இலங்கை

செம்மணிக்கு அரசு மௌனம் காப்பது ஏன்?; குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

செம்மணி மனித புதை குழி தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் , குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை. வலிந்து காணாமல் போனோர் விவகாரத்துக்கும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. நீதி கோரி போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது.பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படுகின்றன .இதுதான் இன்றைய அரசாங்கத்தின் நிலை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூல வரைவை தயாரித்தது யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற எனது கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. அவ்வாறாயின் சட்டவரைவை தயாரித்தது யார் என்று அவருக்கு தெரியாதா?

மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் தான் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள் என்பதற்காக அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட முடியாது . நீதித்துறை தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ள பின்னணியில் மனச்சாட்சிக்கு அமைய உரையாற்ற முடியாத காரணத்தால் தான் நீதியமைச்சர் குறிப்பு எழுதிக் கொண்டு வாசித்தார்.

அரசியலமைப்பால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் அண்மைகாலமாக பல சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளது .நாட்டு மக்களின் பெரும்பாலானோருக்கு இவ்வாறான சட்டங்கள் குறித்த விளக்கம் போதாது. இந்த சட்டங்கள் எதிர்காலத்தில் மிக மோசமாக பயன்படுத்தப்படும்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல் உள்ளிட்ட சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது .இந்த சட்டமூலங்கள் நாட்டு மக்களின் அப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் விரோதமானது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது இதனை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிளஸ் என்றே குறிப்பிட வேண்டும். இந்த சட்டமூலம் அண்மையில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்ட போது முன்வைத்த கேள்விகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் பதிலளிக்க முடியவில்லை. அந்தளவுக்கு இந்த சட்டமூலம் பாரதூரமானது.

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மரணிக்கும்.மக்களாணையை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் ஜனநாயகத்துக்கு முரணான சட்டங்களையே இயற்றுகிறது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும்.இல்லையேல் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேரிடும்

நீதித்துறையை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் பின்னரே ஜனநாயக விரோத சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

செம்மணி மனித புதை குழி தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதுதான் இந்த நாட்டின் நிலைமை.

வலிந்து காணாமல் போனோர் விவகாரத்துக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. நீதிக்கோரி போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக இன்றுவரை போராடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *