கதைகள்

காடு விளைஞ்சென்ன மச்சான்?… ( சிறுகதை )…. சங்கர சுப்பிரமணியன்.

குக்கிராம்மான சிற்றூரில் மரகதம்மா என்ற மூதாட்டி காலை உணவான பழங்கஞ்சிக்கு பச்சை மிளகாயையும் சின்ன வெங்காயத்தையும் கடிச்சு கஞ்சியை குடித்தாள். ஐந்து நட்சத்திர விடுதியில் காலை உணவை சாப்பிட்டால்கூட கிடைக்காத மனநிறைவும் மகிழ்ச்சியும் மனதில் துள்ள திண்ணையில் வந்து அமர்ந்தாள்.

எங்கிருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம் என்பதே முக்கியம். அந்த மூதாட்டியைப் பார்த்தால் எந்த கவலையின் சாயலும் இல்லாமல் எதுவும் இல்லயே என்ற ஏக்கமும் இல்லாமல் காணப்பட்டாள்.
இந்த உலகே அவள் காலடியில் நின்று பணிபுரிவதுபோல அதே
சமயம் எவ்வித அகங்காரமும் இல்லாது அமைதியாகத் தென்பட்டாள்.

“எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே” என்ற திரைப்படப் பாடலே அம்மூதாட்டியை பார்த்ததும் என் நினைவில் உரசிச் சென்றது. அரண்மனை போன்ற வீடும் ஆடம்பரமான உடைகளும் அதிவிலை உயர்ந்த கார் என இருக்கும் மனிதர்கள்கூட இம்மூதாட்டியின் மனநிறைவிலும் மகிழச்சியிலும் பத்து சதவிகித்தத்தையாவது பெற்றிருப்பார்களா என்றால் சந்தேகமே.

திண்ணியிலிருந்த மூதாட்டி முன் ஒரு நரிக்குறவப் பெண் பாசிமணி, ஊக்கு, கொண்டை ஊசி என்று விற்றுவர அப்பெண்ணை நிறுத்தி,

“ஏம்மா, கொஞ்ச நில்லு. ஊக்கு இருந்தா கொடு” என்றாள்.

“சரிங்க தாயே, இத தாரனுங்க” என்று சொல்லியபடி கையில் மாலைபோல் தொங்கிக்
கொண்டிருந்தவற்றுள் இருந்து பத்து ஊக்குகள் கொண்ட ஒரு கொத்தைப் பிரித்துக்
கொடுத்தாள்.

“எம்புட்டும்மா?”

“என்ன தாயி கேட்டுற போறன் ஒங்ககிட்ட. ரெண்டு ரூவா கொடுங்க தாயி”

நரிக்குறத்தி விலை சொன்னதும் மறுவார்த்தை பேசாமல் மூதாட்டி அந்த குடிசை வீட்டினுள் சென்று இரண்டு ஒற்றை ரூவா நாணயங்களைக் கொண்டுவந்து கொடுத்து ஊக்கைப் பெற்றுக் கொண்டாள்.

காசைப் பெற்றுக் கொண்டவள் கையெடுத்து கும்பிட்டு என்னதாயி கார் பங்களான்னு இருக்குறவங்க கூட எங்கிட்ட பேரம் பேசுவாங்க நீங்க கேட்ட காசை மறுவார்த்தை சொல்லாம கொடுத்தீட்டங்களே தாயி என்றாள். ஒங்களுக்கு நல்ல மனசு தாயி என்று சொன்னதும் மூதாட்டி அட போடி பெண்ணே என்னை ஏமாற்றி நீ கோடீஸ்வரி ஆயிடப் போறியா உன் வயிற்றில அடிச்சு நான் என்னத்த கண்டுறப்போறன் என்றாள்.

“தாயி நீங்க கோடீஸ்வரன்னு சொன்னதும் நினவுல ஒன்னு வருது. எம்மகன் சொன்னான் ஒரு பணக்காரரு கோடிக் கணக்கா
பணத்த பேங்குல வாங்கிட்டு ஊரவிட்டு ஓடிட்டாரம். அவரு பிளேனுல்லாம் வச்சிருந்தாராம்”

“ஆமா நீ சொல்றது சரிதான். அவரு பேருகூட மல்லியாவோ
எதுவோன்னு சொன்னாங்க”

“ஆமா தாயி. அவரேதான். அவரு ஊருங்களுக்கெல்லாம் பிளேன் உடுறவராம். அவருட்ட இருந்த பிளேனுல எல்லாத்துலயும் அந்த பிளேன ஓட்டுரவரோட ரூமுல அந்த சாமி ஏழுமலையான் உருவம் இருக்குமாம்” என்றாள் நரிக்குறத்தி.

“அட கடவுள, அப்படி ஏழுமலையான் மேல பத்தி இருந்துமா இப்படி ஆயிட்டாரு”

“போங்க தாயி. சாமியாவது
பூதமாவது. அவரு வாங்குற ஒவ்வொரு பிளேனயும் திருப்பதிக்கு இட்டுனு போயி பூச போட்டுட்டுதான் வானத்துல பறக்க விடுவாரம்”

“அப்படியா?  அப்படி சாமி மேல நம்பிக்கை வெச்சவருக்கா இந்த கதி?”

அதுதான் தாயி சொல்றன். நம்ம பாடுபட்டாதான் ஒருவா கஞ்சி. இந்த பாசிமணி ஊசிய நாலு தெருவுல கூவி வித்தாதான் இன்னக்கி ராத்திரி ஒருவா சோறு. படச்சான் படியளப்பான்
என்கிறதெல்லம் சும்மா ஏமாத்து. ஒன் மனச தொட்டு சொல்லு தாயி இம்மாஞ் சனங்க நாடெல்லாம் சாவுறாங்கலே.
அதென்னவே குருனாவை கருணாவோ அதுக்கிட்ட இருந்து காப்பாத்த எந்த சாமி வந்துது.

“சாமி இருந்தென்ன தாயி மக்களுக்கு நோயும் நொடியுந்தான் மிச்சம், நோயி நொடியுந்தான் மிச்சம்.

சாமி இருந்தென்ன தாயி மக்களுக்கு நோயி நொடியுந்தான் மிச்சம், நோயி நொடியுந்தான் மிச்சம்.”

என்று பாட்டுப்பாடிய படியே நரிக்குறத்தி மூதாட்டியிடம் போய் வாறன்னு சொல்லியபடி சென்றாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *