கவிதைகள்
அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ ! 

விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது !
வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி மக்களெல்லாம் திரிகின்றார் !
தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல் ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை !
மருந்துவிற்கும் கடைகளிலும் பாதுகாப்பாய் அவரில்லை
வாங்கச் செல்லும் எவரிடத்தும் முகக்கவசம் காணவில்லை
பேருந்தில் செல்வாரும் பெரும்பாலும் அணிவதில்லை
யாவருமே கொரனோவை மறந்துவிட்டே திரிகின்றார் !
கையுறைகள் அணியாமல் எரிபொருளை நிரப்புகிறார்
காசுவாங்கும் கடைகளிலும் கையுறையைக் காணவில்லை
காணாமல் கொரனோவும் ஆகியதே எனுமெண்ணம்
எல்லோரின் மனதினிலும் எழுச்சிபெற்று இருக்கிறது !
கொண்டாட்டம் என்கின்றார் கூடலாம் என்கின்றார்
வண்டாகத் திரிவதற்கு வாய்ப்பென்றும் மகிழுகிறார்
திண்டாடித் திருந்ததுவும் திகைத்துமே இருந்ததும்
இன்னுமே இதயத்தில் இருப்பதையும் மறந்துவிட்டார் !
ஒழிந்தது கொரனோவென்றால் உலகமே மகிழ்வடையும்
அழிந்தது கொரனோவென்றால் ஆனந்தம் பெருகிநிற்கும்
கொரனோவோ ஒருபக்கம் பார்த்தபடி இருக்கையிலே
அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும் !
![]()