அவ்வழி யாரும் செல்லமாட்டார்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

வெள்ளையாக இருப்பவனை கருப்பசாமி என்பான்
கருப்பாக இருப்பவரை வெள்ளைச்சாமி
என்பான்
அறைகுறை பார்வைதான் அவனுக்கு பெயர் நல்லகண்ணு
தாண்டவராயன் என்பார் அவனும் ஓரடி கூட தாண்டமாட்டான்
இப்படி எத்தனையோ பெயர்களை மக்கள்
இயல்பிலேயே வைப்பதுண்டு
எதனாலே இப்படி என நானும் பலநாளும் நினைத்ததுண்டு
இல்லாத ஒன்றை குறையாக எண்ணாமல் ஏற்று போற்றுகின்ற
இனிய குணம் என்றுணர்ந்தேன் வெட்கித் தலை குணிந்தேன் வேதனையால்
மதிநுட்ப மிக்காரை அமைச்சரென்றான் அரசன் அந்நாளில்
மதி என்றால் என்னவிலை என்று கேட்போர்
இன்று அமைச்சரே
சிறைக்குள் செல்ல வேண்டியவன் சிறப்பாய் நாட்டை ஆள்கின்றானென்றால்
சிறப்பாய் மக்கள் எங்ஙனம் வாழ்வார் சீர்கெட்ட நாட்டினிலே
தோன்றிற் புகழொடு தோன்றுக என்று சொல்லிச் சென்றான் முப்பாட்டானென
புகழைத் துரத்தி துரத்தி அதைப்பெறவும் இங்கும் பலர் ஓடுவதுமுண்டு
அடித்துப் பழுக்க வைக்க வைக்கும்
எக்கனியும் அதிசுவை தராதென்பதை
அறிஞராக தம்மை காட்டிக்கொள்ளும் மக்களும் ஏன் உணர்ந்தாரில்லை
பட்டம் பதவி புகழ் என எதுவந்தாலும் அதுவே நமைத்தேடி வருதல் வேண்டும்
சேர்க்கும் செல்வமல்ல அவையாவும் நாம்
பலவழியில் முயன்று தேடிச்சேர்ப்பதற்கு
விலை கொடுத்து வாங்கும் பட்டம் புகழ் எல்லாம் வீறுநடை போட வைத்திடாது
அலைசூழ்கடல் வாழ்வில்யாவும் அழியுமென
உணர்ந்தால் அவ்வழி யாரும் செல்லார்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()