Featureகதைகள்

காதலும் கடந்துபோகும்!… ( சிறுகதை ) … முருகபூபதி.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர், கதிரவேற்பிள்ளை அய்யாவைக்கண்டேன். அவர், புகலிடம் பெற்றபின்னர் தனது பெயரை தமிழ் சமூகத்திடம் பிள்ளை, என்றும் ஆங்கிலம் பேசும் சமூகத்தவரிடம் கதிர் என்றும் சுருக்கிக்கொண்டவர்.

நாம் அவரை பிள்ளை அய்யா, என்றே அழைப்போம். பிள்ளை அய்யா எனக்கும் நீண்ட கால நண்பர். மனைவி இல்லை. மறைந்து கணகாலம். அதன்பிறகு தனிமரமானவர். தொன்னூறு வயதும் கடந்திருக்கும்.

மாநகரத்திலிருந்து தொலைவில் வசிக்கும் அவரது பிள்ளைகள் தம்மோடு வந்து இருக்குமாறு அழைத்தும், அவர்களிடம் செல்ல விரும்பாமல், தனக்கு கிடைத்துவரும் ஓய்வூதியத்துடன் ஒரு அறைகொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பவர்.

ரயில், பஸ் போக்குவரத்து வசதிகள் கொண்ட பிரதேசத்திலேயே தனக்கு வசதியாக தேடி எடுத்தவர். அந்த வீடு மாற்றத்தின்போது நான் அவருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கின்றேன். அவரது உடைமைகள் ஒரு காருக்குள் அடங்கும்.

கட்டில் மெத்தை, மேசை , கதிரைகளுக்காக மாத்திரம்தான் ஒரு ட்ரக்கை ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.

எங்காவது தமிழர் நிகழ்ச்சிகள் நடந்தால், எனக்கு கோல் எடுப்பார். நானும் அதற்குச்செல்வதாயிருந்தால், தன்னையும் அழைத்துச்செல்லுமாறு வேண்டுகோள் விடுப்பார்.

இந்த சந்திப்புகள் பல மாதங்களாக நடக்கவில்லை. எனது மகளின் புதிய பாடசாலை அனுமதியையடுத்து, நாங்களும் வீடு மாறிவிட்டோம்.

இடமாற்றத்தை அவரிடம் சொன்னபோது, “ நீரும் வெள்ளைக்காரனாகிவிட்டீர். “ என்றார்.

“ ஏன் அய்யா அப்படிச்சொல்கிறீர்கள்..? “ எனக்கேட்டபோது, “ அவர்கள் குறைந்தது ஏழு எட்டு வருடங்களுக்குத்தான் ஒரு வீட்டில் வசிப்பார்கள். பிறகு மாறிவிடுவார்கள். முதுகு நோவு உளைவு என்று கட்டில் மெத்தைகளையும் மாற்றுவார்கள். துணைகளையும் மாற்றிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் காரணமும்

வைத்திருப்பார்கள். அதுதான் நீரும் வீடு மாறுவதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறீர்! “ என்றார்.

“ காரணம் இல்லாமல் காரியம் இல்லைத்தானே அய்யா. ஏன்.. உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள், நீங்களும் உங்கள் மகள், மகன் குடும்பத்தினர் தம்மோடு வந்துவிடுமாறு அழைத்தும் போகாமல், போக்குவரத்து வசதியை கவனித்து, மாநகரப்பக்கமாக போய்விட்டீர்கள் “ என்றேன்.

“ என்ன.., எனக்கே திருப்பி அடிக்கிறீரா… அதுமாத்திரம்தான் நான் உமக்குச்சொன்ன காரணம். சொல்லாத காரணம் வேறு இருக்கிறது ஐஸே… “

“ அது என்ன அய்யா…? “

“ எனக்கு ஓய்வூதியம் வருது. என்னையும் தங்களோடு இணைத்துக்கொண்டால், என்னுடைய பெயரில் மின்சார, தண்ணீர், கேஸ் கட்டணங்களை செலுத்திவிடலாம் என்று பார்க்கிறார்கள். நான் ஏஜ் பென்ஷனியர். எமக்கு குறைந்த கட்டணம்தான். நான் யாருக்கு உதவி செய்யிறது பாரும். மகளுக்கா, மகனுக்கா..? பிறகு அவையளின் ஒற்றுமையும் குலைஞ்சுபோயிடும். அது மட்டுமில்லை. அவையளுக்கு உந்த தமிழ் நிகழ்ச்சிகளில் அவ்வளவு அக்கறையில்லை. தங்கட பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பிறதில்லை. ஆனா, ஸ்வுமிங், கராத்தே, ஜிம்னாஸ்டிக், பியானோ வகுப்புகளுக்கு மாத்திரம் அனுப்பினம். அவையளோடு நானும் இருந்தால், ஏதும் தமிழ் விழாக்கள், கூட்டங்களுக்குப்போவதற்கு அவர்களுக்காக தவமிருக்கவேண்டும். ஆனால், பாரும் தமிழ்த் திரைப்படங்களை பார்க்கப்போகும் போது, என்னை அழைப்பார்கள். அவர்கள் இரண்டு குடும்பமும் அதற்குப்போகும்போது, இரண்டுவீட்டுப்பிள்ளைகளையும் ஒரு வீட்டில் விட்டிடுவினம். பிறகு என்ன….. ? வரும்வரைக்கும் பேபி சிட்டிங்தான். இராத்திரி காவல்காரன் வேலை. கவனமாக இரும்! உமக்கும் பின்னொரு காலத்தில் இதுதான் நடக்கும், “

இவ்வாறு சுவாரசியமாகப்பேசும் எனது இனிய முதிய நண்பர் பிள்ளை அய்யாவை எதிர்பாராதவிதமாக அன்று எங்கள் பிரதேச ஷொப்பிங் பிளாஸாவின் கார் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

எனது கார், அந்தத் தரிப்பிடத்திற்கு வரும்போது, அவர் சற்று தொலைவில் நடைபாதையில் நின்றவாறு ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் பேசிக்கொண்டு நின்றார்.

அய்யா, வழக்கமாக அணியும் பாலுமகேந்திரா தொப்பியுடன் காட்சியளிக்கிறார். அவர் இயக்குநர் பாலுமகேந்திராவின் ரசிகர். அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, சந்தியாராகம் எல்லாம் பல

தடவை பார்த்தவர். கறுப்பு கண்ணாடியும் அணிந்திருந்தார். தொலைவிலிருந்து பார்த்தாலும் அவரது தொப்பியும், கண்ணாடியும் தாடியும் அவரை அடையாளம் காண்பித்துவிடும்.

‘ இவர் எங்கே இப்படி… !? ‘ ஆச்சரிய கேள்விக்குறிகளை மனதில் தேக்கியவாறு, எனது காரை தரித்துவிட்டு நடந்து வந்து, “ அய்யா… எப்படி இருக்கிறீங்க.. “ எனச்சொன்னவாறு எனது வலது கரத்தை நீட்டினேன். தனது கையை இறுகப்பொத்தியவாறு, திரும்பி என்னை ஏறெடுத்துப்பார்த்துவிட்டு, கண்ணாடியை கழற்றி, “ நீரா… கையெடுத்துக்கும்பிடும். உந்த கையாட்டல், கைகுலுக்கல் எதுவும் வேண்டாம். பார்த்தீரே உவையள் வெள்ளைக்காரரும் எங்கட பண்பாட்டுக்கு வந்திட்டீனம். “ அவர் சொன்னதைக்கேட்டு, அருகில் நின்ற அந்தப்பெண்ணும் சிரித்தாள்.

அன்றுதான் அந்தப்பெண்ணை முதல் முதலில் பார்க்கின்றேன். நெற்றியில் சிறிய திலகம். அச்சு அசலான யாழ்ப்பாணத்துப் பெண்தான். வயதும் நாற்பது கடந்திருக்காது. அவள் சாய்ந்து நின்ற காரின் பின் ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் ஒரு ஐபேடுக்கு சச்சரவு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

“ பிளீஸ் சத்தம் போட வேண்டாம். பிறகு அப்பாட்ட சொல்லுவன். இந்த தாத்தாவுடன் பேசிவிட்டு வாரன். இவரைத் தெரியும்தானே..? “ திறந்திருந்த காரின் கண்ணடியை தொட்டவாறு அவள் சொன்னதும், பிள்ளைகள் இருவரும் ஏக குரலில், “ ஹாய் தாத்தா….” என்றனர்.

அந்த இளம்தாய், தனது கைத்தொலைபேசியை மகனிடம் கொடுத்து, “ இதில் விளையாடு “ எனக்கொடுத்தாள். வயதில் மூத்தவளாக தென்பட்ட மகள், “ தாங்ஸ் அம்மா “ எனச்சொல்லிவிட்டு, ஐபேடில் தொடர்ந்து பெப்ப பிக் பார்க்கிறாள். மகன், தாய் தந்த கைத்தொலைபேசியில் எதனையோ தேடி எடுத்து ரசித்து சிரிக்கிறான். அந்தக்குழந்தைகள் ஒரே நிறத்தினர் அல்ல. சிவந்த நிறத்தில் மகள் இருந்தாள். மகனின் நிறம் பழுப்பு.

அப்போது சில யார்கள் தூரத்தில் ஒரு ட்ரொலி நிறைய வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை நிரப்பிக்கொண்டு வந்தவரை, “ அய்யா, அவரும் வந்திட்டார். உங்களைப்பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார் “ என்றாள்.

“ என்ன பிள்ளை அங்கிள்… என்ன இந்தப்பக்கம். பார்த்து கணகாலம் என்ன…. எப்படி இருக்கிறியள். எங்ட ஏரியாவிலும் சாமானுக்கு பெரியதட்டுப்பாடு. அதுதான் இந்தப்பக்கம் வந்தனாங்கள். “

“ அதுசரி, வந்ததே வந்தீர், இந்த பிள்ளைத்தாச்சிப்பெண்ணையும் இப்படி வெளியில் கூட்டிவாரதே. “ என்று வந்தவரைப்பார்த்து

கடிந்துகொண்டார். அந்த கண்டிப்பில் உரிமையும் கனிவும் தென்பட்டது.

அப்போதுதான் அந்தப்பெண்ணின் வயிற்றைப்பார்த்துவிட்டு, சடாரென முகத்தை திருப்பிக்கொண்டேன். அய்யா, என்னை அந்தப்பெண்ணின் கணவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

நாம் கைகுலுக்கிக்கொள்ளாமல் பரஸ்பரம் புன்னகை சிந்தினோம்.

அந்தக்குடும்பமும் அய்யாவும் மிகவும் தொலைவிலிருந்து நான் வசிக்கும் பிரதேசத்திலிருக்கும் ஷொப்பிங் பிளாஸாவுக்கு ஏன் வந்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்குப்புரிந்தது.

அய்யாவிடமிருந்த இரண்டு பச்சை நிற வூல்வேர்த் பேக்கிலும் சாமான்கள் நிறைந்திருந்தன. கைப்பிடியை பிணைத்து சிறிய முடிச்சும் போட்டிருந்தார்.

“ முன்னால துடைக்கிறதுக்கும் பின்னால துடைக்கிறதுக்கும்தான் மிகப்பெரிய தட்டுப்பாடு “ என்று சொல்லிவிட்டு, அய்யா சிரித்தார். அந்த வயதிலும் அவருடை பற்கள் வெண்மை குன்றாமல் இருந்தன.

“ அய்யாவிடம் இன்னமும் லொள்ளுப்பேச்சு குறையவில்லை “ என்றாள் அந்தப்பெண்.

“ அது சரி… நீர் சாமான்கள் வாங்கிட்டீரே… ஓடும்… ஓடும், வாங்கிட்டு வாரும். நீர் வரும் வரையும் நான் நிற்கிறன். போகும் வழியில் என்னையும் இறக்கிவிட்டுப்போம். “ என்று சொன்ன அய்யா, என்னை கைச்சைகையால் கலைத்தார்.

“ இதிலயே நின்று கொள்ளுங்கள். கெதியா வாரன். நேற்றே ஷொப்பிங் எல்லாம் முடிஞ்சுது. அரிசியும், மாவும் வாங்க மறந்திட்டாள் என்ர மனுஷி. அவளை அனுப்பினால், முழு ஷொப்பிங் சென்டரையே கொண்டுவந்துவிடுவாள். அதுதான் நான் வந்தேன் அய்யா. “ எனச்சொல்லிவிட்டு, அகல முற்படும்போது, “ கொஞ்சம் பொறுங்க… எங்கட சாமான்களை காரில் ஏற்றிவிட்டுத் தாரன். இந்த ட்ரொலியையே எடுத்திட்டுப் போங்க “ என்றான் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவன்.

அப்போதுதான் பார்த்தேன். அந்தக்காரில் ஏற்கனவே நிறைய சாமான்கள் இருந்தன.

“ முதலில் வைஃப்பை அனுப்பி வாங்கி வரச்சொல்லிவிட்டு, நான் காரிலிருந்து பிள்ளைகளைப்பார்த்துக்கொண்டேன். அதன்பிறகு அவள் எடுத்துவந்த சாமான்களை இறக்கிவிட்டு, அதே ட்ரெலியை நான்

எடுத்துச்சென்றேன். இப்போது நீங்க எடுத்துச்செல்லுங்க…. “ என்றான் அந்தக்கணவன்.

“ டிப்பிக்கல் புத்தி என்று உதுக்குத்தான் சொல்றது “ என்றார் அய்யா. அந்தப்பெண் அடிவயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

நான் திரும்பி வரும்போது, அவ்விடத்தில் பிள்ளை அய்யா மாத்திரமே நின்றார். அந்தக்குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர்.

“ வாரும்…. வாரும்…. வெய்யில் ஏறப்போகுது. கெதியா போகவேணும். “ அய்யா அவசரப்படுத்தினார். காரைத்திறந்து சாமான்களையும் அவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்.

“ என்னய்யா… இந்த கொரோனா வந்து படாத பாடு படுத்துகிறது. சாமான்களுக்கும் தட்டுப்பாடு வந்திட்டுது. இனி, என்ன நடக்கும் அய்யா…? “

“ சும்மா அதையே பேசிக்கொண்டு வராதையும். என்ர வாழ்க்கையில் எல்லாம் பார்த்திட்டன். மலேரியா, நிமோனியா, டெங்கு, சார்ஸ்…. இப்போது கொரோனா…. எல்லாம் கடந்துபோகும் ஐஸே. “ என்றார் அய்யா.

“ என்ன அய்யா, கொஞ்சமும் சீரியஸ் இல்லாமல் பேசுறீங்க…! “ என்றேன்.

“ அது கிடக்கட்டும், உம்மிட்ட ஒரு விடயம் இன்று பேசவேணும். “

“ சொல்லுங்க அய்யா. “

“Your child and my child playing with our child – இதுக்கு அர்த்தம் தெரியுமோ…? சொல்லும். “

உலகம் முழுவதும் சனம் எதிர்பாராத இந்த வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலில் பதறிப்போயிருக்கும் நேரத்தில், இந்த மனுஷன் என்னதான் சொல்ல வருகுதோ..!? – மனதிற்குள் அவரை திட்டிக்கொண்டே, “ என்னய்யா… என்ன சொல்றீங்கள்…? உதுக்கு அர்த்தம் தெரியாமலா இந்த நாட்டில் இத்தனை வருஷம் குப்பை கொட்டுறன். உமது பிள்ளையும் எனது பிள்ளையும் எங்கள் பிள்ளையுடன் விளையாடுகிறது. “ என்றேன்.

அய்யா, தனது கறுப்புக்கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்தி, கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு , என்னை ஏறிட்டுப்பார்த்து புன்னகை சிந்தியவாறு, “ அந்தக் கார் பார்க்கில்

பார்த்தீரே அந்த இளம் தம்பதி… அவையளுக்கு நான்தான் கலியாணம் செய்து வைத்தேன். “ என்றார்.

“ அப்படியா… நல்ல விடயம்தான். உங்களுக்கு சொந்தமோ..? “

“ இல்லை… இல்லை. ஆனால், அது பெரிய கதை. சுருக்கமாகச்சொல்றன் கேளும். “

நான் வீதியை பார்த்து, காரை நிதானமாக செலுத்தியவாறு, அவர் சொல்லப்போகும் கதையைக் கேட்க செவியை கூர்மையாக்கினேன்.

“ அந்தக்காருக்குள் இருந்த பெண் குழந்தை அந்த ஆணுடையது. வயதில் குறைந்த மற்ற ஆண் குழந்தை அந்தப்பெண்ணுக்குப்பிறந்தது. இப்போது அவள் வயிற்றிலிருக்கும் குழந்தை அவர்கள் இருவருக்கும் பிறக்கப்போவது. “ அய்யா கதை சொல்லத்தொடங்கியதும், எனது காரின் வேகம் குறைந்தது.

“ என்ன அய்யா, புதுக்கதையெல்லாம் சொல்றீங்கள்… “ அவரது முகத்தை திரும்பிப்பார்த்தேன்.

“ தெருவைப் பார்த்து காரை ஓட்டும் – கதையை கேளும். “

அந்தப்பெடியனின் பெயர் தயாபரன். அது அவனது இரண்டாவது மனைவி சுகுணா. தயாபரனின் முதல் மனைவி ரஞ்சிதமலர், கர்ப்பப்பையில் கேன்சர் வந்து செத்துப்போனாள். அப்போது அந்தப்பெண்குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும்.

நீர்… இப்ப பார்த்தீரே சுகுணா, அவவின் முதல் கணவன் மூர்த்தியும் அந்த ஆண்குழந்தைக்கு ஒருவயதிருக்கும்போது சுவாசப்பையில் கேன்சர் வந்து இறந்துபோனான்.

இந்த இழப்பெல்லாம் நடந்தது, இரண்டு குடும்பமும் இங்கே வந்தபிறகுதான்.

முதலில் இறந்தது ரஞ்சிதமலர். தயாபரனும் ரஞ்சிதமும் மூர்த்திக்கு ஊரில் இருக்கும்போதே நன்கு தெரிந்தவர்கள்.

மூர்த்தி சில வருடங்கள் குவைத்தில் வேலை பார்த்தவன். நன்றாக சிகரட்டும் பிடிப்பான். ஒரு செயின் ஸ்மோக்கர். எஞ்சினியர்.

தயாபரன் – ரஞ்சிதம் லண்டனிலிருந்து இங்கே வந்தபிறகுதான் அந்தப்பெண்குழந்தை பிறந்தது.

அதன்பிறகுதான், காலம் தாழ்த்தி மூர்த்தி, சுகுணாவை மணம்முடித்து இங்கே மைக்ரேஷன் கிடைத்து வந்தான். இங்கே வந்த பிறகும் சிகரட்டை அவன் விடவில்லை. ஊரிலும் அறிமுகம் இருந்தமையால்

இரண்டு குடும்பமும் இங்கே ஓரிடத்தில்தான் அருகருகே வீடுகள் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

அந்தப்பிரதேசத்தில்தான் நானும் எனது பிள்ளைகளுடன் முன்பிருந்தேன். அதனால் தயாபரன் – மூர்த்தி குடும்பங்களை எனக்கும் நன்றாகத் தெரியும். எதிர்பாராதவகையில் தயாபரனின் மனைவி ரஞ்சிதம் இறந்துவிடவும் பெண்குழந்தையுடன் தனித்தும் தவித்தும்போனான். மூர்த்தியும் அவன் மனைவி சுகுணாவும்தான் பிறகு அவனுக்கும் அந்த பெண்குழந்தைக்கும் ஆதரவாக மோரல் சப்போர்ட்டுடன் இருந்தனர். என்ன செய்வது…? சில சமயங்களில் சுகுணாவே அந்த பெண்குழந்தைக்கு சைல்ட் மைண்டிங்கும் செய்திருக்கிறாள். அக்குழந்தையிடத்தில் சுகுணாவும் மூர்த்தியும் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். அதற்கு அச்சமயம் அவர்களுக்கு பிள்ளை பிறக்காதிருந்ததும் ஒரு காரணம். அந்த ஆண்குழந்தை அவர்களுக்கு தாமதமாகத்தான் பிறந்தது.

என்ன செய்வது, மூர்த்திக்கு சுவாசப்பையில் கேன்சர் வந்து முற்றிவிட்டது. மருத்துவர்களும் கைவிடவேண்டிய சூழ்நிலை வந்தபோதுதான், அவன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்.

நான் ஆஸ்பத்திரிக்கு அவனைப்பார்க்கச்செல்லும்போதெல்லாம், தனது மனைவி சுகுணா பற்றியோ , தனது ஆண்குழந்தைபற்றியோ அவன் பேசுவது குறைவு. ரஞ்சிதம் – தயாபரன் தம்பதிகளின் பெண்குழந்தை பற்றித்தான் அதிகம் அக்கறை எடுத்துப்பேசுவான். தாய்ப்பாசம் இல்லாமல் வளர்ந்த அக்குழந்தை மீது அவனுக்கிருந்த அக்கறை சற்று வியப்பானது. “ அய்யா, பெண் குழந்தைகளுக்கு அவசியம் தாய் வேண்டும். அவன் தயாபரன் பாவம்… மனைவி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறான்.

அவனுக்கு இப்படி நேர்ந்திருக்கக்கூடாது. எனது நீண்ட கால நண்பன். அவள் ரஞ்சித மலரும் எங்கட ஊர்தான். ஒன்றாக படித்திருக்கிறோம். நான் குவைத்துக்குப்போய் நன்றாக உழைத்துவந்து, அவளைத்தான் கலியாணம் செய்வதற்கு எண்ணியிருந்தேன். ஆனால், அது அவளுக்குத் தெரியாது. அவையள் எங்கட சாதியைவிட உயர்ந்த சாதிவேறு. அதனால் ஒருதலைக்காதலை வௌியே சொல்லவும் முடியாமல் தவித்தேன். குவைத் சென்று உழைத்து செல்வத்தோடு திரும்பினால், அந்த ஏற்றதாழ்வு தெரியாமல் அவள் வீட்டில் பெண் கேட்கலாம் என்ற தைரியத்தில் இருந்தேன். ஆனால், விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது.

அவள் ரஞ்சிதம் அக்கவுண்டனாக இருந்த அயல் ஊர் தயாபரனை திருமணம் முடித்து லண்டன் போய்விட்டாள். எனது ஒருதலைக்காதல் அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

யோசித்து யோசித்து சிகரட் குடித்ததுதான் மிச்சம். பிறகு எங்கட சொந்தத்தில் சுகுணாவை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். சிங்கப்பூர் சென்று சிறிதுகாலம் வேலை செய்து, அங்கிருந்து இங்கே – அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டோம்.

விதியைப்பாருங்கள், மீண்டும் அவுஸ்திரேலியாவில் இரண்டு குடும்பங்களும் சந்திக்க நேர்ந்தது. நான் அவள் ரஞ்சிதத்தை ஒருகாலத்தில் ஒரு தலைப்பட்சமாக காதலித்தது அவளது கணவன் தயாபரன், மற்றும் எனது மனைவி உட்பட எவருக்குமே தெரியாது. அவள் மீதிருந்த ஆழமான அந்தரங்கமான அந்த நேசம்தான், அவளது செல்லப்பெண்குழந்தையின் எதிர்காலம் பற்றிய அக்கறைக்கு காரணம் அய்யா. அவன் தயாபரன் எனது நல்ல நண்பன். அவன் மனைவியை இழந்து அக்குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுவது தெரிகிறது. பாவம் அவன். நான் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் இறந்த பின்னர், எனது மனைவியை தயாபரனுக்கு நீங்கள்தான் பேசிச்செய்து வைக்கவேண்டும். என்ர மனைவி சுகுணா, எனது முன்னாள் காதலியின் அக்குழந்தையையும் நன்றாக வளர்த்து ஆளாக்குவாள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கிருக்கிறது. நீங்கள் இதுவிடயத்தில் எனக்கு ஒத்துழைக்கவேணும். என்ர மகனுக்கும் ஒரு நல்ல தகப்பன் கிடைக்கும். தயாபரன் என்ர மனைவியையும் மகனையும் நன்றாகப்பார்த்துக்கொள்ளுவான். ஆனால், எனது இந்த பழைய ஒருதலைக்காதல் கதை வெளியே தெரியவேணாம். அவள் ரஞ்சிதத்தின் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் அய்யா.. “ என்று மூர்த்தி எனது கைகளைப்பற்றி மரணவாக்குமூலம் கொடுத்திருந்தான்.

