வட, கிழக்கு எம்.பி.க்களின் கோரிக்கை குறித்து கவனம்; அமைச்சர் நளிந்த கூறுகிறார்

வடக்கு, கிழக்கில் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிதி ஒதுக்கீடு விவாதத்தில் 31 எம்.பிக்கள் உரையாற்றினர். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்தளம் மாவட்ட எம்.பியொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட காலத்தை தமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறான பிரச்சினைகளை முன்வைக்கும் போது அது மத்திய அரசாங்க வைத்தியசாலைகளா? அல்லது மாகாண வைத்தியசாலைகளா? என்று பாராமல் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். மற்றைய எம்.பிக்கள் தமது காலத்தை பிரயோசனமாக பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.
இதேவேளை வெகுஜன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விடயத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை பத்திரிகை சபை சட்டத்தில் திருத்தங்களை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஊடகத்துறைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அரச அச்சக திணைக்கள ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாக உள்ளது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று அரச அச்சக திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் மறுசீரமைப்பை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
![]()