Featureகட்டுரைகள்

பசுவும் இசையும்!… சங்கர சுப்பிரமணியன்.

இசையும் கதையும் என்றால் எனக்கு பசுமையான அந்த நாட்கள் இலங்கை வானொலியில் நான் மகிழ்ந்திருந்த நாட்கள் நினைவில் குதூகலிக்கும். தென்தமிழ் நாட்டில் அதிலும் நான் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டிலும் வெளயிலும் நீக்கமற எங்கும் இலங்கை வானொலியின் அந்த இனிய சேவை காற்றின் ஊடாக காதுகளில் சங்கமித்துக்
கொண்டே இருக்கும். இங்கே பசுவும் இசையும் என்ற தலைப்பு பசு ஆராய்ச்சி மணியை அடித்ததுபோல பசு ஏதாவது இசைக்கருவியை இசைப்பதுபோல்
வித்தியாசமான ஒன்றை
சொல்லப்போகின்றேனோ
என்ற எண்ணம் தோன்றலாம்.

ஆனால் அப்படியொன்றும் இல்லை. ஒரு இசைக்கருவியுடன் இங்கே பசு சம்பந்தப் பட்டுள்ளது. பசுவதையை எதிர்ப்பவர்கள்கூட இதில் முழுக்க முழுக்க முரண்படுவார்கள். அதற்காக பசுவதையை நான் ஆதரிக்கும்
என்றோ அல்ல எதிர்க்கிறேன் என்றோ என்ற அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. இங்கே நான் கூறப்போகும் பசு சம்பந்தப் பட்டுள்ள இசைக்கருவி மிருதங்கம் ஆகும்.

மிருதங்கம் பசுத்தோலினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. எருமை மாட்டுத் தோலிலோ அல்ல காளைமாட்டுத்தோலிலோ
மிருதங்கம் தயாரிக்கப் படுவதில்லை. பசுவைக் கொல்லக்கூடாது என்றால் மிருதங்க இசையை நிச்சயமாக மறந்து விடவேண்டியதுதான். மிருதங்கம் செய்வதற்காக ஏன் பசு மாட்டைக்கொல்ல வேண்டும். இயற்கையாக இறந்த பசு மாட்டுத்தோலை உபயோகப் படுத்தலாமே என்று கேட்கலாம். இறந்த பசுமாட்டுத்தோலை கண்டிப்பாக உபயோகப்படுத்த முடியாது.

ஆதலால் பசுமாட்டைக் கொன்று அதன் தோலை உரித்தே அந்த தோலை பயன்படுத்த வேண்டும். தோலை உரிக்கும்போதும் கவனம் வேண்டும். உரிக்கப்படும் தோலில் மிருதங்கத்துக்கு உபயோகப் படுத்தும் பகுதியில்
கத்தியின் கீறல் இருக்கவே கூடாது. இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். எப்படியோ வயதானபின் மாடு இறந்துதான்
போகும். ஆதலால் வயதான பசு மாட்டைக் கொன்று உபயோகிக்கலாம் என்றால் வயதான மாட்டின் தோலையும் உபயோகப் படுத்த முடியாது. அப்படியானால் இளம்பசு மாட்டைக் கொன்று அதன்தோலை மிருதங்கம் செய்ய முடியுமா என்றால் அதுவும் முடியாது.

அப்படியென்றால் எந்த மாதிரி பசு வேண்டும்? பசு கன்றை ஈன்றிருக்க வேண்டும். ஏன் கன்றை ஈன்ற பசு மாட்டின் தோல்தான் வேண்டும் என்றால் மாடு சினைப்படும்போது அதன் தோல் விரிவடைகிறது. கன்றை
ஈன்ற பின் தோல் சுருங்குகிறது. இப்படி விரிந்து சுருங்கிய தோல்தான் மிருதங்கம் செய்வதற்கு வேண்டிய தன்மை கொண்டதாயிருக்கும்.
அப்படியென்றால் கன்றை ஈன்ற பசுவின் தோலை உபயோகப் படுத்தலாமா? கூடவே கூடாது. ஏனென்றால் அப்பசு குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாவது ஈன்றருக்க வேண்டும் அதற்காக அதிகமான கன்றுகளை ஈன்ற பசுவாகவும் இருக்கக்கூடாது. சரி, இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவை கொன்று தோலை எடுக்கலாம் என்றால் அதவும் முடியாது. அப்படிப்பட்ட
பசுமாட்டை மிருதங்கம் செய்பவர் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின்னரே அந்த பசுமாட்டைக் கொன்று அதன் தோலை உரித்தெடுத்து மிருதங்கம் செய்ய உபோகப்படுத்த வேண்டும் என்பதே மிருதங்கம் செய்ய வேண்டிய விதியாகும்.

இதுதான் பசுவுக்கும் இசைக்கருவியான மிருதங்கத்துக்கும் உண்டான தொடர்பாகும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button