கதைகள்

மேரி!…. ( சிறுகதை )… ஏலையா க.முருகதாசன்.

இரவு மூன்று மணிக்கு திடீரென கண்விழித்த சிவானந்தம் தனது மனைவி செல்வி கட்டிலில் சாய்ந்து இருந்தபடி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் பதைபதைத்து’ ஏன் என்ன நடந்தது, ஏன் அழுகிறாய் ‘எனக் கேட்க, ‘அம்மாவை நினைத்து அழுகிறேன்’ என திரும்பவும் விம்மினாள்.

சிவானந்தம் எழுந்து கட்டிலில் சரிந்து உட்கார்ந்தபடி, மனைவியின் தலையை ஆதரவாகத் தடவியபடி ‘அம்மா நல்லாத்தானே கனடாவிலிருக்கிறார், அதை நினைத்து ஏன் அழுகிறாய் ‘என்றவுடன் ‘இல்லை அம்மாவும் நாளைக்கு முதியோர் இல்லத்துக்கு போக வேண்டி வந்தால் மேரிக்கு வந்து நிலைமை அம்மாவுக்கும் வந்துவிடுமோ என்று பயமாகவிருக்கின்றது’என்று செல்வி சொல்லியதும்’அப்படியொன்றும் வராது,இதற்குத்தான் முதியோர் இல்லத்திற்கு வேலை செய்ய போக வேணடாம்,உன்னுடைய இளகிய மனதிற்கு அந்த முதியவர்களைப் பார்க்கும் போது உன்னுடைய மனம் தாங்காது என்று தெரிந்துதான் சொன்னனான் என்று’ ஆறுதல்படுத்தினான் சிவானந்தம்.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார், தகப்பன்மார் தன்னை தங்கள் மகளாகப் பார்த்து நடந்து கொள்ளும் விதத்தை கணவனுக்குச் சொல்வாள்.தான் அவர்களை பராமரித்ததை மறந்துவிட்டு ‘நேற்று செல்வி நீ வரவில்லை நான் நிறையக் கஸ்டப்பட்டுவிட்டேன் ‘என்பார்கள் சிலர்.காலையில் பராமரித்ததை மறந்துவிட்ட சிலர் ‘நீ காலையில் காலைச் சாப்பாடு தரவில்லை என்பார்கள்’ சிலர்.

இப்படி அவர்கள் ஞாபகத்துக்குள்ளும் ஞாபக மறதிக்குள்ளும் தங்களுடைய வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.இவர்களில் எத்தனை பேர் கெம்பீரமாக மகிழ்ச்சியோடு பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் வாழ்ந்திருப்பார்கள்.பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களைப் பார்க்க வரும் போது, அவர்களை இனங்கண்டு மகிழ்வதும், அடுத்த நிமிடமே ‘நீங்கள் யார்?’ என்று அவர்களிடமே கேட்டுவிட்டு, பிள்ளைகளைப் பார்க்க ஆசையாக இருக்கின்றது, அவர்களைச் வந்து என்னைப் பார்க்கச் சொல்கிறீர்களா என்று பிள்ளைகளிடமே சொல்கின்ற நிலைமையைப் பார்த்து செல்வி வேதனைப்பாடாத நாட்களே இல்லை.

வேதனைக்கு மத்தியிலும்,முதியோர் இல்லத்தில் அவர்களை பராமரித்து அன்பு செலுத்துவதை அவள் விரும்பினாள்.தனது தாயையும் அவர்களுடன் ஒப்பிட்டு ‘அம்மாவுக்கும் ஒருநாள் இப்படித்தான் ஆகிவிடுமோ’ எனக் கலங்குவதும் உண்டு.செல்வி அந்த முதியோர் இல்லத்திற்குள் காலடி எடுத்து வைத்ததுமே ஒரு புதிய உலகத்துக்குள் தான் இருப்பதாகவே உணர்வாள்.அது ஒரு தனி உலகம்.ஞாபகங்களும் மறதியும் மழலைகளின் செய்கைகளை ஒத்த அவர்களின் செய்கைகளினால், அவர்கள் மீது அவள் இரக்கப்படுவாள்.நானும் ஒருநாள் இப்படித்தான் இருப்பேனா என்று

