தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களிடம் ஒரு கேள்வி… !? ரஸஞானி.

இலக்கியப் பலகணி!
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஈழத்தின் வட – கிழக்கு – தென்னிலங்கை – மலையக எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் வழங்கிய மகத்தான பங்களிப்பு பற்றி நிறையப்பேசவும் எழுதவும் முடியும்.
இதுபற்றிய வரலாற்று ஆய்வுகளும் எமக்கு படிக்கக் கிடைக்கின்றன.
![]()
![]()
![]()
ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலை இரசிகமணி கனகசெந்திநாதனும் தமிழ் நாவல் இலக்கியம் என்னும் நூலை பேராசிரியர் க. கைலாசபதியும், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலை பேராசிரியர் கா. சிவத்தம்பியும், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்னும் நூலை மு. தளையசிங்கமும், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் நூலை பேராசிரியர்கள், நுஃமான், மௌனகுரு, சித்திரலோக மௌனகுரு ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
![]()
ஈழத்து நாவல் இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சிப்போக்கும் தொடர்பான நூல்களை சில்லையூர் செல்வராசன், மற்றும் நா. சுப்பிரமணியனும், யாழ்ப்பாணத்தில் வெளியான ஈழநாடு இதழின் வளர்ச்சியில் சிறுதைகள் ஆற்றிய பங்களிப்பு பற்றி செங்கை ஆழியானும் ஏற்கனவே எழுதியுள்ளனர்.
பேராசிரியர்கள், நுஃமான், மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் இலங்கையிலும், கலாநிதி நா. சுப்பிரமணியன் கனடாவிலும் இருக்கின்றனர்.
ஈழத்து தமிழ் இலக்கியம், மரபார்ந்த ரீதியிலிருந்து மறுமலர்ச்சி இலக்கியம், முற்போக்கு இலக்கியம், மண்வாசனை கமழும் பிரதேச மொழி வழக்கு இலக்கியம், போர்க்கால இலக்கியம் என பரிமாணம் பெற்று, ஈழத்தமிழர்கள் அய்ரோப்பிய நாடுகளுக்கும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட வேறும் சில அந்நியநாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததையடுத்து புகலிட இலக்கியமும் அறிமுகமாகி மூன்று தசாப்தங்களாகிவிட்டன.
இந்தப்பின்னணிகளில் இலங்கையின் தலைநகர் உட்பட வடக்கிலும் கிழக்கிலும் காலத்துக்கு காலம் புத்தக சந்தைகளும் கண்காட்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
போருக்குப்பின்னர், மாதம் ஒரு தமிழ் நூல்வெளியீடும் இலங்கையில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் நடக்கிறது.
இந்தச்செய்திகள் யாவும் ஒருபுறமிருக்கட்டும்.
தொட்டதற்கெல்லாம் “ஈழம் “ – “ தமிழ்த்தேசியம் “ என்றெல்லாம் பேசிவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவரையில் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்..? ஏதும் ஆக்கபூர்வமாக பணியாற்றியிருக்கிறார்களா..? என்ற கேள்வி மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது.![]()
தனித்தமிழ் ஈழம் கேட்டு, இறுதியில் மாகாண சபையுடன் சுருங்கிவிட்டோம். வடக்கிற்கும் கிழக்கிற்கும் தனித்தனி மாகாண சபைகளும் இயங்கின. இவற்றை ஆட்சி அதிகாரத்திலிருந்தும் எதிர்கட்சி தரப்பலிருந்தும் இயக்கியவர்கள் தமிழ்பேசும் தலைவர்களே!
இவர்கள் தமது ஐந்தாண்டு கால பதவிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்..?
சிலவேளை வடக்கிலும் கிழக்கிலும் நடந்த சில நூல் வெளியீட்டு விழாக்களுக்குச்சென்று மங்கல விளக்கேற்றி, பொன்னாடை பெற்றுவிட்டு, “ கல்தோன்றி மண்தோன்றாக்கலத்திற்கு முந்திய மூத்த இனம் தமிழ் இனம் “ என்று முழங்கி சபையோரின் கரகோஷத்தையும் பெற்றுவிட்டு திரும்பியிருப்பார்கள்! அவ்வளவுதான்.
நிகழ்வில் பெற்றுக்கொண்ட நூல்களை படித்திருப்பார்களா..?
ஈழத்து நூல்களை தத்தம் பிரதேச நூல் நிலையங்களில் பரவலாக கிடைப்பதற்கு வழிவகை செய்திருப்பார்களா..?
இன்று இலங்கையில் வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம், ஜீவநதி, மகுடம் முதலான இலக்கிய சிற்றிதழ்களை சந்தா செலுத்தி வரவழைத்து படித்து அவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்திருப்பார்களா..?
பாரதத்தின் முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ரோ, ஆபிரிக்க மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா முதலான தலைவர்கள் சிறந்த வாசகர்கள். தினமும் நூல்களை படிப்பவர்கள்.
எமது தலைவர்கள் எப்படி…?
காலத்திற்கு காலம் இலங்கையில் குடிசன மதிப்பீடு நடைபெறுவது வழக்கம். அதுபோன்று சமகாலத்தில் வடக்கில் தோன்றியிருக்கும்
தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையையும் மதிப்பீடு செய்யமுடியும்! கூட்டணிகள் இருபதையும் தாண்டிவிடும். அதற்கான பட்டியல் இருக்கிறது.
அன்றாடம் தமிழ் ஊடகங்களைப்பார்க்கும் வாசகர்கள் தற்போது அறிக்கைப்போர்க்களத்தில் ஈடுபட்டு – பட்டிமன்றம் நடத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை எளிதில் சொல்லிவிடுவார்கள்!
எமது கேள்வி இதுதான்..!
“ தமிழ்த்தேசியம் “ பேசிக்கொண்டிருக்கும் இந்தக் கட்சிகளின் தலைவர்களும் இக்கட்சிகளின் நெருங்கிய அன்பர்களும் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதும் உருப்படியாக செய்திருக்கிறார்களா..?
( நன்றி: யாழ்ப்பாணம் ஈழநாடு )
—0—
![]()
தமிழ் அரசியல் வாதிகள் வாய் வீச்சில் வீரர்கள் எழுத்தில், நுண்ணறிவில் , ஒற்றுமையில் பூஜ்ஜியம்.இலக்கியமா அது என்ன விலை என்று கேட்பார்கள் . நூல் வெளியீட்டு விழாவுக்கு பூமாலைக்கும் பொன்னாடைக்கும் . மின் நூல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் பலர்
ஒரு இரு மொழி எழுத்தாளன்
Amazon KDP யில் என் நூல்களை வாசிக்கலாம்