காதலர் விமானம்!… 20 ( நாவல் ) ஏலையா க.முருகதாசன்.

சிவசகாமி பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த சந்திரன் ‘கதவைச் சாத்திப் போட்டு என்ன இரகசியம் கதைக்கிறியள், அங்கை அந்தப் பொடியனை தனிய விட்டிட்டு …’ என்று இழுக்க, போ நீ போயிருந்து கதை…’ என்று சிவகாமி சொல்ல…..’அம்மா அழுதமாதிரி இருக்கு ஏனம்மா என்ன பிரச்சினை எதற்கு கண்கலங்கியிருக்கு’ என்கிறான் சந்திரன்.
‘எனக்கு ஒன்றுமில்லை அண்ணையும் தங்கச்சியுமாய் கரைச்சல் படுத்தாதையுங்கோ, பிள்ளை தேங்காயைத் திருவு அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேணும் என்கிறாள்’ தாய்.
அதுக்கு மேல் தாயிடம் எதுவுமே கேட்காத சந்திரன் அடுப்படியைவிட்டு வெளியே வருகிறான்.சிவகாமி ‘மலிஞ்சால் சந்தைக்கு வருந்தானே, அப்பாவிட்டை கேட்பன்’ என்று சொல்லியவாறு தாயின் முகத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறு தேங்காயைத் திருவுகிறாள்.
அடுப்படியைவிட்டு வந்த சந்திரன், சாகித்தியன் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
சாகித்தியன் சந்திரனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.அந்த இடத்தை விட்டுப் போக வேணும் என்று சாகித்தியனின் மனம் சங்கடப்படுகிறது.
‘நீங்கள் சுண்ணாகம் என்றால் ஸ்கந்தாவில்தான் படிக்கிறியளா’ என சந்திரன் கேட்க தலையை ஆட்டுகிறான் சாகித்தியன் .’கடைசியா மகாயனாவுக்கும் ஸ்கந்தாவுக்கும் நடந்த மாரச்சைப் பார்த்தனிங்களோ’ எனச் சந்திரன் கேட்க’ இல்லை கொழும்புக்கு ஒரு நேர்முகப் பரீட்சைக்குப் போனனான் பார்க்கவில்லை’ என்று பொய் சொல்கிறான்.
‘அண்டைக்கு யாரோ எங்கடை வான் கண்ணாடிக்கு எறிய, உடைஞ்ச கண்ணாடித்துண்டு ஒரு பொம்பிளைப்பிள்ளையின்ரை நெற்றியிலைபட்டு காயமாயப் போச்சுது, நான்தான் என்ரை சட்டையை கிழிச்சு கட்டிவிட்டனான் பாவம் அந்தப் பிள்ளை’ என்கிறான்.
‘ஓ அப்படியா அதைப்பற்றி அறியவில்லை’ என்கிறான் சாகித்தியன்.தான்தான் வானுக்கு எறியச் சொன்னதும் தனது தங்கச்சிக்குதான் கண்ணாடித்துண்டு வெட்டி காயமேற்பட தன்முன்னால் இருக்கும் சந்திரன்தான் கட்டிவிட்டது என்பதையும், கட்டின துண்டுத் துணியை தங்கச்சியார் கவனமாக வைத்திருப்பதையும் தெரிந்த சாகித்தியன் தனக்கு எதுவுமே தெரியாதது போல நடித்துக் கொண்டிருந்தான்.
சந்திரன் உதைபந்தாட்டத்தைப் பற்றிப் பேசிய போதெல்லாம் தனக்கு அதில் விருப்பமில்லை என்பது போல கதையை வேறு திசைக்கு திருப்பிக் கொண்டிருந்தான்.சந்திரனும் மௌனமாக இருப்பதும் பிறகு பேசுவதுமாக இருக்கையில் அடுப்படியைவிட்டு வெளியே வந்த சிவகாமி ‘எழுப்புங்கோ சாப்பிட வாங்கோ’ சாகித்தியனை நோக்கிச் சொன்னவள், ‘அண்ணை அவரோடை சேர்ந்து நீங்களும் சாப்பிடுங்கள்’ என்று அவர்களிருவரையும் அடுப்படிக்குள் அழைத்துச் செல்கிறாள்.
அடுப்படி விசாலமான அறை என்பதால், ஒரு பக்கத்தில் சாப்பாட்டு மேசையும் கதிரைகளும் இருந்தன.அடுப்படியில் இன்னொரு கதவு இருந்தது.கதவோடு இருந்த சீமெந்து ததரையில் வாளியில் தண்ணீர் இருந்தது.
வாளித் தண்ணீரில் கையைக் கழுவிய சந்திரனும் சாகித்தியனும் சாப்பாட்டு மேசையில் உட்கார, அடுப்படிக்குள் நுழைகிறார் சச்சிதானந்தம்.முன்பின் பார்த்திராத ஒரு பொடியன் சாப்பாட்டு மேசையில் இருப்பதைப் பார்த்ததும், சாகித்தியனைப் பார்த்து புன்னகைத்தபடி மனைவியை யார் என்பது போல பார்க்கிறார்.
‘இவர்தான் எங்கடை அப்பா’ என்று சிவகாமி சொல்ல, சாகித்தியன் எழும்புகிறான்.’இருங்கள்…..இருங்கள்…’என்று சாகித்தியனை இருக்கச் சொன்ன சச்சிதானந்தம்
கையைகழுவிப் போட்டு சாகித்தியனின் அருகில் உட்காருகிறார்.
எந்தச் சாப்பாடாக இருந்தாலும் ருசியாக சமைப்பதில் மகேஸ்வரி கெட்டிக்காரி. புட்டு என்றால் அதற்கு உவப்பாக முட்டைப்பொரியல்,நெத்தலிக்கருவாட்டுப் பொரியல், முருங்கங்காய் பலாக்கொட்டை போட்டு சமைப்பது என அவர் சமையலை விருப்புடன் இரசித்து சமைப்பார்.உணவின் மீது ஒரு பிரியத்தையும் பசியையும் தூண்டுவது போல இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் சமைப்பார்..உணவை ருசியாக சமைப்பதிலும் அதனை சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ என்று அன்பாக பரிமாறுவதிலுமே சச்சிதானந்தம் குடும்பம் விருந்தோம்பலில் எல்லோராலும் கவனிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.
ஆவியில் வெந்த தேங்காய்ப் பூவின் வாசனையும் சிவப்புப் பச்சையரிசிப்புட்டின் வாசனையும் கலந்த குழல்புட்டையும் முட்டைப்பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல், பலாக்கொட்டை போட்டு கூட்டுப் போல சமைத்த முருக்கங்காய் கறி என எல்லாவற்றையும் சிவகாமி மேசையில் கொண்டு வைத்தவுடன் இதுவரை அமைதியாக இருந்த சாகித்தியன் ‘அம்மாவும் இப்படித்தான் இரவுச் சாப்பாடு சமைப்பா’ என்று சொல்ல,சிவகாமி சட்டென்று தாயைத் திரும்பிப் பார்க்கிறாள்.தாயின் முகமாற்றத்தை எதுவுமே காட்டிக் கொள்ளாது சாகித்தியனை அவனுக்குத் தெரியாதவாறு உற்றுக் கவனிக்கிறாள்.
எல்லாரும் ஒன்றாக இருந்து சாப்பிடத் தொடங்குகிறார்கள்.மிகவும் பக்குவமாக ஒரு சில்லுப் புட்டிலிருந்து கொஞ்சத்தை எடுத்து முட்டைப் பொரியலையும் முருக்கங்காய்க் கறியையும் பிசைந்து எடுத்து வாயில் போட்டுச் சாப்பிட்டதும்’ அருமையான ருசி அச்சு அசலாக அம்மாவின் சமையல் போல இருக்கு, இன்னும் அதற்கு மேலை’ என்கிறான் சாகித்தியன்.
தான் எப்பொழுதுமே சந்தழக்காத ஒரு பொடியனுக்கு எல்லாரும் ஆதரித்து சாப்பாடு கொடுக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும் என்றுணர்ந்த சச்சிதானந்தம் ‘மகேஸ்வரியை பார்த்து தம்பி யாரென்று சொல்லவில்லையே’ என்கிறார்.
சிவகாமி உடனே தானும் அர்ச்சனாவும் படம் பார்க்கப் போனதையும் புதுச்சந்தையில் துணி வாங்கக் கடைக்குப் போனதையும், கடை முதலாளி தங்களிருவரையும் கொண்டு போய் விடச் சொன்னதையும் ஒரு படம் மாதிரி சொல்லி முடிக்கிறாள்.
மகிழ்ச்சியான சிரிப்புடன் சச்சிதானந்தம் ‘ஓ அப்படியோ,நன்றி தம்பி அப்பாவின்ரை பெயர் என்ன’ என்கிறார்.சாகித்தியனிடம் தகப்பனின் பெயரைக் கேட்க மகேஸ்வரியின் முகம் மாறுகிறது.அதைக் கவனித்த சிவகாமி ‘ம் என்னமோ இருக்குது’ என மனதுக்குள் நினைக்கிறாள்.
‘அப்பாவின்ரை பெயர் சந்திரசேகரம், அம்மாவின்ரை பெயர் செல்லம்மா எங்கடை வீடு சுண்ணாகம் பெற்றோல் செற்றிக்குப் பக்கத்திலை இருக்க ‘ என்கிறான் சாகித்தியன்.
அவன் சொன்னதைக் கேட்டதும் ‘ சச்சிதானந்தத்துக்கு புரைக்கேறி இரும அவரின் உச்சந்தலையை தட்டிவிடுகிறான் அவருக்குப் பக்கத்திலிருந்த சாகித்தியன்.
இவ்வளவு நேரமும் பொதுவான உணர்வுடன் இருந்த சச்சிதானந்தம் அவனைப் பாசத்தோடு பார்த்தவர் மனைவியை பார்த்து கண்களால் கேள்வி கேட்க மகேஸ்வரி ‘ஓம்’ என்பது போல தலையை ஆட்டுகிறாள்.
தான் செய்த அடவாடித்தனத்தை அறியாத அவர்கள் தனக்குச் சாப்பாடு பாசத்துடன் கவனிப்பதைக் கண்ட சாகித்தியன் குற்ற உணர்வால் குறுகிப் போகிறான்.
‘நீங்கள் எத்தனை பிள்ளைகள்’ என்று சச்சிதானந்தம் கேட்க,’நாங்கள் மூன்று பேர் அண்ணை நான் தங்கச்சி, அண்ணை நில அளவையாளராக வேலை பார்க்கிறார், எனக்குப் பல்கலைக்கழகத்துக்கு போக விருப்பமில்லை வேலை தேடிக் கொண்டிருக்கிறன், தங்கச்சி ஸ்காந்தாவிலை படிச்சுக் கொண்டிருக்கிறாள் ‘ என்று சொன்ன சாகித்தியன் சிவகாமியை உற்றுப் பார்;த்தவன்,சரியாக இவவவின்ரை முகம் மாதிரித்தான் தங்கச்சியின்ரை முகம் என்கிறான்.
இதுவரையும் எந்த உணர்வையுமே காட்டிக் கொள்ளாமல் இருந்த மகேஸ்வரி அடக்க முடியாத அழுகையை அடக்குவதை கண்ட சச்சிதானந்தம் அழுது காட்டிக் கொடுக்காதை என்பது தலையை மெதுவாக ஆட்டுகிறார்.
சாப்பிட்டு முடிந்து கொஞ்ச நேரம்வரை இருந்த சாகித்தியன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுப்படியிறங்க சச்சிதானந்தம் அவன் பின்னால் வர சிவகாமியும் வருகிறாள்.
காரடிக்கு வந்தவுடன்’ கவனமாக போயிட்டு வா’ என்று சச்சிதானந்தம் சொல்ல, எங்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டதற்கு நன்றி, போயிட்டு வாருங்கள்’ என விடை கொடுக்கிறாள்.
வீட்டுக்குள் வந்த சிவகாமியின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.தங்கள் குடும்பத்திற்கும் சாகித்தியன் குடும்பத்திற்கும் ஏதாவது உறவு இருக்குமோ என எண்ணியவாறு தமையனின் அறைக் கதவைத் தட்டுகிறாள்.
(தொடரும்)
![]()