இதுபற்றி, தயாபரனிடத்திலும் சுகுணாவிடத்திலும் தனித்தனியாக பேசியிருக்கிறேன். இருவரும் என்னுடன் சண்டைக்கு வந்தனர். அதெல்லாம் சரி வராது, இந்தச் சமூகம் என்ன சொல்லும் என்றெல்லாம் வாதிட்டார்கள். சுகுணா அழுது தீர்த்தாள். எனது மக்கள் மருமக்கள் கூட எனக்கு இது வேண்டாத வேலை. வயதான காலத்தில் இப்படியும் கலியாண புரோக்கர் வேலையா..? என்று எனது மருமகன் என்னை கேலியும் செய்தான். அதன் பிற்கு நான் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

மூர்த்தி அமைதியாக செத்துக்கொண்டிருந்தான். டொக்டர்மார் தெரிவித்த நாட்களுக்கு முன்பே அவனும் கண்களை மூடிவிட்டான்.

பாரும் ஐஸே…. வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீரா..? மனைவியை இழந்த ஒரு இளம் கணவனையும், கணவனை பறிகொடுத்த ஒரு இளம் மனைவியையும் இணைத்து வாழ வைப்பதற்கு ஒரு போராட்டமே

நடத்த வேண்டியதாகிட்டுது. இறுதியில் வெற்றிதான். அதற்கு அந்த இரண்டு குழந்தைகளும்தான் காரணம். ‘ குழந்தைகள்தான் எங்கட எதிர்காலம். அவையளை நன்றாகப்பேணி பரிவோடும் பாசத்தோடும் வளர்க்கவேண்டும். அதற்கு ஏற்ற பெற்றோர் இருக்கவேண்டும்.’ என்று மூர்த்தி மரணப்படுக்கையில் இருந்தவாறு என்னிடத்தில் அரற்றிக்கொண்டே இருந்தவன். அவன் நல்லதோர் ஆத்மா ஐஸே. அவன் இறந்து ஒரு வருடம் கழித்து, தயாபரனுக்கும் சுகுணாவுக்கும் எளிமையாக நானே பதிவுத்திருமணமும் செய்துவைத்தேன். அதற்கு நானும் சாட்சிக் கையொப்பமும் வைத்தேன்.

அந்தக்குழந்தைகள் தத்தத்தம் தந்தை – தாயின் திருமணத்தை பார்த்து ரசித்தனர். இப்போது அவர்கள் இருவருக்கும் பிறக்கப்போகும் தங்கள் புதிய வரவுக்கு காத்திருக்கிறார்கள்.

இதனைத்தான் நான் உமக்கு முதலிலேயே இப்படிச்சொன்னேன்: “Your child and my child playing with our child ´

நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவர்களை இன்று சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுதான். ஏன் இன்று உம்மைப்பார்த்ததும் உம்முடைய காரில் வருவதும் எதிர்பாராததுதான். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ஐஸே… ! உந்தக் கொரோனவும் எதிர்பாராததுதான். எல்லாம் கடந்துபோகும் !. காதலும்தான். “

அய்யா, கண்ணாடியை கழற்றி முகத்தை துடைத்துக்கொண்டார். ஒரு நல்ல செயலை செய்து மனநிறைவு கண்ட தெளிவு அவரது கண்களில் மின்னியது.

அவரை, அவரது வாடகைக்குடியிருப்பிற்கு முன்னால் இறக்கிவிட்டு, எனது வீடு நோக்கி காரை செலுத்தினேன். முற்பகல் அந்த ஷொப்பிங் பிளாஸா கார் தரிப்பிடத்தில் நான் கண்ட அந்த இளம் தம்பதியும், காரினுள் அமர்ந்து ஐபேர்ட் – கைத்தொலைபேசி சகிதம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச்செய்த பிள்ளை அய்யாவும் மனதில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.

காரின் கண்ணாடியை இறக்கி தாழ்த்தினேன். வெளியிலிருந்து இதமான காற்று வந்து தழுவியது.

—-0—

( நன்றி: ஞானம் – மே 2020 இதழ்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *