கவிதைகள்
“விளங்குவார் விழிப்பார் விளங்கார் வீழ்வர்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

ஓடாத இடமெல்லாம் ஓடியே திரிந்து
நாடாத இடமெல்லாம் நாடியே நின்று
வேண்டாத திட்டெல்லாம் வாங்கியே நின்று
விலகாமல் நிற்கிறார் பொருளுக்காய் பலரும்
அவமானம் பட்டாலும் அகமேற்க மாட்டார்
அதிகமாய் பொருள் சேர்க்க ஆசையேபடுவார்
அறம்பற்றி எண்ணார் அன்பையும் மறப்பார்
அநியாயம் செய்தேனும் அதிகபொருள் சேர்ப்பார்
கொலைகூடச் செய்வார் கொள்ளையும் அடிப்பார்
அலைபாயும் மனத்தோடு அலைந்துமே திரிவார்
நிலையாக நிற்கார் நிட்டூரம் செய்வார்
மலையாக பொருளை குவிக்கவே நினைப்பார்
தாயையும் எண்ணார் தந்தையையும் எண்ணார்
தன்மனைவி பிள்ளைகள் சுற்றமும் பாரார்
பேயாக மாறுவார் பெரும்பொருளை நாடுவார்
உண்ணாமல் உறங்காமல் பொருளையே தேடுவார்
தங்கத்தைத் தேடுவார் வைரத்தைத் தேடுவார்
தனக்கெதிராய் வந்தால் தலையையும் வெட்டுவார்
தரணியில் நிலையாய் இருப்போம் என்று
தானே அனைத்தையும் குவித்துமே வைப்பார்
அடுத்தவர் துன்பம் அவருக்குத் தெரியா
அழுகை அவலம் அகமேற்க மாட்டார்
அதிகநாள் வாழுவோம் என்றே எண்ணி
அநியாயம் பண்ணி ஆனந்தப் படுவார்
இப்படி இருப்பார் பலரும் இருக்கார்
இவர்களின் முடிவு இவர்க்கே தெரியா
வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம்
விளங்குவார் விழிப்பார் விளங்கார் வீழ்வர் !
![]()