்போரில் பனாகொடை தடுப்பு முகாமில் நான் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளையில் என்னிடமிருந்த நூல் பாரதியின் கவிதைகள்தான். பாஞ்சாலி சபதத்தை அங்கு மீண்டும் மீண்டும் படித்தேன்.
அத்துடன் கரும்புத்தோட்டத்திலே கவிதையில், ” நாட்டை நினைப்பாரோ …? எந்த நாளினிப்போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ…? அவர் விம்மியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே…! என்ற வரிகளை படித்தவேளையில் எனது கண்கள் குளமாகின. “
பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதியின் கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட “ பாரதி பத்ய “ என்ற நூலும் வெளியிடப்பட்டது.
தமிழ் அபிமானியும், கலாசார திணைக்களத்தில் செயலாளராகவுமிருந்த கே. ஜீ. அமரதாச மற்றும் திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் அவ்வேளையில் பணியிலிருந்த ரத்ன நாணயக்கார என்ற இனநல்லிணக்க ஆர்வலரும் இணைந்து பாரதியின் சில கவிதைகளை சிங்கள மொழியில் வரவாக்கியிருந்தனர்.
அதனையும் வரவேற்று அமிர்தலிங்கம் கருத்துச்சொன்னார்.
“ மனித உரிமைக்காகவும் மானிட நேசத்திற்காகவும் பாடிய பாரதி எமக்கெல்லாம் ஒரு தீர்க்கதரிசி. இன்றைய தினம் பாரதியை சகோதர சிங்கள மொழியில் இந்த விழா அறிமுகப்படுத்துகிறது.
நாம் எமது தாய்மொழிக்காகவும் அதன் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும் அதேசமயம் , சகோதர சிங்கள மொழிக்கும் பாரதியை அறிமுகப்படுத்துவதிலிருந்து தெளிவுபெறலாம். ”
பனாகொடை இராணுவமுகாமில் 1961 ஆம் தடுத்துவைக்கப்பட்ட அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், இராஜவரோதயம் சம்பந்தன் உட்பட பல தலைவர்களுடன் ஒரு எழுத்தாளரும் அடைபட்டிருந்தார்.
![]()
அவர்தான் புதுமைலோலன். இவர் அந்தச்சிறையிலிருந்து தமது மகள் அன்பரசிக்கு எழுதிய கடிதங்கள், தடுப்புக்காவலில் நாம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. புதுமைலோலன் மற்றும் ஒரு பிரபல மூத்த எழுத்தாளர் செங்கைஆழியானின் மூத்த சகோதரர் ஆவார்.
அமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் சாதாரண குடும்பத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்று சட்ட பீடத்தில் பயின்று பட்டம் பெற்று சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர்.
படிக்கும் காலத்திலேயே சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகத்திகழ்ந்திருந்தவர். அவரது வாழ்வு தமிழரின் அரசியல் பக்கம் திரும்பியதனால், தந்தை செல்வநாயகம் தொடங்கியிருந்த தமிழரசுக்கட்சியில் சேர்ந்து முதலில் 1952 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி கண்டிருந்தாலும், அதன்பின்னர் 1956 இல் அதே தொகுதியில் நடந்த மற்றும் ஒரு தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் சென்றார்.
சிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம், யாழ். கச்சேரி சத்தியாக்கிரகம், காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடந்த அகிம்சைப்போராட்டம் முதலானவற்றிலெல்லாம் பங்குபற்றி பொலிஸாரின் தாக்குதலுக்கும் இலக்காகியிருப்பவர்.
பனாகொடை இராணுவ முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டவர். 1972 இல் ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பை எதிர்த்தமைக்காகவும் கைதாகி தடுத்துவைக்கப்பட்டு, ட்ரயல் அட் பார் நீதிவிசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து அன்றைய தினமே சத்தியாக்கிரகம் செய்து, தலையில் பலத்த அடிவாங்கி இரத்தம் சிந்தச்சிந்த நாடாளுமன்ற அவைக்கு வந்த அமிர்தலிங்கத்தைப்பார்த்து, பிரதமர் பண்டாரநாயக்கா, “விழுப்புண்ணுடன் வரும் வீரரே வருக வருக” என வரவேற்று சிரித்து ஏளனம் செய்தார்.
அவ்வாறெல்லாம் களம்கண்டு வந்திருக்கும் அமிர்தலிங்கம்
வட்டுக்கோட்டை தீர்மானத்துடன், 1977 இல் மீண்டும் தேர்தலை சந்தித்தபோது எதிர்பாராதவிதமாக, அவரது விழுப்புண்ணை 1955 இல் ஏளனம் செய்தவரின் ஶ்ரீல.சு. கட்சியை, 1972 இல் அவரை சிறைக்குள் தள்ளிய அதே கட்சியின் தலைவியை முந்திக்கொண்டு அதிகப்படியான தொகுதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவரானார்.
![]()
![]()
1989 ஆம் ஆண்டு தனது சகா வெற்றிவேல் யோகேஸ்வரனுடன் மறைந்தார்.
பாரதியின் கவிதைகளைப்போன்று அமிரின் நாமமும் எமது நினைவில் தங்கியிருக்கும்.
—0—
letchumananm@gmail.com
![]()