தந்தை மகற்காற்றும் உதவி!… ( சிறுகதை ) —- சங்கர சுப்பிரமணியன்.

மேல் நாடுகளில் கல்வி முறையும் நம்தாய்நாட்டின் கல்வி முறையும் வேறு. அதேபோல் அங்கும் இங்கும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயுள்ள தொடர்பும் வேறு. மேல் நாடுகளில் மற்ற தொழில்களைப்போல ஆசிரியர் தொழிலும் ஒரு தொழில் அவ்வளவே. ஆனால் நம்நாட்டில் ஆசிரியர் என்பவர் இறைவனுக்கும் மேலாகவும்
ஈன்ற தாய் மற்றும் தந்தைக்கு அடுத்தும் வைத்து போற்றப் படுகிறார்.
ஆனால் அவர் சொல்லிக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாதபடி வீட்டில் தாத்தா நம்பமுடியாததை எல்லாம் சொல்லித்தருகிறார். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதுடன் தாத்தா சொல்வதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்பமுடியாமல் மனம் குழம்புகிறது. தாத்தாவும்
வயதில் பெரியவர். பெரியவர்கள் சொல்வதை கேட்டு நட என்றும் எங்களுக்கு புத்திமதிகளும்
சொல்கிறார்கள்.
பெரியோரைப் பிழையாமை என்று திருவள்ளுவரும் திருக்குறளில் அறிவுரை வழங்குகிறார். ஆதலால் யார் சொல்வதை ஏற்பது என்று குழப்பத்தில் இருந்தான் குமரன்.
எப்போதுமே துருதுருவென்று சுறுசுறுப்பாகவும் மலர்ந்த முகத்துடனும் இருக்கும் அவனிடம் மாற்றத்தை வீட்டில்
கண்டனர். எதையோ யோசித்துக்கொண்டு ஏதோ ஒரு குழப்பத்தில் சோர்ந்துபோய் அவன் இருப்பது வீட்டில் இருப்போர்க்கு மனவேதனை தரவே குமரனின் தந்தை சதாசிவம் மகனின் அருகே வந்து அமர்ந்து அவன் தலைமுடியை
கோதிவிட்டபடியே,
“குமரா! என்ன ஆயிற்று உனக்கு? இரண்டு மூன்று நாட்களாகவே நீ சரியாயில்லை. எதையோ நினைத்து குழம்பி எதையோ பறிகொடுத்ததுபோல் அமைதியாக இருக்கிறாய். சொல்லு என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
“ஆமா அப்பா. நீங்க நினைப்பது சரிதான். குழம்பிப்போய்தான் இருக்கேன்”.
“அப்படி என்ன குழப்பம்? சொல்”
அப்பா கேட்டவுடனேயே குமரன் தன்மனதில் போட்டு குழம்பிக்கொண்டிருந்ததைச்
சொன்னான். சில தினங்களுக்குமுன் எனது விஞ்ஞான ஆசிரியர் ஒவ்வொரு உயிரினமும் மூல உயிரினமாய் இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போதிருக்கும் முழுப்பரிணாமத்தை அடைந்துள்ளன என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் தாத்தா நாம் இப்போது செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்து நாம் பிறக்காமல் இருப்போம் அல்லது பிறந்து துன்பமான வாழ்க்கையையோ வாழ்வோம் என்றும் இல்லையென்றால் விலங்குகளாகவோ மற்ற உயிரினங்களாக பிறப்போம் என்று சொல்கிறார். இதுதான் என் யோசனைக்கும் குழப்பத்துக்கும் காரணம் என்று சொன்னான்.
இப்போது என் குழப்பத்தைப்பற்றி சொல்கிறேன். ஒவ்வொரு உயிரினமும் முழுவளர்ச்சியடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளோ அதற்கும் மேலாகவோ ஆகியிருக்கும் அல்லவா? இந்த இடைப்பட்ட காலத்தில் மறுபிறவி கிடையாதா? அப்படி மறபிறவி இருந்திருந்தால் அது முழுவளர்ச்சியடையாத பிறவியாகத்தானே இருந்திருக்கும்? அப்படி இருந்திருந்தாலும் அது எந்தவகையில் நியாயம்? ஏனெனில் அறிவுமுதிர்ச்சி அடையாத நிலையில்
செய்யும் வினை நல்வினையா தீவினையா என்று முழுவளர்ச்சியடையாத மனிதனுக்கு எவ்வாறு தெரியும் என்று கேட்டான். ஆதலால் மனிதன் முழுவளர்ச்சி அடைந்து அறிவுமுதிர்ச்சி அடைந்தபின்னேதான் இந்த முற்பிறவி மறுபிறவி போன்றவற்றை புகுத்தியிருக்க வேண்டும் என்றான்.
மகன் கேட்ட கேள்விகள் எல்லாம் நியாயமானதே என்பதை உணர்ந்தார் சதாசிவம். எட்டாம் வகுப்பு படிக்கும் தன்மகனின் சிந்திக்கும் ஆற்றலை எண்ணி வியந்தார் இவ்வளவு அறிவாளியான குழந்தைக்கு தான் தகப்பன் என்று எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். ஆனால் தன் மகனின் அறிவு மழுங்கும்படியான சமுதாயத்தில் இருக்கிறோமே என்ற வேதனையும் அவனிடம் இல்லாமல் இல்லை. இருப்பினும் மகனுக்கு பதில்சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறுவழியின்றி பேச ஆரம்பித்தார்.
“குமரா! உனது குழப்பம் யாவையும் நியாயமானதே. உனது கேள்விக்கு சரியான பதிலை என்னால் சொல்லமுடியும். அப்படி சொன்னால் உனக்கு தப்பாகச் சொல்லிக்கொடுக்கிறேன்
என்பார்கள். உனது விஞ்ஞான
ஆசிரியர் சரியாகத்தான்
சொல்லியிருக்கிறார்.” என்றார்.
“அப்பா, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று படித்திருக்கிறேன். நீங்கள் உண்மையை சொல்லித் தாருங்கள்.”
“உண்மையை சொல்லித் தருவதில் தயக்கமில்லை குமரா!
ஆனால் நீயாகவே வளர வளர எது உண்மை எது தவறு எனப்புரிந்துகொள்வாய். இல்லாவிட்டால் மற்ற பெற்றோர்கள் தம் கருத்துக்களை தம்
பிள்ளைகளிடம் அவர்களை சிந்திக்க விடாமல் திணிப்பதுபோல் ஆகிவிடும்.” எனறார் சாதாசிவம்.
தந்தை இவ்வாறு சொன்னதும் குமரன் தன் தந்தையை எண்ணி வியந்தான். மற்ற பெற்றோர்களைப்போல இது இப்படித்தான் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்தாமல் அறிவுபூர்வமாக எதுசரி எது தவறு என்பதை உணர்ந்து கொள்வாய் என்று சொன்னது தந்தையின் மேலிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()