கதைகள்

இன்சி வின்சி ஸ்பைடர்!…. சங்கர சுப்பிரமணியன்.

மதுரை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியாகப் பணிபுரிபவர் சோமசுந்தரம். ஏதோ பிழைப்புக்காக தமிழாசிரியராக ஆனவரல்ல அவர். தமிழ்மீது அவருக்கு அளவுகடந்த ஈர்ப்பு.
அவர் கம்பராமாயாண பாடத்தை
வகுப்பில் நடத்தும் போது மற்ற ஆசிரியர்களைப் போல் இல்லாது அதிலுள்ள செய்யுட்களை இசைநயத்துடன் பாடித்தான் சொல்லிக் கொடுப்பார். அப்படி அவர் பாடும்போது ஒட்டுமொத்த பள்ளியுமே அமைதியாகி
அப்பாடலில் கவனம் செலுத்தி
உரத்த சத்தத்துடன் கணீரென்ற குரலில் வெளிப்படும் கர்நாடக இசையை ரசிக்கும்.

தமிழ்மீது மிகுந்த பற்றிருந்தாலும் அதற்காக ஆங்கிலத்தை அலட்சியப்படுத்தியதும் கிடையாது. ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இரு மொழிகளிலும் கவிதை, கதையென எழுதும் ஆற்றல் மிக்கவர். அவருக்கு ஒரே மகன். அவனுக்கும் திருமணமாகி ஐந்து வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறான். அவனுக்கு தாத்தா என்றால் உயிர். அதேபோல் அவருக்கும் பேரன் என்றால் ரெம்பவும் பாசம்.

ஒருநாள், ஆசிரியர் ஓய்வு அறையில் தனிமையிலிருந்த தமிழாசிரியர் பாட்டொன்றை பாடிக் கொண்டிருந்தார். மற்ற ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு சென்று பாடம் எடுத்துக் கொண்டிருக்க இவர் வகுப்பு முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இன்னொரு ஆசிரியர் சேகர் என்பவர் அங்குவர, வந்தவர் தமிழாசிரியரைப் பார்த்து,

“என்ன, சோமு ஐயா, நீங்கள் தமிழாசிரியர் மட்டுமல்ல ஆங்கில புலமையும் உள்ளவர்தான் ஆனால் ஆங்கிலப்பாடல்கள் கூடப்பாடுவீர்களா?” என்றார்.

“ஆமாம் சேகர் இது குழந்தைகளுக்கானஆங்கிலப் பாடல். என் பேரனின் விருப்பமான பாட்டு.” என்று பதிலளித்தார்.

ஓ! அப்படியா? என்று சேகர் கேட்டுவிட்டு அடுத்து வகுப்பில் பாடம் நடத்துவதற்காக
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

தமிழாசிரியரின் ஐந்து வயது பேரன் அருள்மொழி அவர்
மடியில் அமர்ந்து கொண்டு தினமும் அவனுக்கு பிடித்தமான “இன்சி வின்சி ஸ்பைடர்” என்ற
ஆங்கிலப்பாடலை பாடியபடி விளையாடிக் கொண்டிருப்பான்.
அவரும் அவனுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்ததால்
அவன் தினமும் பாடும் பாட்டு அவருக்கும் மனப்பாடமாகி இன்று தன்னையும் அறியாமல் பாடியதை எண்ணியதும் அவருக்கு சிரிப்பு வந்தது.

சில மாதங்களுக்கும்பின் சேகர் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். காலை ஒன்பதரை மணி இருக்கும். பள்ளி ஊழியர் ஒருவர் ஒரு சுற்றறிக்கையை கொண்டு வந்து ஆசிரியர் சேகரிடம் கொடுக்க அதைப்படித்த சேகர் அதிர்ச்சியடைந்தார். பின் மிகுந்த கவலையுடன் தமிழாசிரியர் சோமசுந்தரம் இறந்து விட்டார் எனவும் பள்ளி பத்து மணிக்கு மூடப்படுவதாகவும் மாணவர் அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்றும் இன்று விடுமுறை நாளை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று சுற்றறிக்கையில் உள்ளதை வாசித்துவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினார்.

மாலை நான்கு மணி. தமிழாசிராயர் சோமசுந்தரம் வீட்டில் அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கடைசியில் அவரது உடலை அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் ஏற்றினர். எல்லோரும் மௌனமாக அழுது கொண்டிருந்தனர். சில உறவினர்கள் சப்தமிட்டும் அழுது கொண்டிருந்தனர். வாகனம் சிறிது நகர ஆரம்பித்தது.

அப்போது திடீரென பெருத்த அழுகையுடன் ஒரு சத்தம். தமிழாசிரியரின் பேரன் “இன்சி வின்சி ஸ்பைடர் வென்ட அப் தி வாட்டர் ஸ்பௌட்” என்று அழுது கொண்டே வாகனத்தை பின் தொடரவும் அங்கு அழாமல் துக்கத்தோடு நின்றிருந்தவர்கள்கூட
அழத்தொடங்கினர். ஆசிரியரின் மகனும் தன் மகனைத் தூக்கி மார்போடு அணைத்தபடியே அப்பாடலை பாடிய பாடியே வாகனத்துடன் சென்றது அங்கிருந்தவர்கள் அனைவரையம் தேம்பித்தேம்பி அழவைத்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *