தனிமை வடுக்கள் …. கவிதை…. முல்லைஅமுதன்

1)
இத்தனை வருடங்கள்
உறிஞ்சியிருக்கவேண்டியதில்லை.
சொல்லியிருக்கலாம்.
அருகாமையை
எப்போதோ இழந்தாயிற்று.
விசாரிக்கிறீர்கள்.
முகப்பரு என்றா வருந்துகிறாய்
எனக்கேட்கையில்..
முகத்தில்
வருவோரெல்லாம்
காறிஉமிழ்ந்து
சென்றவர்கள் பற்றிச் சொல்லியிருக்கவேண்டும்.
தனிமை வடுக்கள்
உடலெங்கும் காயங்களாக…
காயங்களில் என்ன வேற்பாடு?..
ஆணென்ன?பெண்ணென்ன??
நெருங்கிவருபவர்களின்
கதைகளும்
அவ்வாறெனில் வார்த்தைகளின்
நெருப்பும்
அங்கிருந்துதானே வந்து சேர்ந்திருக்கிறது
என்னிடம்.
நீ நீயாகவே இருந்துகொள்.
நீண்ட நெடுங்காலமாய்
சேகரித்துவைத்திருப்பவைகளை
சேர்ந்தே சுமப்போம்
வா அருகில்…
வலிகளைச் சுமப்போம்
காலத்துக்கும்..
2)
இன்று புத்தன்
என்னை முத்தமிட்டான்.
என் கன்னத்தில் குருதி..
3)
நீண்ட நாட்களாக
பிரார்த்திதேன்.
கடவுள் மழையை அனுப்பிவைத்தார்.
கடவுளுக்கும் சூரியனுக்கும்
நடந்த சண்டையில்
என்னுடன்
என் நிலமும் காணாமல் போயிற்று.
யாரிடம் கேட்பேன்.என்ன மீட்டுக்கொள்ள?
![]()