அவள் நினைப்பாள்.வாழ்க்கையின் விசித்திரங்களை உணர்வாள்.அவர்கள் சிரிக்கும் போதும்,காயந்து குழிவிழுந்த கண்களிலிருந்து கண்ணீர் வரும்போதும் அவர்கள் எதை நினைத்து அழுகிறார்கள் எதை நினைத்துச் சிரிக்கிறார்கள் என்பதை அவர்களில் சிலர் சொல்வார்கள், சிலருக்குச் சொல்லத் தெரிவதில்லை.

மேரி செல்வியின் மீது விருப்பங் கொண்ட மூதாட்டி.தனது கடந்த கால வாழ்க்கையைச் செல்விக்குச் சொல்வி மகிழ்வாள்.அடுத்தநாள் செல்வியை ‘நீ யார்’ என்று கேட்பாள்.ஒரு நாள், செல்வி முதியோர் இல்லத்துக்குள் நுழைந்ததும் அவளோடு பணிபுரிபவர்கள்’உன்னுடைய மேரித்தாய்க்கு ஒரு பார்சல் வந்திருக்கு நீயே கொடு’ என்று கொடுத்தனர்.மேரித்தாயிடம் கொண்டு போன செல்வி’ உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கின்றது’ என்று சொல்ல’நீயே பிரி’ என்று மேரித்தாய் சொல்ல, அதற்குள் மகள் அனுப்பிய கிறிஸ்மஸ் பரிசளிப்புகள் இருந்தன.ஒரு தபால் உறையில் கடிதம் இருந்தது.அந்தக் கடிதத்தில் ‘அம்மா எனக்கு புற்றுநோய், இதுதான் நான் உனக்கு அனுப்பும் கடைசி அன்பளிப்பாகவும் இருக்கலாம்.இது உன் கையில் கிடைக்கும் போது நான் சிலவேளை இறந்து போயிருப்பேன்’என்றிருந்தது.கடிதத்தை கொண்டோடிப் போய் மற்றப் பணியாளர்களிடம் காட்ட ‘நீயே பக்குவமாக அதைச் சொல்’ என்றிருக்கிறார்கள்.செல்வி மேரித்தாயிடம் உண்மையைச் சொல்ல அதை கவனத்தில் எடுக்காது நிராகரித்த நினைவுக் கலங்கள் தன் மகள் தன்னை பார்க்க வருவாள் என மகிழ்ந்து சிரித்தாள்.

ஆனால் பார்சல் தாயின் கைக்கு கிடைக்குமுன்பே மேரித்தாயின் மகள் கொரனோ வைரஸ் பரவிய நாட்களில் இறந்த செய்தி முதியோர் இல்லத்திற்கு எட்டியது.மூன்று நாட்கள் செல்ல, செல்வி முதியோர் இல்லத்துக்குள் நுழைந்த போது பணிசெய்வோரின் முகத்தில் வேதனை தெரிந்தது.’ஏன் எல்லோரும் ஒருமாதிரி இருக்கிறீர்கள்’ என்று கேட்ட போது, ‘கொரனோவால் உன்னுடைய மேரித்தாய்……’ எனஇறு சொல்லி அவர்கள் கலங்கியதைக் கண்ட செல்வி புரிந்து கொண்டாள்.சுவரோடு சாய்ந்து விக்கி விக்கி அழுதாள்.’கடவுளே மகள் இறந்ததைக்கூட அறிய முடியாது, மகள் தன்னை பார்க்க வருவாள் என்ற நினைப்போடு என்னுடைய மேரித்தாய் போய்விட்டாரே’ என்று குரல்விட்டு அழுதாள். ‘அழாதை செல்வி’ என்று ஆறுதல் படுத்தத்தான் அவர்களால் முடிந்தது.அவளை அணைத்து ஆறுதல்படுத்த முடியவில்லை.கொரோனா என்ற தடுப்பு அவர்களைத் தடுத்து நின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button